நெஞ்சினில் நேச ராகமாய் 31 – 2

தன்னைவிடக் கொடுத்து வைத்தவள் யாருமேயில்லை என உயரத்தில் மிதந்து கொண்டிருந்தவள், அலறிப் பிடித்துக்கொண்டு சர்ரென்று கீழே விழுந்து நொறுங்கிப் போனாள். இங்கு வந்ததிலிருந்து, சிறுசிறு வெளிவேலைகளுக்கும், ‘நான் இண்டு லீவு. எனக்கு வேலை இல்ல.’ என்று சொல்லி சொல்லியே குமார் உதவியதெல்லாம் நினைவில் வர வர, அவள் உடல் இறுகிப் போனது.
உயிரொன்று உருவாகக் காரணமான மனிதன், இத்தனை வருடங்களாக, அக்குழந்தையும் அதன் தாயும் என்னானார்கள் என்று பார்க்கத் துணியவில்லையாம்! இப்போது எங்கிருந்தோ பாசம் வந்து கொட்டோ கொட்டென்று கொட்டுதாம்! அப்படியிருக்க, அம்மனிதனை, அவள் தகப்பனாக நினைவில் கொள்ளக் கூட முடியவில்லையே.
“என்ர அண்ணி குழந்தையோட பிரிஞ்சு போயிட்டா மகிழ். சின்னப் பிரச்சினைதான், அண்ணியால அத மறக்க முடியேல்ல. அண்ணா பெரும் பாவம்!” என்றும், “அண்ணா எத்தனையோ தடவ அண்ணியோட சேர முயன்றவர்.பச்! அண்ணி அசைஞ்சு குடுக்கவே இல்ல. அவர் பிடிவாதம் அவருக்கு!” என்றும், “எனக்கும் அக்காக்களுக்குமாகவே வாழுறார் அண்ணா! அவருக்கு ஒரு நல்லது நடக்காதா எண்டு நாங்க ஒவ்வொரு நிமிசமும் ஏங்கிக்கொண்டு இருக்கிறம்.”
இப்படியெல்லாம், ஒவ்வொருதடவைகள் சந்திக்கையிலும் மாறி மாறிச் சாரதா புலம்புவதெல்லாம் அவள் நினைவலைகளில் புரள, “பாவம் குமார் அங்கிள், சரியான நல்லவர். அவர்ட வைஃப் அவரப் புரிஞ்சு கொள்ளேல்லையே! அவர்ட மகளுக்கு இப்பிடியொரு அப்பாவோட வாழக் குடுத்து வைக்கேல்லையே!’ என்று எல்லாம் தான் நினைத்ததும் நினைவில் பளிச்சிட, உள்ளத்தில் பிரவாகமாக எழுந்த உணர்வுகளில் சிக்கி மூச்சு முட்டிப் போனாள், மகிழ்.
‘இவரக் கலியாணம் செஞ்சு நான் இங்க வந்ததால தானே என்னக் கண்டவே ! இல்லையோ?’ சினத்தோடு கேள்வி கேட்டது அவள் மனம்.
“ஒருநாள், ஒருமுற என்னப் பார்க்க இவே ஆருமே வந்ததா எனக்கு நினைவு இல்லையே. இதுக்க, சின்னப் பிரச்சினையாம். என்ர அம்மாக்குப் பிடிவாதமுமாம்.” உள்ளக்குமுறலோடு போட்டியிட்டு வெறுப்புடன் முனகிய அவளிதழில் ஏளன முறுவல். இன்றைய நிலையில், அந்த மனிதனை, அவர் மனைவியே மன்னித்து மறந்தாலும், பெற்ற குழந்தையை இத்தனை வருடங்களாகப் புறக்கணித்த செயலை, எந்தக் குழந்தையாலும் மன்னிக்க முடியுமா? பெற்ற மகள் வாங்கிய ஓடுகாலி மகள் என்ற பெயரைத்தான் மாற்ற முடியுமா?
அவளைப் பொறுத்தவரை, தாய் தந்தை இருவருமே மங்கை தான். அதில், அவள் வாழும் காலம் முழுமைக்கும் மாற்றமில்லை என்று, அவள் நெஞ்சம் உறுதியாக நினைத்துக் கொண்டதும், “இந்த அம்மா எப்பிடி என்னில சந்தேகப்படலாம்? அந்தாளோட சேர்ந்துகொண்டு தன்ன ஒதுக்கிருவன் எண்டு பயப்படுறா எண்டா என்ன அர்த்தம்? அவ்வளவுதான் என்னைத் தெரியுமா அவருக்கு?” என்று, அவள் அதரங்கள் முணுமுணுக்க, கோபச் சிவப்பேறிய நயனங்களோ, அருகிலிருந்த கடிகாரத்தில் பதிந்து நிலைத்தன.
