“அப்பிடிப் பெரிசா ஒரு வேலையும் இல்லையண்ணி, சாரி பிளவுஸ் ரெண்டு தைக்கக் கிடக்கு. அவசரம் ஒண்ணும் இல்ல.” கோகிலாவின் அருகில் அமர்ந்துகொண்டார், மங்கை.
“கண்ண மூடித் திறக்க முதல் காலம் போற வேகத்த! ம்ம்…மகிழுக்குக் கலியாணம் பேசினதே நேற்றுப் போல இல்லையா மங்கை? இதப்போல, பாத்திருக்க விசாவும் வந்திரும்.”
“உண்மைதான் அண்ணி! எனக்கும் நிறைய நேரங்களில அவளப் பாக்கேக்க நடந்தத நம்பேலாமல் கிடக்கு!”
“எனக்கும் தான் மங்கை. அதும் பர்வதம் பாட்டியால பிரச்சினை வந்து மகிழும் வேணாம் எண்டு நிக்க, உண்மையாவே பயந்து போனன்.”
“நானும் தானே அண்ணி! இவள் வேற என்ன முறுக்கு முறுக்கினவள்!” என்ற மங்கை, மகள் இப்போது ஃபோனும் கையுமாக மருமகனுடன் வாயாடும் வடிவை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டார்.
“அதானே! கலியாணம் முடிஞ்ச அடுத்த நாளே, உதய்ட கையைப் பிடிச்சுக்கொண்டு வருசக்கணக்கில பழகின கணக்கில அவள் கதைச்சுப் பேச, அதைப் பாத்த பிறகுதான் என்ர நடுக்கம் குறைஞ்சது மங்கை. அவளைப் பெற்றது நீ எண்டாலும், எனக்கும் அவள் மகள்தான்!” கண்கள் கலங்கிய கோகிலாவின் கரங்களைப் பாசத்துடன் பற்றிக்கொண்டார் மங்கை.
“உண்மைதான் அண்ணி! என்னைப் போல முட்டாள் வேலை செய்யிறவே நல்லா இருந்தா வேற விசயம்.” முகம் கன்றச் சொன்னவர், “அதே அந்தரிச்சுப் போனா, அவேண்ட கதி?” இறுகிய முகத்தில் விழிகள் பளபளக்கத் தொடர்ந்தார், மங்கை.
“நீங்களும் அண்ணாவும் இல்லையெண்டா, அவளை இப்பிடி வளத்து அருமையான மாப்பிள்ளை பாத்து அவள் விரும்பினமாதிரி வாழ்க்கைய அமைச்சுக் குடுத்திருக்கவே ஏலாது அண்ணி!” மைத்துனியின் வாழ்க்கையின் கசப்புக்களை படித்துப் பார்ப்பதில் கோகிலாவின் மனம் எப்போதுமே ஆர்வம் கொண்டதில்லை. அதுவும், என்று கணவனுடன் சேரும் வாய்ப்பில்லை என்பதை மங்கை இவர்களுக்கு உணர்த்தினாளோ, அன்றிலிருந்து அப்படியான சந்தர்ப்பங்களில் வேறு விடயங்களுக்குத் தாவி விடுவார். அதேபோல், இன்றும் பேச்சை மாற்றிவிட்டார்.
“அதுசரி விசா வரவிட்டுத் தனியவா கனடாக்குப் போவாள்? மாமிக்கு எண்டா அதில பெரிசா விருப்பம் இல்ல. உதய் வந்து கூட்டிக்கொண்டு போக மாட்டாரா எண்டு கேட்டபடி. அண்டைக்கு உதய் இங்க கதைக்கேக்க அவரிட்டையே கேட்டிட்டார்!”
“இதில என்ன இருக்கு அண்ணி! இங்க ஏறி அங்க இறங்க அவே வந்து கூட்டிக்கொண்டு போவினம்.” என்றவர் மெல்லிய முறுவலுடன், “ஓம், அம்மா கேட்டத என்னட்டையும் உதய் சொன்னவர். அதோட, அவரிட பேத்தி விட்டா ஊரையே வித்திருவா எண்டது சரசுப் பாட்டிக்குத் தெரியாதாக்கும் எண்டு சொல்லிச் சிரிச்சவர்.”
