நெஞ்சினில் நேச ராகமாய் 11 – 1

அத்தியாயம் 11

“மகிழ்..மகிழ்…ஏய் மகிழ்! பேப்பரை முகத்தில மூடிக்கொண்டு அப்பிடி எதைப் பாக்கிற? அல்லது தூங்கிறியா? நான் இத்தனைதரம் கூப்பிட்டது மகாராணிட காதில் விழேல்லையா?” முற்றத்திலிருந்த வேப்பமர நிழலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியினுள் புதைந்து, ஞாயிறு வீரகேசரிப் பத்திரிகையை விரித்துப் பிடித்துக்கொண்டே, கிர்ர்ர்ர்ர்ரென்று இருவருடங்கள் பின்னோக்கிச் சென்றிருந்த மகிழ், கர்ண கடூரமாகச் செவிகளில் வந்து மோதிய அம்மம்மாவின் குரலால் திடுக்கிட்டு, பத்திரிகையைச் சுருட்டிக்கொண்டெழுந்தாள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக, மன ஆழத்தில் எச்சங்களாக நின்ற நினைவுகளைப் பெரும்பாடுபட்டுத் தூசு தட்டிக் கொண்டிருந்தவளால், அவற்றிலிருந்து இலகுவாக வெளிவர முடியவில்லை! அதனால், தன் சிடுமூஞ்சி அம்மம்மாவை அமைதியாகவே பார்த்து நின்றாள்.
“என்ன கள்ள முழி முழிக்கிற? பேப்பர்ல அப்பிடி என்னத்தப் பாத்தனி எண்டு காட்டு பாப்பம்!” பட்டென்று பத்திரிகையைப் பறித்தார்,சரசு. சுருங்கிக் கிடந்த விழிகளில் அப்பட்டமாகச் சந் சந்தேகம் தெரிந்தது.
‘கட்ராக்ட் ஒபரேசன் செய்ததில இருந்து கிழவிட சேட்டை தாங்கேலாமல் இருக்கே! ஏய் கிழவி! ஒருநாளைக்கு இல்லை ஒருநாள்…என்னட்ட நல்லா வாங்குவ இருந்து பார்!’ மனத்தில் சிடுசிடுத்தாள்,மகிழ். சிறுவயதிலிருந்து பழகிப் போன சந்தேகப் பேச்சென்றாலும் மனத்தில் கோபம் மூண்டெழுந்தது. வெளிக்காட்ட இயலுமா என்ன? அடக்கிக்கொண்டு, வெளிப் பார்வைக்கு அமைதியாகவே நின்றாள் அவள்.
“ஏன்டி, வயசுக்குப் பெரிய மனிசி இத்தனை கத்துறன் வாய் திறக்கிறாளா பார். நாள் முழுசும் முதுகு உடைய வேலை செய்து, களைச்சுப் போய் படுத்திருக்கிறது போல சாய்மனைக் கதிரை கேட்குதோ உனக்கு? கல்லுத் திண்டா செரிக்கிற வயசில இந்தப் பட்டப் பகலில அப்பிடி என்ன படுக்கை?!” அர்ச்சனையை ஆரம்பித்தார், சரசு.
மகிழின் வாய் ஒட்டிக்கொண்டு இருந்தது. பார்வை மட்டும் பெரியவரில் தான்.
“ஏதோ கம்பசில படிச்சுக் கிழிச்சதாப் பெயர். அங்க ஒரு மண்ணும் இல்ல. இந்த வடிவில உன்ர மாமாக்கு அவ்வளவு பட்டும் புத்திவராம, உன்ர அம்மா பறக்கவிட்ட மானத்தை வளைச்சுப் பிடிக்க நினைக்கிறான். இல்லையெண்டா…” கடமுடவென்று சொல்லிக்கொண்டு வந்தவர் பேத்தியின் முகம் கோபத்தில் மினுங்குவதைப்பார்த்துவிட்டார். “என்னடி முறைக்கிற? நான் என்ன இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டியா சொல்றன்!” ஏளனமாகக் கேட்டார்.
“ஆங்…நான் ஒண்ணும் முறைக்க எல்லாம் இல்லை. என்ர முகமே அப்பிடித்தான். என்ர அம்மாட பரம்பரை முகம்!” கணீரென்று சொன்னவளை, கை நீட்டி எச்சரித்தார், சரசு. “வேணாமடி …வேணாம்! வாய்க்கு வாய் உன்ர மூஞ்சிய என்ர பரம்பரையோட ஒப்பிடாத, எனக்குக் கெட்ட கோபம் வரும்.” எரிச்சலுடன் சொல்ல, மகிழின் வதனத்தில் அழகிய முறுவலொன்று மின்னி மறைந்தது.
