அத்தியாயம் 8.
கணவனின் சேட்டைகளில் மாமியையும் அரிசி மாவையும் மறந்தாள், மங்கை. “அய்யோ…விடுங்க ஆனந்த். போங்க, போய்க் கைகால் அலம்பீட்டு வாங்க, தேத்தண்ணி போடுறன்!” என்று அவள் வாய் தான் சொன்னது.
அசையாது தன்னோடு ஒன்றி நிற்பவளை நக்கலாகப் பார்த்தான், ஆனந்த். “விடு..விடு எண்டு சொல்லுறவா அசையிற நினைப்பே இல்லாமல் ஒட்டிக்கொண்டு நிண்டா, நானும் தான் என்ன செய்யிறதப்பா?” உல்லாசச் சிரிப்போடு மனைவியை அணைத்துக்கொண்டவனில், பல நாட்களின்பின் காதல் கணவனைக் கண்டாள், மங்கை.
சிறிது நேரத்தின்பின் அவளைத் தானாகவே விடுவித்தவன், “ம்ம்…தேத்தண்ணி போடு, கைகால் அலம்பிவிட்டு வாறன்.” அவள் மூக்கு நுனியைப் பிடித்து ஆட்டியவாறே சொல்ல, இதுவரை இருந்த மயக்கம் நீங்கி பதற்றமானாள், அவன் மனைவி.
“அச்சோ! மாமி வரப்போறாவே …” சமையலறை நோக்கி ஓடியவள் தேநீரோடு வெளியில் வரவும், ஆனந்தின் அன்னை படலையைத் திறந்து உள்ளிடவும் சரியாக இருந்தது.
அரிசி இடிக்க வெளிக்கிட்ட இடமிருந்த கோலத்தைப் பார்த்தவருள், கோபமும் அதை மீறிய எரிச்சலும் எழுந்தது. “பாக்க ஆள் வடிவா இருந்தா மட்டும் காணுமா? ஒரு வேல செய்யத் துப்பில்ல. நல்ல பொம்பளையாய்ப் பிடிச்சிருக்கிறான்.” வாய்விட்டே சொன்னவர், அப்போதுதான் அங்கு ஓரமாக நிறுத்தியிருந்த மகனின் சைக்கிளைக் கண்டார்.
‘ஆனந்த் வந்திட்டானா! என்ன இண்டைக்கு நேரத்தோட வந்திருக்கிறான்!’ என்று எண்ணியவர், ‘புருசனக் கண்டோன்ன மா இடிக்கிறத மறந்திருப்பாளே!’ எரிச்சலோடு மருமகளை அர்ச்சித்துக்கொண்டு வர, முகத்தைத் துடைத்தவாறே மிக்க மலர்வுடன் வெளிப்பட்டான், ஆனந்த். அவன் பின்னால், அதே மலர்வோடு வந்தாள், மங்கை.
எரிச்சலும் கோபமுமாக இருந்தது , ஆனந்தின் அன்னைக்கு. “என்ன தம்பி, நல்ல மகிழ்ச்சியா இருக்கிற? நேரத்தோட வேற வந்திருக்கிற. வேலை ஏதாவது கிடைச்சுதா?” மருமகளைப் பார்த்தபடி கேட்டவர் குரலில் குத்தல் இருந்தது.
“என்ன மங்கை, மா இடிக்கச் சொன்னன் எண்டதை மறந்திட்டிங்க போல. மனிசன் படுற பாட்டுக்கு உரலச் சுத்தி இவ்வளவக் கொட்டி வச்சிருக்கிறீங்க? இங்க நீங்க வேலை பழகி பொறுப்பா நடக்க முன்ன எனக்கு முழி பிதுங்கிரும்!” வெளிப்படையான கோபம் அவர் குரலில். “இதே என்ர மகளிட்டச் சொல்லியிருக்க, இவ்வளவு நேரத்துக்கு ரெண்டு மடங்கா இடிச்சிருப்பாள்!” என்ற தாயிடம் மிகவும் தன்மையாகக் கதைத்தான், ஆனந்த்.
“மங்கை இதெல்லாம் பழகக் கொஞ்ச நாள் போகும் மா. ஒருநாளும் செய்யாத வேலைகள் தானே!” சமாளிப்பாகச் சொன்னவன், மனைவியிடமிருந்து தேநீரை வாங்கிப் பருகத் தொடங்கினான். மங்கைக்கு மிகவுமே இதமாக இருந்தது. அவன் அருகிலேயே நின்றிருந்தாள்.
