நெஞ்சினில் நேச ராகமாய் 15 – 1

அத்தியாயம் 15
“இனிச்சரி உனக்கு நல்ல காலம் வரட்டும் மங்கை! வெளிநாட்டுச் சம்பந்தம். அதும், அறிஞ்சவர் தெரிஞ்சவரில அமையிறது இந்தக் காலத்தில பெரியவரம்.” என்ற சுசிலாவுக்கு, சிறு முறுவலைப் பதிலாகத் தந்த மங்கை, சுசிலா அவசரமாகத் தேவையெனக் கேட்ட சேலை இரவிக்கையைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தார்.

“என்ர மூத்தவள் கனடா போக விருப்பம் எண்டுறாள். நானும்தான் எவ்வளவு முயலுறன், ஹும்! ஒரு சம்பந்தமும் பொருத்தமா அமையுதில்ல. கடைசியில், இங்கயே கட்டிக் கொடுத்திட்டன். அவளுக்கு இன்னும் அது மனத்தில குறைதான். அங்க இருந்து வாற சனம் சொல்லுற கதைகளைக் கேட்டு, பிள்ளைகளுக்கு வெளிநாடு எண்டா ஒரு விருப்பம் தானே மங்கை!” தொடர்ந்தார் சுசிலா .
வெளிநாடு போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மங்கையின் மகளுக்கு, தேடாமல் வரன் அமைந்தது போல், விருப்பப்பட்டு வலைவீசித் தேடியும் தன் மகளுக்கு அமையவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு.
“எனக்கு இருக்கிறது அவள் ஒருத்திதானே சுசி! அவளையும் அத்தூரமா அனுப்பிட்டு…” என்று சொல்லி நிறுத்திய மங்கையின் விழிகள், சற்றுத்தள்ளி, சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி புத்தகம் வாசிக்கும் மகளில் நிலைத்து மீண்டன.
‘அப்பம் கொடுக்க எண்டு அண்ணா வீட்ட போய்ட்டு வந்ததில இருந்து அவள்ட முகமே சரி இல்லை. அம்மா ஏதாவது இசகு பிசகாகச் சொல்லிட்டார் போல!’ மனத்துள் நினைத்துக்கொண்டார், மங்கை. தன் மகளைக் கொஞ்சவில்லை என்றாலும் பரவாயில்லை, தினமும் வெறுப்பைக் காட்டுகிறாரே என்ற வருத்தம் அவர் மனத்தைச் சுருள வைத்தது.
“ஏதோ அவள் நல்லா இருந்தாப் போதும் சுசி. நான் செய்த மடத்தனம் என்னோட போகட்டும். அதையெல்லாம் மறந்து மன்னிச்ச அண்ணா, எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். அவருக்குத் தெரியாதா எது நல்லது கெட்டதெண்டு. சரவணன் அண்ணன் திரும்பவும் வந்து எங்களிட்டச் சம்பந்தம் பேசுறதே பெரிய விசயமல்லா?” தாழ்ந்த குரலில் கூறியவரின் முகம், அன்று தான் செய்த செயலையெண்ணி வருந்துவதை வெட்ட வெளிச்சமாகக் காட்டியது.
“விரும்பிக் கேக்கேக்க, மகளைப் பிரிய விருப்பமில்ல எண்டெல்லாம் எப்பிடிச் சொல்லேலும்? அவளுக்கு எண்ட வாழ்க்கை இதுதான் போல! அவள் நல்லா மகிழ்ச்சியா வாழ்த்தால் எனக்குப் போதும் சுசி!” என்றுவிட்டு, கண்கள் கலங்க, தன்னைச் சமாளித்துக்கொண்டே தையலைத் தொடர்ந்தார் மங்கை.
எப்படித்தான் தணிவாகக் கதைத்த போதும், அவர்கள் பேச்சு மகிழின் செவிகளைத் தழுவி, முகத்தைக் கடுகடுக்க வைத்தது. “ஓம் ஓம், பெரிய ராசவம்சம்! பொம்பளை கேட்டு இந்த ஏழைக் குடிலுக்கு வந்தது பெரியவிசயம் தான்! ராசவம்சத்தில கலியாணம் செய்து போனா, பிறகென்ன? வாழ்க்கை என்ன கெட்டா போயிரும்?” கோபமாக முணுமுணுத்தாள், மகிழ்.
எதையும் தான் தெரிந்து கொண்டது போல் காட்டாது, மாமா வீட்டிலிருந்து அமைதியாகத் திரும்பி வந்தவள், தான் கேட்டதைத் தாயிடம் கூறிவிட பலதரங்கள் முயன்றும் முடியாது விட்டு விட்டாள். தூரமாகச் செல்கின்றாளே என்ற கவலையையும் மீறி, தன் கல்யாணத்தில் அன்னையின் மகிழ்வை அறிந்திருந்தவள், அது நடக்காதென்று சொல்லி அம்மகிழ்வை அழிக்க விரும்பவில்லை. அதோடு, “அவே என்னை ஓடுகாலிட மகள் எண்டவே. அதாலதான் கலியாணம் வேணாம் எண்டினம்.” என்று தாயிடம் எப்படிச் சொல்வாள்? அதனால், ‘மாமாவே சொல்லிக் கொள்ளட்டும்.’ எனப் பேசாதிருந்தவள், காலையிலேயே தையலுக்குகென்று சுசிலாவும் வந்து விடவே, கதைப்புத்தகத்துடன் வந்தமர்ந்து விட்டாள்.
