நெஞ்சினில் நேச ராகமாய் – 23

அத்தியாயம் 23

“நான் என்ன கேட்கிறன், நீங்க என்ன சொல்றீங்க உதய்?”
“நீர் என்ன கேட்டீர்?” குறும்பில் நனைந்திருந்த அவன் விழிகளோ, மனைவியை வருடுவதில் முனைந்திருந்தன.
“இஞ்ச பாருங்க, இப்பிடிக் கதைய மாத்துற வேல மட்டும் என்னட்ட வேணாம். புருசன் பெஞ்சாதி எண்டா அவேக்க எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது தெரியுமா?” தீவிரமாகச் சிடு சிடுத்தவளை, கன்னமிரண்டிலும் கையூன்றியவாறே கதை கேட்கும் பாவனையில் சுவாரசியமாக நோக்கினான், அவள் கணவன். அவன் பாவனையில் முறைத்தவளை, “ம்ம்..அப்பிடியா மேடம்? புருசன் பெஞ்சாதி எப்பிடி எப்பிடி இருக்கோணும் எண்டு கொஞ்சம் சொல்லித் தாரும், சின்னப் பெடியன் தெரிஞ்சு கொள்ளுறன்!” சீண்டினான்.
“உங்கள…”
“ஆஆ… பாவப்பட்ட புருசனப் போட்டு இந்த அடி அடிக்கலாமா மகிழ்? உமக்கு, உம்மட பாட்டி ஏசுறது சரிதான். நான் வந்த இந்த ஒரு கிழமையில எத்தின தரம் ஏச்சு வாங்கியும், பட்டென்று கை நீட்டுற பழக்கம் போகுதில்ல என்ன?” விழிகளில் நகைப்புடன் சொன்னவன், மீண்டும் அடிக்க ஓங்கியவள் கரங்களிரண்டையும் இறுகப் பற்றிக்கொண்டான்.
“அங்கால மாமி இருக்கிறா எண்டு பாக்கிறன், இல்லையோ!” என்றவன் பேச்சில், அவள் வதனத்தை வெட்க ரேகைகள் ஆக்கிரமித்தாலும், “அப்ப, நான் கேக்கிறதுக்குப் பதில் சொல்ல மாட்டிங்க?” கேட்டபடி முறைக்கவே முயன்றாள்.
“ப்ச், ஏதாவது இருந்தால்தானே மகிழ் சொல்லுறதுக்கு! நம்பிக்கை இல்லாமல் சும்மா சும்மா கேட்டா, நான் எதையெண்டு சொல்லுறது?” அவன் குரலில் இலேசாகச் சலிப்பு எட்டிப் பார்த்தது.
“இல்ல, நான் நம்பவே மாட்டன் உதய். என்னவோ இருக்கு. மாமாவும் நீங்களும் அடிக்கடி ஏதோ வாக்குவாதப்படுறீங்க! ரெண்டு மூண்டு நாள்களா கனக்கத் தரம் கண்டிட்டன்.” என்றவள் முகத்தில், இலேசான கலக்கம் வந்து போனது.
“உண்மையச் சொல்லுங்க உதய், மாமாவோட ஏதாவது பிரச்சினையா?” என்றவளை, ஒருகணம் தீவிரமாக உற்றுப் பார்த்தவன், “அய்யோ மகிழ்! நீரும் எத்தினையோ தரம் இதையே கேட்டிட்டீர்,நானும் பதில் சொல்லிட்டன். அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லையப்பா.” அழகாகப் புன்னகைத்தான்.
“ராசன் அங்கிளோட எனக்கு என்ன பிரச்சினை வரக் கிடக்குச் சொல்லும் பாப்பம். அவர் என்ர செல்லத்திட மாமாவாச்சே!” அன்போடு அவன் சொன்னது ஐஸ் வைக்கிறானோ என்று அவளை எண்ண வைத்திட்டு.
“வேணாம் உதய். திரும்பவும் கதைய மாத்தப் பாக்காதீங்க! அம்மா கூட சரியாக் கவலைப்பட்டவர் தெரியுமா? மாமாட்ட கேக்க, அவர் ஒண்ணும் சொல்லேல்லையாம். ஏதோ உங்கட பிஸினஸ் பற்றிக் கதைச்சது எண்டவராம். ஆனா, அவரும் ரெண்டு மூண்டு நாள்களா ஆளே சரியில்ல எண்டு மாமி சொன்னவராம்!” எப்படியாவது அறிந்துகொள்ளும் வேகத்தில் படபடத்தாள்.
“ப்ளீஸ்பா, உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையோ எண்டு எனக்குப் பயமா இருக்கு. உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” கவலையாகச் சொன்னவளை, ‘விடமாட்டேன் என்கிறாளே!’ என்று,மனம் முணுமுணுக்க ஆதரவாகப் பார்த்தான், உதய்.