“ம்ம்…வேல இன்னும் ஒண்டும் சரிவரேல்ல. பாப்பம், ஒண்டு சரிவரும் போலக் கிடக்கு.” தாயிடம் சொன்னவன், மாவிடிப்பதற்காக நகர்ந்த மனைவியின் கரம் பற்றித் தடுத்தான்.
“நான் இடிச்சுத் தாறன் எண்டனான் எல்லா? வேற வேலை இருந்தாப் பார்!” என்றதும், மகனையும் தவிப்பாகப் பார்த்த மருமகளையும் முறைத்தார், அவன் அன்னை.
“இப்பிடியே அவவுக்குச் சொல்லுற வேலையெல்லாம் நீ செய்தா, மங்கை எப்ப இதெல்லாம் பழகிறது தம்பி?” சிடுசிடுத்தவர், “சரி மங்கை, நீங்க போய் ஐயா கடையில இந்தச் சாமான்கள வாங்கிக்கொண்டு வாங்க!” துண்டுக் காகிதமொன்றையும் பையையும் எடுத்துக்கொடுத்தார்.
“அம்மா வேணாம்மா, கடைக்கு எல்லாம் அனுப்ப வேணாமே.” சட்டென்று தடுத்த மகனை ஒற்றை முறைப்பில் அடக்கிவிட்டார், அவன் அன்னை.
“ஏன் தம்பி வேணாம்? உன்ர தங்கச்சிமார் போய் வாங்கிறது இல்லையோ?” அதட்டலாகக் கேட்டவர், “நீங்க போய்ட்டு வாங்க, மங்கை.” தயங்கி நின்றவளை அனுப்பி வைத்தார்.
சற்றுமுன் மகிழ்வுடன் இருந்த மனைவியின் முகவாடல் மனத்தில் வருத்தத்தைத் தந்தாலும், எதுவும் செய்ய முடியாது, மாவை இடிப்பதில் கவனத்தைச் செலுத்தினான், ஆனந்த்.
எப்போதுமே மாதாந்த தவணையில்தான் வீட்டுப் பாவனைப் பொருட்களை வாங்குவார்கள். இப்போதோ, வேலையில்லாததால் கடன்தொகை எல்லை மீறிச் சென்று கொண்டிருக்க, கேட்கும் பொருட்களைக் கொடுக்கிறாரோ இல்லையோ, தாராளமாக ஏச்சுகள் பேச்சுகளைக் கொடுத்துவிடுவார் கடைக்காரர். அதனால்தான், மனைவி கடைக்குச் செல்வதை அவன் விரும்பவில்லை.
கடை சிறிது தூரத்தில் இருக்கவே, நடக்கத் தொடங்கிய மங்கையின் மனத்தில் சற்று முன்னிருந்த உவகை அப்படியே அகன்றிருந்தது. ‘கடவுளே! சரிவரும் எண்ட வேலை கிடைச்சிரோணும். அப்பதான், வீட்டு நிலை கொஞ்சம்சரி சரியாகும். இப்ப இங்க பிரச்சினையே காசு தானே. மாமி, இப்பிடி கோவப்படுறதும் அதாலதான்.’ எண்ணங்கள் சுழல, கடையை நெருங்கினாள்.
பொருட்கள் வாங்க நின்றவர்களுடன் பொறுமையாக நின்று, தன்முறை வரவே, “இந்தச் சாமான்களைத் தாங்க ஐயா…” சிறு தயக்கத்துடன் காகிதத்தை நீட்ட, கடை முதலாளியோ முழியை உருட்டி முறைத்தார்.
“என்னம்மா, உங்கட மனசில நினைச்சிருக்கிறீங்க? பாருங்க, எட்டாயிரம் தாண்டிட்டு. இதில இவ்வளவு சாமான்களுமா? இண்டைக்குத் தாறன் நாளைக்குத் தாறன் எண்டு, தவணை சொல்லிச் சொல்லியே ஏமாற்றிக்கொண்டு திரியிறா உங்கட மாமி. நானும் கடைய நடத்தோணும் எல்லாம்மா?” சத்தம் போட்டுச் சொல்லி, அவள் தலையைக் குனிய வைத்தார். “போங்க போங்க. முதல் அரைவாசிக் காசு சரி கொண்டு வந்தாத்தான் சாமான்கள் தருவன்.” கண்டிப்பாகச் சொல்லிவிட, அங்கிருந்தோரின் பரிதாபப் பார்வையில் கூசிப் போனவள், மெல்ல கடையை விட்டு வெளியே வந்து வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
விறுவிறுவென்று வீட்டை வந்தடைந்தாள், மங்கை. முற்றத்தில் மாவிடித்து முடித்ததன் அடையாளமாக எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டிருக்க, சமையலறையில் பேச்சுக் குரல் கேட்டது. ஆனந்தும் தாயும்தான் கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிச் சென்ற மங்கையின் காதுகளில் அவர்கள் கதைத்தது விழுந்த கணம், உச்சபட்ச அதிர்வில் வேரோடி நின்றாள், அவள்.
