கோபமிகுதியால் திரிந்தவனை, வெற்றிகொள்ள முடியாது தவித்த நேசம் கொண்ட மனமோ, ஏக்க மிகுதியால் வாடி, எப்போதடா கல்யாண நாள் வரும், அவளைக் கண்குளிரக் காண்பதற்கு எனக் காத்திருந்தது. வேண்டுமென்றே பெற்றோர்களுடன் இலங்கை வராது பின்தங்கி நின்று, பாட்டியை அழைத்து வருகிறேன் என, கடைசி நேரம் வரை அவன் இழுத்தடித்ததில், மிகுதியாய் முறுக்கிச் சண்டை போட்டுக் களைத்துக் கிடந்தது நேசம் கொண்ட நெஞ்சம்.
இப்போதோ, அவள் குனிந்ததலை நிமிராது நடந்து வருவதை இமைக்காது பார்த்திருந்தவனுள், அவள் தன்னை நோக்குவாள் என்ற எதிர்பார்ப்பு மிகையாக, துள்ளி நிமிர்ந்தமர்ந்தது நேசம் கொண்ட நெஞ்சம். அவளோ, அதன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாது, பொம்மைபோல் அவனருகில் வந்தமர, ஏமாற்றத்தில் சுணங்கிய நேசம் தலைகுனிய, அவளை இறுக்கமாகவே நோக்கினான், அவள் மீது கோபம் கொண்டிருந்தவன்.
இப்போதும், விருப்பமில்லாமல் பெரியவர்கள் வற்புறுத்தலுக்காக வந்தமர்ந்திருக்கிறாளா? உன் சந்தோசமும் நிம்மதியும் இப்போ எங்கே போய்விட்டது? என் மனைவி என்றாவதை உன்னால் தடுக்கவே முடியாது மகிழ் என்று, மனம் சிடுசிடுத்தாலும், நட்புடன் புன்னகைத்த அவள் தோழிகளுடன் அன்பாகப் புன்னகைத்துவிட்டு, உள்ளே ஓடிய இறுக்கத்தையும் மீறி, அடுத்து நடந்த சடங்குகளில் மிகவும் ஆர்வத்துடன் மூழ்கிப் போனான், அவன்.
இமைகளை நிமிர்த்தாது குருக்கள் சொன்னவற்றை சிரத்தாகச் செய்து கொண்டிருந்த மகிழ், தன் கரங்களோடு அப்பப்போ இணைந்து விலகும் அவன் வலிய கரங்களில் பார்வையைப் பதித்து மீட்டவளுள், அவன் முகம் நோக்கும் ஆவல் மிகையானது. ‘ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்தை ஹாய் மகிழ் எப்பிடி இருக்கிறாய் எண்டு கேட்டால் குறைஞ்சா போயிருவார்?’ என்று, காலி வயிரோடு போட்டி போட்டுக்கொண்டே இரைந்தது ,அவள் மனம்.
முதல்நாளிரவு முழுவதும், துளியும் உறக்கமின்றித் தவித்தவாறே புரண்டு கொண்டிருந்தாள், இவள்.
“அப்பாடா! உதய் வந்திட்டாராம்! என்னதான் எண்டாலும் இப்பதான் நிம்மதியா இருக்கு. கொஞ்சம் முதல் தான் ஏர்போர்ட்டில இருந்து வந்தவேயாம்.” இவளின் மாமி கோகிலா, ராசனுடன் கதைத்தவாறே பக்கத்து அறையினுள் நுழைய, இதைக் கேட்டவளோ, இதுவரை ஆட்கொண்டிருந்த உள்ளத்தவிப்பு ஓரளவுக்கேனும் விலகி, நிம்மதியுணர்வு தன்னுள் நிரவுவதை உணர்ந்துகொண்டாள்.
அப்போ, பாட்டி கூறுவது போலவே உதய் வராது இருந்து ஏமாற்றிவிடுவானோ என்ற தவிப்பும் எண்ணமும் இவளுக்கும் இருந்ததோ என்ற வகையில், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள், அவள்.
மண உறவுக்கு அடிப்படையே இரு மனங்களிடையேயான நம்பிக்கையல்லவா! அது இங்கு பூச்சியமாகவல்லவா இருக்கு! என்று, அவன் மௌனம் பாடாப்படுத்தியதில், மனத்துள் ஏகத்துக்கும் முறுக்கிக்கொண்டாள், மகிழ்.
