நெஞ்சினில் நேச ராகமாய் 30 – 2

“அவனால தானே அவளுக்கு ஓடுகாலிமகள் எண்ட பேர் கிடைச்சது! இப்ப கனடால இருந்தா, அவன் செய்ததெல்லாம் இல்லை எண்டு ஆகிருமா ? கண்ணீர் விட்டால், போன என்ர குடும்ப மானம் திரும்பி வந்திருமா? அல்லது இவள் வாழ்க்கைதான் நேர் சீராகிருமா?”
“இந்த வீட்டுக்குள்ள நுழைய ஏலாமல் போனோன்ன, சமயம் பாத்துக்கொண்டு இருந்து என்ர பேத்திய வளைச்சிட்டானா அவன்! ஆருக்கு வேணும் இந்த எளியவனிட தொடர்பு! இத்தின நாளும் இல்லாமல் பாசம் பொத்துக்கொண்டு வந்திட்டோ?” குரலை வேறு உயர்த்தினார்.
“அம்மா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்க!” அதட்டிச் சொன்ன தமையனை வெறித்தார், மங்கை. “அப்ப, என்ர மகள அந்த மனிசனோட பழகிறதில உங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையா அண்ணா? பாடுபட்டு வளத்து ஆளாக்கி விட்டது நான். இப்ப ஒட்டி உறவாடுறது அவரா?” சீறினார். “அதென்ன, நான் அவருக்குத் தண்டன குடுத்தனானா? பகிடியா இல்லையா அண்ணா! அவர நம்பினதால நான் இழந்ததுகள் எத்தின?” கோபமடங்காது கேட்டார், மங்கை.
“அதச் சொல்லு. இந்த உதய் ஒரு பொறுப்பானபிள்ள எண்டு எல்லா நினைச்சிருந்தனான். ச்சே…நீ முதல் ஃபோனை போடு மங்க. நான் உன்ர மகளோட கதைக்கோணும். இண்டைக்கு இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுறன்!” என்று கட்டளையிட்ட தாயை, அடங்கிய பொறுமையோடு பார்த்தார், ராசன். “சும்மா ஒண்டையும் யோசிக்காமல் எடுத்தன் கவிழ்த்தன் எண்டு செய்ய நிக்காதீங்கம்மா!” எரிச்சலோடு தாயிடம் சொன்னார், ராசன்.

“ஆர் ஒண்டையும் யோசியாமல் செய்ய நினைக்கிறது? நானோ? இது நல்ல பகிடியாக்கிடக்கே!” மகனைக் கோபமாகப் பார்த்தார். “எல்லாத்துக்கும் முதல் மகிழ் ஒண்டும் சின்ன பிள்ள இல்ல. அந்தப் பாவிப்பயல் ஆரெண்டு தெரிஞ்சா அவன்ட மூஞ்சிலயும் முழிக்கமாட்டாள் என்ர பேத்தி!” என்கிறார், மூச்சுவாங்க.
“உண்மைதான், என்ர மகள் என்ன விட்டுட்டு விலகிப்போக மாட்டவே மாட்டாள். விசயம் தெரியோணும், நல்லவர் வேசம் போடுறாரே, அவரிட கதை கந்தலாகும். வேணுமெண்டாப் பாருங்கவன்.” அழுகையும் கோபமுமாகச் சொல்லிக்கொண்டே, தொலைபேசியை எடுக்க நகர்ந்த தங்கையைத் தடுத்தார் ராசன்.
“கொஞ்சம் பொறு மங்க. சரியான நேரம் வரேக்க, தானே சொல்லுறதா உதய் ஏற்கனவே சொல்லிட்டார். நீ ஒண்டும் கதைக்க வேணாம்.” இறுகிய குரலில் சொன்னவர் தங்கையை முறைத்தார்.