“ஹா..ஹா…அதெண்டா உண்மைதான்! ஆனாலும், முதல் தடவை எல்லா? நாங்களும் அவளைத் தனிய எங்கயும் விடுறதில்ல. அதான் கொஞ்சம் யோசினை!” என்றார் கோகிலா.
“பழகத்தானே அண்ணி வேணும். அங்க போய்த் தனியா எவ்வளவச் சமாளிக்கோணும். அவள் சமாளிப்பாள். விசா கிடைச்சோன்ன, தானே அங்க இருந்து டிக்கெட் போடுறதா உதய் சொன்னவர்.”
“அதில இவருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை மங்கை. உதய் விடாப்பிடியா இருக்கிறார். பேசாமல் விடுங்க, தன்ர பெஞ்சாதிக்குத்தானே செய்ய நினைக்கிறார் எண்டு சந்துரு சொன்னான்.” இப்படியே அளவளாவிக்கொண்டிருந்தவர்கள், “பாத்திருக்க நேரமும் போய்ட்டுது வா, கொஞ்சமாச் சமைப்பம்!” என்று கூறிக்கொண்டே, எழுந்து சமையலறைக்குள் சென்றனர்.
*****
தூரத்தில், நாயொன்றின் பிடிவாதமான குரைப்பு, சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த மங்கை, மெல்ல எழுந்து மகளின் அறைவாசலில் வந்து நின்றார். அவரின் செல்ல மகளோ, தெளிந்த வானில் காய்ந்த வெண்மதியின் ஒளிச் சிதறல்கள், திறந்திருந்த யன்னலூடாகக் கசிந்து வந்து தன் வதனத்தை ஆசையாகத் தழுவ, அதைச் சிறிதும் உணராத அயர்ந்த உறக்கத்திலிருந்தாள்.
அன்போடு மகளைத் தொட்ட பார்வையை விலக்க மறந்தவர், நெஞ்சில் அழுத்தமாகச் சம்மணம் போட்டமர்ந்திருந்த பிரிவுத்துயரை பெருமூச்சாக வெளியேற்றிட முனைந்தார். மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது என்பார்களல்லவா? அந்நிலையில் இருக்கிறார் மங்கை. தன் துயரை அறிந்தால், ஆர்வமும் ஆசையுமாக கணவனிடம் செல்லப்புறப்படும் மகள் கலங்குவாள் என எண்ணி, சாதாரணமாக நடமாட மிகவும் பிரயத்தனம் செய்கின்றார் தான்!
அதேநேரம், இரவின் தனிமையிலோ, மகளின் துணை இனியில்லை என்கிற யதார்த்தம் பூதாகரமாக உருவெடுக்க, உறக்கமென்பது மொத்தமாகத் தொலைந்து விடுகின்றதே! தன்னுள்ளத் தவிப்பையெல்லாம் வாய்விட்டு எவரிடமும் சொல்லவியலாது தடுமாறி நிற்கின்றார், அவர். இதுவரை, இப்படித் தவித்த போதெல்லாம் அறிந்தும் அறியாமலும் ஒத்தடமாக, இதம் தரும் மருந்தாக இருந்தவள் அல்லவா அவர் மகள்! ‘இனிமேல், எனக்கெண்டு ஆர் இங்க இருக்கினம்?’
என்றோ ஒருநாள், ‘வலுக்கட்டாயமா நானே எனக்குத் தேடிக் கொண்டது இது!’ என, தன்னைத் தான் வெறுத்து, வெட்கி, கூனிக் குறுகித் துவண்டு கிடக்கையில், சதா இக்கேள்வி இவர் மனதில் எழுந்த வண்ணமிருந்தது. அதற்கான விடையை, அமுதமாய் அளித்தாளே அவர் செல்ல மகள்!
உன் தனிமையைப் போக்க உதிரத்தில் உதித்தவள் நானென, கருவிலேயே உணர்த்தியவள், மகிழ். மகளை எண்ணியவர் நெஞ்சமோ, பாசத்தில் விம்மியது. ஆனால் இனி? இது எதிர்பார்த்த பிரிவென்றாலும், அதை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினப்பட்டார், மங்கை. தனிமையில் தான் வாழப்போகும் நாட்களின் பாரம் தாளாது தள்ளாடியவர், மகளின் அறைக்கதவை மெல்லச் சாத்திவிட்டு வந்து தன் கட்டிலில் சாய்ந்து கொண்டார்.
