நெஞ்சினில் நேச ராகமாய் 28 – 3

ரத்னாவும் மகிழும் உணவுகளை எடுத்து வைக்க, “ரத்னாக்கா, இதில பேக்(bake) பண்ணின சிக்கன் இருக்கு. சின்னப் பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவினம்.” என, ஒரு பெரிய பெட்டியைத் திறந்து வைத்த சாரதா, சுமி கௌசியோடு சேர்ந்து உணவுகளைப் பரிமாறினார்.
“இண்டையான் முழுச் சமையலும் என்ர மகிழ் மருமகள்ட கைவண்ணம்!” ரத்னா சொன்னதும், “அப்ப, முதல் தட்ட எனக்குத் தாங்கோ!” என்று, அவசரமாகக் கை நீட்டினார், குமார். அவரின் செய்கையை, நகைப்புடன் பகிடி பண்ணிய குணா, “என்ர தங்கைச்சிட சமையல எனக்கு ரெண்டாவதாத் தாங்க!” என்று, சுமியிடமிருந்து உணவை வாங்கிச் சுவைக்கத் தொடங்கினான்.
“இண்டைக்கு உம்மட சமையலுக்கு இருக்கிற கிராக்கியப் பாத்தீரா மகிழ்! உப்பு, உறைப்பு எண்டு எது இல்லை எண்டாலும் களைச்சு விழுந்து வந்து சாப்பிடேக்க, அமிர்தமாத்தான் இருக்கும்!” மனைவியைச் சீண்டியவாறே, தன் கையிலிருந்த உணவைச் சுவைத்தான் உதய்.
“மகிழ் சித்தி, இதப் பாத்துக்கொண்டு நீங்க சும்மா நிக்கலாமா? எங்கட சித்திட சாப்பாட்ட நக்கல் அடிக்கிறவேக்கு எல்லாம் இஞ்ச சாப்பாடு கிடையாது தெரியுமா?” சரணி போர்க்கொடியைப் பறக்க விட்டாள்.
“ஓம் ஓம், அவ்வளவு சிரமப்பட்டு எல்லாம் நீங்க சாப்பிட வேணாம். அந்தா, அங்க போய் ஏதாவது கிடைக்கும், வாங்கிச் சாப்பிடுங்க!” அவன் கையிலிருந்த உணவைப் பறித்தாள் மகிழ்.
“என்னம்மா நீங்க, உங்களுக்கு முன்னாலயே சாப்பிட விடாமல் பறிக்க, சிரிச்சுக்கொண்டு நிக்கிறீங்ளே! பாருங்க குமார் அங்கிள், இந்த வன்முறையிட்ட மாட்டுப்பட்டு நான் படுறபாட்ட!” அநியாயத்துக்கு சோககீதம் வாசித்தான், உதய்.
“எங்கட மருமகள் வன்முறையோ இல்லையோ, உங்களுக்கு எதிரி உங்கட வாய்தான் தம்பி!” என்று கிண்டலாகச் சிரித்தார் சரவணன்.
“அப்பிடிச் சொல்லுங்க மாமா, இவருக்கு இப்ப வர வர சேட்ட கூடுது. ” என்று சொல்லி, கணவனை முறைத்தாள், மகிழ்.
“எல்லாம் சகவாசதோசம் இல்லையா குணா! நான், முதல் எல்லாம் என்ன மாதிரி இருந்தனான். இப்ப வர வர பட்டிக்காட்டான் ஆகிட்டன்!” என்றவன் முதுகில் தொம்மென்று ஒன்று போட்டாள், அவன் மனைவி.
“பாத்தியா? ஏன்டா உனக்கு இந்த வேல! வாய அடக்கி வச்சிருந்தா, நாலு சுவருக்குள்ள நடக்கிறதுகள் எல்லாம் வெளில தெரியவராது தம்பி. பார், நாங்க எவ்வளவு அமைதியாக இருக்கிறம். முண்டத் தெரியாமலா இப்பிடி இருக்கிறம். எங்கட மரியாதைய நாம தான்டா காப்பாற்றிக்கொள்ள வேணும்.” என்ற வசந்தன், கௌசியின் செல்ல முறைப்பை முறுவலுடன் வாங்கிக்கொண்டான்.
“அது வேற ஒண்ணும் இல்லையண்ணா, முதுகில நுளம்பு இருந்ததாம். என்ர புருசனை நீ எப்பிடிக் கடிக்கலாம் எண்டு அடிச்சிருக்கிறா. இல்லையா மகிழ்?” உதய் இராகம் போட,
“இவேக்கு எத்தின தடவைகள் குப்புற விழுந்தாலும் மண் ஒட்டாதாம் மகிழ். இந்தாரும் நீர் சாப்பிடும்!” அவளிடம் உணவைக் கொடுத்த சுமி, “இனி ஹர்ஷனுக்குப் போதும் கெளசி, நீரும் சாப்பிடும்.” அவளுக்கும் கொடுத்து, தானும் உண்ணத் தொடங்கினாள்.
