நெஞ்சினில் நேச ராகமாய் 5 – 1

அத்தியாயம் 5
முதல் நாள் ஆனந்தின் தாய் கூறியதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை, மங்கைக்கு. அதுவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். காலையில் கணவன் வேலை தேடுவதற்காகப் புறப்பட்டுச் செல்ல, மைத்துனிமார் பள்ளி சென்றதும், மாமியோடு பளை நோக்கிப் புறப்பட்டு விட்டாள்.

ஒரு வேகத்தில் புறப்பட்டு வந்திருந்தாலும், வீடு நெருங்க நெருங்க கால்களோ நகர மறுத்து அடம்பிடித்தன! நா வறண்டு, நெஞ்சுலர்ந்து போனது. அதையும் மீறி, முன் வாயிலருகில் வந்து நின்றவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. தன்முன் நிமிர்ந்து நிற்கும் மாளிகையின் இளவரசியாக, தான் வலம் வந்த நாட்களின் நினைவில் கண்ணீர் வழிய சில நிமிடங்கள் நின்றவள், மறுகணம் கண்ணைத் துடைத்துக்கொண்டு, “வாங்க மாமி…” விறைப்பாகவே உள்ளே நுழைந்தாள்.
ஆனந்தின் அன்னையோ, மருமகளில் கொண்ட நம்பிக்கையில் நிமிர்வாகவே அவளோடு இணைந்து நடந்தார்.
எப்போதுமே அவர்கள் வீடு அமைதியாகத்தான் இருக்கும். அதுவும், தமையன் இந்நேரம் வீட்டிலிருக்க வாய்ப்பில்லை என்பதுவும் அவள் அறிந்ததே. “அண்ணியும் அம்மாவும்தான் இருப்பினம்.” முணுமுணுத்தவாறே, மூடியிருந்த வாசல் கதவைத் தட்டுவதற்காகக் கையை உயர்த்த, கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள், அண்ணி கோகிலா.
மறுகணமோ, “ம..ங்..கை நீரா!” அதிர்ந்து நின்றாள், கோகிலா. நொடிதான், உள்ளே திரும்பிப் பார்த்துக்கொண்டே வெளியில் வந்து கதவை மூடிவிட்டு மங்கையிடம் திரும்பினாள். அவளோ, முகம் கன்ற நின்றாள். உள்ளே செல்லாதே என்று சொல்லாமல் சொல்லிவிட்டாரே! தமையன் மனைவியை முறைப்போடு பார்த்தாள்.
கோகிலாவின் செய்கையில் சுறுசுறுவென்று கோபமேற, உறுத்துவிழித்தார், ஆனந்தின் அன்னை. “ஆர் மங்கை இவா?” என, எடுவல் குரலில் வினவிய பெண்மணியை அறிமுகமின்றியே இனம் கண்டுகொண்டாள், கோகிலா. கடினப்பட்ட முகத்தோடு மைத்துனியைப் பார்த்தவள், “எப்பிடி மங்கை இப்பிடி ஒரு வேலை செய்தீர்?” கோபமாகத் தொடங்கியவளுக்கு, குரல் கமறியது.
“நீர் போன பிறகு மாமி……” என்று தொடர்ந்தவளை, “அண்ணி!” மங்கையின் ஒட்டாத குரல் அதட்டலோடு இடைவெட்டியது. “அம்மா எங்க? அவவோட கொஞ்சம் கதைக்கோணும். அண்ணாவோடயும்தான்!” மைத்துனியின் குரலிலிருந்த ஒதுக்கத்தில் விக்கித்துப் போனாள், கோகிலா.
‘அண்ணி அண்ணி எண்டு முன்னும் பின்னும் திரிஞ்சவவா இவா! அம்மா எப்பிடி இருக்கிறா எண்டு ஒத்த வார்த்தை கேட்க நினைக்கேல்ல. சந்துருவோட ஒட்டிக்கொண்டு திரிவாவே, நித்திரைக்குக் கூட அத்த வேணும் எண்டு அழுகிறவனை ஒரு வார்த்த கேக்கேல்ல!’ மைத்துனியை ஆராய்ந்தவள் மனத்துள் எண்ணங்கள் வலம் வந்தன. ‘இவா வந்திருக்கிறதப் பாத்தா…ம்ம்…அதும் இந்த மனிசி பாக்கிற பார்வையே சரியில்லை. என்னவா இருக்கும்?’ எண்ணமிட்டவாறே, “மாமிக்குக் கொஞ்சம் சுகமில்ல மங்கை. படுத்திருக்கிறா. இப்பச் சந்திக்கேலாது!” என்றவள் குரல் தீர்மானத்துடன் வர, மங்கையை முந்திக்கொண்டு சீறினார், ஆனந்தின் அன்னை.