“விடியட்டும். இண்டைக்கு இருக்கு அம்மாவுக்கு!” சொல்லிக் கொண்டவளுக்கு, இதுவரை சொர்க்கமாகத் தெரிந்த இவ்வில்லம் நெஞ்சடைக்கும் இருள்க் குகையாகக் காட்சி தந்தது. ‘அம்மாவ இப்பவே பாக்கோணும்.’ என்று உள்ளத்தில் துடித்தவளை, மிக அருகில் கேட்ட பர்வதத்தின் பேச்சுக்குரல், அதை நோக்கிச் செவிசாய்க்க வைத்தது.
“என்ன ரத்னா என்ன பிரச்சின? ஏன் கீழயும் மேலயும் ஃபோனும் கையுமாப் பதறிக்கொண்டு திரியிறீங்க?” அப்போதுதான் பகல் நித்திரையால் எழுந்தவர் வினவிக்கொண்டே வெளியில் வந்தார்.
“அது வந்து மாமி…”
“என்ன நசுங்கல்? ம்ம்ம் என்ன நடந்திட்டு? பிரச்சினை எதுவுமோ?” பர்வதத்தின் குரலில் இலேசான பதற்றம்.
“இல்ல மாமி…மகிழ எங்க எண்டு காணேல்ல. அதான் உதய் தேடிப் போயிருக்கிறார்!”
“என்ன? மகிழக் காணேல்லையா? என்னம்மா சொல்றீங்க? எங்கே போனா? சொல்லாமல் கொள்ளாமல் அசையமாட்டாவே!” என்றவர், மருமகளைக் கூர்மையாக ஆராய்ந்தார்.
“என்ன பிரச்சனை ரத்னா?” கண்டிப்பாகக் கேட்ட மாமியைத் தடுமாற்றத்துடன் நோக்கினார், ரத்னா.
“மாமி, உங்களிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டம். எங்களுக்குத் தெரிஞ்சோன்ன சொல்வோம் எண்டு வர, உங்கட பேரன் உதய்தான், மகிழுக்குத் தெரியேக்க பாட்டிக்கும் தெரியட்டும் எண்டவர். இல்லாட்டி நீங்க சொல்லிப் போட்டிருவீங்க எண்டுதான்…!” என்றவர், தவிப்பாக மாமியைப் பார்த்தார்.
கேட்டுநின்ற பர்வதத்தின் முகமோ, சுருங்கிப் போனது! “அதான் உங்கட மகனுக்குக் கலியாணம் பேசத் தொடங்கியதில இருந்து, என்ன ஒதுக்கத் தொடங்கியாச்சே! சரி பரவாயில்லை சொல்லுங்க, அப்பிடி என்ன சிதம்பர ரகசியத்த மறைச்சீங்க? முதல் ஏன்?
“இல்ல மாமி…அது வந்து…”
“சொல்லம்மா, என்ன நடந்தது?”
“இல்ல… மகிழிட அப்பா ஆர் எண்டா …”
“அதான் தெரியுமே! ராசன்ட தோட்டத்தில லொறி ஓட்டினவனத் தானே மங்கை இழுத்துக்கொண்டு ஓடினா.” என்றார் நக்கலாக.
அவர்கள் வீட்டிலுள்ள நான்கு அறைகளில் ஒன்றை அலுவலக அறையாகப் பாவித்து வந்தனர். அவ்வறையினுள் கொந்தளித்துக்கொண்டு அமர்ந்திருந்த மகிழ், கணவனினதும் மாமியாரினதும் அழைப்புக் கேட்டும் அவர்கள் மீதிருந்த ஆத்திரத்தின் காரணமாகப் பதில் சொல்ல முனையவில்லை. அவர்களும், எப்போதும் மூடியே இருக்கும் அறை அப்படியே இருந்ததில், அங்கே இவள் இருப்பாளென்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை தன்னுள் உழன்று கொந்தளித்துப் போயிருந்தவளை, பர்வதத்தின் பேச்சு இன்னும் இன்னும் கொந்தளிக்க வைத்தது. அதுவும், தாயைப் பற்றி பேசுகையில் அவர் குரலில் ஒட்டியிருந்த ஏளனம், இவள் நெஞ்சில் சுருக்கென்று குத்த, இருந்த இடத்திலிருந்து எழுந்தாள்.
