நெஞ்சினில் நேச ராகமாய் 19 – 1

அத்தியாயம் 19
“ஸ்ஸ்…அம்மா! போதும் போதும், காதுவலி தாங்கேலாமல் இருக்கு!” காதுகளைப் பொத்தி முகத்தைச் சுளித்துக்கொண்ட மகளைக் கலங்கும் விழிகளுடன் ஏறிட்டார் மங்கை. பிறந்தநாளிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை மகளைப் பிரிந்ததில்லை. ‘இதுவரைக்கும் என்ர வாழ்க்கேண்ட பிடிப்பே இவள் தானே? இனி?’ ஈனஸ்வரத்தில் முனகியது, அவர் மனம். வரவிருக்கும் தனிமையின் பயங்கரத் தோற்றத்தை உணர்ந்தவரோ, மெல்ல மெல்ல மிரட்சியின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தார்.

கல்யாணம் முடிந்து, கால்மாற்றி சடங்குகள் முடிய, மணமகன் வீட்டில் மணமக்களை விட்டுவிட்டு இதோ அவர்கள் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். திருமணம் பேசியதிலிருந்தே புத்திமதிகளால் அவளைக் குளிப்பாட்டியிருந்தாலும், மங்கையின் மனம் இன்னமும் சமாதானம் அடையவில்லை. ‘அங்க இருக்கிற எல்லாரையும் சமாளிச்சு நடக்கோணுமே. துடுக்குத்தனம் கூட. வாய் சொல்லவே வேணாம். என்ன வளர்ப்பு எண்ட பெயர் எடுத்திராமல் சந்தோசமா இருந்திரோணும்.’ என்ற தவிப்போடு மகளையே பார்த்து நின்றார் அவர்.
கலங்கி நின்ற தாயைப் பார்த்தவளும் அவரைக் கட்டிப்பிடித்து அழவே துடித்தாள். ஆனாலும், அன்னையின் ஏக்கத்தை அதிகரிக்கும் எண்ணமின்றி தன்னைதான் மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டவள், “ஒண்டுக்கும் யோசிக்காதீங்க அம்மா. இவேயள் எல்லாரும் என்னோட நல்லாப் பழகுற வரைக்கும் கொஞ்ச நாட்களுக்குச்சரி நான் பாத்துக் கவனமா நடந்துகொள்ளுறன்!” வேண்டுமென்றே முழியை உருட்டி, நக்கலாகச் சமாதானம் செய்தாள். மங்கை அப்படியேதான் இருந்தார்.
“எத்தினை நாட்கள் அம்மா? ஒரே ஒரு கிழமை தானே! அதுக்குப் பிறகு, உதய் கனடா போக நான் உங்களோட தானே வரப்போறன். பிறகு, விசா எந்தக் காலத்தில வருமோ? இப்ப இந்த ஒரு கிழமையும், இந்தா நடந்து வாற தூரத்தில சந்துரு மச்சான் வீட்டில நிக்கப் போறீங்க. பிறகென்ன? நாளைக்கு விடிஞ்சோன்ன நான் அங்க ஓடியாந்திருவன்!” என்று சொன்ன மகளை முறைத்தார், மங்கை.
அதேநேரம், அவள் சொன்னவை, அப்பகுதியால் வந்த உதய் செவிகளையும் உராய்ந்து சென்றன. கேட்டவன் விழிகளோ, தனக்கு முதுகு காட்டி நின்ற மனைவியை நன்றாகவே முறைத்தன. என்னதான் தாயைத் தேற்றுவதென்றாலும், விசா வருவது எந்தக் காலமோ என்று அவள் சொன்னதை அவனால் சகித்துக்கொள்ள முடியாதிருக்கவே, சட்டென்று வேலையிருப்பது போல் உள்ளே நகர்ந்து விட்டான்.
மகள் சொன்னதைக் கேட்ட மங்கை, “இங்க பார் மகிழ், விசர் வேலை ஒண்ணும் செய்திராத சரியோ!” பதற்றமாக ஆரம்பித்தார்.
