நெஞ்சினில் நேச ராகமாய் – 10

அத்தியாயம் 10
தற்போது: (ஏறக்குறைய 24 வருடங்களின் பின்)

“ஏன்டி எருமைமாடு, கச்(catch) போடடி எண்டா, இப்பிடியா தலைக்கு மேல போடுவ? ஆஆஆ..நோகுதடி…” தலையை அழுந்தத் தேய்த்துக்கொண்டே கத்தினாள், ஷீலா.
“சொல்லுவயடி சொல்லுவ! கொஞ்சம் சரி நோகாம, ரசிச்சு ருசிச்சு முழுங்க ஏலுமா சொல்லு பாப்பம். என்னடி உஷ்ஷ்ஷ்…நான் சொல்லுறது சரிதானே?”
“என்ர பெயரைக் கொல்ல வேணாம் எண்டு உன்னட்ட எத்தினையோ தடவை சொல்லிட்டன். உஸ்ஷும் புஸ்ஷும். உஷா எண்டே சொல்லடி.” என்று வாய் சொல்ல, அவள் கரங்களோ, நண்பி மரத்திலிருந்து பிடுங்கிப் போடும் மாங்காய்களை இலாவகமாகத் துண்டுகளாக அரிந்தரிந்து தன் முன்னாலிருந்த கிண்ணத்தில் போட்டுக்கொண்டிருந்தன; இடைக்கிடை வாய்க்குள்ளும்!
“அதைப் புடுங்கடி..ஆ…அதேதான்!” கீழிருந்து சொன்னாள், மாங்காய்களால் சலிக்காது அடிவாங்கிக்கொண்டிருக்கும், ஷீலா.
“இஞ்ச பாரடி, மண்ணில போடாம கச் போடடி! முகத்தில வீசிறாத!”, ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது என்ற கணக்கில் மீண்டும் ‘கச்’ பிடிக்கத் தயாரானாள், ஷீலா.
மரத்திலிருந்த வாலில்லா குரங்குப்பெட்டை மகிழினியோ இம்முறையும் தோழியின் தலையைக் குறிபார்த்து மாங்காயை எறிய, “எரும எரும…பாரடி உஷ் இந்த எரும செய்யிற வேலைய!” என்று பின்னால் நகர்ந்த ஷீலா, அம்மாந்தோப்பின் வாயிலைத் திறந்துகொண்டு வந்தவர்களைக் கண்டு திடுக்கிட்டாள்.
“டீ மகிழ், அங்க பார் உன்ர மா…மா, இன்னும் கொஞ்ச ஆட்களோட வாறாரடி! குதியடி…கீழ..குதி…கெதியாக் குதி! உஷ், மாங்காய எடுத்து மறைச்சு வை!” அவள் அவதியாகச் சொல்லிக்கொண்டிருக்கையில், மகிழின் மாமா ராசனும் இன்னும் சிலரும் இவர்களை நோக்கி வந்தனர். கணத்தில் ராசனின் விழிகள் அங்கிருக்கும் நிலையைப் படம் பிடித்துக் கொண்டன. நெற்றி சுருங்க விழிகளைச் சுழற்றி மருமகளைத் தேடியவாறே, அவள் தோழிகளைக் கேள்வியாக ஏறிட்டார் ராசன்.
“மகிழ் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து எக்ஸ்சாமுக்குப் படிக்கிறா எண்டு அவவிட அம்மா சொன்னா. இதான் படிக்கிற வடிவா?” கண்டிப்புடன் கேட்டுக்கொண்டே, அங்கிருந்த மரமேசையில் பிரிக்கப்படாது அடுக்கியிருந்த புத்தகங்கள், கொப்பிகளை அளவெடுத்தவரிடமிருந்து, “மகிழ் எங்க?” என்ற கேள்வி பாய்ந்து வந்தது. மீண்டும் ஒருமுறை பார்வையைச் சுழற்றி, மேலே மாமரத்தையும் உற்று நோக்கினார், ராசன்.
“ம…கிழ்…மகி…ழ்…” குழறியது உஷாவுக்கு.“அவள், பாத்ரூமுக்குப் போயிருக்கிறாள் அங்கிள்!” சற்றுத் தள்ளியிருந்த ஓட்டு வீட்டை நோக்கிக் கை காட்டினாள்.
