நெஞ்சினில் நேச ராகமாய் 26 – 2

“இந்த வீட்டில இருக்கிற சைனீஸ் பொம்பளையிட பார்லருக்குத் தான் நாங்க எல்லாரும் வழமையாப் போறது!” என்றவாறே காரை நிறுத்தி இறங்க, தானும் இறங்கிய மகிழ், சுமியோடு சேர்ந்து அவ்வீட்டை நோக்கி நடந்தாள்.
****

திருமண வரவேற்பு! நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபம், உறவுகள் நட்புகளால் நிறைந்திருந்தது. ஜெகனும் வசந்தனும் துணைவிமாருடன் இணைந்து, விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்க, மண்டபத்தினுள் வந்தமர்பவர்ளை உபசரித்துப் பேசிக்கொண்டிருந்தனர், சரவணனும் ரத்னாவும்.
மேடையருகில் போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்திருந்து, பேரனையும் அவன் மனைவியையும் பார்த்திருந்தார், பர்வதம் பாட்டி. ‘கெட்டிக்காரர் தான்! புளியங்கொம்பா என்ர பேரனப் பிடிச்சிட்டினம்!’ அவர் மனம் முனகியபடியிருந்தது. வந்த சிலநாட்களே ஆகியிருந்தாலும், மகிழைக் காண்கையில் இயல்பாக இருக்க முடியவில்லை. அவளைக் கூர்மையாக அவதானிப்பதே இவரின் வேலையாகிப் போயிற்று.
“என்னம்மா தனிய இருக்கிறீங்க?” கேட்டுக்கொண்டே அவரருகில் வந்தமர்ந்தார், குணாவின் பெரிய தந்தை குமார்.
“வாய்யா வா! எங்க, உன்ர வீட்டு ஆக்கள் எல்லாரும் வந்தவையே?”
“வந்தவேயல் அம்மா! குணாட அம்மா, அப்பாவும் தங்கச்சியும் நேற்றுத்தான் ‘ஒட்டோவா’வில இருந்து வந்தவே.” என, இருவருமாக உரையாடிக்கொண்டே மணமக்களைப் பார்த்திருந்தனர்.
மனைவியோடு மேடையில் அமர்ந்திருந்த உதய், அலங்காரத்தில் பளிச்சிட்ட மனைவியை இரசிப்பதும், மேடையேறிவந்து வாழ்த்துவோரை மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்துப் பேசுவதுமாக இருந்தவன், பாட்டியின் அருகில் வந்தமர்ந்தவரைக் கண்டதும் அங்கிருந்தே புன்னகைத்தான். அப்போது அங்கே வந்த குணா, “பெரியப்பா, வாங்க நாங்களும் விஷ் பண்ணிட்டு வருவம்!” என்று மேடை நோக்கி நகர, “கொஞ்சம் இருங்கம்மா, போயிட்டு வந்திர்ரன்.” பர்வதத்திடம் சொல்லிக்கொண்டு அவர்களுடன் சென்றார், குமார்.
“மாமி, நீங்க கொஞ்சமாச் சாப்பிட்டுட்டு வந்திருங்கவன். லேட்டாப் போனாச் செமிக்காது!” என்று சொல்லி, பர்வதத்தை அழைத்துச் சென்ற ரத்னா, உணவருந்தத் தயாராக அமர்ந்திருந்த அவர்களின் உறவுப்பெண்மணிகளோடு அவரையும் அமர்த்திவிட்டு, என்னென்ன தேவை என்று கேட்டு எடுத்து வரச் சென்றார்.
குணாவின் மொத்தக் குடும்பமும் வரிசையாக மேடையேற, எழுந்து சென்று நண்பனின் கரம்பற்றி மகிழ்வோடு வரவேற்றான், உதய்.