சிறுவயதில், இவரின் பேச்சில் அதிர்ந்து நின்றதும், மனம் வருந்தி அழுததும் கூட நடந்ததுண்டு. பலசமயங்களில், “இவர் என்ர அம்மம்மா தானே அம்மா? உண்மையாவே உங்களப் பெத்தவா? பிறகு ஏன் எங்கள மட்டும் அவருக்குப் பிடிக்குதில்ல?” காரணம் புரியாது, தாயிடம் வினவி இருக்கிறாள். மகள் மீண்டும் மீண்டும் கேட்கவே, ஏன் என்பதை கண்ணீரும் கன்றலுமாகத் தாய் உரைத்த போது, முழுமையாகப் புரியவில்லை என்றாலும், புரிந்து கொள்ள மிகவும் முயன்றாள் இவள்.
வளர வளர ஏனென்ற காரணம் மிகவும் அழகாக புரிந்ததில், உதாசீனங்களை, ஒருவித அசட்டையோடு எதிர்கொள்ளப் பழகிக் கொண்டாள். அதோடு, சரசுவிடம் இருந்து நெருப்பாக வந்து விழும் வார்த்தைகளும், அன்பாகவும் உரிமையாகவும் சந்துரு மச்சான் என்று நெருங்க முயன்ற போதெல்லாம் அவனுடன் பழகவிடாது தடுத்த இவர் செயல்களும், அவள் துள்ளாட்டம் துடியாட்டத்தை சிறிதும் குறைக்காது, அவர் பேச்சுக்கு மேலாக அவரைச் சீண்டுவதே இவள் வேலையாகிப் போயிற்று!
“இஞ்ச பார், நான் என்ன கதையா சொல்றன்? முதல் இது என்ன இளிப்பு?” பேத்தியுடன் சண்டை போடத் தயாரானார், சரசு. “இத்தனைக்கும் பிறகு அதே குடும்பத்தில துணிஞ்சு சம்பந்தம் பேசுவானா உன்ர மாமா? சரி, தன்ர நண்பன் எண்டு அவேயா கேட்டு வந்தால், சரி சரி எண்டு தலையாட்டுவானா இவன்? அதுவும் உனக்கு?”
“அதை ஏன் என்னட்டக் கேட்கிறீங்க? அவர் உங்கட மகன் தானே? அவரிட்டையே கேட்கலாமே! ஏதோ எனக்குக் கலியாணம் செய்து வைய்யுங்க எண்டு நான் ஒற்றைக் காலில நிண்டமாதிரிச் சொல்லுறீங்க!” என்றவளுக்கு, மாமா மாமியின் அன்போடு கூடிய கண்டிப்பும், அரவணைப்பும் நினைவில் வராமலில்லை.
“இஞ்ச பாரடி, வார்த்தைக்கு வார்த்தை கதைக்காத! எண்ணி அளவாகக் கதைச்ச உன்ர அம்மாவே எவ்வளவு பெரிய காரியம் செய்தவள்! நீ என்னவெல்லாம் செய்யப் போறியோ!” என்றதும், மகிழின் முகம் இரத்தமெனச் சிவந்தது. தாயின் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும், அப்பப்போ எரிச்சலைத் தந்தாலும், கொஞ்சமும் கசக்கவில்லை இவளுக்கு. வீட்டில் கொஞ்சமேனும் அடங்கி இருக்க முயல்பவள், வீடு கண்ணிலிருந்து மறைந்த மறுகணம் சிட்டுக் குருவியாகிடுவாள். ஆமாம்! யாருமே அவளைக் கட்டுப்படுத்த முடியாது. தனக்கான எல்லை தெரிந்தே சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவி இவள்! அப்படியிருக்க, அம்மம்மா இப்படி அடிக்கடி சொல்வதில் மனதில் எழும் கோபத்தை அடக்கப் பெரும்பாடுபட்டு விடுவாள்.
“இங்க செய்யிற குரங்குச் சேட்டைகள எல்லாம் கனடாவில காட்டினியா பட்டிக்காடு எண்டு முத்திரை குத்திருவினம். உன்ர மாமாட மானம் கப்பலேறாமல் காப்பாத்துவ எண்ட நம்பிக்கை எனக்குக் கொஞ்சமும் இல்ல.” பேத்தியின் கன்றிச் சிறுத்த வதனத்தைப் பொருட்படுத்தாது எச்சரிக்கை விட்டார் சரசு.