“இஞ்ச பாருங்கம்மா, அத்தூரமிருந்து வந்தது உங்களோட நிண்டு மல்லுகட்டிப்போட்டுப் போக இல்ல. முதல் வழிய விடுங்க!” என்றவர், “உங்கட வீட்டுக்க உள்ளிட ஆரும் அனுமதி தரோணுமா மங்கை?” குரலை உயர்த்த, கதவைத் திறந்துகொண்டு வெளிப்பட்டான், ராசன்.
மங்கையோ, அவள் மாமியாரோ அவனை அங்கு துளியும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில், நான்கடி பின்னால் நகர்ந்து, முற்றத்தில் இறங்கி நின்றுகொண்டார், ஆனந்தின் அன்னை.
கலைந்த சிகை. நகைப்பில் பளபளக்கும் நயனங்களில் சோர்வுப் போர்வை. ஒருதரம் அணிந்த ஆடையை மறுதரம் அணியவே மாதங்கள் பிடிக்கும். சில சமயங்கள் உபயோகிப்பதே இல்லை. அப்படிப்பட்டவள், இன்றோ, தோய்த்து வெளிறிச் சுருங்கிய ஆடையும் வாடிய வதனமுமாக, மூன்று கிழமைகளில் ஆளேமாறி நின்றவளை மேலிருந்து கீழாக அளந்தான், ராசன். அவன் மன ஆழத்திலிருந்து தங்கை மீதிருந்த பாசம் குபீரென்று எழுந்தது. கூடவே, அதை அடக்கியாளும் வகையில் சேர்ந்தெழுந்தது ஆத்திரமும் கோபமும். அவன் முகமோ, மனத்துள் எழுந்த உணர்வுகள் ஒன்றை ஒன்று முட்டி மோதிக்கொள்வதைத் துல்லியமாகப் பிரதிபலித்தது.
“ அண்டைக்கு பொலிஸ் ஸ்டேசனில் வச்சு அவ்வளவு திமிராக் கதச்ச நீ இப்ப என்ன அலுவலுக்கு இங்க வந்தனி?” என்றவன் குரலில், நேசத்தின் வாசம் மருந்துக்கும் இல்லை. கடினத்தின் ஆக்கிரமிப்பு கசப்புடன் வெளிப்பட்டது. அதையுணர்ந்த மங்கையின் இதயத்தில் மிகையான வலி!
“கலியாணம் செய்த பிறகும் அண்ணி உங்களோடவே இருக்கேக்கக் கூட உன்னில இவ்வளவு அன்பா இருக்கிறாரே! எங்களுக்கு இப்பிடி ஒரு அண்ணன் இல்லையே!” என்று, நண்பிகள் ஏக்கத்துடன் சொல்வது அவள் நினைவில் பளிச்சிட்டது.
“அண்ணா!” ஆரம்பித்தவளைக் கைநீட்டித் தடுத்தான், ராசன்.“வேணாம், அந்தச் சொல்ல இன்னொருதரம் உன்ர வாயால சொல்லாத! அதைக் கேட்டுக்கொண்டு நிற்க நான் ஒண்டும் மறை கழண்ட முட்டாள் இல்ல!” வார்த்தைகள் ஊசியாகக் குத்தினாலும் சுர்ரென்று கோபம்தான் ஏறியது, மங்கைக்கு.
“ஓ அப்பிடியா? சரி, இனிச் சொல்லேல்ல. என்னை வீட்டுக்க கூட விட மாட்டீங்களா? இதில நிண்டுதான் கதைக்கோணுமா? ” கேட்டவள், குரல் தழுதழுத்திட்டு. ‘மாமிக்கு முன்னால வச்சு என்ன இப்பிடி நடத்தினா, அவர் எப்பிடி மதிப்பார்?’ அவள் மனதில் இவ்வெண்ணமும் தோன்றியது.
“இங்கபார், எங்கள வேணாமெண்டு முடிவெடுத்து எண்டைக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போனியோ, எங்களத் தலைகுனிய வச்சியோ, குடும்ப மான அவமானம், கௌரவத்தைத் துச்சமாக நினைச்சியோ அதோட எல்லாம் முடிஞ்சிட்டு! ” இறுகிய குரலில் சொன்ன ராசன், அதிர்வுடன் பார்த்திருக்கும் மனைவியின் புறம் திரும்பி, “உள்ளே போங்க கோகி!” என்றான் கட்டளையாக.
அவளோ, தயங்கி நின்றாள். தமையன் கோபப்பட, அதை ஆமோதிக்கும் வகையில் மௌனமாக நிற்கும் அண்ணியைப் பார்க்கையில், மங்கையின் மனத்தில் வெறுப்பும் கோபமும் தான் எழுந்தது.