“எவ்வளவு வடிவா இருக்கிறீங்களம்மா! என்ர கண்ணே பட்டிரும்.” என்றுகொண்டே, முன்னால் வந்த சாரதா, மகிழை இறுக அணைத்து உச்சி முகர்ந்தார்.
அவளோ, ‘எப்பயடா இந்த வரவேற்பு முடியும், இதில இருந்து விடுபட?’ என எண்ணிக்கொண்டு, கடனே என்று சிரித்து வைத்தாள்.
“மச்சான், இதில் வந்து நில்லு!” மகிழ் அருகில் உதய்யை நிறுத்திய குணா, “இந்தா மச்சான், இத என்ர சிஸ்டருக்குப் போட்டுவிடு!” உரிமையோடு கூறி, கையில் வைத்திருந்த சிறு நகைப்பெட்டியிலிருந்து மோதிரத்தை எடுத்துக்கொடுக்க, அவ்வைர மோதிரத்தைப் பார்த்த உதய், “குணா, என்னடா இது! இப்ப இதெல்லாம் தேவையா?” என்று கடிந்துகொண்டான்.
“மாப்பிள்ள கதைக்கக் கூடாது, சொல்லுறத மட்டும் செய்யோனும்!” நண்பனுக்கு கட்டளையிட்டவாறே, மகிழ் கையில் இன்னொன்றைக் கொடுத்து, “திரும்ப திரும்ப இந்த சில நாட்களாச் சொன்னதையே தான் இப்பவும் சொல்லப் போறன் மகிழ்! உங்களுக்கு அண்ணா நான் இருக்கிறன். இவன் அப்பிடி இப்பிடி வாலாட்டினா எனக்கு ஒரு ஃபோனப் போடுங்க, ஒரு கை பார்த்திரலாம்!” என்றதும், அவளோ, மோதிரம் போடுவதற்கென தன் தளிர் விரலை நீட்டியவாறே, கணவனைப் பார்த்து இலேசாக ஒற்றைப் புருவம் உயர்த்தினாள்.
“அட…அட…நல்ல ஃப்ரெண்டடா நீ! அவவுக்கு அண்ணா தம்பி எல்லாம் தேவையே இல்லடா. அவா ஒரு ஆள் போதாதா? நான் வால ஆட்டுறது இருக்கட்டும், அத ஆறுதலாப் பாத்துக் கொள்ளுவம். முதல் அது முளைக்க வேணுமே! மேடம் அதுக்கு விட்டுட்டுதான் மற்ற வேல பாப்பா!” என்று,கணவன் சொன்ன விதத்தில் வதனம் செந்தாமரையாக மலர நின்றவளை, பார்த்திருந்தனர் அனைவரும் .
“எப்பவும் …” என்று ஆரம்பித்த சாரதா, அவளை விழியகலப் பார்த்தவாறே, “உதய் அருமையானவர். சின்னச் சின்ன விசயங்களப் பெரிசு படுத்தாம வாழ்க்க முழுசும் ரெண்டு பேரும் ஒற்றுமையா, மகிழ்ச்சியா இருக்கோணும்.” என்று சொன்னவர் விழிகள் ஏனோ கலங்கிப் போயின.
“போதும் அத்த போதும், இதோட நிப்பாட்டிருங்க. பாருங்க என்ர தங்கச்சி என்னவோ ஏதோ எண்டு யோசிக்கிறா!” மீண்டும் கலகலத்தான், குணா.
“அதுவும் சரிதான்..” என்ற சாரதா, “கழுத்தக் காட்டுங்கம்மா!” என்று சொல்லி, பெரிய காசுமாலையை எடுத்து அவளுக்கு அணிவிக்க முயல, அதிர்ந்து போய்க் கணவனைப் பார்த்தாள் மகிழ்.
குணாவை முறைத்தான் உதய். “விடுடா, ஏதோ அவேட விருப்பம், விடு விடு!” என்றான் குணா.