மீண்டும் ஒரு ‘பட்டிக்காடு!’ ‘ அண்டைக்கு, அந்தாள் சொன்னதையே இந்தக் கிழவி சொல்லுறாவே!’ என்று சுழன்ற இவள் சிந்தனை சற்றுப் பின்னோக்கிப் பாய முயன்றது. தன் ஒரே செல்ல மகளின் வயிற்றில் உதித்தவளாக இருந்தாலும், மகளையும் பேத்தியையும் கண்டால் ஆத்திரத்தில் கொதித்துப் போவார் சரசு. எத்தனையோ வருடங்களாகத் தன்னைக் கட்டுப்படுத்த மிகவும் முயன்று முயன்று பார்த்தவர், வயது செல்ல செல்ல கட்டுப்படுத்தும் எண்ணத்தை அறவே கைவிட்டுவிட்டார். கிடைக்கும் சிறு சந்தர்ப்பத்திலும் தன் மன ஆதங்கத்தை வார்த்தைகளால் கொட்டி இருவரையும் வாயடைக்கச் செய்துவிடுவார். அதுவும் பேத்தியைக் காணும் நேரமெல்லாம், ‘இவள் அந்த ஏமாற்றுக்காரத் துரோகிட மகள்!’ என்ற நினைவில், சரசுவின் இரத்தம் கொதித்து அடங்க மறுக்கும்.
“என்ன சத்தமே இல்லாமல் நசுங்கிக்கொண்டு நிற்கிற? ஏதாவது திட்டம் போட்டு வச்சிருக்கிறியா என்ன?” எதற்கும் அசையாது நிற்கும் பேத்தியில் கட்டுக்கடங்காது ஆத்திரமெழுந்தது, சரசுவிற்கு. ‘அடங்காப்பிடாரி! ஒருசொட்டுக் கண்ணீர் விடுறாளா? அந்தளவுக்கு நெஞ்சழுத்தம்!’ தன்னுள்ளே சொல்லிக் கொண்டவர், “அந்த மாலுக்குள்ள, பழுத்த மாம்பழங்கள வேறயா எடுத்து வச்சிருக்கிறாளாம் உன்ர அம்மா. அதை அப்பிடியே ராசன் வீட்டில கொண்டு போய் வை! இரவைக்கு கொழும்பு போற பஸ்சில சந்துருவுக்குக் குடுத்துவிடவாம்.” தொடர்ந்து சொல்லிக்கொண்டே, மறக்காது பத்திரிகையையும் கையோடு எடுத்துக்கொண்டு, “டேய் சேகரா… நான் என்னத்துக்கு உன்ன வரச் சொன்னனான் எண்டு தெரியுமெல்லே? பிறகு அங்க நிண்டு என்ன வாய் பார்க்கிற?” தோட்டத்தில் வேலை செய்யும் பையனுக்கு அர்ச்சனையைத் தொடங்கியவாறே நகர்ந்து செல்ல, அவர் முதுகைப் பார்த்துப் பழிப்புக் காட்டிவிட்டு அருகிலிருந்த மாலை(மால்-கொட்டில்) நோக்கி நகர்ந்தாள் மகிழ்.
ஆரம்ப காலங்களில், இவர் பேச்சுக்கள் திரும்ப திரும்ப நினைவில் வந்து வேதனை கொள்ளச் செய்ததுண்டு. இப்போதோ, அப்படிப் பேசும் இவர் மீதே பரிதாபமெழுந்தது. கணவரை இழந்து நிமிர்ந்து நின்றவரின் மொத்த நம்பிக்கை, கட்டுக்கடங்காத ஆசைகள், குடும்ப கௌரவம் அனைத்துமே ஒன்றுமில்லாமல் போனதே! அது மட்டுமா நடந்தது? அல்லவே! பெற்றமகள் வாழ்விழந்து தனிமரமாகி நிற்பதைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் வெந்துதுடிக்கும் மனத்தின் வெளிப்பாடல்லவா இந்தச் சீறல்கள்!
“அதால அம்மா கதைக்கிறதுகள எல்லாம் நீ பெரிசு பண்ணாத மகிழ்!” என, அவள் தாயே மெல்ல மெல்ல விளங்க வைத்திருந்தார்.
ஒரு பெரிய கடகப்பெட்டியில் பழுத்த மாம்பழங்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார், மகிழின் தாய். அதைப் பார்த்ததும் மீண்டும் மகிழின் நினைவுகள்…. கிர்ர்ர்ர்ரென….. ஒரே பாய்ச்சலாகப் பின்னோக்கிப் பாய்ந்தன!

error: Alert: Content selection is disabled!!