அத்தியாயம் 3
புது மனைவியை ஏற்றிக்கொண்டு விசுவமடு நோக்கிச் சைக்கிளில் பறந்தான், ஆனந்த். என்னதான் மங்கையின் தமையனை நினைத்து மனம் முழுவதும் பதற்றம் வியாபித்திருந்தாலும், அதையும் மீறி, தன் முன்னால் பதுமைபோல் அமர்ந்திருக்கும் மனைவியின் அருகாமையில் மயக்கம் கொண்டான், அவன். கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டாளே! இல்லையென்றால், எங்கே போனாள் என்று அவர்கள் அங்குமிங்குமாக அலைந்து திரியும் நான்கைந்து நாட்களில், நாங்களாகவே அவர்களிடம் போயும் இருக்கலாம். இப்போ, இப்படித் தவிக்க விட்டுவிட்டாளே என்ற கோபமிருந்தாலும், முகம் வாடி, கண்கள் கலங்க மௌனமாக அமர்ந்திருந்தவளின் தோற்றத்தில், பரிதாபம் கொண்டான் அவன்.
அவளின் கலங்கிய தோற்றத்தைப் பார்க்க, அவன் மனம் கொஞ்சமும் விரும்பவில்லை. “கோவமா மங்க?” அவள் காதோரம் குனிந்து கிசுகிசுக்க, சட்டென்று திரும்பியவளின் விழிகள் நீரில் மிதந்தவாறே பயம், தவிப்பு இரண்டையும் கலந்து வெளிப்படுத்தி நின்றன.
“ஸ்ஸ்..தொட்டதுக்கெல்லாம் கண்ணீர் விட்டா எனக்குப் பிடிக்காது மங்கை!” கடிந்துகொண்டவன், “சரி சரி, கண்ணைத் துடை. எது எண்டாலும் சமாளிப்பம்!” குரலில் கனிவோடு சொன்னான். “உன்ர அண்ணா எதிர்ப்பார் எண்டது தெரிஞ்சுதானே கலியாணம் செய்தம். வாறது வரட்டும் மங்கை; அப்பிடி உன்ர அண்ணா தேடி வந்தால், நீ என்னை விட்டுட்டுப் போயிருவியா என்ன?” என்று கேட்டவன் குரலில், அவள் பதிலை அறியும் ஆவல் மிகையாகத் தொக்கி நின்றது!
“என்ன கதைக்கிறீங்க ஆனந்த்?” விலுக்கென்று திரும்பியவள், அவன் விழிகளில் தெறித்த நேசத்தில் தடுமாறினாள். அதையுணர்ந்து கொண்டவனோ, அவளோடு முன்னால் அணைந்தவாறே சைக்கிளை இலாவகமாக மிதித்தான்.
கணவனின் பார்வையும் செய்கையும், அவள் மனதில் அதுவரை இருந்த கலக்கத்தையும் குழப்பத்தையும் துணிகொண்டு துடைத்து விட, மெல்ல மெல்ல மனதில் மலர்ந்தவள், தன் வதனத்தில் அதைக் காட்டி நின்றாள்.
“இப்பிடியெல்லாம் ஏன் கதைக்கிறீங்க ஆனந்த்?” சிறிது நேரத்தின் பின்னர் கேட்டவள், “நான் ஏன் உங்கள விட்டுட்டுப் போகப் போறன்? நீங்க வேணுமெண்டா இப்பவே வாங்க, அண்ணாட்டப் போய் எல்லாத்தையும் சொல்லலாம். பிறகு அவேட விருப்பம், சேர்த்தாச் சேக்கட்டும், இல்லையோ பேசாம ஒதுங்கிருவம்” என்றவள் குரலில் அத்தனை தெளிவும் கணவனில் நம்பிக்கையும்.
இதைக் கேட்டவன், அப்படியே மகிழ்ந்து போனான். “உன்னில சந்தேகமெல்லாம் இல்ல மங்கை. என்ன எண்டாலும் ஒரு கிழமை போகட்டும். பிறகு உன்ர வீட்ட போகலாம். அம்மாவும் அப்பிடித்தான் சொன்னவா.” என்றவன், மென்னகையுடன் அவள் காதோரம் குனிந்தான். “அதுக்குப்பிறகு, உன்ன என்னட்ட இருந்து பிரிக்கலாம் எண்ட நினைப்பே உன்ர வீட்டாக்களுக்கு வராது மங்கை!” என்றவாறே, அவள் காதுகளில் முணுமுணுத்ததைக் கேட்டதும், அவள் முகமோ அந்திவானமாகச் செம்மையைப் பூசிக் கொண்டது.
விசுவமடுவில் தாமிருக்கப் போகும் ஒரு கிழமையை புதுவித மயக்கத்துடன் எதிர்பார்த்தவாறே, அத்தை வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர், இருவரும்.
அன்றே, மதியம் கடந்த வேளையில் அவர்கள் வீட்டின் முன்னால் வந்திறங்கினான், ராசன். கூடவே ஏழெட்டுப் பேராக அவர்கள் வந்ததில், உள்ளுக்குள் எடுத்த உதறலை இலாவகமாக மறைத்துக்கொண்டார் ஆனந்தின் அன்னை. கணவனை ஒரு எச்சரிக்கைப் பார்வையால் பயமுறுத்தியவர், விரிந்திருந்த கூந்தலை அள்ளிமுடித்துக் கொண்டே எழுந்தார்.
“அட! வாங்க தம்பி வாங்க. என்ன இவ்வளவு தூரம்? ஆனந்தும் வந்திருக்கிறானா?” என்று கேட்டுக்கொண்டே, வந்திருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களுக்குப் பின்னால் நோக்கினார்.