இதையெல்லாம் கவனிக்காத சாரதா, மகிழ் கழுத்தில் மாலையைப் போட்டு அழகு பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டார். அடுத்து, “உதய், கையைக் காட்டுங்க!” என்று,அவன் கையிலும் கைச் சங்கிலியை அணிவித்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த இரு குடும்பங்களை, “இது சாரதா அன்ரிட அக்காமாரும், அவேட குடும்பங்களும். இலண்டனில இருந்து காலமதான் வந்தவேயாம்.” என்று, அறிமுகம் செய்தான் உதய். இவளும், சாரதாவைப் போலவே அவர்களின் அன்புப் பிடியில் சிக்கி மீண்டாள். கடைசியாக வந்த குணாவின் பெரியதந்தை குமார், “உதய்…” என்றவாறே இறுக அணைத்துக்கொண்டவர், சிறிது நேரம் அவனை நகர விடவில்லை. பின்னரோ, ஒத்த வார்த்தை கதைக்காது மகிழ் தலையில் கைவைத்துவிட்டு நகர எத்தனிக்க, அவரைப் பிடித்துக்கொண்ட உதய், “எல்லாருமா நிண்டு ஃபோட்டோ எடுத்திட்டுப் போகலாம்!” என்றதும், அனைவரும் ஒன்றாக நின்று ஃபோட்டோ எடுத்துவிட்டு இறங்கிச் சென்றனர்.
வரவேற்பு மிகவும் சிறப்பாக முடிவடைய, இறுதியாக சில நெருங்கிய உறவுகளும் குணாவீட்டினரும் எஞ்சி நின்றனர். “ரிஷப்ஷன் நாம நினைச்சதவிட சிறப்பாவே நடந்தது இல்லையா? சாப்பாடு ஒவ்வொரு ஐட்டமும் நல்ல ருசி எண்டு சொல்லாதவேயே இல்ல!” என்று ரத்னா கூற, “ஓம் ஓம்…அதோட இவ்வளவு சிறப்பா இதைச் செய்து முடிக்க உதவியது குணாவும் நீங்களும் தான்.; மிக்க நன்றி!” அருகில் நின்று கொண்டிருந்த குமாரின் கரம் பற்றி, மனமாரச் சொன்னார், சரவணன்.
“இது என்ன நீங்க, எனக்குப் போய்…நன்றியெல்லாம் சொல்லிக்கொண்டு!” என்ற தன் பெரியப்பாவுடன் சேர்ந்து கொண்டான் குணா.
“அதானே அங்கிள்! என்ர தங்கச்சிக்காகச் செய்யாம வேற ஆருக்குச் செய்யிறது?” என்றதும், நான் உன் அண்ணன் என்று இங்கு வந்ததிலிருந்து திரும்ப திரும்ப சொல்லும் குணாவை முறுவலுடன் பார்த்தாள், மகிழ்.
இப்படியே சிறிது நேரம் அளவளாவிய பின், குணா குடும்பம் விடைபெற, இவர்களும் வீட்டை வந்தடைந்து, உள்ளத்தில் நிறைந்த உவகையுடன் படுக்கைக்குச் சென்றார்கள்.
“என்னதான் பழக்கமா இருந்தாலும், இப்பிடியா நகைகளத் தருவினம்! அவ்வளவு நெருங்கிய சொந்தமும் இல்லையே உதய்!” மனத்தில் இருந்ததைக் கேட்டாள், மகிழ்.
“இங்க இப்பிடித்தான் மகிழ். அவேட வீட்டு விசேசத்துக்குத் திருப்பிக் குடுத்தாச் சரி!” என்றான், உதய். குணாவின் உறவுகள், பெறுமதியான பரிசுகளைக் கொடுத்த ஆச்சரியத்தில் வினவிய மனைவியின் பேச்சை வளர்க்காது முற்றுப்புள்ளி வைத்தவன், கர்ம சிரத்தையாக மனையாளின் நகைகளைக் கழட்ட உதவி செய்கிறேன் என, அவளுடன் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!