நீ வந்து தங்கிய நெஞ்சில் 44.1

அத்தியாயம் 44

சோஃபாவில் சோர்வாக அமர்ந்திருந்த யாமினி, தன் லேப்டாப்பில் வார இறுதிக்கான ப்ராஜெக்ட் வேலையை முடித்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் தோளில் தூண்டும் கையில் பாலுமாக சமையலறையிலிருந்து வந்த நிரோஜன், அவளருகில் அமர்ந்து கப்பை நீட்டினான்.

பால் அவளுக்குப் பிடிப்பதேயில்லை. ஆனால், ஆறு மாதக் கருவைச் சுமக்கிறவளுக்குத் தேவை என்பதில் மிடறு மிடறாக அருந்தினாள்.

“கிளைண்ட் கோல் முடிஞ்சதா? ஆக ஏலாம இருந்தா இப்பவே வேலைய விடன் யமி.” இதமாகச் சொன்னான் நிரோஜன்.

அவளுக்கு வாந்தி இல்லை. ஆனால், உடற்சோர்வு, தலை சுற்றல், உண்ண முடியாமை என்று மிகவுமே அல்லலுறுவாள். அதே நேரத்தில் அந்த வேலையை அவள் தனக்கான சுயசம்பாத்தியத்தின் வேராகப் பார்க்கிறவள். அதனாலேயே வேலையிலிருந்து நின்றுவிடு என்று இறுக்கிச் சொல்வதற்கு அவன் விரும்பவில்லை.

அவனை நிமிர்ந்து பார்த்துச் சோர்வுடன் புன்னகைத்தவள், “பிள்ளை பிறந்த பிறகு எப்பிடியும் வீட்டோடதானே நிரோ இருக்கப்போறன்.” என்றுவிட்டு, அவன் கை வளைவுக்குள் இருந்தபடியே பாலை அருந்தி முடித்தாள்.

அவன் விரல்கள் அவள் மணிவயிற்றை கனிவோடு வருடிற்று. பிறந்த குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்து ரசிப்பது ஒரு அழகு என்றால், கருவாக இருக்கும் குழந்தை வளர வளர மேடிட ஆரம்பிக்கும் வயிற்றின் அழகு பேரழகாயிற்றே.

அந்த நேரத்தில்தான் நவீனின் திருமணம் வந்தது. அவன் முல்லைத்தீவைச் சேர்ந்தவன் என்பதால் திருமணமும் அங்கேதான். வேலையையும் மாற்றி எடுத்திருந்தான்.

திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும் உறவினர்களின் ஆரவாரத்தாலும் களை கட்டியிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகான நண்பர்களின் வருகை, அரட்டைகள், ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்வது என அந்த இடமே உற்சாகமாய் மின்னியது.

அசோகனும் குடும்பத்தோடு வந்திருந்தான். வேண்டுமென்றே அவன் இருக்கும் பக்கமாகவே அடிக்கடி போய்வந்தான் நிரோஜன். அப்படிப் போய்வருகிற ஒவ்வொரு முறையும் பெருமையாகக் ஷேர்ட்டின் கொலரை இழுத்து இழுத்துவிட்டான். அசோகனின் அருகில் அமர்ந்திருந்த மித்ரனை அழைத்து, “டேய் மச்சான். நாங்களும் அப்பா ஆகிட்டம். நாலு பேருக்குச் சொல்லிவை! இது ஆரம்பம் மட்டும்தான். முடிவில்ல.” என்றான் வேண்டுமென்றே.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், “சரியடா. எனக்கு விளங்கிட்டுது. நீ அப்பா ஆகிட்டாய். இனியும் பலமுறை அப்பா ஆகுவாய். போதும், என்னை விட்டுடு!” என்று அசோகன் கையெடுத்துக் கும்பிட்ட பிறகே விட்டான்.

திருமணச் சடங்குகள் முடிந்து மாலை வரவேற்பில் இசை நிகழ்ச்சி தொடங்கியதும், நண்பர்களின் உற்சாகம் உச்சத்திற்குச் சென்றது. மேடையில் இருந்த வாத்தியக் குழு, தமிழ் குத்துப்பாடல்களையும் காதல் மெலடிகளையும் மாறி மாறி ஒலிக்கவிட, நண்பர்கள் ஆடத் தொடங்கினர்.

