“தம்பி…உதய்…” அவன் தலையை ஆதரவாகக் கோதியதும், சட்டென்று கண்திறந்து பார்த்தவனை, திகைப்பாகப் பார்த்தார் தாய்.
“தம்பி! என்னய்யா? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” அவசரமாக மகன் கழுத்தில் கைவைத்துப் பார்த்தவர், “இரவு நல்லாத் தானே இருந்தனி?” என்றவாறே, அவனருகில் அமர்ந்து கொண்டார்.
“பச்… அப்பிடி ஒண்டும் இல்லை அம்மா. நீங்க இப்ப ஏன் எழும்பி வந்தீங்க?” கேட்டபடியே எழுந்தமர்ந்தவன், தாயின் ஆராய்ச்சிப் பார்வையைத் தவிர்த்தான். தொலைக்காட்சியை நோக்கியவாறே, “உண்மையாவே ஒண்டும் இல்லை அம்மா, நித்திரை வரேல்ல, அதுதான் டிவி பாக்கலாம் எண்டு வந்தனான்.” சலித்துக்கொண்டவனை, கூர்மையாக அளவிட்டார், அவன் தாய்.
“அதையும் இதையும் சொல்லிச் சமாளிக்கிறது, பொய் கதைக்கிறது எல்லாம் என்ர மகனுக்கு வரவே வராதே! சொல்லுங்க என்ன விசயம்?” கூர்மையோடு வினவியவரை கணம் நோக்கியவன், “பச்!” சலித்தவாறே அவர் மடியில் படுத்துக்கொண்டான்.
“உதய், என்னடாய்யா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்றவர் குரலில் கவலை ஒட்டிக்கொண்டது.
மெல்ல அவர் பார்வையை நேருக்கு நேராக எதிர்கொண்டவனின் விழிகளில் என்ன இருந்தது? அவரால் சட்டென்று அனுமானிக்க முடியவில்லை.
‘கோபமும் எரிச்சலுமா?’ யார்மீது?
‘ஏமாற்றமும் நம்பமுடியாத் தன்மையுமா?’ ஏன்? எதனால்?
தூங்கச் செல்லும் போது எவ்வளவு மகிழ்வும் நிறைவுமாக இருந்தான். உண்மையில் குழம்பிப் போனார் ரத்னா.
“உதய் என்ன நடந்தது? என்னவோ நடந்திருக்கு. சொன்னால் தானேடா தெரியும்.” என்றவர், “பாட்டி! பாட்டி திரும்பவும் எடுத்து ஏதாவது கதைச்சவரா?” சட்டென்று கேட்டார்.
“மாமி தனக்கு இரவில நித்திர வருகுதில்ல எண்டுறவர். அந்த நேரத்தில் ஃபோன் கதைக்கிறதுதான் வேலை போல!” என்றவர், “அப்பாதான் பாட்டியோட கதைக்கிறன் எண்டிட்டாரே ராசா. பிறகென்னைய்யா? பாட்டி எதையாவது சொன்னால் பேசாமல் இருங்க. அப்பா பாத்துக் கொள்ளுவார்.” என்று, மகனைச் சமாதானம் செய்தார்.
“எண்டாலும் உங்களுக்கு மகிழில இந்தளவுக்கு விருப்பம் இருக்கும் எண்டு நான் கூட நினைக்கேல்ல. பேசாமல் பழகாமல் இப்பிடியொரு பிடிப்பு வரவும் நிச்சயம் குடுத்து வச்சிருக்க வேணும். என்ர மகனக் கலியாணம் செய்யப் போற மகிழ் குடுத்து வச்ச பிள்ளை!” மனத்தில் தோன்றியதைப் பெருமையாகச் சொல்லி, மகன் தலையைக் கோதிவிட்டவருக்கு, தன் செல்ல மகனை நினைக்க, எல்லா விடயத்திலும் போல் இதிலும் பெருமையே பொங்கியது.
சிறுவயதிலிருந்தே மற்றைய இரு மகன்களை விட குடும்பத்தில் மிகவும் பற்றும் பிடிப்பும் கொண்டவன் உதய். அண்ணன்மார் இருவருக்கும் பாலம் இவனேதான்! இளையவர்கள் இருவரையும் விட மூத்தவன் வயது வேறுபாடு அதிகமென்றாலும், உதய் சொல்வதை அவனே தட்டுவதில்லை. சொந்தபந்தம், உற்றார் உறவுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுக்கும் இவனுக்கு, அவர்கள் உறவில், நட்பில் மிகுந்த மரியாதையுமுண்டு. அதைப் பார்க்கையில் தாயாய் எப்போதுமே மகிழ்ந்து போவார், ரத்னா.
