நெஞ்சினில் நேச ராகமாய் 31 – 1

அத்தியாயம் 31

மதியம், வழமையைவிடவும் பிந்தியே வீடு வந்தான், உதய்.
“நேரம் போகுது சாப்பிடுங்க எண்டா, உங்களுக்காகக் காவல்!” என்று, மனைவியைப் பகிடி பண்ணிய தாயிடம் முறுவலித்தாலும், “நான்தான் வர நேரமாகும் எண்டனே மகிழ். சாப்பிட்டிருக்கலாமே. பாரும் ரெண்டு மணியாகப் போகுது!” என்றுகொண்டே, கரங்களைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான், உதய்.
“சரி சரி இருங்க.” என்று சொல்லி, மகன் மருமகளுக்கு உணவைப் பரிமாறினார், ரத்னா.அந்நேரம் தொலைபேசி கிணுகிணுத்தது. “எல்லாம் இருக்கு, வடிவா போட்டுச் சாப்பிடோணும் பிள்ளைகள்.” என்றுவிட்டுச் சென்று அழைப்பை ஏற்றார். அவர் சிநேகிதிதான் அழைத்திருந்தார்.
உதய்க்கு, மாலை அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லை. உணவை முடித்த கையோடு ஓய்வெடுக்கும் எண்ணத்தில் மாடியேறினான்.
“தம்பி, இஞ்ச ஒருக்கா வாங்க.” என்று நிறுத்திய ரத்னா, “இல்ல பரவாயில்ல. நீ அவனோடயே விவரமாகக் கதையன்.” என்று சிநேகிதியிடம் கூறிவிட்டு, “கீதா அன்ரி ஏதோ ப்ரொப்பட்டி வாங்கிற விசயமாக் கதைக்கோணுமாம்.” என்றவர், “சரி கீதா, கதைச்சிட்டு வையன் பிறகு கதைப்பம்.” என்றுவிட்டு, தொலைபேசியைக் கொடுக்க, வாங்கிக் கதைத்துக்கொண்டே தம் அறைக்குள் நுழைந்தவன், கைப்பேசி அழைக்கவே, “வன் மினிட் கீதா அன்ரி” என்று சொல்லிவிட்டு, எடுத்துப் பார்த்தான்.
ராசன் அழைத்துக்கொண்டிருந்தார். “ராசன் அங்கிள்.” என்று, அருகில் வந்த மனைவியிடம் சொன்னவன், “கதையும் மகிழ், கீதா அன்ரியோட கதைச்சிட்டு வாறன்.” என்று சொல்லி அழைப்பை ஏற்று, ஹலோ அங்கிள் என்றவன் மனைவியிடம் கைப்பேசியை கொடுத்துவிட்டு, கட்டிலில் சென்றமர்ந்து கீதாவோடு கதைக்கத் தொடங்கினான்.
‘அம்மாவோட கொஞ்ச நேரத்துக்கு முதல்தானே கதைச்சன். என்ன இந்த நேரத்தில மாமா இவருக்கு எடுக்கிறார்?’ மனத்தில் சிறுசஞ்சலத்துடன், ஹலோ என அவள் ஆரம்பிக்க முதல், “மங்கைக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுத் தம்பி!” என ஆரம்பித்து, வீட்டில் நடந்ததை ராசன் சொல்ல சொல்ல, இடியாக இறங்கிய தகவலில் வேரோடிப் போய் நின்றாள், மகிழ்.
மனைவியின் முகமாற்றத்தைக் கவனித்துக்கொண்டே அப்பெண்மணியோடு கதைத்து முடித்த உதய், “என்னவாம் மகிழ்! ஏன் ஒருமாதிரி நிற்கிறீர்?” அருகில் வர, மறுபுறம் அவன் குரலைக் கேட்ட ராசனோ பேச்சை நிறுத்தினார். ‘அப்ப, இவ்வளவு நேரமா நான் மகிழோடயா கதைச்சன்! கடவுளே! மங்கேட்ட அவ்வளவு சொல்லிட்டு, எல்லாத்தையும் நானே உளறிக்கொட்டிட்டனே.’ ஏற்கனவே மனத்தில் மிகவும் களைத்திருந்தவர், சிந்திக்கும் திறனைத் தொலைத்து நின்றார்.
