அத்தியாயம் 19
அடுத்து வந்த நாள்கள் ஒருவித லயத்தில் இயங்கின.
என்ன விதமான உணர்வில் அமிழ்ந்து கிடக்கிறாள் என்று இனம் பிரிக்க முடியாமல் நடமாடிக்கொண்டிருந்தாள் யாமினி.
நடந்த எதற்கும் எந்த விளக்கமும் இல்லை. மன்னிப்புக் கூட நிரோஜன் கேட்கவில்லை. அந்த வருத்தம் அவள் மனத்தில் மிக ஆழமாய் உண்டு. அதையும் மீறிக்கொண்டு அவன் தந்த முத்தம் அவளுக்குள் பெரும் ஆறுதலையும் அமைதியையும் பரப்பியிருந்தன.
இத்தனை நாள்களும் ஒருவிதமான பயத்திலும், இனி என்னாகுமோ என்கிற நடுக்கத்திலும் அலைபாய்ந்துகொண்டிருந்தாள்.
அப்படியெல்லாம் இல்லை, நமக்குள் என்ன சண்டை வந்தாலும் நீ எனக்குத்தான் நான் உனக்குத்தான் என்று அந்த முத்தம் வழியாக அவன் சொல்லியிருந்தான்.
நாள்கள் ஆக ஆக நடந்த சண்டையையே பிடித்துக்கொண்டு தொங்க முடியவில்லை. நிரோஜனும் நடந்தவற்றைப் பற்றிப் பேசுவதற்குத் தயாராகவே இல்லை என்று செயல்கள், பேச்சுகள் மூலமாக மிகத் தெளிவாக உணர்த்தினான்.
அஜந்தாவின் திருமணம், அதற்கான இருவரின் அவரவர் ஊர் நோக்கிய பயணம், அவளுக்குக் கொடுக்கப்போகிற பரிசு, டிக்கட் புக் பண்ணுவது, காவ்யாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பார்ப்பது என்று இருவருமாக இணைந்து பார்ப்பதற்கு நிறைய வேலைகள் இருந்தன. அப்படி இருக்க என் கோபம்தான் பிரதானம் என்று அவளால் முகத்தை நீட்டிக்கொண்டு இருக்க முடியவில்லை.
திருமண மண்டபம், சமையல், மண்டப அலங்காரம், மணப்பெண் அலங்காரம் போன்றவற்றைப் பொறுப்பெடுத்துச் செய்கிறவர்களிடம் பேசி, விலை விவரங்களைக் கேட்டறிந்து, மறுபுறம் நிரோஜன் வீட்டினரின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் தெரிந்துகொண்டு, பொருத்தமானவர்கள் என்று தான் நினைத்தவர்கள் விபரங்களை யாமினி நிரோஜனுக்கு அனுப்பி வைத்தாள்.
அவனும் அதைத் தன் வீட்டினரிடம் காட்டிப் பேசி, அவர்களுக்குப் பிடித்தவற்றை உறுதிப்படுத்தி, தேவையான ஏற்பாடுகளைச் செய்தான்.
அஜந்தாவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று நாள்களே இருந்தன. யாமினி ஊருக்குப் புறப்படத் தயாரானாள். அவளைப் புகையிரத நிலையத்திற்கு நிரோஜன் அழைத்து வந்திருந்தான்.
புகையிரதம் புறப்படத் தயாரானது. ஜன்னல் வழியே அவனைப் பார்த்த யாமினி, “நாங்க ரெண்டு பேரும் எதுவுமே நடக்கேல்ல மாதிரி நடக்கிறம் நிரோ. அது உண்மை இல்லை எண்டு எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். எனக்கும் உங்களுக்கும் இடையில இருந்த அந்த ஆத்மார்த்தமான பழைய பிணைப்பு இப்ப இல்ல. ரெண்டு பேருமே வலு கவனமா இருக்கிறம். இப்பிடி, ஒரு பிரச்சினையைப் பேசித் தீர்க்காமக் கடந்துபோறது காலம் முழுக்க சேர்ந்து வாழப்போற எங்கட உறவுக்கு ஆரோக்கியமான விசயமா எனக்குப் படேல்ல நிரோ. கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ்.” என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
புகையிரதம் மெதுவாக நகரத் தொடங்கியது. சில நொடிகள் அப்படியே அசையாமல் நின்றவன், ஆழமாக மூச்சை இழுத்து விட்டுவிட்டுக் கனத்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டான். பயணம் முழுக்க அவள் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டேயிருந்தன.
அஜந்தாவின் திருமண நாள் அழகாய் விடிந்தது. ஆதவன் உட்பட யாமினியின் மொத்தக் குடும்பமும் புறப்பட்டு வந்தார்கள். மண்டபத்தினுள் நுழைந்த கணத்திலிருந்து வீட்டினர் அறியாமல் யாமினியின் விழிகள் நிரோஜனைத் தேடின. அவள் இங்கே வருவதற்கு முதலே வந்துவிட்டதாகக் குறுந்தகவல் அனுப்பியிருந்தான் அவன். ஆனால், ஆளைக் காணவில்லை.
எங்கே போனான் என்கிற யோசனையுடன் மணப்பெண்ணின் அறை நோக்கி நடந்துகொண்டிருந்தவளைத் திடீரென்று ஒரு கை இழுத்து, ஓடை ஒன்றுக்குள் இழுத்துச் சென்றது.
முதலில் பயந்தாலும் யார் என்று தெரிந்ததும் அவள் கண்ணும் முகமும் மலர்ந்துபோயிற்று.
அதுவும் அவன் தோற்றம் இருக்கிறதே. அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. அவன் வாங்கித் தந்த சேலையில் தான் எப்படி இருக்கிறோம் என்று காட்ட வந்தவள் தன்னை மறந்து அவனை ரசித்து நின்றாள்.
டார்க் கிரே பாண்ட்ஸுகு முழுக்கை கொண்ட லைட் கிரே பிளேன் ஷேர்ட் அணிந்து, கறுப்பு பெல்ட், அதே கறுப்பில் ‘Penny Loafer’ என்று ஆங்கிலத்தில் சொல்லும் வகைக் காலணிகளை அணிந்திருந்தான்.
“நல்ல வடிவா இருக்கிறீங்க நிரோ!” அகமும் முகமும் மலரச் சொன்னவள் முறைத்தாள்.
“என்ன?” அவளின் திடீர் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் வினவினான் அவன். சுற்றவரப் பார்வையைச் சுழற்றிவிட்டு அவனை நெருங்கி, “என்ன இது?” என்று அதட்டியபடி அவன் கழற்றிவிட்டிருந்த முதல் இரண்டு பட்டங்களையும் போட்டுவிட்டாள்.
“நேரம் போக போகக் கையை மடிச்சு விடுறேல்ல சொல்லிட்டன். இப்பிடியே நிக்கோணும். ஷேர்ட்ட வெளில இழுத்து விடுறது எண்டு ஏதாவது குரங்குச் சேட்டை விட்டீங்க எண்டா தெரியும்.”
அவனைப் பற்றித் தெரியும் என்பதில் முன்னெச்சரிக்கையாகச் சொன்னாள்.