“மாமி, அது வேற ஆரும் இல்ல. அவர் அவர்… எங்கட குமார் தான்!” ரத்னா சொல்லிவிட்டார்.
“என்ன? எங்கட குமார் எண்டா ஆர் சாரதாட அண்ணன்காரனா?” கேட்ட பர்வதத்தின் விழிகள் வெளியில் தெறித்து விடுமளவிற்கு விரிந்திருந்தன.
ஆமென்று தலையாட்டிய மருமகளையே பார்த்திருந்தவர், “இது எப்பிடி, எப்ப உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டவருக்கு, நடந்ததைச் சொன்னார், ரத்னா.
“கலியாணத்தில குழப்பம் ஒண்டும் வந்திரக் கூடாதே எண்டு தனக்குத் தெரிஞ்சத உதய் எங்களிட்ட மறைச்சிட்டார், மாமி. கலியாணம் முடிஞ்சு நாங்க இஞ்ச வந்த பிறகுதான் சொன்னவர். மகிழ் இஞ்ச வந்து சேருற வரைக்கும் ராசனிட்டக் கூடச் சொல்ல வேணாம் எண்டதும் அவர்தான்.” என்றவர்,
“எங்களுக்குத்தான் நிறைய வருசங்களா குமாரத் தெரியுமே! மங்கையும் பாவம்தானே. அதால அதால, உதய் சேர்த்து வைக்கலாம் எண்டு நினைச்சார். ஏதோ, அண்டைக்குப் பிரிஞ்சிட்டினம். ஆனாப் பாருங்க, ரெண்டு பேருமே இன்னும் தனியத்தான் இருக்கினம். அதிலும் மங்கைக்கு எண்டாலும் துணைக்கு மகள் இருக்கிறா. அரவணைக்க அண்ணா இருக்கிறார். குமார யோசிச்சுப் பாருங்க. வெளிநாட்டில இத்தின வருசங்களா இருக்கிறார்! அவருக்கெண்டு நல்ல பெயர் இருக்கல்லவா மாமி? அப்பிடி இருந்தும் இன்னொரு குடும்பத்த அமைச்சுக்கொள்ளாமல் தனியத்தானே இருக்கிறார். அதைத்தான் உதய் சொன்னவர். அவேயள எப்பாடுபட்டாவது சேர்த்து வைக்கோணும் எண்டவர்.” சொல்லி முடித்து, பதில் சொல்லாத மாமியாரை, இன்னமும் சங்கடம் மறையாது பார்த்த ரத்னா,
“இந்த வேலை வேணாம் எண்டுதான் உங்கட மகன் சொன்னவர். அவரோ, மகிழிட அம்மா எனக்கும் அம்மாதானே, சேர்த்து வைக்காமல் விடப்போறதில்ல எண்டிட்டார், இந்த முறை மகிழக் கூட்டிக்கொண்டு வரப்போன நேரம்தான் ராசன் அண்ணாட்டையும் சொல்லி இருக்கிறார்.”
“அதுமட்டுமில்ல மாமி, ராசன் அண்ணாவோட சண்டையும் போட்டிருக்கிறார். உங்கட மகள் இப்பிடிக் கோவிச்சிட்டு வந்திருந்தா, சேத்து வைக்காமல் பாத்துக்கொண்டா இருப்பீங்க எண்டு கேட்டிட்டாராம். ராசன் அண்ணா சொல்லிக் கவலைப்பட்டவர். இப்ப அவரும் ஓம் எண்டுதான் எல்லாம் நடக்குது. ”
“இப்ப, மகிழ் ஒரு ஃபோட்டோவ தாய்க்கு அனுப்ப, குமார் அண்ணா ஆரெண்டு மங்கைக்குத் தெரிஞ்சு, மகிழுக்கும் தெரிஞ்சிட்டு. அதில இருந்து மகிழ இஞ்ச காணேல்ல மாமி!” தவிப்போடு சொன்ன மருமகளைச் சிறிது நேரம் அமைதியாகப் பார்த்து நின்றார், பர்வதம்.

error: Alert: Content selection is disabled!!