தான் கேட்டதற்குப் பதில் சொல்லாது, கைப்பேசியைத் தந்துவிட்டு அறையை விட்டு வெளியேறிய மனைவியை யோசனையாகப் பார்த்தவாறே, “என்ன விசயம் அங்கிள்?” என்ற உதயிடம், எதையென்று சொல்வது? மௌனம் காத்தார், ராசன்.
“அங்கிள், லைனில் இருக்கிறீங்களா?” மீண்டும் கேட்டான் உதய். “நீங்கதானே தம்பி ஹலோ எண்டீங்க? உங்களோட கதைக்கத்தானே உங்கட ஃபோனுக்கு எடுத்தன். பச்…எல்லாம் போச்சு!” அரட்டியவர் நடந்ததைச் சொன்னார்.
‘அதான் அப்பிடிப் பாத்தாவா?’ என்று, மனத்தில் திடுக்கிடல் ஓடினாலும், “எண்டைக்கோ ஒருநாள் தெரியவர வேண்டிய விசயம் எண்டாலும், இவ்வளவு கெதியா நான் கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல அங்கிள்! உங்களுக்கு அனுப்ப எண்டு ஃபோட்டோ கழுவக் குடுத்திருந்தன். அதுக்க, இப்பிடி அனுப்புவா எண்டு நினைக்கேல்ல!” என்றவன், “மகிழ நான் பாத்துக் கொள்ளுறன், நீங்க யோசியாதீங்க அங்கிள். ஆனா, மாமிய…” சிறிதுநேரம் மௌனம் காத்தான்.
“நான் ஒருக்கா அவவோட கதைக்கவா அங்கிள்?”
“வேணாம் தம்பி வேணாம். அவள நான் பாத்துக் கொள்ளுறன். மகிழ எப்பிடியாவது சமாதானப்படுத்துங்க. அவ்வளவு கெதியா சமாதானம் ஆவாளா தெரியா தம்பி.” இயலாமையோடு சொன்னவர், “அண்டைக்குச் சொன்னதத்தான் இப்பவும் சொல்லுறன் தம்பி, அவள் தாய ஒருக்காலும் விட்டுக் குடுக்க மாட்டாள். அதேநேரம், தகப்பன் எண்ட ஆள யோசிக்கவும் மாட்டாள்.” என்றார் கவலையோடு.
என்ன பதில் சொல்வது? “ நான் அவவோட கதைக்கிறன் அங்கிள், நாளைக்கு எடுக்கிறன்.” என, அழைப்பைத் துண்டித்தான். அதே கையோடு மனைவியைத் தேடிச் சொல்லவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டான்.
மனைவி மௌனமாக அறையைவிட்டு வெளியேறினாலும், அவள் பார்வையிலிருந்த பாவங்களை நினைத்தவன், அவளை வருத்தாமல் எப்படிப் புரியவைக்கப் போகிறேன்! நான் சொல்வதில் உள்ள நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்பாளா என்று, பெரிதும் கலங்கினான். எவ்வளவு நேரத்திற்கு அப்படியே இருப்பது? வருவித்த அமைதியோடு கீழே சென்றவன், மனைவி அங்கே இல்லையென்றதும், அழைத்துப் பார்த்தான்.
“ஏன் தம்பி இப்பிடிக் கத்திறீங்க? அங்க பாட்டி நித்திர கொள்ளுறா.” என்றவாறே, மாடியிலிருந்து வந்த ரத்னா, மகன் முகத்தைப் பார்த்துவிட்டு, “என்ன தம்பி, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று கேட்டார்.
“மாமிக்கும் மகிழுக்கும் எல்லாம் தெரிஞ்சிட்டு அம்மா.” என்று மகன் சொன்னதும் அவர் முகத்தில் யோசனை.
“சரி தம்பி, இனி என்ன செய்யிறது? முதல் இது எண்டைக்கோ தெரியவர வேண்டியதுதானே!” என்றவர், “மகிழ் விளங்கிக் கொள்ளுவா. இந்த ஆறு மாசங்களா குமாரை அவவும் பாத்திருக்கிறா. பழகி இருக்கிறா. அவர் கெட்டவர் இல்ல எண்டு தெரிஞ்சிருக்கும் தானே. இப்பிடிப் பழகி, கொஞ்சம் சரி அவரப்பற்றி விளங்கிக் கொள்ளட்டும் எண்டுதானே நாங்களும் இவ்வளவுக்குப் பொறுத்தனாங்க.” என்றார், நம்பிக்கையோடு.