“அது ஒண்டுமில்ல மகிழ், உமக்கெண்டு தாங்க ஒண்டும் தரேல்லையாம். அப்பாட்டக் கேக்க, ஒண்டுமே வேணாம் எண்டு சொன்னவராம். இப்ப, என்னப்பிடிச்சு உமக்கு எண்டு இருக்கிறதுகள தாறன் எண்டுகொண்டு நிக்கிறார், அங்கிள். என்ர பிஸினெஸுக்கு உதவும் எண்டு கொண்டு நிக்கிறார்.” என்றவன், சிறுபொழுது அமைதியானான்.
“என்னட்ட இருக்கிறதே போதும் எண்டா கேக்கிறாரே இல்ல. கடைசில என்ன சொன்னன் தெரியுமா?” புருவங்களை ஏற்றியிறக்கி அவன் சொல்லிக்கொண்டு வர, அவன் சொல்வதில் உள்ள நம்பகத்தன்மை அவள் மனதில் கேள்விக் குறியானது.
“சொத்துக்காகத்தான் தன்னக் கலியாணம் செய்தாச் சொல்லி, என்ர பெஞ்சாதி கழுத்தை நெரிச்சா நீங்களா வந்து காப்பாத்துவீங்க எண்டு கேட்டனா? தன்ர மருமகள்ட குணத்தை, இவ்வளவு கொஞ்ச நாள்களில தெரிஞ்சிட்டனே எண்டு ஆடிப் போய்ட்டார் அங்கிள்!” ஆரம்பத்தில் தீவிரமாகச் சொல்லிக்கொண்டு வந்தவன் விழிகளால் நகைக்கத் தொடங்க, அவன் பெஞ்சாதி அவனுடைய கழுத்தில் கை வைத்திருந்தாள்.
“ஏய்ய்ய், உண்மையாத் தான்பா! பார் பார் அதச் சொன்னதுக்கே ஆ…”
“இத என்ன நம்பச் சொல்லுறீங்களா? காதில பூசுத்திற வேலை என்னட்ட வேணாம் உதய்!” அவனிடம் சிணுங்கினாலும், அவன் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்ல, அப்படியும் இருக்குமோ என்ற முடிவுக்கே இறுதியில் வந்துவிட்டாள், அவள்.
அதன்பின், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடித்துக்கொண்டே வேறு கதைகளுக்குத் தாவியிருந்தனர். அதேவேளை, இவர்களின் செல்லச் சண்டைகளைப் பார்த்துக்கொண்டே இரவுச் சமையலில் ஈடுபட்டிருந்த மங்கை, கை வேலையை மறந்து, கரங்கள் அசைவற்றிருக்க, இதயம் வலிக்க உறைந்து நின்றார். ‘சொத்துக்காகக் கலியாணம் செய்தேன் எண்டு’ என்ற வார்த்தை, அசுரகதியில் அவரை எங்கெல்லாமோ இழுத்துச் சென்றுவிட்டது.
தன் வாழ்வின் கருமையான பக்கங்களை, புரட்ட நினைக்காத வைராக்கியத்துடன் இருந்தவரல்லவா இவர். இப்போதோ, தன் அன்றாட அசைவுகள் ஒவ்வொன்றிலும் பிணைந்திருந்த மகளின் பிரிவு, பரிசளிக்கவிருக்கும் தனிமையை உணர்ந்து நிற்கின்றாரே. இவ்வுணர்வு எழும் போதெல்லாம், அதற்கான காரணத்தை தொட்டுப் பார்க்க முயன்றாலும், இத்தனை காலமும் தன் மனப்பக்குவத்தால் அதிலிருந்து மீண்டு கொண்டிருந்தார். ஆனால் இன்றோ, இந்த வார்த்தை அவரை ஒரு உலுக்கு உலுக்கிப் பார்த்தது.
என்னைக் காதலிக்கிறேன் என்ற நீ, உண்மையாகக் காதலித்தது என் பணத்தையல்லவா என்றல்லவா, இவர் தன் வாழ்வையே உதறி இருந்தார். உதய் இதைத் தற்செயலாகச் சொன்னாரா அல்லது என்னைக் குத்திக் காட்டினாரா என்று, ஒரு கணம் யோசித்த மங்கை, தன் நினைவின் போக்கையெண்ணித் தலையை உலுக்கிக்கொண்டார். ‘ச்சே..உதய் அப்பிடியான பிள்ள இல்லயே! தற்செயலாச் சொல்லி இருப்பார். என்ர கதை, அதும் இந்தளவுக்கெல்லாம் அவருக்குத் தெரிஞ்சிருக்கவா போகுது. சொத்துப் பற்றி என்னட்டையும் அண்ணா கதைச்சவர் தானே.’ தன்னைச் சமாதானம் செய்துகொண்டவர் சமையலைத் தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் இரவுணவை அருந்துகையில், “மாமி, நான் ஒண்டு சொல்லுவன், நீங்க மாட்டன் எண்டு சொல்லக் கூடாது.” என்று ஆரம்பித்தான் உதய்.
