பல்லவி – 20

அத்தியாயம் 20

சுதா எண்ணியதுதான் நடந்தது. அவளிடம் மனத்திலிருப்பத்தைச் சொல்லாத போதிலும், நேசரி செல்லும் வரையிலும் நடந்தவைகளைத்தான் அசைபோட்டுக்கொண்டிருந்தான் பாலமுரளி.

ஆரம்பத்தில் இருந்தே இந்த வாழ்வில் பல்லவிக்குப் பற்றுதல் இல்லையோ என்கிற கேள்வி அவனுக்குள் இருந்துகொண்டேதான் இருந்தது. ஆனால், அன்றைக்கு அவளிடமே சொன்னதுபோல, சம்மதம் கேட்டு, இரு தரப்பினதும் விருப்பத்தோடுதான் எல்லாம் நடந்தது என்பதில், அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதோடு, அவளுக்கு இது புது ஊர், புது வீடு, அவன், விதுரன், அந்த வாழ்க்கை முறை எல்லாமே புதிது. அதையெல்லாம் பழகிக்கொள்ள நாளாகும். அவன்தான் அதற்கான அவகாசத்தைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். அப்படித்தான் நாட்களும் நகர்ந்தன.

அவளின் பெரியப்பா வீட்டில் வைத்து நடந்தது அவன் எதிர்பாராதது. அதன் பிறகான சண்டை, அப்போது அவன் விட்ட வார்த்தைகளும் கூட அப்படித்தான். பிறகு ஒரு நாள் இரவு, விதுரனைக் குறித்து அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு முதலில் கோபம்தான் வந்தது. பிறகு பிறகு அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து, இனி அவனை அவள் பொறுப்பில் விடவேண்டும் என்று எண்ணி விட்டிருந்தான்.

அதற்கு அவள் செய்தது என்ன? அத்தனை உறவுகளும் இருந்தபோதும் அவன் வாழ்வதே மகனுக்காகத்தான். அப்படியான மகனின் கால்களில் கண்ட தடிப்புகளை நினைக்கையில் இப்போதும் நெஞ்சைப் பாரம் அழுத்தியது. பைக் ஹாண்டிலில் இருந்த அவனுடைய கரம் ஒன்று வந்து, முன்னே அமர்ந்திருந்த மகனின் தலையைத் தடவி விட்டது.

“என்னப்பா?” திரும்பிப் பார்த்து வினவினான் விதுரன்.

“ஒண்டுமில்ல. சும்மா!” என்றான் பாலமுரளி கனிந்த சிரிப்புடன்.

“ஏன் தலையைத் தடவினீங்க?” விடாமல் கேள்வி கேட்டான் அவன்.

“நேசரில குழப்படி செய்யக்கூடாது. வடிவா படிக்கோணும், சரியா?” புதிதாகப் புத்திமதி சொன்னான் தகப்பன்.

“நான் குழப்படி செய்றேல்ல.” உடனேயே பதில் சொன்னான் சின்னவன்.

சத்தமாகச் சிரித்தான் பாலமுரளி. “அதுதானே. அவன் என்ர சிங்கக்குட்டி. இனி இன்னும் குழப்படி செய்யாம இருக்கோணும்.” என்றபடி அவனைக் கொண்டுபோய் நேசரியில் விட்டான்.

அந்த நேசரி கூட இப்போது பல்லவியைத்தான் நினைவூட்டியது. ஒரு நாள் கூட அனுப்பாமல் நிறுத்தவேண்டாம் என்று, இவனோடு மல்லுக்கட்டிக்கொண்டு விதுரனைக் கொண்டுவந்து விட்டவளை, வெளியில் போ என்று சொன்னது இப்போது மகாதவறாகப் பட்டது.

மகனைப் பார்க்க என்னால் முடியாது என்று அவள் சொன்னதும், பிறகு எதற்கு நீ இங்கே இருக்கிறாய் என்கிற கோபத்தில்தான் போ என்றான். ஆனால், அது எவ்வளவு பெரிய பிழை. அவன் வேண்டுமானால் மகனுக்காக என்று எண்ணி அவளை மணந்திருக்கலாம். அதுகூட இன்றைய நிலையில் மாறிப்போயிற்றே. அப்படியிருக்க, அவள் அவனை மணந்து, அவனோடு வாழ்வதற்கு வந்தவள். கூடுதலாக உன் மகனையும் பார்க்கிறேன் என்றவள்.

அவளைப் போய்… அதுவும் அப்படியான ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவளை அவன் வார்த்தைகள் இன்னும் ஆழமாகக் காயப்படுத்தியிருக்கும். அதனால்தான் அவளுக்கு அந்தப் பயமே வந்திருக்கிறது.

யாரில் சரியோ பிழையோ, அவனும் மகனும் இருந்தும் கூட, யாருமற்றுத் தனித்து நிற்கிறோம் என்று அநாதரவாக அவளை உணர வைத்தது அவன்தான். அந்தப் பயத்தை வார்த்தைகளால் அல்லாமல் செயலில் போக்க நினைத்தான்.