“அப்பிபடித்தானம்மா நானும் நினைச்சன். ஆனா, மகிழக் கண்டீங்களா? ஃபோன என்னட்டத் தந்திட்டுகி கீழ வந்தாவே!”
“ஓ! நான் அறைக்க இருந்தனான்!” என்ற ரத்னா, “எங்க போயிருப்பா? பேஸ்மண்டில் இருக்கிறாவோ?” என்றவர், “மகிழ்..” என்று,கூப்பிட்டுக்கொண்டே கீழே சென்று பார்த்துவிட்டு வந்தார்.
“அங்க இல்லையே தம்பி, மேல தான் இருப்பாவோ. எதுக்கும் இன்னொருக்காச் சத்தமாக் கூப்பிட்டுப் பார்.” என்றுவிட்டு நகர்ந்தார்
“இல்லம்மா, மேலே இல்ல. நான் அறைக்க இருந்துதான் வந்தனான். முதல், கூப்பிட கூப்பிட, அதும் நீங்க கூப்பிட இப்பிடி அமைதியா இருக்க மாட்டா எல்லா? வெளிய போய்ட்டாவோ!” என்றவனுள் பதற்றம்.
****
ஃப்ரெண்ட் குடும்பம் என, தாலி கட்டிய கையோடு, சடங்குகளின் நடுவில் வந்த அழைப்பை ஏற்று மலர்வோடு கதைத்துவிட்டுத் தந்ததிலிருந்து, குணா குடும்பத்தினருடனான ஒவ்வொரு சந்திப்புகளும், ஒருவித பிடிவாதத்துடன் நினைவில் வலம் வர, நம்ப இயலாத வியப்பை மீறிய கோபமும், ஆத்திரமும், சினமும் இதயத்தைக் கவ்வ, உடலும் மனமும் ஒருங்கே எஃகுவாகிப் போனது மகிழுக்கு.
குடும்பமாக விமான நிலையத்திற்கு வந்ததும், அப்போது அவர்கள் பார்த்த பார்வைகளும் நினைவில் பளிச்சிட, ‘புதுசா வந்தவள் எண்ட ஆர்வமெண்டு நினச்சனே’ என எண்ணியவள், “அப்பவும் இந்தச் சாரதா அன்ரி …” என்று முணுமுணுத்துவிட்டு, ‘ச்சே…அந்த மனிசி என்னக் கட்டிக்கொண்டு உருகினது ஏனெண்டு நான் நினைக்கேல்லையா என்ன?’ என நினைத்ததும், “ என்ர வாழ்க்கையில ஒருக்காக் கூட சந்திக்கக் கூடாது எண்டு நினைச்ச சனம் அவே.” பற்களை நறநறத்துக் கொண்டவளுக்கு அவர்கள்பால் வெறுப்பே உருவாக்கியது.
‘கடைசி ஆளா வந்து, என்னையே பாத்துக்கொண்டு என் தலையத் தடவினாரே…அந்தாள்! அப்ப அவர்ட கை தந்த அழுத்தத்தில நான் திடுக்கிட்டுப் பார்க்க, “உன்ர வயசில எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்ட நினைவு வந்திட்டு எண்டாரே!’ உள்ளக் குமுறலைத் தொடர்ந்து, “எவ்வளவு நெஞ்சழுத்தம்!” என்ற வார்த்தைகள் கடினத்துடன் வந்தன.
‘முதல் முதல் விருந்து எண்டு, அவேட வீட்டுக்குப் போவம் எண்டதில தொடங்கி, ஒவ்வொரு முறையும் அவேயையும் சேர்த்து சேர்த்து, என்னை அந்தச் சனத்தோட பழக விட்டினமோ?’ நினைத்தவளுக்கு, கணவன் குடும்பத்தினரில் சுறுசுறுவென்று ஆத்திரம் சுரந்தது.
“உதய்….எப்பிடி உதய்!” முணுமுணுத்தவளில் அவ்வளவு வேதனை. அவள் இங்கு வந்து ஆறு மாதங்களாச்சே! இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்து எப்படி அவனால் பழக முடிந்தது? அதுவும் மொத்தக் குடும்பமும்! கொஞ்சம் கூடவா உறுத்தவில்லை! தயக்கமோ தவிப்போ வரவில்லை! அவளை அவ்வளவு ஏமாளி என்று நினைத்து விட்டார்களா?

error: Alert: Content selection is disabled!!