“என்ன தம்பி? சும்மா சொல்லுங்க!” மங்கை சொன்னதும், “இல்ல, அடுத்த கிழமை கொழும்பு போனா ரெண்டு நாள்களில கனடா வெளிக்கிட்டிருவம்.” என்றதும், பிரிவுத்துயரின் அழுத்தத்துடன் மகளைப் பார்த்தார் மங்கை. அவளும் விழிகள் மின்ன தாயைத்தான் பார்த்திருந்தாள். ஒருவாறு சமாளித்துக்கொண்ட மங்கை, “அது தெரியும் தானே தம்பி. போகமுதல் யாழ்ப்பாணத்தில இருக்கிற உங்கட சொந்தக்காரர் வீடுகளுக்கு ஒருக்காப் போயிட்டு வந்திருங்க. ரத்னாக்காவும் சொன்னவர்.”
“ஓம், அதெல்லாம் போகலாம் மாமி. நான் சொல்ல வந்ததே வேற!” என்றுகொண்டே ஒருவாய் உணவைச் சுவைத்தவன், “நாங்க போன பிறகு, நீங்க இஞ்ச தனிய இருக்க வேணாம், அதில் எங்களுக்குக் கொஞ்சமும் விருப்பமில்ல மாமி.” என்றதும், தாயும் மகளும் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொண்டனர்.
“அதான், கலியாணம் நடந்த நாளில இருந்து சொல்லுறன், கேக்கிறா இல்ல உதய்.” கவலையாகச் சலித்துக்கொண்டாள் மகிழ்.
“அந்தச் சரசுக் கிழவியும் இன்னும் அம்மாவோட சரியாக் கதைக்கிறா இல்ல. என்னோடயும் உங்களோடயும் மட்டும் பெரிசாப் பாசம்!” கோபத்தில் முணுமுணுத்துக்கொண்ட மனைவியை, கண்டிப்போடு பார்த்தான் உதய்.
“இப்பிடிக் கதையாதேயும் மகிழ்! பாட்டி வயசு போனவர். அவரை இனி மாத்தேலாது.நாங்கள் தான் கொஞ்சம் பாத்து நடக்கோணும்.” என்றவனை முறைத்தாள் மகிழ்.
“அப்ப, உங்கட பாட்டியோடயும் அங்க நான் பாத்து நடந்து கொள்ளோணும் எண்டு சொல்லாமல் சொல்லுறீங்க போல!” என்றவளை, அவனோ அப்படித்தான் என்ற மாதிரிப் பார்க்க, மகளைக் கண்டிக்கும் வகையில் குறுக்கிட்டார் மங்கை.
“மகிழ் என்ன கதை இது? எல்லாத்துக்கும் முதல், பெரிய பிளாஸ்டரா வாங்கி உன்ர வாயில ஒட்டு. ஒரு பிரச்சனையும் வராது. இஞ்ச அம்மாவோட கதவழிப்படுறது போல, அங்கயும் கதைச்சு என்னைத் தலைகுனிய வச்சிராத!” கோபமாகவே சொல்லியிருந்தார்.
“இதென்ன மாமி! விடுங்க விடுங்க. அதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன்.நீங்க கவலைப்படாதீங்க!” என்றவன் பார்வை, மகிழின் உதடுகளில் இரசனையாக நிலைத்து அவளைத் தடுமாறச் செய்து மீண்டது. என்றாலும், தாயின் பேச்சு அவள் மனதில் சுறுசுறுவென்ற கோபத்தை உருவாக்கவே சட்டென்று அமைதியானாள்.
அதைக் கண்டவன், “பாருங்க, எதிலயோ தொடங்கி எங்கயோ போய்ட்டம். கொஞ்ச நாளைக்குதான் மாமி, நான் போனதுமே உங்கள அங்க கூப்பிட அலுவல் பாக்க இருக்கிறன்!”
“அதெல்லாம் தேவையில்ல தம்பி. நீங்க சந்தோசமா இருந்தாலே எனக்குப் போதும்!” தொண்டை கமறியது மங்கைக்கு.
“நிச்சயம் சந்தோசமா இருப்பம் மாமி. அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை.” அமைதியாகிவிட்ட மனைவியைப் பார்த்தவாறே சொன்னவன், “உங்களுக்கு விசா கிடைக்க எப்பிடியும் கொஞ்சக் காலம் எடுக்கும். அதுவரைக்கும் ராசன் அங்கிளோட போயிருங்க.” மறுக்க முனைந்தவரை, பேசவிடவில்லை அவன்.
“உங்கள அங்க கொண்டுபோய் விட்டுட்டுதான் நாங்க வெளிக்கிடுவம்.” என்றவன், “அந்தப் பொரியலில இன்னும் கொஞ்சம் வையுங்க மாமி!” என்று, உணவில் கவனத்தைச் செலுத்த, மருமகனுக்கு பரிமாறியவாறே மறுக்க முடியாது அமைதியானார் மங்கை.

error: Alert: Content selection is disabled!!