“ஓ! சரி, அந்த நல்ல நேரம் எப்ப அண்ணா வரும்? என்ர மகள் இப்பவே அந்தாளப் புகழோ புகழெண்டு புகழுறாள். மொத்தமா நல்லவன் வல்லவன் எண்டு மனசார ஏற்றுக்கொண்ட பிறகுதான் அந்த நல்ல நேரம் வருமோ? அதான் உதய்ட விருப்பமு போலக் கிடக்கு. அப்பிடி நான் அவேக்கு என்ன கெட்டது செய்திட்டன்.” கசந்த குரலில் சொன்ன தங்கைக்கு, எப்படி விளக்கம் கொடுப்பது என்று தடுமாறினார், ராசன்.
“உங்களுக்கு ஒரு மகள் இருந்து, மாமியப் போல மனுசனப் பிரிஞ்சு வந்திருந்தா, இப்பிடித்தான் விட்டேற்றியா இருந்திருப்பீங்களா அங்கிள்? இதே, குமார் அங்கிள் ஒரு கெட்டவரா இருந்திருந்தா வேற கத!” அன்று, உதய் தன்னிடம் கேட்ட நினைவில் நின்றவருக்கோ, மிகவும் களைப்பாக இருந்தது.
‘இப்ப நான் என்ன சொன்னாலும் கேக்கிற மனநிலையில இவள் இல்ல!’ என்று நினைத்தவாறே, கெஞ்சுதலாக மனைவியைப் பார்த்தார். அதுவரை மௌனியாக நின்று நடப்பவற்றைப் பார்த்திருந்தார்,கோகிலா. இவ்வளவு பெரிய விசயத்தைக் கணவன் மறைத்தார் என்பது கோபத்தைத் தந்தாலும், இப்போதைக்கு மங்கையையும் மாமியாரையும் சமாதானம் செய்ய வேண்டுமே.
“இஞ்ச பார் மங்க, கோவத்திலயும் குழப்பத்திலயும் இருந்து கொண்டு, ஃபோனில ஒண்டும் கதைக்க வேணாமே! இதப்பற்றி விடியவிட்டுக் கதைப்பமே. போய்த் துங்கு, மாமி நீங்களும் தான்!” என்றவரை முறைத்த சரசு, “இதெல்லாம் ஆறப்போடுற விசயமில்ல கோகிலா!” சிடுசிடுத்தார்.
“அதான் அண்ணி, முதல் எனக்கு எப்பிடித் தூக்கம் வரும் சொல்லுங்க? நான் இப்பவே என்ர மகளோட கதைக்கோணும்.” பிடிவாதமாக நின்றார்.
“அப்பிடியா? அப்ப எடுத்து நல்லாக் கத. உன் புருசன் இவ்வளவு முக்கியமான பெரிய விசயத்த உன்னட்ட மறைச்சிட்டான் எண்டு விலாவாரியா எல்லாத்தையும் எடுத்துச் சொல்லு! அண்டைக்கு ஆனந்த் தாய் சொல்லுறதக் கேட்டு நடந்தான் எண்டு…” கோபமாக ஆரம்பித்த ராசனை, கண்ணீரோடு பார்த்தார், மங்கை.
“இல்ல அண்ணா, நீங்க சொல்லுறது பிழை. அவர் ஒண்டும் தாய்ட சொல்லுக் கேட்டு நடக்கேல்ல, என்ன விரும்புறன் எண்டு சொல்லிக்கட்டி ஏமாத்தினவர். நடிச்சவர். எல்லாம் என்னட்ட இருந்து கிடைக்கும் எண்டு நினைச்ச காசுக்காக.” ” இறுகிய குரலில் சொன்னார்.