அருகிலிருப்பவளின் உள்ளத்தின் ஏக்கக் குரலை அறியாதவனோ, கர்மசிரத்தையாக மந்திரங்கள், மேளதாளங்களின் மத்தியில் தாலியை கையில் வாங்கிக் கொண்டெழுந்தவனின் பார்வை, அலங்காரப் பெண்ணின் கைங்கரியத்தில் ஜொலிக்கும் தேவதையாகத் தெரிந்தவள் வதனத்தில் தீர்க்கமாக நிலைத்து, நகர மறுத்து சண்டித்தனம் செய்தது. அவனுள்ளே இருந்த நேசமோ, அவளை அணுவணுவாக இரசிக்க பேரவாக்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. ஆனால் அவளோ, தன் இமைகளைச் சற்றும் அசைக்கவில்லை.
இப்போ சரி ஒருதரம் பார்க்கமாட்டாயா என்று, நேசம் கொண்ட மனம் ஏக்கத்துடன் முணகியது அவனுக்கே கேட்டது. அவள் மீது பட்ட விழிகளை அகற்ற மறந்து நின்றிருந்தவனை மெல்ல உசுப்பினார், ரத்னா. “தம்பி, எல்லாரும் பாத்துக் கொண்டிருக்கினம். உன்ர மனிசியைப் பொறுமையா இரசிக்கலாம். தாலியைக் கட்டு ராசா!” காதருகில் கிசுகிசுத்தார். சட்டென்று தன்னுணர்வு பெற்று, குனிந்து தாலியை பூட்டத் தொடங்கினான் அவன்.
அதுவரை, குருக்கள் சொன்னதைச் செய்துவிட்டு பொம்மையென இருந்தவளோ, தன்னையுமறியாது கரம் கூப்பி விழிகள் மூடினாள்.
இக்காட்சியைப் பார்த்திருந்த மங்கை, ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். தன் தங்கைக்கு செய்ய முடியாமல் போனதை, அவள் மகளுக்கு நிறைவாகச் செய்து வைத்த மகிழ்வில் அட்சதை துவி ஆனந்தித்தார், ராசன். பர்வதம் மட்டுமே வெடுசுடு முகத்துடன் நிற்க, மிகுதி அனைவரும் மகிழ்ச்சித் ததும்பலில் மணமக்களை வாழ்த்தி நின்றனர்.
“குங்குமத்தைத் தொட்டு நெற்றியிலும் உச்சியிலும் வச்சு விடுங்க. பிறகு தாலியிலும் வையுங்க!” என்று அய்யர் சொல்ல, நீட்டப்பட்ட சிமிழிலிருந்து, குங்குமத்தை எடுக்கச் சென்ற உதயின் நடுவிரல், மெல்லிய நடுக்கத்துடன் பொட்டைத் தொட்டு அவள் நெற்றி நோக்கி நகர, “அப்பிடி இல்ல தம்பி, இப்பிடி..” அவன் மூத்தண்ணி சுமி, மகிழின் தோள்புறமாக இவன் கரத்தைப் பிடித்து விட்டாள்.
சிறு முறுவலுடன், அவளை அணைத்து அவள் முகத்தின் முன்னால் மிக அருகில் நெருங்கி, தயக்கமுடன் தன்னை ஏறெடுத்த அவள் நயனங்களை ஊடுருவியவாறே, அவள் நெற்றியில் திலகத்தை அழுத்தி இட்டான், உதய்.
அவன் விழிகளிலிருந்து பார்வையை அப்புறம் இப்புறம் அசைக்க மறந்து பார்த்தவாறே, அவன் கரத்தால் திலகத்தை ஏற்ற அவன் திலகவதியின் உடலோ ஒரு முறை நடுங்கி ஓய்ந்தது. அவள் நயனங்களில் மெல்லிய நீரின் பளபளப்பு. இவர் இக்கணம் முதல் என் கணவர் என்று வியந்த உள்ளமோ, இருவருடங்களுக்கு முன்னர், “பளைக்கு இல்ல இலங்கைக்கே வந்திருக்க மாட்டன்.” என்றும், “பட்டிக்காடு!” என்றும் அவன் உதிர்த்த வார்த்தைகளை நினைத்து, இதை நம்ப முடியாது திணறியது.
அவனோ, ஒருவித அழுத்தத்துடன் அவள் உச்சியில் திலகமிட்டவன், பின்னர் தாலியை ஏந்திப் பிடித்து, பக்குவமாக அதிலும் திலகமிட்டான்.
