அத்தியாயம் 27
“மகிழ், மேல ஃபோன எடுங்கம்மா. சுமி கதைக்கோணுமாம்.” மாடியைப் பார்த்துச் சொன்னார், ரத்னா. அயர்ன் பண்ணிக்கொண்டிருந்தவள், “இந்தா எடுக்கிறன் மாமி!” என்றவாறே அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க சுமிக்கா, இண்டைக்கு வேலை இல்லையா?” என்றவள், சுமி சொன்னதைக் கேட்டுவிட்டு “நீங்க லீவு எண்டத மறந்திட்டன்.” என்றதும், கொஞ்சநேரம் அப்படியும் இப்படியும் கடித்தாள், சுமி.
ஷொப்பிங் செல்லப்போவதாகவும் இவளை வரும்படியும் கேட்க, உதய் மதியச் சாப்பாட்டுக்கு வந்துவிட்டுப் போகையில் கேட்டுவிட்டுச் சொல்வதாகச் சொன்னாள், மகிழ். அதற்கும் கடித்தாள், சுமி.
“ஹலோ…ஹலோ…அவர் வேணாம் எண்டு சொல்ல மாட்டார்தான்! எண்டாலும் போனாப் போகுதெண்டு உங்கட மச்சானுக்கு சின்னதா மரியாத!” சிரிப்போடு சொன்ன மகிழ், “அதோட, பர்வதம் பாட்டிக்கு முன்னால வச்சு ஷொப்பிங் போகட்டா எண்டு கேட்டன் எண்டு வையுங்க, பார் இந்தப்பிள்ளை என்ர பேரனிட்டக் கேட்டுத்தான் எல்லாம் செய்யிறா எண்டு பாட்டி மனம் குளிருவார் எல்லா? அதுக்குதான் எல்லாம்.” இப்படி, மாறி மாறி வம்பிழுத்துக் கொண்டார்கள்.
இறுதியில், “நான் இவரிட்டக் கதைச்சிட்டு ஃபோன் பண்ணுறன்!” என்று அழைப்பைத் துண்டித்தாள், மகிழ்.
“இஞ்ச வந்தோன்ன பாவிக்கத் தேவையானத மட்டும் அங்க இருந்து கொண்டு வாரும். மிச்சம் கனடாவில வாங்கிக்கொள்ளலாம்!” என்று, உதய் சொன்னதில், அவ்வளவாக உடுப்புகளை வாங்கி வரவில்லை, இவள்.
வரவேற்பு முடிந்த அடுத்து வந்த நாட்களிலேயே, “அண்ணியாட்களோட ஷொப்பிங் போயிட்டு வாரும் மகிழ். பெரியண்ணி நல்லாப் பாத்து வாங்குவா. உமக்குத் தேவையான உடுப்புகளையும் மிச்சப் பொருட்களையும் வாங்கிட்டு வாருமன்!” என்றிருந்தான் உதய்.
“ஏன் உதய் நீங்க வரமாட்டீங்களா?” முதன்முதல் கடைகளுக்குச் செல்கையில் அவனோடு போகவே விரும்பினாள், இவள்.
“இப்ப நேரம் இல்ல எண்டாலும் பரவாயில்ல உதய். ஆறுதலா வாங்கலாம், அவசரம் இல்ல.” கணவன் நேரமின்றி அலைவதைப் பார்ப்பதால் சட்டென்று தொடர்ந்தவளை, கெஞ்சலாகப் பார்த்தான் அவன். “எனக்கும் உம்மக் கூட்டிக்கொண்டு போக ஆசை இல்லையா மகிழ். உமக்கே தெரியும், நிறைய நாட்கள் லீவு எடுத்திட்டன். குணா பாவம், தனியா எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுறான். நீர் அண்ணியாட்களோட போயிட்டு வாருமன்!” என்றதும், “ஒரு அவசரமும் இல்ல. இன்னொரு நாள் பார்ப்பம்!” என்று, தட்டிக் கழித்துவிட்டாள்.
இப்போது, வாங்குறமோ இல்லையோ கடைகளைச் சரி பாத்திட்டு வரலாமே என்றெண்ணிக்கொண்டவள், மதியம் வந்த கணவனிடமும் சொல்லிக்கொண்டு, சுமி கௌசியோடு புறப்பட்டுவிட்டாள்.