அதில் நிரோஜனின் ஆட்டத்திற்கு ஈடே இல்லை. திடீரென்று தன் நண்பர்களை விட்டுவிட்டு நேராக யாமினியிடம் வந்து, பாடலின் தாளத்திற்கேற்ப அவளைச் சுற்றி ஆடத் தொடங்கினான்.

அவன் ஆடும் விதம் அங்கிருந்த அத்தனை பேரையும் ரசிக்க வைத்தது. நண்பர்கள் அனைவரும் கைதட்டிச் சிரிக்க, யாமினிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

“போதும் நிரோ, நிப்பாட்டுங்க!” அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டே பின்வாங்க, அவளது கைகளைப் பற்றித் தன் நெஞ்சோடு சேர்த்து மெதுவாக ஒரு சுற்றுச் சுற்றினான்.

“நிரோ, வெக்கமா இருக்கு நிரோ.” இரு வீட்டுப் பெரியவர்களும் அங்கிருந்ததில் யாமினியால் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை.

அவன் உதட்டில் மலர்ந்த முறுவல். அவளை அழைத்துப்போய் இருக்கையில் அமர்த்தி, நெற்றியில் உதடுகளைப் பதித்து எடுத்துவிட்டு, ஒற்றைக் கண் சிமிட்டலோடு மேடைக்குத் திரும்பிவிட, யாமினி அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

அவன் காட்டிய அந்த எல்லையற்ற அன்பும்,ஒற்றைக் கண் சிமிட்டலும் போதுமாயிற்று, அந்தத் திருமண மண்டபத்தின் பேரழகியாய் அவளை மாற்றுவதற்கு.

*****

ஆறு வருடங்கள் ஓடியே போயிருந்தன.

ஐந்து வயதாகப்போகும் மகனோடும் இரண்டரை வயதான மகளோடும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினாள் யாமினி.

“நான் தனியா வந்திடுவன் யமி, சின்னாக்களோட அலையாத.” என்றுதான் நிரோஜன் சொல்லியிருந்தான். ஆனால், ஆறு மாதங்கள் என்று போனவன், தனது நிறுவனப் ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஒரு வருடம் கடந்து நாடு திரும்புகிறான். எப்படி அப்படி விமானநிலையம் வராமல் இருப்பாள்? முதலில் அதற்கு அவர்களின் பிள்ளைகள் ஒப்புக்கொள்ள வேண்டுமே.

அன்னையோடு சேர்ந்து ரகசியத் திட்டம் போட்டு, தகப்பனுக்குத் தெரியாமல் இதோ விமானநிலையம் வந்து காத்திருக்கிறார்கள்.

கொழும்புக் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருகைப் பகுதி எப்போதும் போலப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.

அவர்களின் மகன் தன் சின்ன கைகளால், வண்ணத் தாளில் எழுதித் தயாரித்திருந்த பதாகையைப் பெருமையுடன் பிடித்திருந்தான். அதில் பெரிய எழுத்துகளில், “எங்கள் சூப்பர் ஹீரோ! வெல்கம் ஹோம் அப்பா!” என்று எழுதியிருந்தது.

அவனுடைய குட்டி மகள், தன் பிஞ்சுக் கையில் ஒற்றை ரோஜாவை வைத்துக்கொண்டு, ஒரு இடத்தில் நிற்காமல் அந்த இடம் முழுவதும் சுற்றிச் சுழன்றபடி காத்திருந்தாள். சின்னவள் கைகளை விசுக்கி விசுக்கி ஓடுகிற ஓட்டத்திற்கு அந்த ரோஜா ரோஜாவாகக் கணவனின் கையில் சேரும் என்கிற நம்பிக்கை யாமினிக்கு இல்லை.

இந்தப் பன்னிரண்டு மாதங்களின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் கடிகார முட்களோடு போராடித் கடந்த தவிப்புகள் அத்தனையும் முடிவுறப்போகும் அந்த நொடிக்காய்க் காத்திருந்தாள் யாமினி.

வருகைப் பகுதியின் கதவுகள் விலகின. லேசான களைப்பும், தாய் மண்ணில் கால் பதித்துவிட்ட உற்சாகமுமாகத் தன் பயணப்பைகளுடன் வெளியே வந்தான் நிரோஜன்.