“ஓ!” என்றவரின் பார்வை மீண்டும் மாங்காய் கிண்ணத்தின் அருகிலிருந்த உப்பு, மிளகாய்த்தூள் டப்பாக்களைத் தொட்டு வந்தது. ‘எவ்வளவு சொன்னாலும் தான் நினைக்கிறதைத்தான் செய்யிறாள். இப்பிடி மாங்காயும் தூளுமாச் சாப்பிடுறாளே!’ மனத்துள் முணுமுணுத்துக்கொண்டவருக்கு, உடனிருக்கும் நண்பன் குடும்பத்தின் முன்னால் இளம் பிள்ளைகளைக் கண்டிக்கும் எண்ணம் எழவில்லை. என்றாலும், அமைதியாகப் போகவும் மனம் வரவில்லை. “ஒண்டாச் சேர்ந்தாச் சந்தேகங்களைத் தீர்த்து ஊக்கமாப் படிப்பீங்க எண்ட எண்ணத்தில விட்டால், அதைத் தவிர வேற வேலைகள் தான் பார்க்கிறீங்க போல!” அதட்டலாகச் சொன்னவர், “சரவணன் வா, தோப்பைச் சுத்திப் பாத்திட்டு வருவம்!” என்றவாறே, அங்கு நடப்பவற்றை முறுவலுடன் பார்த்திருந்த தன் நண்பனையும், நண்பரின் மூன்று மகன்களையும் அழைத்துக்கொண்டு முன்னேறினார்.
“மாமாட ஃப்ரெண்ட் குடும்பம், கனடால இருந்து யாழ்ப்பாணம் வந்து நிற்கினமாம். இங்கயும் வருவினம்.” என்று, இரு நாட்களுக்கு முன் மகிழ் கூறியது தோழிகளின் நினைவில் பளிச்சிட்டது.
“ஓ! அப்படியெண்டா, இவையள் தான் அந்தக் கனடா பார்ட்டியா? அதான் பார்வை ஒரு சாதியா இருக்கோ! ஏதோ சொர்க்கத்தில இருந்து நரகம் வந்த மாதிரி அக்ட் போடுவினமே! உப்ப்ஸ்…இந்த வெளிநாட்டுக்காரர் அலட்டல் தாங்குதில்ல!” வாயாடி ஷீலா, முணுமுணுப்பாக அலுத்துக் கொண்டாள்.
புதியவர்களுக்கு முன்னால் இப்படி மாட்டுப்பட்டு விட்டோமே என்ற வெட்கம் பிடுங்கித் தின்ன, ‘மரத்தில் ஒழிந்திருக்கும் மகிழ் பிடிபட்டு விட்டால்..’ என்ற அச்சமும் சேர, சங்கடமாக நெளிந்து கொண்டு நின்ற உஷா, ஷீலாவை முறைத்துக் கொண்டே, “கெதியா இறங்கடி மகிழ், மாமா உன்ன வீட்டில தேடினாலும் தேடுவார்!” அடர்ந்த பெரிய மாமரத்தின் மேலே, ‘இவள் எங்க இருக்கிறாள்?’ என்று, உற்றுப் பார்த்துக்கொண்டே பரபரத்தாள்.
“அப்ப, ஆள் மேலயா?” அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்ட தோழிகள் திரும்பவும், “போய்ட்டினமாடி?” என்று கேட்டுக்கொண்டே, மரத்திலிருந்து மகிழ் குதிக்கவும் சரியாக இருந்தது. குதித்த வேகத்தில் மூச்சு வாங்க, தம் முன்னால் நின்றவனை ஏறிட்டவளின் வதனமோ சன்னமாகச் சிவந்தது. கணத்தில் சமாளித்துக்கொண்டாள். “மாங்கா சாப்பிடப் போறீங்களா? எங்கட தோட்டத்து மாங்கா சூப்பரா இருக்கும்! ம்ம்.சாப்பிட்டுப் பாருங்க!” மாங்காய்க் கிண்ணத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அவள் மரத்திலிருந்து குதித்ததைப் பார்த்துத் திடுக்கிட்டு நின்றவனோ, சிலநொடிகளில் சுதாகரித்து மேலும் கீழுமாக அவளை அளந்தான். கன்ன உச்சி எடுத்து எண்ணை பூசி படிய வாரிய கூந்தல், இரட்டைப் பின்னல்களாக ஒருவிதக் கர்வத்துடன் அவள் நெஞ்சில் தவழ, ப்யூட்டி பார்லர் என்றால் சர்க்கஸா எனச் சந்தேகம் கேட்கும் வதனத்தில், தன் கைவரிசையை ஆற அமர மிகவும் பொறுமையாகக் காட்டியிருந்தான், பிரம்மன். அக்கர்வம் துளியுமின்றி பளீர் நகையுடன் நின்றவளை, இரசனையுடன் கூர்ந்து பார்க்க முயன்றன, அவன் விழிகள்!