தாய் சொன்னதைக் கேட்டதும், அவர் மடியிலிருந்து சட்டென்று எழுந்தமர்ந்து கொண்டான், உதய். ‘விருப்பமும் பிடிப்பும், அவளிலா?’ கண்களை இறுக மூடிக் கொண்டவனின் விழிகளுள், மாங்காய்த் துண்டுகள் நிறைந்த கிண்ணத்தை நீட்டிப் பிடித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் வந்து போனாள், மகிழ்.
‘கண்களில சீண்டலும் கிண்டலும் கொப்பளிக்க, அவள் அண்டைக்கு நிண்ட விதம் இண்டைக்கும் என்ர மனசில அழியாமல் இருக்கே! அப்ப, அவளில எனக்கு அன்பா? பிடிப்பா?’ மனம் கேட்ட வினாவில், இதழோரம் ஒரு கோபமுறுவல் உதித்து மறைந்தது.
‘இவளத்தான் உனக்குப் பொம்பளை பாத்திருக்கிறம் எண்டோன்ன, அவளோடு சேர்ந்து கடக்கப் போகிற வாழ்க்கையின்ட ரசிப்பு என்ர மனசில உலா வந்தத நான் இல்லை எண்டு சொல்ல மாட்டன்.ஆனால், அவள்?’ பற்களை நறும்பிக்கொண்டான், உதய்.
‘ஏன்? நான் ஏன் இப்பிடி அவள விரும்பினன்? அதை அவள் எவ்வளவு அசட்டையா நினைச்சிட்டாள்!’ தன் மீதே கோபம் வந்தது, அவனுக்கு. மகிழ் கதைத்த ஒவ்வொரு சொற்களும் மீண்டும் மீண்டும் செவிகளில் ஒலித்து, அவன் மனத்தில் சுழன்றடித்த ஆத்திரத்தை மேலும் மேலும் விசிற முயன்றன.
‘சரி, பாட்டியே எடுத்துக் கதைச்சிருந்தாலும், அதுக்காகக் கொஞ்சமும் யோசிக்காமல் இப்பிடியா கதைப்பாள்? ஆரோட கதைக்கிறம் எண்ட நினைப்பு வேணாமா? உடம்பு முழுசும் திமிர்! ஓம்,அண்டைக்கும் அதே திமிரில தானே முதல் முதல் கண்ட என்னோட அப்பிடி வாயடிச்சவள்! திமிர்பிடிச்சவள்!’
அன்று அவள் வாயாடியதை, “இவள் தான் உனக்கு நாங்கள் பார்த்திருக்கும் பெண்.” என்றபோது ஒருவகை சுவாரசியத்தோடு நினைத்துக் கொண்டவனோ, இப்போது உச்சகட்ட ஆத்திரத்தில் நினைத்துப் பார்த்தான்.
‘நான் தான் மாப்பிள்ளை எண்டோன்ன வேணாம் எண்டாளாமே!’ என்று, அவள் சொன்னதை நினைத்தவனுக்கு, ‘ அப்பிடி, நான் ஏன் அவள் வேணாம் எண்டு சொல்லேல்ல ?’ தன் மீதே கோபம் கொண்டான்.
‘அப்ப, அவள்ட மனசில என்னைப் பற்றி எந்தளவுக்கு இளக்காரமாக நினைச்சிருக்கிறாள்?’ தன் மொத்த சயனத்தையும் முழுங்கிக்கொண்ட கோபம் அளவு கடக்க முயல, அடக்குவதற்கு மிகவும் சிரமப்பட்டான், உதய்.
‘இப்ப…கலியாணம் நடவாது எண்டோன்ன நிம்மதியா இருக்கிறாளாமே. அதை என்னட்டையே சொல்ல எவ்வளவு துணிவு? பாப்போமே, உன்ர நிம்மதிட ஆயுள் எவ்வளவெண்டு!’ ஆத்திரமாகவே நினைத்துக்கொண்டான்.