“இங்க பார் மங்க, திரும்ப திரும்பச் சொன்னா அதே உண்மை எண்டு ஆகிருமா?” என்ற தமையனை, நம்ப முடியாது நோக்கினார், மங்கை. “என்ன அப்பிடிப் பாக்கிற? நான் கூட அவன் கலியாணம் செய்து மனிசி பிள்ளைகள் எண்டு மகிழ்ச்சியா இருப்பான் எண்டு எந்த நேரமும் மனசில சாபம் விட்டுக்கொண்டு இருந்தான் தெரியுமா?” என்றபோது, ராசன் விழிகள் கலங்கிப்போயின.
தமையனையே பார்த்துக்கொண்டு நின்றார், மங்கை. மனத்திலோ அப்படிக் கோபம்.
“ஆனா அவனோ, பெஞ்சாதியும் மகளும் ஊரில. பிரிஞ்சு இருக்கிறம் எண்டு ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறானாம்!” என்றார் தங்கையையே பார்த்துக்கொண்டு.
“ஆங்! என்னப் போல ஒரு ஏமாளி கிடைச்சிருக்க மாட்டாள். இல்லையோ, ஆருக்குத் தெரியும் அங்க என்ன நடக்குதெண்டு !” கோபத்தில் சீறிவிட்டார், மங்கை. தங்கையைக் கண்டிக்கும் வகையில் கை காட்டித் தடுத்தார், ராசன். “வருடக்கணக்கில உதய்ட குடும்பத்தோடு நெருங்கிப் பழகினமாம் மங்க. உன்ர மருமகனுக்கு அவேல சரியான மரியாத. ஆனால், நான் இப்ப சொல்ல வந்தது அவனப் பற்றி இல்ல. உன்ர மகளப் பற்றி!” சொல்லி நிறுத்தியவர், கோபத்தில் ஆட்கொண்டு தடுமாறி நிற்கும் தங்கையை உற்று நோக்கினார்.
“இவ்வளவு பெரிய விசயத்த என்னட்டச் சொல்லாமல் மறைச்சு இருக்கிறீங்களே எண்டு உதய்ட்டக் கோவப்பட மாட்டாளா உன்ர மகள்? அப்படிக் கோவப்பட்டு, உன்னைப் போலவே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவளும் இங்க வந்து நிற்பாள். நீ மனநிறைவவோட கூட்டிக்கொண்டு போய் மாந்தோப்பில இரு சரியோ! நான் அதக் கண்குளிரப் பார்த்திட்டுப் போய்ச் சேருறன்.” உறுமிய ராசன் மூச்சிரைக்க அப்படியே தளர்ந்தமர்ந்து விட்டார். கோகிலா, பயந்து நடுங்கி விட்டார்.
“என்னப்பா நீங்க, இப்ப நடவாத விசயத்தை எல்லாம் ஏன் கற்பன பண்ணுறீங்க? மகிழ் ஒண்டும் அந்தளவுக்கு முட்டாள் இல்ல!” கலங்கியவாறே, கணவரிடம் விரைந்தார்.
‘எடுத்தன் கவிழ்த்தன் எண்டு அவளும் இங்க வந்து நிற்பாள்!’ என்ற சொல்லில் ஆடிவிட்டனர், சரசுவும் மங்கையும்.
“என்னட்ட எதையும் நீங்க மறைக்கேல்லையே உதய்? கலியாணம் செய்தா எங்களுக்க ஒளிவு மறைவு எண்டு ஒண்டும் இருக்கக்கூடாது!” என்று, அன்றொருநாள் மகள் உதய்யிடம் கேட்ட நினைவில் உள்ளம் நடுங்கிய மங்கை, தளர்வுடன் தன்னறை நோக்கி நகர்ந்தார்.
அதிர்வுடன் நின்ற சரசுவும் அமைதியாகத் தன்னறைக்குள் நுழைந்துவிட்டார்.
‘இந்த விசயத்த உதய்ட இப்ப சொல்லோணுமே!’ என்று நினைத்துக்கொண்ட ராசன், மனைவி சொல்வதையும் மீறி, அவன் கைப்பேசிக்கு அழைத்தார்.

error: Alert: Content selection is disabled!!