“இங்கதான் வழமையா வாங்குறனாங்க மகிழ்!” என, அவர்கள் கை காட்டிய பிரமாண்டமான மோலினுள் மூவரும் நுழைந்தார்கள். அங்குள்ள கடைகளிலிருந்த ஆடைகள் ஒவ்வொன்றும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தளவில், அதன் விலை கவரவில்லையே. “என்ன சுமியக்கா இவ்வளவு விலை போட்டிருக்கு! இதுக்கு இலங்கையில நல்லதாவே சீலை ஒண்டு வாங்கிரலாம். இதுக்கு அங்க இப்பிடி நாலு பிளவுஸ் வாங்கலாமே!” அதிருப்தியுடன் முகம் சுளித்தாள், மகிழ்.
“ஹைய்யோ கௌசியக்கா! இது எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால், விலையப் பாருங்க. என்ன பிராண்ட் நேம்? எல்லாம் ஒரே துணிதான்!” இப்படி, ஒவ்வொரு கடையிலும் மகிழ் ஆடைகளைத் தட்டிக்கழிக்க, சுமியும் கௌசியும் தமக்கானதை வாங்கிக்கொண்டவர்கள், மகிழை அசைக்கவும் முடியாது திணறித்தான் போயினர்.
“இப்ப ஏன் மகிழ் காசப் பார்க்கிறீர்? அதுதான் உம்மட ஆள் கார்ட் தந்திருப்பாரே! சத்தம் போடாமல் தேவையானதுகள வாங்கும். அவர் மூச்சும் விடமாட்டார்!” என்ற சுமியை முறைத்தாள், மகிழ். பிறகு அவர்கள் இருவரின் முணுமுணுப்புப் பொறுக்காமல், இது கழுத்துப் பெரிசு அக்கா. இந்த பிளவுஸ் நல்லாத்தானிருக்கு, ஆனா உயரம் காணாது. எனக்கு அப்பிடிப் போடப் பிடிக்க்கிறேல்ல. இது அப்பிடியே உடம்போடு ஒட்டிக்கொண்டு நிக்கும். எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்ல போங்க இப்படி, ஒவ்வொன்றையும் சாட்டுச் சொல்லிக் கழிக்க கூட வந்த இருவரும் களைத்தே போனார்கள்.
அப்போது, “போனவே கடைகளில முகாம் போட்டிட்டினம் போல! போய் நாலு மணித்தியாலங்கள் இருக்குமே!” என்று தன் மாமியார் முணுமுணுக்க, சுமிக்கு அழைத்தார் ரத்னா. “எவ்வளவு நேரம்? பெண்டுகள் மூண்டு பேருமாக என்ன செய்றீங்க?”
“என்ன மாமி பகிடியா? உங்களோட அனுப்பி இருக்கோணும் தெரிஞ்சிருக்கும்.” என்று ஆரம்பித்தவள், “நாங்க வாங்கிட்டம் மாமி!” என்றவாறே, அருகில் நின்ற மகிழை செல்லமாக முறைத்தாள். “உங்கட செல்ல மருமகள், அப்பப்பா! எங்களால ஏலாது மாமி!” என்று தொடங்கி, மகிழ் முறுவலுடன் நிற்க நடந்ததைக் கூறினார்கள்.
“இன்னும் ஒரு கடை பார்த்திட்டு, வாறம். என்ன வாங்குறது எண்டாலும் உங்கட மகனும் மருமகளும் பாத்துக் கொள்ளட்டும்.” என்று வைத்துவிட்டாள்.
அந்த நேரம் பார்த்து, வீட்டிலிருந்த கோப்பொன்றை (ஃபைல்) எடுப்பதற்காக வந்த உதய், “என்னம்மா, சொப்பிங்போன உங்கட மருமகள்மார் வந்திட்டினமா?” கேட்டுக்கொண்டே மேலே செல்லத் தொடங்க, ரத்னாவும் சுமியும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பர்வதம் பாட்டி வாய் திறந்தார்.
“ஏன் உதய், உன்ர மனிசியக் கூட்டிக்கொண்டு போய், பொறுமையாச் சுத்தித் திரிஞ்சு பிடிச்சத வாங்கிக் குடன். ஆர் வேணாம் எண்டவே. பார், சின்னப்பிள்ளையை விட்டுட்டுப் போய் இன்னும் வரேல்ல!”