ரேகாவுக்கு அழைத்து, தையல் வகுப்புகள் எங்கே கொடுக்கிறார்கள் என்று விசாரித்தான்.

உடனேயே, “அண்ணிக்கா அண்ணா? கட்டாயம் விடுங்கோ. அவான்ர சாறி பிளவுஸ் எல்லாமே நல்ல வடிவா இருக்கு. அதெல்லாம் அவாதான் தச்சவாவாம்.” என்றாள் அவளும் சந்தோசமாக.

அதையெல்லாம் அவன் எங்கே கவனித்தான். சேலை அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுக்கும். அது மட்டும் தெரியும். அவளறியாமல் ரசித்திருக்கிறான். ரேகாவிடம் கேட்டு, அவள் சொன்ன இடத்துக்கே சென்று, விசாரித்துக்கொண்டு வந்தான்.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஏதோ ஒரு துணியைக் கையில் வைத்துக்கொண்டு, ஊசி, பல நிறங்களில் நூற்கண்டுகள் என்று அவளைச் சுற்றி இருக்க, ஃபோனில் வீடியோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். இவனைக் கண்டதும் அனைத்தையும் அப்படியே ஒரு கரையாக ஒதுக்கி வைத்துவிட்டு ஓடிவந்து, உணவு போட்டுத் தந்தாள்.

அவன் ஒரு சொல்லுச் சொல்வதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறாள் என்று புரிந்தது.

இரண்டு வாய்களை உண்டவன், “டவுன்ல ஒரு செண்டர் இருக்கு. ஆறுமாத கோர்ஸ். ஆரி வேர்க், பெயிண்ட் பண்ணுறதாம் எண்டு என்னவோ நிறையச் சொல்லிச்சினம். ஒவ்வொரு நாளும் நாலு மணித்தியாலமாம். உனக்கு விருப்பம் எண்டா தம்பிய நேசரில விட்டுட்டு அங்க போ. பிறகு வரேக்க தம்பியையும் கூட்டிக்கொண்டு வா.” என்றான் அவன் உணவில் கவனம் வைத்துக்கொண்டு.

பல்லவியின் விழிகள் விரிந்து போயிற்று. அவன் அவளோடு கதைப்பான் என்றே எதிர்பார்க்கவில்லை. இதில், தையல் வகுப்புக்கு வேறு சேர்த்துவிடுகிறேன் என்று சொன்னால்?

“என்ன?” அவளிடமிருந்து சத்தமில்லாமல் போகவும் நிமிர்ந்து பார்த்து வினவினான் அவன்.

“இல்ல… அது… உங்களுக்கு நான் தைக்கிறது ஓகேயா?”

செம்பினுள் இருந்த நீரை எடுத்துப் பருகிவிட்டு, “உனக்கெண்டு ஆரும் இல்ல, கைல காசும் இல்ல, பயந்துகொண்டு இருக்கிறாய் எண்டேக்க இப்பிடி ஏதும் உதவி செய்யத்தானே வேணும்.” என்றான் அவன் எதையும் காட்டிக்கொள்ளாத குரலில்.

அவளுக்கு முகம் அப்படியே வாடிப்போனது. வேண்டுமென்று சொல்லவில்லை. உணர்ந்ததைத்தான் சொன்னாள். இருந்தாலும், அதை அவன் சொன்னபோது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தன் விரல்களை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்ன போறியா?” என்றான் மீண்டும்.

“உங்களுக்குச் சாப்பாடு?” தயக்கத்துடன் இழுத்தாள் அவள்.

“தம்பிய கூட்டிக்கொண்டு போய்க் கூட்டிக்கொண்டு வாற வேல இல்லதானே. நானே எதையாவது செய்து சாப்பிடுவன்.”

“இல்லையில்ல! நான் சமைச்சு வச்சிட்டுப் போவன். நீங்க நீங்களே போட்டுச் சாப்பிடுவீங்க எண்டா சரி.”

“அப்ப போறது எண்டு முடிவு எடுத்திட்டாய்.”

அவன்தானே போ என்றான். பிறகு இப்படிக் கேட்டால் என்ன சொல்வது? விழித்தாள் அவள்.

அவளின் திணறலை உள்ளுக்குள் ரசித்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அவன்.

“வெளிக்கிடு. போய் எல்லாத்தையும் வடிவா கேட்டுக்கொண்டு வருவம். என்னவோ எல்லாம் நிறையச் சொல்லிச்சினம். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.” என்றவனின் பேச்சில் மெல்லிய முறுவல் அரும்பிற்று.

அந்தத் துறையில் இயங்காதவர்களுக்கு அதன் பெயர்களும் பொருளும் பெரிதாக விளங்காதே. உள்ளே பொங்கிய உற்சாகத்துடன் வேகமாக உணவை முடித்துக்கொண்டு தயாராகி வந்தாள்.