திடீரென்று அமைதியாகிவிட்ட மகனையே மிகவும் குழப்பத்துடன் பார்த்திருந்தார், ரத்னா. “ராசா… என்னைய்யா?” தாய் உலுக்க கண்களைத் திறந்தவன், “ம்மா…பாட்டி யாழ்ப்பாணத்துக்கு எடுத்திருக்கிறா. மகிழ் வீட்டில கதைச்சிருக்கிறார்மா!” என்று ஆரம்பித்தவனை, “என்னது…மகிழ் வீட்டுக்கா? என்னய்யா சொல்லுறிங்க?” என்ற தாயின் அதிர்வு இடைநிறுத்தியது.
“ஓம் மா! எங்களோட கதைச்ச மாதிரியே அங்கயும் கத்தி இருக்கிறார் போல. இந்தக் கலியாணம் நடக்காது எண்டு வேற சொல்லியிருக்கிறார்!” என்ற மகன் குரலில் தொனித்த எரிச்சலில் பேச்சின்றிப் பார்த்திருந்தார், ரத்னா.
‘இந்த மாமிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! ஒரு வார்த்தை எங்களோட கதைக்காமல் இப்பிடிச் செய்யிறதா?’ மனத்துள் அங்கலாய்த்தவருக்கு, தன் மாமி எப்படியெல்லாம் கதைத்திருப்பார் என்பதில் சிறு சந்தேகமும் எழவில்லை.
பர்வதம், மிகவும் அன்பான மாமிதான். ஆனால், எவரையாவது பிடிக்கவில்லையென்றால் பிறகு சிறிதும் சகிப்புத்தன்மைக்கு இடமளிக்கவே மாட்டார்.
“இண்டைக்குத்தான் மகிழோட கதைச்சுப் பாப்பம் எண்டு நினைச்சு எடுத்தன்மா. அவவோ, கலில்யாணம் நடக்காது எண்டு சொல்லிட்டு, இப்ப ஏன் எடுக்கிறீங்க எண்டுறா.” முகம் இறுகச் சொன்னான், உதய்.
“இந்த விசயத்தில மாமி இலேசில சமாதானம் ஆவார் எண்டு நான் நினைக்கேல்ல தம்பி. இதையெல்லாம் பொம்பளை பாக்க முதலே நாங்க யோசிச்சிருக்கோணும் இல்லையா? இப்பப் பாருங்க எவ்வளவு பெரிய பிரச்சனையா வந்திருக்கு! திரும்பவும் ரெண்டு குடும்பங்களும் முறைச்சுக் கொள்ளப் போகினமோ!” குற்ற உணர்வுடன் பேசிய தாயை தீர்க்கமாகப் பார்த்தான், உதய்.
“சொறிடா ராசா! மகிழ் நாங்க பாத்த பொம்பளை. ஆசையை வளர்த்துவிட்டுட்டு இப்ப இருந்து தேவையே இல்லாத பிரச்சினைகளையும் தாறம் என்ன? ஒருவேளை பாட்டி சம்மதிக்கேல்ல எண்டா …” குழப்பத்துடன் தொடர்ந்த தாயின் கரத்தை ஆதரவுடன் பற்றிக்கொண்டான், மகன்.
“நீங்க ஏனம்மா கவலைப்படுறீங்க? சொறி எல்லாம் சொல்லிக்கொண்டு. இப்பவும் சொல்லுறன், எனக்கு அவவத்தான் பிடிச்சிருக்கு. இதில எந்தவிதமான மாற்றமும் வரப்போறதில்ல. அவவிட சம்மதமும் கேட்டுத்தானே கலியாணத் திகதியும் குறிச்சனீங்க? பிறகென்ன? கலியாணம் அந்த நாளில நிச்சயமா நடக்கும்!” என்றவன் குரலில் எஃகுவின் உறுதி.
“பாட்டிய நானே சமாதானம் பண்ணிக் கொள்ளுறன்மா. நீங்களோ அப்பாவோ ஒண்டும் கதைக்க வேணாம். விடியட்டும், நான் பாத்துக் கொள்ளுறன். ஆனா, ராசன் அங்கிளோட நீங்களே கதைச்சு மேற்கொண்டு நடக்க வேண்டியதுகளைப் பாருங்க.” என்று, மகன் முடிவாகச் சொன்னதும், பேச வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தார் அன்னை.

