அத்தியாயம் 42
அந்தத் திருமண மண்டபத்தில் நிறைந்திருந்த உறவுகள், சொந்தங்கள், நட்புகள் மத்தியில், மங்கல வாத்தியங்கள் முழங்க, யாமினியின் கழுத்தில் பொன்தாலியைப் பூட்டி,
அவளைத் தன் வாழ்வின் பாதியாக்கிக்கொண்டான் நிரோஜன்.
அந்த ஒரு நொடியில் யாமினியின் உடல் லேசாகச் சிலிர்த்து, ஆதவக் கண்ணீர் துளிர்த்தது. அவளது உச்சியில் திலகமிட்டுவிட்டு, அவள் முகம் திருப்பி நெற்றியில் இதழ்களைப் பதித்து எடுத்தபோது, நிரோஜனின் விழிகளும் பனித்திருந்தன.
அவள் குடும்பம், அவன் குடும்பம், இரு தரப்பு நண்பர்கள், அவர்கள் குடும்பங்கள் என்று அத்தனை பேரும் இவர்களுக்கு இணையான மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் அங்கே நின்றிருந்தனர்.
நிரோஜன் ஜெர்மனிக்கு வந்த அன்று, அவர்கள் சமாதானமானதும் அந்தப் பார்க்கில் இருந்தே இரு வீட்டினரோடும் காணொளி அழைப்பில் பேசியிருந்தார்கள்.
இணைப்பில் வந்த மல்லிகாவிடம், அவள் தோள்களைச் சுற்றிக் கையைப் போட்டு, “அம்மா, பாத்தீங்களா யமிட்ட வந்திட்டேன்.” என்று நிரோஜன் சொன்னபோது, யாமினிக்குப் பயத்திலும் படபடப்பிலும் வியர்த்துப்போயிற்று.
என்ன சொல்வாரோ, எப்படி இதை எடுப்பாரோ என்று பெரும் கலக்கம். இதில் அவன் வேறு தோளைச் சுற்றிக் கையைப் போட்டால் எப்படி இருக்கும்? அவர் அறியாமல் அந்தக் கையை அவள் எடுத்துவிட முயற்சிக்கையிலேயே, “இப்ப சந்தோசமா அம்மாச்சி?” என்று கேட்டு, யாமினியின் அத்தனை கலக்கங்களையும் மல்லிகா அம்மா தீர்த்து வைத்திருந்தார்.
மாதவனும் அதேதான். நிரோஜன் அழைத்துச் சொன்னபோது, “எனக்கு யாமினி சொல்லோணும் நிரோஜன்!” என்று சொல்லி, அவளிடம் நேரடியாகவே பேசினான்.
இதில் முழுமையான சம்மதம்தானா, அவள் முழு மனத்துடன்தான் அந்த முடிவை எடுத்தாளா, அல்லது நிரோஜன் ஏதும் கட்டாயப்படுத்தினானா என்று கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே தன் சம்மதத்தையும் தெரிவித்திருந்தான்.
அன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்கள் கழித்து, அவர்கள் இலங்கை வந்த இரண்டாவது வாரம், இதோ திருமணமும் இனிதாய் நடந்து முடிந்திருந்தது.
“சந்தோசமா இருக்கிறியாடி மனுசி?” அனைத்துச் சடங்குகளும் முடிந்த பிற்பாடு மேடையில் இலகுவாக அமர்ந்திருந்த வேளை, அவள் பக்கமாக இலேசாகச் சரிந்து வினவினான் நிரோஜன்.
புன்னகையோடு திரும்பி அவனைப் பார்த்தாள் யாமினி. சும்மாவே அழகன். இன்று பட்டு வேட்டி சட்டையில் மணமகனாக அமர்ந்திருந்து, அவள் உள்ளத்தை அப்படியே அள்ளினான்.
அதைவிட அந்தத் தாலியைக் கட்டுவதற்குள் அவன் காட்டிய சேட்டைகளும் குறும்புத்தனங்களும் சொல்லி மாளாதவை.
அவ்வளவில் அவனது துள்ளலும் துடிப்பும் மகிழ்ச்சியும் அவனது ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தன.
அவளது கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு, நெற்றியில் பதித்த முத்தத்தின் போது, அவனது கண்களில் லேசாகப் படர்ந்திருந்த கண்ணீரும், அவளை ஒருமுறை இறுக்கி அணைத்து விடுவித்ததையும் கண்டு, என்னதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அனுபவித்து, உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வு ரீதியாகத்தான் செய்கிறான் என்று புரிந்துகொண்டிருந்தாள்.
“உங்களுக்கு எப்பிடி இருக்கு?” என்றவள் கேள்வியில் அங்கே நண்பர்களிடம் என்னவோ சைகையில் சொல்லிக்கொண்டிருந்தவன் அதை விட்டுவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
ஒன்றும் சொல்லாமல், அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்தபடி அவள் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து அவன் புன்னகைத்தபோது, ஓராயிரம் வார்த்தைகளுக்கு ஒப்பாக அவள் உள்ளம் நிறைந்துபோயிற்று.
புகைப்படம் எடுப்பதற்காக அவன் குடும்பத்தினர் மேடைக்கு வந்தனர். வார்த்தைகள் ஏதுமின்றி அன்னையை இறுக்கி அணைத்துக்கொண்டான் நிரோஜன்.
அந்த அணைப்பு ஆயிரம் அன்பையும், ஓராயிரம் நன்றியையும், தன் முழுச் சந்தோசத்தையும் அவரிடம் சொல்லின. மல்லிகாவும் உணர்ச்சிவசப்பட்டுப்போனார். கண்களில் நீருடன், “போடா!” என்று செல்லமாக அவனுக்கு ஒரு அடியைப் போட்டார்.