மகிழின் திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் கண்ணிமைக்கும் பொழுதாகக் கரைந்திருக்க, விசா நடைமுறைகள் அனைத்தும் சரிவந்த மகிழ்வோடு தாயும் மகளும் கொழும்பு சென்று வந்திருந்தார்கள்.
“இன்னும் ரெண்டு கிழமைக்குள்ள வெளிக்கிடலாம். டிக்கெட் போட்டுட்டுச் சொல்லுறன்!” என்று,மகிழ்வு ததும்பச் சொல்லியிருந்தான், உதய்.
கொண்டு போகத் தேவையானவற்றை வாங்கி, சந்துரு வீட்டில் தயாராக வைத்துவிட்டு, “வெளிக்கிட ரெண்டு நாள்களுக்கு முதல் கொழும்பு வந்தாப் போதும் அம்மா. அதுவரைக்கும் வீட்ட வந்து நிக்கிறன்.” என்ற, மகளின் விருப்பின் பெயரில் இங்கு திரும்பி வந்திருந்தனர்.
தான் கருத்தரித்ததை அறிந்த நேரம் முதல், “ஏமாற்றுக்காரன்ட பிள்ள இந்த வீட்டுக்குத் தேவையா? அவனையே வேணாம் எண்டு உதறிட்டு வந்திட்ட எல்லா? பிறகு அந்த அறுவானிட பிள்ளை மட்டும் எதுக்கு எண்டு கேக்கிறன்? வேணவே வேணாம்.” என்ற தாயின் எதிர்ப்பையும் மீறி, அண்ணா அண்ணி துணையோடு மகளைப் பிரசவித்த கணம், மங்கை நினைவில் ஓடிச் சென்றது.
அவர் செல்ல மகள், சற்றுமுன் பிறந்த பச்சைக் குழந்தையாக, தலை கொள்ளா அடர்சிகை முன் நெற்றியை மறைத்திருக்க, பூவிமைகள் மூடி, செவ்விதழ் சுருங்க, கைகளையும் கால்களையும் குறுக்கி, கத கதப்பாக தன்னருகில் படுத்திருப்பது போன்ற பிரமையில் திடுக்கிட்டுத் தவித்தார், மங்கை.
“என்ர மகளப் பிரிஞ்சு எப்பிடி இருக்கப் போறன்!” விழிகள் ததும்ப முணுமுணுத்தவர் செவிகளில், “போனதும் முதல் வேலை, உங்கள அங்க கூப்பிடுறதுக்கு ஒழுங்கு செய்யிறதுதான் அம்மா. உதய் கூட இதைத்தான் சொன்னவர். அதால, தனிய எண்டு கொஞ்சமும் யோசிக்காதீங்க. எவ்வளவு கெதியா முடியுமோ அவ்வளவு கெதியா அங்க வந்திரலாம்!” மகள், நம்பிக்கை மின்னக் கூறியது ரீங்காரமிட்டது.
அதையெல்லாம் அவர் மனம் கொஞ்சமும் நம்பவில்லை. ‘அது நடக்கேக்க பார்த்துக் கொள்ளலாம்.’ என்று எண்ணியவர், தனிமையை இரு கரம் கூப்பி வரவேற்கத் தயாரானார். இருந்தாலும் இத்தனை காலங்களும் இல்லாது, கடந்த கால நினைவுகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கின. அதிலிருந்து விடுபட முயன்றவரின் செவிகளில் வெளிவாயிலருகில் மெல்லிய பேச்சொலியும், யாரோ நடந்து வரும் காலடி ஓசையும் கேட்கவே சட்டென்று எழுந்தமர்ந்தார்.
கள்வர் என்று துணிந்து யாரும் வர மாட்டார்கள் என்றாலும், மங்கை இங்கு வந்தபோதே, சற்றுத்தள்ளி ஒரு சிறு ஓட்டுவீட்டைக் கட்டி, தோட்டத்தில் வேலை செய்யும் குடும்பத்தை குடியமர்த்தியிருந்தார், ராசன். அதனால், அப்படிப் பயமில்லை என்றாலும், ‘பன்னிரெண்டு மணியாகுதே! இந்த வேளையில் ஆர்?’ தனக்குள் சொல்லிக்கொண்டே மெல்ல அறையை விட்டு வெளியில் வந்தார், மங்கை.