“சாப்பாடு நல்ல ருசி மகிழ், எல்லாம் அளவா இருக்கு. அம்மா எல்லாம் சொல்லித் தந்திருக்கிறா!” சாப்பிடுகையில் சாரதா சொல்ல, “ஓம் அன்ரி, அம்மாவ விட எங்கட பாட்டி எந்த நேரமும் ஏசி ஏசியே நான் வீட்டு வேலைகள் எல்லாம் செய்து பழகிட்டன்!” என்றவளின் உடல் அங்கிருக்க, நினைவுகள் பளையை நோக்கி விர்ரென்று பயணப்பட்டது.
உணவை முடித்ததும் தத்தம் கார்களிலேயே சஃபாரியினுள் சுற்றி வந்தவர்கள், பார்க்கின் மற்றைய பகுதிகளையும் பார்வையிட்ட பின், மாலை ஐந்து மணியளவில் நயாகராவை நோக்கிப் பயணமானார்கள்.
“முதல் ஹோட்டலுக்குப் போய்ட்டு அங்க இருந்து நடந்தே நயாகராவுக்குப் போகலாம். அவ்வளவு தூரம் இல்ல.” என, உதய் சொன்ன யோசனையை ஏற்று, எல்லோரும் ஒன்றன்பின் ஒன்றாக ஹோட்டலை வந்தடைந்தார்கள்.
“நாங்க போய் ரூம் கீஸ் வாங்கிக்கொண்டு வாறம்.” என்ற உதய், குணாவுடன் ரிஷப்ஷன் நோக்கிச் செல்ல, “இஞ்ச க கொஞ்சம் குளிராக இருக்கே!” என்றாள், மகிழ்.
“ஓம் மகிழ், அதும் நயாகராவுக்குப் பக்கத்தில இன்னும் குளிரும். அதுக்கு ஏற்றதா உடுப்பப் போட்டுக்கொண்டு வாரும்!” என்றவாறே காரைவிட்டு இறங்கினார், ரத்னா.
“அப்ப, உடுப்ப மாத்திட்டே வாறன்.” தானும் இறங்கிய மகிழ், தன் மீது பட்டுத்தெறித்த நீர்ச் சிதறல்களைப் பார்த்து, “மழை தூறுது மாமி!” என்றாள் கவலையாக!
“மழையில்ல மகிழ், பக்கத்திலதான் நயாகரா! அதில இருந்து தெறிக்கிற சாரல்தான் இது.” என்ற ரத்னா, “அந்தா அந்தப் பக்கமாப் பெரிசா இரைச்சல் கேக்குதே. ஃபோல்ஸ் சத்தம் தான்!” இப்படி இவர்கள் கதைத்துக்கொண்டிருக்கையில் திறப்புக்களோடு உதய் வர, உள்ளே சென்றார்கள்.
*****

“நயாகரா நீர் வீழ்ச்சிகள் திருமதி உதய்கீதனை அன்போடு வரவேற்கிறது!” கணவன் சுட்டிக்காட்டிச் சொன்ன பாணியில் முகம் சிவக்க நின்றவள், மறுகணம், அவ்விடத்தின் இரம்மியத்தில் தன்னை மறந்து மயங்கி நின்றாள். இதுவரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த, வண்ண வண்ண அலங்கார மின்விளக்குகளின் ஒளியில் தேவலோகமாகக் காட்சியளித்த இடங்களைக் கடந்து, கணவனின் கைப்பற்றி, உறவுகள் சூழ நடந்து வருவதே மனதில் மிகமிக அற்புத உணர்வைத் தந்திருந்ததென்றால், இப்போதோ, கண் முன்னால் விரிந்த இயற்கையின் அற்புதத்தில் மெய்சிலிர்த்துப் போனாள் அவள்.
“வட அமெரிக்காவின் எரி கால்வாயின்(Lake Erie) நீரோட்டம், நயாகரா ஆற்றில் கலந்து, கிராண்ட் (Grand Island) எனும் தீவால் இரண்டாக்கப்பட்டு, முட்டி மோதி ஆவேசத்தோடு ஒன்டாரியோ கால்வாயை(Lake Ontario) நோக்கி முன்னேறுகையில், இடையில் சந்திக்கும் பள்ளத்தாக்கில் மூன்றாகப் பிரிந்து சீறிப் பாயும் இடமே ‘நயாகரா நீர் வீழ்ச்சிகள்!” கணவன் சொல்வதைச் செவிகள் உள்வாங்கிக்கொள்ள, அவள் நேத்திரங்களோ இமைக்கவும் மறந்து, முன்னால் விரிந்த அற்புதத்தைப் படம் பிடித்துக் கொண்டிருந்தன.