அங்கிருந்து விளையாடிக்கொண்டிருந்த ஹர்ஷுவைக் காட்டிச் சொன்னவர், “உன்ர மனிசி வீட்டில என்னதான் காசு வசதி வாய்ப்பு எண்டு இருந்திருந்தாலும் தகப்பன் இல்லாமல், மாமன்காரனிட தயவில் கைக்கும் வாய்க்கும் கணக்குப் பாத்து வளர்ந்திருப்பாள். அங்க, ஒண்டையும் வாங்கேல்லையாம். பிரட்டி பிரட்டி விலையப் பாத்துக்கொண்டு நிற்கிறாளாம்!” என்றதும் தான் தாமதம், ஏற்கனவே தொழிலில் சிறு குழப்பத்தில் அவசரம் அவசரமாக வந்திருந்தவன், சுர்ரென்று கோபமேறிய விழிகளுடன் தன் செல்லப் பாட்டியை முறைத்தான்.
“நானும் பாத்துக்கொண்டுதான் வாறன் பாட்டி, நீங்க சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் மகிழைப் பற்றி குறை சொல்லுறீங்க! உங்களுக்கு விருப்பமில்லாமல் கலியாணம் செய்ததாலதானே இப்பிடிப் கதைக்கிறீங்க?” சிடுசிடுத்தான்.
“ஸ்ஸ்…உதய் என்ன இது? சின்ன விசயத்தப் போய்…” எண்டு இடைமறித்த தாயைக் கையமர்த்தியவன், “கலியாணத்துக்கு முதல் வேற கதை பாட்டி! இப்ப மகிழ் என்ர வைஃப். என்னைச் சொல்லுறது போலத்தான் எல்லாம். இவ்வளவும் தான் உங்களுக்கு என்னில உள்ள அன்பா?” சீறியவன், திகைத்துப் போன பாட்டியைப் பார்த்துக்கொண்டே மனைவிக்கு அழைத்தான்.
கணவனின் அழைப்பைக் கண்டதும், “உதய் தான் அக்கா…” உவகையோடு எடுத்து, “சொல்லுங்க உதய்…” என்றாள் மகிழ். அவனோ, “இஞ்ச பாரும் மகிழ், இவ்வளவு நாட்களும் எப்பிடியோ தெரியாது. இப்ப நீர் என்ர வைஃப். உமக்குத் தேவையானதுகள வாங்கித் தர ஏலாத நிலையில நான் இல்ல. அதை நல்லா நினைவில வைச்சிரும் . உமக்குப் பிடிச்சதுகள் எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு கெதியா வீட்டுக்கு வாங்கோ!” படபடவென்று சொன்னவன், பதிலுக்குக் காத்திராது அழைப்பையும் துண்டித்திருந்தான்.
கைப்பேசியையே பார்த்திருந்த மகிழுக்கு, சில வருடங்களுக்கு முன், முதல் முதல் கண்டபோது கோபத்தில் சீறிய உதய் தான் நினைவில் வந்து போனான். தன்னை நோக்கியவாறு சங்கடமாக நின்ற சுமி, கௌசியிடம் எதுவுமே சொல்லாதவள், முக்கியம் என்று தான் நினைத்த சில பொருட்களை வாங்கிக்கொண்டாள்.
“நான் காசு குடுக்கிறன்!” என்று முயன்ற சுமியைத் தடுத்துவிட்டாள். உதய் தந்திருந்த கார்ட்டில் மறந்தும் கை வைக்கவில்லை.
“எதுக்கும் இந்தக் காச வச்சிரம்மா. என்ன எண்டாலும் கொஞ்சம் கூட தயங்கத் தேவேல்ல, மாமாவுக்கு எடுக்கோணும் சரியா.” என்று, கண்கலங்கச் சொன்னபடி, தன் மாமா தந்திருந்த இரண்டாயிரம் டொலரில் கொஞ்சத்தை எடுத்து வந்திருந்ததால், அதில் அப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
போகும் போது கலகலத்துச் சென்றவர்களின் அமைதியில், மகிழின் மனநிலையைப் புரிந்து கொண்டார், ரத்னா. “சுமி, கௌசி எல்லாருக்கும் இரவுக்கு இஞ்சயே சாப்பாடு செய்யிறன்.” என்றதும், “சரி மாமி, வீட்டுக்குப் போயிட்டு வாறம்!” என்றுவிட்டு அவர்கள் செல்ல, அமைதியாக மாடிக்குச் சென்ற மகிழ், சிறிது நேரத்தில் இறங்கி வந்து, வழமைபோல் இரவுச் சமையலுக்கு உதவினாள்.