அப்போது அங்கே வந்த கோகிலா, “இனி அவளை விடு மங்கை. அவள் ஒண்டும் சின்னப் பிள்ளை இல்லை. பாத்துப் பொறுப்பா நடப்பாள்.” என்றவர் குரலும், பிசிறுதட்டியே வெளிவந்தது .
“இல்ல அண்ணி, விடிஞ்சோன்ன அங்க சந்துரு வீட்டுக்கு வந்திருவன் எண்டுறாள்.” கவலையாகச் சொன்னார், மங்கை.
“அப்பிடி எல்லாம் வரக்கூடாது மகிழ். நாங்க வருவம் சரியா? ஏற்கனவே ரெண்டு கிழமை நிண்டிட்டுப் போவன் எண்ட உதய், ஒரு கிழமையில கனடா வெளிக்கிடுறார். அதால உங்களுக்குக் கண்டியில புக் பண்ணி வச்ச ஹோட்டலையும் கேன்சல் பண்ணியாச்சு. இதில, ரத்னா அக்காவுக்குக் கொஞ்சம் கவலை. மகனோட இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். இதுக்க நீ வேற அங்க எங்களிட்ட வந்தா…” என்றவர், ராசனும் சரவணனும் பேசிக்கொண்டு வர, எல்லோரிடமும் விடைபெற்று வெளியில் இறங்கினர்.
அதுவரை மிகவும் நிமிர்வாக நின்ற மகிழ், அவ்வளவாகப் பழக்கமில்லாத அப்பெரிய குடும்பத்தில் தான் தனித்து நிற்பதாக உணர்ந்தாள். “அம்…மா…” கண்கலங்கிக்கொண்டே தாயை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள். மங்கையும் கோகிலாவும் அவளுடன் சேர்ந்து அழ, இவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து கொண்டிருக்கையில் உள்ளிருந்து வந்தார், பர்வதம் பாட்டி.
“இதென்ன வேலை எண்டு கேக்கிறன். நல்ல நாளும் அதுவுமாக, இரவு நேரத்தில வீட்டு வாசலில் நிண்டு அழுகிறது நல்லதா சொல்லுங்க? அவா தான் ஒண்டும் தெரியாதவா. வளந்த உங்களுக்கும் அந்தளவுக்குக் கூடவா அறிவு இல்ல?” காட்டமாக ஆரம்பிக்க, “என்ன பாட்டி, என்ன விசயம்?” என்று கேட்டுக்கொண்டே வந்தான், உதய்.
“அப்பிடி என்ன பெரிய விசயம் சொல்லக் கிடக்கு? அங்க பார், உன்ர மனிசி ஏதோ இந்த வீட்டில சிங்கமும் புலியும் இருக்கிற கணக்கில கண்ணைக் கசக்கிறா!” அவரின் சிடு சிடுப்பில் சுதாகரித்தார், மங்கை.
“மகிழ், கண்ணத் துடையம்மா. அழாத!” சொல்லிக்கொண்டே மகளின் கண்களைத் துடைத்து விட்டாலும், சம்பிரதாயத்துக்காகவேனும் ஒருமுறை கூட முகம் கொடுத்துப் பேசாத பர்வதம் பாட்டியை நினைக்கையில், அவர் மனத்தில் சஞ்சலம் தான் உருவானது. ‘இவர் இப்பிடியேதான் இவளோட பழகுவாரா? இவள் பொறுமையா இருப்பாளா?’ என்று, மங்கை மனத்தில் புதிய குழப்பம் முளைவிட்டது.
அழும் மனைவியை ஒரு கணம் கூர்மையாக அளவிட்டான் உதய். அவள் மீது நேசம் கொண்ட அவன் நெஞ்சமோ, முழுவேகத்தில் முறுக்கிக்கொண்டு முன்னால் வந்து நின்றது. “ம்ம்..இப்ப மட்டும் தாத்தா இருந்திருந்தா, உங்கட கலியாணத்தண்டு, கண்ணைக் கசக்கின உங்கட அம்மாட கண்ணீரைத் துடைச்சு விட்டுப்போட்டு, எவ்வளவு தைரியமா ஆறுதல் சொல்லி அனுப்பினீங்க எண்டு கேட்டிருக்கலாம்!” என்று, பாட்டியின் முறைப்பை அசட்டை செய்து, மலர்ந்த முகத்துடன் அவரை நக்கல் அடித்தான் பேரன்.