மெய்யாகவே தன் குடும்பத்தை அவன் அங்கே எதிர்பார்க்கவேயில்லை. ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே அவன் நின்றுவிட்டதற்கும் சேர்த்து, “அம்மா! அப்பா வந்திட்டார்!” என்று கூவிக்கொண்டு, அவ்வளவு நேரமாகக் கையில் வைத்துக் காத்திருந்த பதாகையைக் கீழே போட்டுவிட்டு ஓடினான் மகன். அவன் பின்னால், “அப்பா!” என்று சிட்டாகப் பறந்தாள் சின்னவள்.

போன போக்கில் தாவி ஏறிய மகனை அப்படியே வாரித் தூக்கிக்கொண்டவன், அப்பா அப்பா என்று குதூகலிக்க தன் செல்லப்பெண்ணையும் மற்றக் கையால் அள்ளிக்கொண்டான்.

இருவருக்கும் ஓராயிரம் முத்தங்கள் பதித்தவனுக்கு விழிகள் ஈரமாகிப்போயின. அவர்களும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனுக்குத் தெரியாமல் தாம் திட்டம்ப்போட்டு சப்ரைசாக புறப்பட்டு வந்ததைக் கதைகதையாகச் சொன்னார்கள்.

அவர்களிடம் கதை கேட்டபடியே திரும்பிய நிரோஜன், முகம் முழுக்க நிறைந்திருந்த சிரிப்போடு மனைவியைப் பார்த்தான்.

அங்கே அவள், கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள். ஒரு வருடத் தனிமையின் சுமை மொத்தமும் நொடியில் கரைந்து போக, அவளது இதயம் ஆனந்தத்தில் தள்ளாடிற்று.

சின்னவர்களைத் தள்ளிக்கொண்டு வந்த வண்டிலில் இருத்தி, அவர்களோடு அவளிடம் வந்தான். ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. “யம்மு!” என்று அவளை அப்படியே அள்ளித் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான்.

அந்த ஒற்றை அணைப்புக்காக ஒரு வருடமாகக் காத்திருந்தவளாயிற்றே. இத்தனை நாள்களும் அவனைப் பிரிந்திருந்த ஏக்கம், அதன் போது சின்னவர்களையும் வைத்துக்கொண்டு அனுபவித்த சிரமங்கள், அவனைக் கண்ட மகிழ்ச்சி என்று சட்டென்று அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

சிரிப்பும் சந்தோஷமுமாக அவள் முகம் நிமிர்த்தி, “அதான் வந்திட்டனே. இன்னும் என்னத்துக்கு அழுகை?” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டுவிட்டு, ஆசையோடு அவள் முகம் பார்த்தான். இருவர் முகத்திலும் காரணமேயில்லாமல் முறுவல்.

அப்போதுதான் அவள் கையில் இருந்த பதாகை பட்டது. “எங்கள் சூப்பர் ஹீரோ! வெல்கம் ஹோம் அப்பா!” என்று அதில் எழுதியிருந்ததைக் கண்டவன் முகம் புன்னகையால் மொத்தமாக மலர்ந்துபோயிற்று.

ஒரு தந்தைக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

பூ இல்லாமல் வெறும் தண்டு மட்டுமாக இருந்ததை அவனிடம் நீட்டி, “இது உங்கட மக்களின்ர.” என்றாள் யாமினி.

என்ன நடந்திருக்கும் என்று ஊகித்துக்கொண்டவனுக்குத் தன் செல்லப் பெண்ணை எண்ணிப் பெரும் சிரிப்பு. யாமினியின் காதோரமாகச் சரிந்து, “இந்தப் பூ கிடைக்காட்டி என்ன? எனக்கு என்ர பூ இரவுக்கு அலுங்காம குலுங்காம மொத்தமா வேணும்!” என்றதும் அதிர்ந்து, முறைப்பும் சிரிப்புமாக வேகமாகத் தம்மைச் சுற்றி பார்வையைச் சுழற்றியவள் அவன் கையில் பிடித்துக் கிள்ளிவிட்டாள்.

சின்னவர்களின் வசதியைக் கருதியும், திரும்பிப் போகையில் நிரோஜன் கொண்டுவரும் பெட்டிகளும் சேரும் என்பதையும் யோசித்து அவர்களின் காரை கொண்டு வராமல் ஆதவனின் துணையுடன் வாகனம் ஒன்றை ஓட்டுநரோடு வாடகைக்குப் பிடித்திருந்தாள் யாமினி.

அதில் பெட்டிகளைப் பின்னால் ஏற்றிவிட்டு, மனைவி பிள்ளைகளோடு தானும் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டான் நிரோஜன்.

error: Alert: Content selection is disabled!!