‘அம்மா, உங்கட கவலை தேவையில்லாதது! உங்களைத் தனியா விட்டுட்டு எங்கயும் நான் போகப்போறதில்ல.’ என்று மனத்துள் சொல்லிக்கொண்டவளுக்கு, ஓடுகாலியின் மகள் என்றது தந்த வலியையும் மீறி, இக்கல்யாணம் பற்றி சிலநாட்களாக மனதிலிருந்த குழப்பங்கள் பயங்கள் விலகி, மிகவும் இலகுவாக உணர்ந்தாள்.
‘எப்பிடியும் மாமாட்டக் கேட்டு மாஸ்ட்டர்ஸ் செய்ய வேணும். அதோடு ஒரு வேலையும் கிடைச்சிட்டு எண்டா!’ என நினைத்துக் கொண்டவளை, “மகிழ்…மகிழ்…” என்ற தாயின் அழைப்பு, திடுக்கிட்டுத் திரும்ப வைத்தது.
“ஓடியாம்மா…” அழைத்துக்கொண்டு கைப்பேசியை நீட்ட, “எனக்காம்மா? ஆர் உஷாவா? என்னவாம்? பின்னேம் வாறன் எண்டனே!” என்றபடி, கையை நீட்ட, கைப்பேசியைப் பொத்தினார், மங்கை.
“தம்பி கதைக்கிறாரம்மா! அதையும் இதையும் கதைச்சு உளறாத சரியா? வெடு சுடு எண்டில்லாமல் கொஞ்சம் அமைதியாக் கதை என்ன.” என்றவாறே, கைப்பேசியைக் கொடுத்தார்.
“தம்பியா? அதாரம்மா?” குழப்பத்துடன் கைப்பேசியை வாங்கியவள், “எல்லாம் உன்ர வருங்காலக் கணவர் தான். போய்க் கதை பிள்ளை !” என்று, விரிந்த முறுவலுடன் சுசிலா சொல்ல, அதிர்ந்து விட்டாள்.
‘காலம மாமா வீட்டில என்ன எல்லாம் கதைச்சிச்சினம். பிறகும் இங்க ஏன் எடுக்கிறார்? அதும், இதுக்கு முதல் ஒருக்காலும் எடுத்துக் கதைச்சதும் இல்ல.’ என நினைத்துக்கொண்டவள், “நான்…நான் என்னம்மா கதைக்கிறது? நீங்களே என்னெண்டு கதையுங்க!” என்றபடி, கைப்பேசியைத் தாயிடம் நீட்டினாள்.
மகளை முறைத்தார் மங்கை. சுசிலாவோ, தலையில் அடித்துக் கொண்டார். “அவர் என்ன தன்ர மாமியோட கதைக்கவா இந்தச் சாமத்தில முழிச்சிருந்து எடுக்கிறார்! போடி போ! போய் கதை!” கேலியாகச் சொல்லவும் செய்தார்.
மகிழ் அசையவில்லை. “இல்லம்மா, நீங்களே கதையுங்க!” தாயின் கையில் கைப்பேசியைத் திணிக்கவும், பதறி விட்டார் மங்கை. “உனக்கென்ன விசரா மகிழ்? அவர் என்னோட கதைச்சிட்டார். உன்னோட கதைக்கோணும் எண்டவர். போ..போய் கதையன!” தன்மையாகச் சொல்வது போலிருந்தாலும் மகளை முறைத்தார்.
சட்டென்று கைப்பேசியைப் பார்த்து, அதில் அவன் முகம் தெரிகிறது என்கின்ற பாவனையில் முறைத்தாள், மகிழ். மறுநொடி, “ஹலோ…” காதில் வைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்து பின்புறமாக இறங்கினாள்.
அதுவரை அவர்கள் கதைத்ததில் பெரும்பான்மையைக் கேட்டிருந்த உதய் அகமும் முகமும் சுருங்கிப் போனான்.
“இந்தப் பொம்பளை வேணாம், வேற இடம் பாப்பம்!” என்ற தாயையும், அதை ஆதரித்த தமையன்மாரையும் தன் பேச்சால் வளைத்துவிட்டிருந்தான். “அவவ எனக்குப் பிடிச்சிருக்கு அம்மா!”வெளிப்படையாகவே சொல்லி விட்டான்.
“நீங்க முதன் முதல் எனக்குக் காட்டிய பொம்பளை. ஒருக்காச் சந்திச்சிச்சிருக்கிறன். என்றாலும், இந்தச் சில நாட்களில ஏதோ ஒருவகையில நல்லாப் பழகியவா போல ஒரு உணர்வு என்னுக்க வந்திட்டு. மங்கை அன்ரி என்ன செய்திருந்தாலும் எப்பிடி நடந்திருந்தாலும் அது எல்லாம் அவவிட சொந்த விசயங்கள் இல்லையா? அதுகள மகிழோட ஏன் தொடர்புபடுத்துவான்!” என்று அவன் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது?

error: Alert: Content selection is disabled!!