“இல்லையா அப்பா! நான் சொல்லுறது சரிதானே?” தந்தையை வேறு துணைக்கழைத்தான். அவரோ, மகன் சொன்ன விதத்தில் நகைக்க, சட்டென்று முகம் சுருங்கினார், பர்வதம். காரணம், அவரின் கல்யாணக் கதையைச் சொல்லி சொல்லியே தன் கல்யாணத்துக்கு அவரிடமிருந்து சம்மதம் பெற்றவன் இல்லையா அவர் பேரன்.
பர்வதத்தை புகைப்படத்தில் பார்த்துச் சம்மதம் சொன்ன தாத்தா, கல்யாணத்திற்கு முதல்நாள் தற்செயலாகப் பெண்ணைக் காண நேரிடத் திடுக்கிட்டு விட்டார். ‘என்னை விட இவ்வளவு கட்டையான பொம்பளையை நான் எப்பிடிக் கட்டுறது? இதை ஆருமே என்னட்டச் சொல்லேல்லையே!’ என்று, மனத்துள் கலங்கிக் குழம்பிப் போனவர், ‘வீட்டில சொல்லி கலியாணத்த நிப்பாட்டுறது எண்டா அப்பா ருத்திர தாண்டவம் ஆடிருவார்!’ எனப் பயந்து நடுங்கினாலும், பர்வதத்தைக் கல்யாணம் செய்ய விரும்பாமல், சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே கம்பி நீட்டி விட்டார்.
கல்யாணத்திற்கு ஒருநாள் என்றிருக்கையில் மாப்பிள்ளை செய்த செயலில் கொதித்துப் போயினர் பெண் வீட்டினர். அவன் போறான் கடன்காரன்! அவன விட உயர்வா உனக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடித் தருகின்றோம் எனத் தேற்றி, அதற்கு முனைய, பர்வதமோ, இவர் தான் உன் புருஷன் என்று போன நிமிடம் வரை நினைத்திருந்தவரை விட்டு விட்டு இன்னொருவரா, முடியவே முடியாது என்றுவிட்டார். “எனக்குக் கலியாணமே வேணாம்!” ஒரேயடியாக மறுத்தும் விட்டார்.
அவர் செய்த அழிச்சாட்டியம் தாங்காது, அதே மாப்பிள்ளையைத் தேடிப்பிடித்து, ஒருவழியாக தாஜா பண்ணி திருமணத்தை நடத்தி, மகளைக் குளிர்வித்துவிட்டார் பர்வதத்தின் தந்தை. அதன்பின், பர்வதம் கீறிய கோட்டை அவர் கணவர் மறந்தும் தாண்டவில்லை என்பது வேறு கதை!
பர்வதத்தின் வாழ்வில் நிகழ்ந்த இச்சுவாரசியமான நிகழ்ச்சியையே திரும்பவும் அவரிடம் சொன்ன உதய், “மகிழ் தான் என்ர மனைவி எண்டு நான் நினைச்சதை என்னால மாத்திக்கொள்ளவோ மறக்கவோ ஏலாது பாட்டி! உங்கட பேரன்ட வாழ்க்கை தனிமரமா இருந்தா முழுப்பொறுப்பும் நீங்க மட்டும் தான்!” கறாராகச் சொன்னதில், தன் மனத்திலிருந்த கோபம், எரிச்சலை மீறி, கல்யாணத்துக்குச் சம்மதித்திருந்தார், பர்வதம்.
அதை இப்போதும் நினைத்துக்கொண்ட பர்வதம், பேரனை மட்டுமின்றி எல்லோரையுமே முறைத்தார். “கேசவா, சரியான களைப்பா இருக்கு, வீட்ட போவமா?” கேட்டுக்கொண்டே உள்ளே நகர்ந்துவிட்டார்.
“இந்தா பத்துநிமிசத்தில வெளிக்கிடுவம் அம்மா.” என்ற கேசவன், ராசன் குடும்பத்தை வழியனுப்பும் விதத்தில் அவர்களுடன் சேர்ந்து நடந்தார்.

error: Alert: Content selection is disabled!!