யாமினியும் மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தாள். அவர் நினைத்திருந்தால் அவள் விலகிப்போனதை, அவர் மகனை இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்ததை வைத்துப் பெரிய பிரச்சனைகளை உருவாக்கியிருக்க முடியும். அவளிடம் முகம் காட்டியிருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் அவளைப் புரிந்து கொண்டு, அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கடைசிவரை அவளுக்காகத் துணை நின்றவராயிற்றே.
அந்த நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அவளது கண்களில் கண்ணீரைத் தோற்றுவிக்க, “தேங்க்ஸ் மாமி!” என்றபடி அவரை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
“நான் அண்ணி நான் அண்ணி!” என்று தன் குழந்தையைக் கணவனிடம் கொடுத்துவிட்டு ஓடி வந்து, அவள் கைக்குள் தானும் புகுந்துகொண்டாள் காவ்யா.
“அப்ப நான்?” என்று நிரோஜன் வர, யாமினிக்கு முகம் சூடாகிப்போயிற்று.
இதையெல்லாம் கவனித்திருந்த நாகேஸ்வரி அம்மா மிக ஆழமாய் அடிவாங்கினார். தான் எங்கே தவறினோம், தான் என்ன செய்யாமல் விட்டுவிட்டோம் என்பது அவருக்குப் புரிந்தது. உடைந்து அழப் பார்த்தார். ஆனால், மகளின் வாழ்க்கையின் மிக மிக மகிழ்ச்சியான தருணத்தில் அழுது, அவளது மகிழ்ச்சியைக் குலைக்க மனம் இல்லை.
கலங்கிய கண்களுடன் அவர்களையே பார்த்து நின்றிருந்தார்.
ஆனால் யாமினிக்கு இன்றைய மனநிலையில் அவர் மீது எந்தக் குறை குற்றங்களும் இல்லை. அவரைப் பார்க்கையில் தந்தையின் இழப்புத்தான் பெரிதாய்த் தெரிந்தது.
அவரிடம் ஒன்றும் கதைக்காமல், “அத்தான், இனி அம்மா என்னோட இருக்கட்டும்.” என்றாள் ஆதவனிடம்.
ஆச்சரியமாகப் பார்த்தாலும், “அதுக்கென்ன? ஆனா, இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்களோட இருக்கட்டும். பிறகு வருவா.” என்று சம்மதம் சொன்னான் அவன்.
நிரோஜன் அவன் நிறுவனத்தின் வவுனியா பிரான்ஞ்சிற்கு வேலையை மாற்றி எடுத்திருந்தான். அதில் புதிதாக மணமானவர்கள் தம் வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்று எண்ணி அவன் சொல்வது, மணமக்கள் உட்பட எல்லோருக்கும் நான்கே புரிந்தது.
அப்படி அவர் போய்விட்டால் எப்படிப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சமாளிக்கப்போகிறோம் என்கிற பயம் உண்டானாலும் மாதங்கி வாயைத் திறக்கவில்லை. இப்போதெல்லாம் தன்னை அடக்கிக்கொள்ளப் பழகியிருந்தாள். அந்தளவுக்குப் பழக்கியிருந்தான் ஆதவன்.
புகைப்படத்துக்கு நின்றுவிட்டு மாதங்கியும் நாகேஸ்வரியும் அணிவித்த நகைகளைக் கண்டு யாமினியே அரண்டுபோனாள். அந்தளவில் ஒரு மணப்பெண்ணுக்கான அத்தனை நகைகளும் இருந்தன. நொடியில் அதன் பின்னணியை ஓடிப்பிடித்தவள், “அத்தான்!” என்றாள் ஆதங்கமும் அதனால் விளைந்த கண்ணீருமாக.
நிரோஜனுக்கும் சங்கடமாயிற்று. “இவ்வளவு ஏன் அண்ணா?” என்றான்.
“எங்கட வீட்டுப் பிள்ளைக்கு நாங்க போடுறோம். அதை மறுக்கிற உரிமை அவாக்கே இல்லை.” என்றான் ஆதவன்.
சரியாகச் சொல்லப்போனால் ஜெர்மனியில் இருந்த காலத்தில் அவள் அனுப்பிய பணத்தையும் சேர்த்தே அவன் செய்திருப்பது புரிந்து, “நல்லவருக்கு நடிச்சுக்கொண்டு எல்லாத்தையும் திருப்பித் தாறீங்க என்ன? ஆதிக்கு நானும் செய்து போடுவன். அப்ப நீங்க ஏதாவது சொல்லிப்பாருங்கோ, அப்ப இருக்குப் பெரிய சண்டை!” என்றாள் உரிமைக் கோபத்தோடு.
அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தானே தவிர்த்து ஒன்றும் சொல்லவில்லை ஆதவன்.
உடனே மாதங்கியைத்தான் பார்த்தாள் யாமினி.
“என்னை ஏன் பாக்கிறாய்? இது உனக்குச் சேர வேண்டியதுதான். நான் செய்த எல்லாத்துக்கும் சொறி. எப்பவும் சந்தோசமா இரு!” என்று வாழ்த்தினாள் அவள்.
மாதங்கி அதை உணர்ந்து சொன்னாளா என்று தெரியாது. ஆனால், அத்தனைக்கும் வளைந்துகொடுத்துப் போகும் அவளுடைய கணவன் தவறு செய்யும் பட்சத்தில் மிகவும் கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்று மட்டும் இத்தனை வருடத்தில் அவளுக்கு மிக நன்றாகவே புரிந்திருந்தது.