அடங்கா ஆத்திரத்தில் மினுங்கிக் கொண்டிருந்த ராசனின் முகம், அவர் கேட்ட விதத்தில் கணத்தில் தன்னருகில் நின்ற உறவினனைக் கேள்வியாக நோக்கியது. “அப்ப, இவேக்கும் ஒண்ணும் தெரியாது போல ராசன்!” அவனோ அடிக்குரலில் முணுமுணுத்தான்.
“பொறு பொறு பாப்பம். இந்த மனிசிட முகமே சரியில்ல. நடிச்சாலும் நடிக்கும்!” என்ற ராசனோ, “ஆனந்திட அப்பா இல்லையா?” யாரைப் பிடித்தால் உண்மையை வெளிக்கொண்டு வரலாம் என்று தெரிந்தே கேட்டான்.
“ஆங், இருக்கிறார் இருக்கிறார். அந்த மனிசன்தான் வேற எங்க போகேலும்.” புலம்பலாகச் சொன்னவர், “எங்கட போதாத காலம் தம்பி, இந்த மனிசன் வீட்டில் முடங்க வேண்டி வந்திட்டு. ஏதோ, உங்கட புண்ணியத்தில வீட்டில் அடுப்பு எரியுது!” கண்கள் கலங்கினார்.
“காலமேயில இருந்து அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஆனந்த் வேலையால வந்தப்பிறகுதான் டொக்டரிட்டப் போகோணும்.” என்றவர், அசையாது நின்றவர்களைப் பார்த்து மனத்துள் நகைத்துக்கொண்டார்.
“உள்ளுக்கு வாங்கோவன் தம்பி. ஏதாவது வேலையா வந்தீங்களா? அவரோட கதைக்கோணுமா? கொஞ்சம் அசதியாக இருக்கெண்டு இப்ப சத்தமுன்னதான் படுத்தவர். வாங்க எழுப்புகிறேன்!” சொல்லிக்கொண்டே நகர்ந்தவரை, “இல்ல.. வேணாம் வேணாம். ” அவசரமாகத் தடுத்தான் ராசன்.
“உங்கட மகன் இண்டைக்கு வேலைக்கே வரேல்ல. வரமாட்டன் எண்டு ஒரு வார்த்த சொல்லவும் இல்ல.” என்று சொன்னது தான் தாமதம்,
“அய்யோ என்ர ராசா! உனக்கு என்னடா ஆச்சு? காலம வழமைபோல வேலைக்குப் போனானே தம்பி! ஐயோ ஐயோ! இந்த வீட்டக் காப்பாத்துற கடவுள் அவன்! மூண்டு பொம்பளப் பிள்ளைகளையும் சொத்தி மனிசனையும் வச்சுக்கொண்டு நான் இப்ப என்ன செய்வன்!” பெருங்குரலெடுத்து அழுதவரை, “இஞ்ச பாருங்க, கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு நான் சொல்ல வாறதக் கேளுங்க!” ராசனின் உறுமல் சட்டென்று வாய் மூட வைத்தது.
“உங்கட மகனை நீங்கதான் புகழோணும். இந்த வீட்டு நிலையில இரக்கப்பட்டு அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்தா…அவன்…அவன்…” கதைத்த ராசனின் குரல் நடுங்கியது. தங்கை செய்த வேலையை இன்னமும் நம்ப முடியாதிருந்தாலும், அவளே எழுதி வைத்திருக்கையில் மாற்றுக் கருத்துக்கு இடமேது! மகளைப் போல சீராட்டிய தங்கை அடித்த அடியால் நெஞ்சம் துடிக்க, அவமானம் கழுத்தை நெரிக்க, உக்கிரமாகவே ஆனந்தின் அன்னையை ஏறிட்டான் ராசன்.
“அவன் செய்த வேலைக்கு என்ர கண்ணில மட்டும் பட்டான் துலைஞ்சான்!” மீண்டும் உறுமினான்.
“என்ன தம்பி என்ன? வந்தீங்கள்… சரி முதலாளியாச்சே எண்டு நானும் பொறுமையா இருந்தா, என்ர வீட்டுக்கே வந்து என்ர பிள்ளையக் குறைசொல்லுறீங்க!” அதட்டலாகக் குரல் உயர்த்தினார், ஆனந்தின் தாயார்.
“இஞ்ச பாருங்க, வயதுக்கு மரியாதை தந்து நிண்டு கதைக்கிறன். எங்க அந்த ராஸ்கல், வீட்டுக்குள்ள பதுங்கி இருக்கிறானா? முதல் வெளிய கூப்பிடுங்க. என்ர தங்கச்சிய இழுத்துக்கொண்டு ஓட அவனுக்கு எவ்வளவு தைரியம் ? நாங்க கிழிச்ச கோட்டைத் தாண்டாத சின்னப்பிள்ளை அவள். அவள்ட மனசக் கெடுத்து, எனக்கு ஆனந்தோட கலியாணம் எண்டு கடிதம் எழுதி வச்சிட்டு வர ஆர் துணிச்சல் குடுத்தது?” குரலை உயர்த்தினான் ராசன்.
அடுத்தகணம் தலையில் அடித்துக்கொண்டு நிலத்தில் விழுந்த ஆனந்தின் தாயார், “ஐயோ! ஐயோ! இந்த அநியாயத்த ஆரிட்ட போய்ச் சொல்வன். என்ர பிள்ளை எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டானா? இல்ல இல்ல! நான் இதையெல்லாம் ஒருக்காவும் நம்பமாட்டன்! நம்பமாட்டன்!” கதறிய கதறலில் அக்கம் பக்கத்தவர் ஓடி வந்தனர்.