“போன மாசச் சம்பளம் கூடவாத் தரேக்கையே யோசிச்சனான் அம்மா. அவேட்ட கேட்கேல்ல, வேலைக்குச் சிபாரிசு செய்த என்ர நண்பனிட்டச் சொன்னனான். அவன், அதையும் இதையும் சொல்லிச் சாமாளிச்சிட்டான்…கள்ளன்!” என்ற ஆனந்தின் குரலில் மகிழ்வு பொங்கியது.
‘அப்ப, இவ்வளவு நாளும் வேலைக்குப் போனவரோ? வேலை தேடுறன், நாயா பேயா அலைஞ்சு திரிஞ்சிட்டு வாறன் எண்டு என்னோட சீறுறது எல்லாம் நடிப்போ? என்னட்டப் போய் பொய் சொன்னவரா? ஏன்? அதும் இவ்வளவு நாள்களா!’ மங்கைக்குத் தலை சுற்றுவது போலிருந்தது.
“எங்கட கலியாணத்த முன்னுக்கு நிண்டு நடத்தினது அவன்…அதான் நரேஷ் எண்டு தெரிஞ்சு, அவன்ட தகப்பன் சரியா ஏசினவராம். அதோட, அவர் மங்கேட அண்ணாக்கு நல்ல பழக்கமானவராம். இதெல்லாம் எனக்குத் தெரியாதம்மா!” என்றவனின் முகமலர்ச்சி, இப்போது அவன் தாயிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
“எனக்கு அவ்வளவு கெதியா வேலை கிடைச்சதே மங்கேட அண்ணா சொல்லித்தானாம். இண்டைக்கும் பேசின சம்பளத்த விடக் கூடவாத் தர, நேரவே கேட்டுட்டன். முதலாளியோ, எது எண்டாலும் உன்ர நண்பனிட அப்பாட்டக் கேள் எண்டாரா …அவரிட்டப் போனா…உண்மையாவே என்னால நம்பேலாமல் கிடக்கம்மா!”என்றவன் குரல் துள்ளியது.
“அதவிடு தம்பி, அண்டைக்கு மங்கை உனக்கு வேலையில்ல எண்டு சொல்லித்தானே சொத்தக் கேட்டா. அப்ப, அந்தத் தம்பி ஒரு சிரிப்புச் சிரிச்சாரே! என்ன நினைச்சிருப்பார் என்ன? பொய் சொல்லுறம் எண்டா? அல்லது தன்ர தங்கச்சி பொய் சொல்லுறா எண்டா?” கவலையாகக் கேட்டார், அவன் அன்னை.
இதைக் கேட்டதும் அடுத்த அதிர்வில் தள்ளாடினாள், மங்கை. ‘அப்ப, அண்டு நான் சொத்துக் கேக்க அண்ணாட்டப் போனதும் இவருக்குத் தெரியுமா? உன்ர புருசனிட்ட சொல்லாத, கோவிப்பான், குதிப்பான் எண்டெல்லாம் மாமி சொன்னாவே, ஏன் இந்த நாடகம்?’ ஏமாற்றத்தில் சுருண்ட மனம் புலம்பியது. அருகிலிருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.
“இண்டைக்குத்தானே நரேஷ் எல்லாம் சொல்லுறான் அம்மா. இங்க வீட்டில நடக்கிறது எல்லாம் ஒண்டு விடாமல் மங்கேன்ட தமையன் தெரிஞ்சு கொண்டுதான் இருக்கிறாராம். அவருக்குத் தன்ர தங்கச்சி இப்பிடி, இங்க இருக்கிறது விருப்பம் இல்லையாம்!” சொல்லி நிறுத்தியவன், தாயைச் சங்கடமாகப் பார்த்தான்.