இப்போது அவள் விழிகளில் துருத்திய நீர் மணிகள், வெளியில் வரவா என்ற நிலையில் எட்டிப்பார்த்தன! தன்னருகில் தெரிந்த கணவன் முகத்தை ஒருவித எதிர்பார்ப்போடு மீண்டும் பார்த்தாள், மகிழ். அவளின் பார்வையைப் படித்தவனுக்கோ, கனிவாகப் பார்க்க வேண்டும் போன்று தோன்ற, அவ்வெண்ணத்தைக் குட்டி அடக்கியது அவன் கோபம் கொண்ட மனம்.
அன்று எவ்வளவு ஆசையாக அழைக்க என்னவெல்லாம் பேசினாள்? இவ்வளவு நேரமாக, நீ பார்த்தபோது அவள் உன்னைப் பார்த்தாளா? இப்போது, ஒன்றும் அறியாத அப்பாவி போல் பார்க்கிறாள். இதையெல்லாம் இலகுவில் நம்பிவிடாதே உதய். உன்னை அவள் அப்போதும் இளக்காரமாகத் தான் பார்ப்பாள்!’ எச்சரித்தது!
இயலாமையில் அடங்கிய மனம் ஒருபுறமாக ஒதுங்க, அவளைப் பார்க்காது மிக முக்கியமாக ஐயர் சொல்வதை மட்டுமே கேட்பவன் என்ற கணக்கில், அவர் சொல்வதைச் செய்வதில் முனைந்தான் உதய்.
அப்போது மணமேடையருகில் நின்றிருந்த சரணி, “சித்தப்பா! கனடால இருந்து ஃபோன்!” என்றாள். “ஆரம்மா? பிறகு கதைக்கலாம்.” ரத்னா சொல்லிக் கொண்டிருக்கையில், “இல்ல, தாங்கம்மா பாப்போம்!” அவன் கைநீட்ட, “குணா மாமா..” சொல்லிக்கொண்டே கைபேசியை அவனிடம் கொடுத்தாள், சரணி. மலர்வுடன் வாங்கி, காதில் வைத்தவனின் பார்வையொருகணம் மனைவியைத் தொட்டு மீண்டது.
“ப்ச்…இந்த ஃபோனால இது ஒரு பெரிய தொல்லை! கெதியாக் கதைங்க ராசா. எல்லாரும் பாத்துக்கொண்டு உங்களுக்காகக் காவல் இருக்கினம் எல்லா?” முணுமுணுத்த தாயைச் சைகையால் அடக்கியவன், “தாங்க்ஸ்டா…ம்ம் இப்பதான். பரவாயில்ல குடு!” என்றவன், “தாங்க்ஸ் அங்கிள். இப்பதான்; இந்த குடுக்கிறன், கதையுங்க!” மிகவும் சுவாதீனமாக மனைவியிடம் திரும்பினான். பலநாள் பழகியவன் என்கின்ற பாவனையில், “மகிழ், இது என்ர ஃப்ரெண்டும் அவன்ட வீட்டாக்களும் கனடால இருந்து விஷ் பண்ண எடுத்திருக்கினம். கதைச்சிட்டு வையும்!” என்று, இதுவரை ஒத்த வார்த்தை பேசாதவன் சொன்னதும் சட்டென்று முறைத்தாள், அவள்.
‘சுற்றி எல்லாரும் ஏன் ஐயரும் பாத்துக்கொண்டு இருக்க, அவரிட ஃப்ரெண்ட் கோல் பண்ணினா எடுத்துக் கதைப்பாராம். அப்பதான் மகிழ் எண்டதும் நினைவில வரும். பெரிய ஜமீன் வாரிசு!’ மகிழின் இயல்பான குணம் சிலிப்பிக் கொண்டாலும்,கைப்பேசியை வாங்கிச் செவியோடு அணைத்துக்கொண்டாள். மறுபுறமிருந்து வந்த வாழ்த்தை நன்றி சொல்லி ஏற்றாலும், ‘நண்பன் எண்டார் இதாரு வயசான ஆள் போல இருக்கே!’ என்று நினைத்தவள் பார்வை கணவனைத் தொட்டது. உதய் அவளையேதான் பார்த்திருந்தான்.
“அது அவன்ட பெரியப்பா…” என்று சொல்லவும் செய்தான். அங்கோ, ஒவ்வொருவரும் நீட்டி முழங்கி வாழ்த்துக்களைச் சொன்னார்கள். கதைத்துவிட்டு முறைப்புடனே கைப்பேசியைக் கொடுக்க வாங்கிக்கொண்டவன், “தாங்க்ஸ் அங்கிள், உங்கடதான் முதல் வாழ்த்து. உண்மையாவே நல்ல சந்தோசம் அங்கிள், பிறகு கதைக்கிறன் என்ன.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