“அப்பிடியா? அப்ப நான் வந்த காரணத்தச் சொல்லிருறன். ஒரேயடியாப் பேசித் தீர்த்து இனிமேல் ஒரு தொடர்பும் இல்ல எண்டு முடிச்சிருவம்.” கணீரென்று உரைத்தவள், ராசனின் நம்பாத பார்வையை அசட்டையுடன் எதிர்கொண்டவாறே, ஆனந்தின் அன்னையை ஒருதரம் திரும்பிப் பார்த்தாள்.
“நம்மட்ட இருக்கிற சொத்தில எனக்கும் எல்லா உரிமையும் இருக்குது தானே?” ஆரம்பித்தவள், ராசன் , கோகிலா அதிர்ந்து போனதை அலட்சியம் செய்துவிட்டுத் தொடர்ந்தாள். “என்ர பங்கப் பிரிச்சுத் தாங்க!” உதடுகள் நடுங்கக் கேட்டவளை, நம்பமுடியாது பார்த்தான் ராசன்.
“அவருக்கு வேலையில்ல. வீட்டிட நிலை சரியான திண்டாட்டமா இருக்கு.” மனத்தில் தமையன் மீது கடுங்கோபம் வந்தது. ஆனந்த் வீட்டின் இல்லாநிலை தெரியாதவரா அவர். இப்படி வாய்விட்டுச் சொல்லவேண்டி இருக்கிறதே. கேட்காதே தரவேண்டாமா என்றளவுக்கு அவள் எண்ணம் போயிற்று.
அவள் வார்த்தைகளில் அதிர்ந்து நின்ற ராசனோ, கணத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு பெரிதாக நகைக்கத் தொடங்கினான்.
“ஹா..ஹா…என்ன வேலை இல்லையா?” நகைப்பின் ஊடே வியந்தான். “அப்ப, நான் சொன்னமாதிரி உன்ர சொத்துப் பத்துக்காகத்தான் லவ் பண்ணியிருக்கிறான் எண்டுறத ஏற்றுக் கொள்ளுற தானே?” வாளின் கூர்மையோடு வார்த்தைகள் வெளிவந்தன.
“இவர்..” தள்ளி நின்ற ஆனந்தின் தாயாரைச் சுட்டிக் காட்டினான், ராசன். “உன் மூலம் வாற சொத்துக்காகவே உங்கட கலியாணத்துக்குச் சம்மதிச்சவர். எனக்கு நம்பிக்கையானவே சொன்னவே. நீ மட்டும் காசில்லாத வீட்டுப் பிள்ளையா இருந்திருந்தா அவன் விரும்பியிருப்பானா எண்டது வேற கதை. சர்வ நிச்சயமா இவா கலியாணம் செய்ய விட்டிருக்க மாட்டா. ” ஆணித்தரமாக வந்தது ராசனின் குரல்.
“நீ சொத்துக் கேட்டு எப்ப வருவ எண்டு எதிர்பார்த்துக்கொண்டே இருந்தன் தெரியுமா?” ராசன் சொன்ன விதத்தில் அப்பட்டமான ஏளனம் தெரிந்தது.
“சொத்தக் கேட்டு வாங்கிட்டு வா எண்டு அனுப்பினவனா அந்த ராஸ்கல்? அதும் வேலையில்லை எண்டு காரணம் காட்டி! என்னை என்ன உன்னப் போல மடச்சாம்பிராணி எண்டு நினைச்சுக் கொண்டானா?” கேட்டவாறே, இகழ்ச்சிப் பார்வையுடன் ஆனந்தின் தாயாரை நோக்கி நகர, “இப்ப ஆரை ராஸ்கல் எண்டுறீங்க? இங்க பாருங்க, என்ர மனுசன மரியாதையில்லாமல் கதைக்கிற வேலை வச்சுக்கொள்ள வேணாம். பிறகு உங்களுக்கும் மரியாதை கிடைக்காது.” குரலை உயர்த்தினாள், மங்கை.
“மங்க! அண்ணாவப் பாத்து என்ன கதை கதைக்கிற?” அதிர்வோடு ஊடே புகுந்தாள், கோகிலா.
“இஞ்ச பாருங்க, இதில நீங்க தலையிட வேணாம். இதில கதைக்கிறதுக்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல. உங்கட வேலையைப் பார்த்திட்டுப் போங்க! அல்லது இவ்வளவு நேரமாக நிண்டது போல அமைதியா நில்லுங்க!” அண்ணியிடமும் சீறினாள்.
‘சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனிதருள் உள்ள இன்னொரு முகத்தை அழகாக வெளியே இழுத்து வந்திடுமோ!’ அதிர்வுடன் எண்ணிக்கொண்டே, சுவரோடு சுவராக ஒடுங்கி நின்றாள், கோகிலா.

error: Alert: Content selection is disabled!!