“ஏனாம்? பொத்தி பொத்தி வளர்த்தவவ கொடுமைப்படுத்துறம் எண்டு சொல்லினமோ? ஒரு வேலைய உருப்படியாச் செய்யத் துப்பில்லாத வளர்ப்பு?” கோபம் தொனிக்கச் சொன்னார், அவர்.
“ச்சே..ச்சே… அப்பிடி எல்லாம் இல்ல அம்மா. அவருக்கு, அவள அங்கயே வந்திருக்கச் சொல்லுற பிளான் இருக்காம். எங்களிட்டக் கதைச்சுப் பாக்கோணும் எண்டு நரேஷிட அப்பா சொன்னவராம். அங்க இருக்கிற அவேட வீடு ஒண்டில எங்களத் தனியா…” சொல்லிக்கொண்டு வந்தவன் முடிக்காது சங்கடமாக நெளிந்தான்.
“அட, இதுக்கு இப்ப நீ ஏன் இப்பிடித் தயங்கிற தம்பி? இதைத்தானே நானும் சொன்னன். அப்பிடிக் கேட்டு வந்தா, அதும் தானா வாறத விடக்கூடாது ராசா. அப்பிடியே மெல்ல உள்ளுக்குப் போய், அவவுக்கு எண்டு உள்ளதுகள வாங்கிக்கொண்டா, பிறகு அவே உன்னக் கேள்வி கேட்க ஏலுமா?” விழிகளில் ஆசை மின்னல் அடிக்கக் கதைத்தார், ஆனந்தின் அன்னை.
கேட்ட ஆனந்தோ சட்டென்று அமைதியானான். மகனின் முகமாற்றத்தைக் கவனித்துவிட்டார், தாய். ‘இவனொருத்தன், அருமையான சந்தர்ப்பங்கள் அமையேக்க பாவிக்கத்தெரியாத முட்டாள்! அதையும் இதையும் யோசிச்சு , பொன்னான வாய்ப்பைக் கைவிட்டுடுவான் போல இருக்கே! இவனுக்கேத்தவா மனுசிக்காரி!’ மனத்தில் கடுகடுத்துக் கொண்டார்.
“என்னய்யா யோசிக்கிற? உன்ர தங்கச்சிமாருக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் குடுக்கலாம் அப்பன். ஏதோ அப்பிடி இப்பிடிச் சோம்பேறியா அனுங்கிக்கொண்டு இருந்தாலும், நீ விரும்பின பிள்ளைதானே மங்கை! அவவும் நீயும் மகிழ்ச்சியாவும் இருக்கலாம் எல்லே? நீ இந்தக் குடும்பத்தக் கைவிட மாட்ட எண்ட நம்பிக்கை எனக்கிருக்கய்யா. நீ ஒண்ணுக்கும் யோசிக்காத!” பெருமனதாகத் தைரியம் சொன்னார், தாய்.
‘சொத்துக்காகக் காதலிச்சன் எண்டு சொன்னவேட சொத்து எனக்கு என்னத்துக்கு அம்மா? உழைச்சு என்ர தங்கச்சிகளுக்குத் தேவையானதுகளச் செய்வன்நான். என்ன நம்பி வந்தவளையும் பாத்துக்கொள்ளுவன்!’ என்று, மனத்தில் நினைத்ததை வாய்விட்டுச் சொல்லி, தாயோடு தர்க்கம் செய்ய விரும்பாது அமைதிகாத்தான், ஆனந்த்.
“அண்டைக்கு நாங்க போன நேரம் மங்கைய அந்தளவுக்கு உதாசீனம் செய்து அனுப்பினதும் ஒருவகைக்கு நல்லதுதான். இனி அவேயா இங்க தேடி வரேக்க கறாரா இருக்கோணும். என்னதான் எண்டாலும் நீ ஆம்பிள. அதை மறந்திராத தம்பி!” என, அவர்கள் தொடர்ந்து கதைத்தவற்றைக் கேட்க மங்கை அங்கு நிற்கவில்லை.
‘என்ன மாதிரி ஏமாந்திருக்கிறன்! நீயே கதி எண்டு நம்பின ஒருத்திய ஏமாத்த இவரால் எப்பிடி ஏலுமா இருந்தது?’ மனம் கிடந்தது புலம்பித் தள்ள, மங்கையின் கால்களோ இலக்கின்றி நடந்து சென்றன.