அதற்கு அனுமதியாது ஒருவித அலட்சியத்துடன் தடா போட்டவன், இதுவரை விழிகளிலிருந்த இரசனையைக் கேலி கவ்விக் கொள்ள, மாங்காய்க் கிண்ணத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான். “இல்ல, தேவேல்ல! மரமெல்லாம் ஏறி சிரமப்பட்டுப் பிடுங்கினத நீ…ரே.. சாப்பிடும்.” நக்கலாகச் சொன்னவன், “இதையெல்லாம் சேர்த்தா சாப்பிடுவீங்க!” உப்பையும் தூளையும் காட்டிக் கேட்டுவிட்டு, கொஞ்சம் அதிகமாகவே முகத்தைச் சுளித்துக்கொண்டு நகர்ந்தான்.
“டீ…அவே கனடாக்காரராம்! இதெல்லாம் சாப்பிட மாட்டினமாம்டி! அப்பிடிச் சொல்லுறத விட சாப்பிடத் தெரியாதடி! நாலு நாளைக்கு முதல் அல்லது நாலு மாதங்களுக்கு முதல் சமைச்சு வச்சத சூடாக்கிச் சாப்பிடத்தான் தெரியு..மா…” அவன் பார்த்த நக்கல் பார்வையில் சுறுசுறுவென்று கோபமெழ, வம்பிழுக்கும் வகையில் சொன்ன மகிழின் பேச்சு சட்டென்று நின்றது. காரணம், இவள் சொன்னது கேட்டுத் திரும்பி நின்று அவளை முறைத்தான் அவன். சண்டைக்கோழி போல் சிலுப்பிக்கொண்டு நிற்பவளைப் பார்த்தவனுள்ளும் சுறு சுறுவென்று கோபமெழுந்தது.
“அப்பிடியே போயிரு! திரும்பி வந்து நீ ஏதாவது சொல்ல, என்ர வாய் சும்மா இருக்காது தம்பி! திருப்பி ஒண்டுக்குப் பத்தாச் சொல்ல, அதக் கேள்விப்படுற மாமாவோ, மேலும் கீழும் குதிச்சுக் கொண்டே பத்துக்கு இருபதாச் சொல்ல, அம்மா புத்திமதி சொல்லுறன் எண்டு ஒப்பாரி வைக்க, வேணாம் …கனடா! வம்புதும்பு வேணாம் போயிறு!” இவள் கிடுகிடுவென்று முணுமுணுத்ததைப் பொருட்படுத்தாமல், இவர்களை நோக்கி வேக நடையில் வந்தான், அவன்.
“இந்தக் காஞ்சு போன பளையை விட்டு அங்கால இங்கால போயிருக்கிறீரா?” கெட்டவன் குரலில் தாராளமாக ஏளனம்!
“இந்த வடிவில கனடாவப் பற்றிக் கதைக்க வந்திட்டா…” மகிழை முறைப்பாகப் பார்த்துச் சிடுசிடுத்தான்.
“ஓமோம்! ஓமோம்! காய்ஞ்சு போன பளைக்கு வரச்சொல்லி, உங்கள ஆராவது வெத்திலை பாக்கு வச்சு வருந்தி வருந்திக் கூப்பிட்டவையோ? வர வேண்டியது, வந்திட்டுப் பெரிசாக் கதைக்க வேண்டியது!” இலேசில் விடுவேனா என நின்றாள் மகிழ்.
“டி வேணாம்டி! அண்ணா… சொறி…சொறி. நீங்க போங்கோ. அவளுக்கு எங்கட ஊரைப் பத்தி இப்பிடிச் சொன்னப் பிடிக்காது!” கெஞ்சலுடன் பிரவேசித்தாள், உஷா.
“அப்படித்தான் எங்களுக்கும், எங்கட ஊரைப் பத்திச் சொன்னாப் பிடிக்காது!”
“இஞ்ச் பாருங்கவன் பகிடிய! கனடா உங்கட ஊரா? அப்ப, இங்க என்னத்துக்கு வந்தனீங்க?!”
“ஆங்…இப்பிடி ஒரு குட்டிச் சாத்தான் இங்கனேக்க திரியிறது மட்டும் தெரிஞ்சிருக்க இஞ்ச எண்டு இல்ல, இலங்கைக்கே வந்திருக்க மாட்டன்!” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். அதோடு விட்டானா?
“உன்னப் பாத்தாப் படிக்கிற பிள்ள போலவா இருக்கு? சரியான பட்டிக்காடு! எந்தப் பள்ளிக்கூடத்தில படிக்கிற? ஸ்கூலுக்கு நல்ல பெயர் வாங்கிக் குடுப்ப போல இருக்கே!” மாமரத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் சொன்னவாறே, விடுவிடுவென்று திரும்பி நடந்தான்.