“அங்க தெரியிறதுதான் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிற பாலம், ரெயின்போ பிரிட்ஜ். (Rainbow Bridge)” மனைவியின் தோள் பற்றி அப்பாலத்தைக் காட்டியவன், எதிர்புறக் கட்டிடத்திலிருந்து நீர்வீழ்ச்சிகளின் மீது பாய்ச்சப்பட்ட பலவண்ண ஒளிகளின் வர்ணஜாலத்தில், தானும் சிலகணங்கள் மயங்கி நின்றான். இதுவரை பல தடவைகள் இங்கு வந்திருந்தாலும், முதல் முறையாக தன் இதயராணியுடன் வந்திருக்கிறானே! இத்தனைநாள் பார்த்ததை விட, அப்பகுதியின் ரம்மியம் பலபல மடங்குகள் அதிகரித்துத் தெரிந்தது, அவன் விழிகளுக்கு.
“பிரிட்ஜிலிருந்து முதல் இருக்கிற பெரிய ஃபால்ஸ் ‘அமெரிக்கன் ஃபால்ஸ்’.(American Falls) பக்கத்தில இருக்கிற சின்னது ‘பிரைடல் வேயில் ஃபால்ஸ்’ (Bridal Veil Falls). ரெண்டுமே நியுயோர்க் மாநிலத்துக்குள்ள வரும் மகிழ்.” மற்றவர்கள் முன்னால் நகர, இவர்கள் தனித்து நின்று ரசித்துக்கொண்டிருந்தனர். “இடையில தெரியிறது ‘கோட் தீவு’(Goat Island). அதக் கடந்து, அந்தாத் தெரியிற அரைவட்டப் பெரிய ஃபால்ஸிட சிறுபகுதி அமெரிக்காவில இருந்தாலும், ‘கனடா ஃபால்ஸ்’ எண்டுதான் சொல்லுவினம். அதுக்கும் ஒரு பெயர் இருக்குத் தெரியுமா?” விளக்கினான்,உதய்.
“நயாகராவில் மூன்று ஃபால்ஸ் இருக்கு எண்டுறதே எனக்கு இப்பதான் தெரியும் உதய்!” என்ற மகிழ், அப்பெரிய ஃபால்சையும், அது, கீழே விழும் வேகத்தில் மேலே புகையாக ஓங்கியெழுந்து, தன்னைப் பார்த்து ரசிப்பவரை தானும் தொட்டு தொட்டுச் சிலிர்க்க வைப்பதையும் பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல அப்பெரிய ஃபால்சை நோக்கி மனைவியுடன் நடக்கத் தொடங்கியவன், “நயாகராட 90% தண்ணியும் அந்தப் பகுதியால தான் பாயுது மகிழ். அதை ஹோர்ஸ்ஷு ஃபால்ஸ்(Horseshoe Falls) எண்டு சொல்லுவினம். அரைவட்டமாக, குதிரை லாடம் போல இருக்கிறதால அந்தப் பெயர் வந்ததாம்!” என்றவன், “நாளைக்கு போட்ல(boat) கிட்டப் போய்ப் பாப்பம்! இரவில ஒரு வடிவு எண்டா, பகலில வேறவித வடிவா இருக்கும்!” என்ற கணவனைத் திரும்பிப் பார்த்தவள், நடையை நிறுத்தினாள்.
“என்ன மகிழ்?”
“இதெல்லாம் உண்மையா நடக்குதோ உதய்? நான்…நான் இங்க நிக்கிறது கனவு இல்லையே!” வியந்துகொண்டே, அவன் முதுகில் இறுக்கிக்கிள்ளினாள்.
“ஏய்..ஸ்ஸ்..ஏன் மகிழ்?” பரிதாபமாகப் பார்த்தவனை, அவள் பார்த்த பார்வையில், அச்சுற்றுப்புறத்தில் அங்குமிங்குமாகத் திரிந்தவர்களையே மறந்தவன், அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டே அங்கிருந்த கட்டில் சாய்ந்து நின்று கொண்டான்.
“என்னால உண்மையாவே நம்ப ஏலாமல் இருக்கு உதய். நான் வெளிநாடு வந்து, அதுவும் இஞ்ச, இப்பிடியெல்லாம் வருவன் எண்டு சின்னதாக் கூட கனவு காணேல்ல தெரியுமா?” என்று, கண்கலங்கிய அவன் மனைவி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“மச்சான் அப்பிடியே நில்லுங்க!” திடீரென்று குரல் கேட்க, திடுக்கிட்டு விலகப் பார்த்தவளை, உதய் விடாது அணைத்துக்கொள்ள, விதம் விதமாக புகைப்படங்களை எடுத்துத் தள்ளினான், குணா.

error: Alert: Content selection is disabled!!