“ஓம், நான் குட்டிச் சாத்தான்தான். நீங்க பெரிரிரிய பேய்! பட்டிக்…காடா..உ..ங்க..ள..என்னைப் பார்த்தா…பள்ளியில் படிக்கிறது போ….லவா… இருக்கு?” கத்தியவளைக் கட்டிப்பிடித்து அவள் திருவாயை இறுகப் பொத்தியிருந்தனர் அவள் தோழிகள்.
“விடுங்கடி என்னை, எங்க வந்து என்ன கதைச்சிட்டுப் போகுது..இண்..டை..க்கு..” தன்னை மறந்து, அவனை நோக்கி முன்னேறினாள், மகிழ்.அவனோ, மீண்டும் நின்று முறைத்துவிட்டு, எரிச்சல் படர்ந்த முகத்துடன் முன்னே சென்று மறைந்திருந்தவர்களை நோக்கி நடந்தான்.
“ஏன்டி லூசு, அன்ரி எவ்வளவு ஏசினாலும் உன்ர மண்டையில ஏறாதா? நமக்கேனடி வீண் வம்பு? அவர், கனடாக்காரனாவோ கானாக்காரனாகவோ அல்லது கடன்காரனாவோ இருந்திட்டுப் போகட்டுமே!” சிடுசிடுத்தாள் உஷா.
“உனக்கு எவ்வளவு வாங்கினாலும் பத்தாது. இது மட்டும் உன்ர மாமா காதுக்குப் போனா, இப்பிடிச் சேர்ந்து படிக்கிறதும் கட்டாகிரும், நினைவில் வச்சிரு!” மீண்டும் எச்சரித்தாள்.
“ஏன்டி…” தோழிகளின் பார்வையைத் தன்னை நோக்கித் திருப்பினாள், ஷீலா. சற்றுமுன் நடந்ததற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்றவகையில் மலர்வுடன் நின்றவளை முறைத்தார்கள் மகிழும் உஷாவும். ஷீலாவோ, “உண்மையாவே எங்களப் பாத்தால் பள்ளியில படிக்கிற பிள்ளைகள் போலவா இருக்கு?” அதுதான் முக்கியம் போல் சந்தேகம் கேட்டாள்.
“எரும போல வளர்ந்து நிற்கிற எண்டு அம்மா எந்த நேரமும் ஏசிறவாடி! ஒரு ஹாண்ட்சம் என்னைப் பாத்து, பள்ளிக்கூடப் பெட்டை எண்டு சொல்லிட்டார் எண்டத இண்டைக்கு அம்மாட்டச் சொல்லோணும்.” மலர்வாகத் தொடர்ந்தவளைப் பார்த்து, தலையில் அடித்துக்கொண்டாள் மகிழ்.
“லூசு விசர் …அந்தாள் உன்னப் பாத்த பார்வைக்கு ஏதோ பாராட்டின மாதிரி சந்தோசப்படுறியே! அந்தப் பட்டிக்காட்டில நீயும் அடக்கம் எண்டுறத மறந்திராத!” நண்பியை முறைத்தவள், “ச்சே! என்ன வாழ்க்கை இது? வீட்டில உள்ளவேக்குப் பிடிச்ச மாதிரித்தான் பாத்து பாத்து நடக்கோணும் எண்டா, தோட்டத்தச் சுத்திப் பாக்க வாற கனடாக் குரங்குகளுக்கும் ஏத்த மாதிரி நடக்க வேண்டி இருக்கே! இன்னொருமுறை என்ர கண்ணில் படட்டும், ஐயாவுக்கு நான் ஆர் எண்டு காட்டுறன்!” வெளிப்படையாகவே வெறுத்துக்கொண்டாள்.
“விடடி விடு. ஆரோ எவரோ ஒரு வார்த்தை சொன்னா அதை ஏன் பெரிசு பண்ணுற? அவர் சொன்னா நாங்கள் என்ன பட்டிக்காடா?” சமாதானம் செய்த உஷா,
“நீ இந்த மாங்காயையும், தூள், உப்பையும் எடுத்துக் கொண்டு வா ஷீலா, வீட்டுக்குள்ள போயிருந்து படிக்கலாம்!” சொல்லிக்கொண்டே புத்தகப்பைகளுடன் மகிழையும் இழுத்துக்கொண்டு, மகிழும் அவள் தாய் மங்கையும் வாழும் அந்த ஓட்டு வீடு நோக்கிச்சென்றாள்.

error: Alert: Content selection is disabled!!