புறப்பட முதல் அவளருகில் வந்தான் அவன். “திரும்பு!” என்று அவள் கை பற்றித் திருப்பித் தலையை ஆராய்ந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. “உனக்கும் தலைல காயமாமே. மாறிட்டுதா?” என்று வினவினான்.

அவனுடைய அந்தச் சின்ன கரிசனையில் மளுக்கென்று மூக்கு முகமெல்லாம் சிவந்து, அவளுக்கு விழிகள் கரிக்க ஆரம்பித்தன. “ம்” என்றபடி அவனிடமிருந்து விலகினாள்.

“ஏன் என்னட்டச் சொல்லேல்ல? சொன்னாத்தானே எனக்கும் தெரியவரும்.” என்றான் அவன் மெல்லிய மனத்தாங்கலுடன்.

“காயம் எண்டு பெருசா இல்ல. ரெண்டு நாளா நொந்தது. பனடோல் போட்டனான். இப்ப மாறிட்டுது.” அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தபடி சொன்னாள் அவள்.

சிவந்துவிட்ட மூக்கையும், அவள் விழிகளில் இருந்த மெல்லிய நீர்ப் படலத்தையும் கண்டு மனம் கசிந்தாலும் ஏதும் பேசவில்லை அவன். அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

பயணம் முழுவதிலும் அவன் அக்கறையாகக் கேட்டதே அவள் நெஞ்சில் நின்று இனித்தது.

அவளும் அந்தத் தையல் நிலையத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். அதில், ஆர்வத்துடனேயே அவர்களோடு கதைத்தாள். வெகு திருப்தியாக இருந்தது. அங்கிருந்து வெளிவருகையில் நிச்சயம் அனுபவம் உள்ளவளாக இருப்பாள் என்கிற நம்பிக்கை பிறந்தது. அவர்கள் கேட்ட கட்டணமும் கொடுக்கலாம் என்கிற வகையில் இருந்ததும் அவளுக்குச் சந்தோசமே. உடனேயே பணம் கட்டிச் சேர்த்துவிட்டான் பாலமுரளி.

அவர்கள் கொடுத்த பயிற்சிக்குதே தேவையான லிஸ்ட்டில் இருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு, புல்லட்டை ஒரு ஹோட்டலுக்கு விட்டான்.

“ஏதாவது கறி வாங்கிக்கொண்டு போனா நான் டக்கெண்டு சமைச்சிடுவன்.” மெல்லச் சொன்னாள் பல்லவி.

“பரவாயில்ல. இண்டைக்கு ஒரு நாளைக்குத்தான் வா!” என்று அழைத்துச் சென்றான் அவன்.

இருவருக்குமே பிரியாணிக்குச் சொன்னான். “தம்பிக்கு?” அன்றைக்கு அடித்ததற்குப் பிறகு விதுரன் பற்றிய பேச்சை அவளால் பாலமுரளியிடம் இயல்பாக எடுக்க முடிவதில்லை. அவள் மனதே அவளைக் குத்தியது. ஆனாலும், அவனை விட்டுவிட்டுச் சாப்பிடவும் மனமில்லை. அதில், தயக்கம் இருந்தாலும் கேட்டாள்.

“போகேக்க வாங்கிக்கொண்டு போவம்.” என்றான் அவன்.

உணவும் வந்தது. அமைதியாகவே சாப்பிட்டனர். பல்லவி தன் தட்டில் இருக்கும் கோழிப் பொரியலை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள்.

“எனக்கு ஏன் வைக்கிறாய்? நீ சாப்பிடு.” என்றான் அவன்.

“இல்ல. எனக்கு விருப்பம் இல்ல.”

“என்ன விருப்பம் இல்ல? பால் குடிக்கிறேல்ல. இறைச்சி சாப்பிடுறேல்ல எண்டா வெறும் சோத்தையும் குழம்பையும் சாப்பிடுவியா?” அதட்டினான் அவன்.

“விருப்பம் வராட்டி நான் என்ன செய்ய?” பாவமாகச் சொன்னாள் பல்லவி.

“ப்ச் என்னடி நீ. வேற ஏதாவது ஓடர் செய்றதா?” மகன் இல்லாத பொழுது என்று ஒன்று அவர்களுக்கு இலகுவில் அமையாது. அவனாகவும் அமைக்க விரும்பமாட்டான். கிடைத்ததைப் பயன்படுத்த எண்ணித்தான் அழைத்துவந்தான். கூடவே, மனத்துக்குள் எதையெதையோ வைத்துத் துன்பப்படுகிறவளை மறைமுகமாகச் சந்தோசப்படுத்தும் முயற்சியும் கூட. அவளானால் வெறும் சோற்றைச் சாப்பிடுகிறேன் என்கிறாள்.

“இல்ல வேண்டாம். எனக்கு முட்டையே காணும்.”

“அப்ப இந்தா, என்ரயையும்(என்னுடையதையும்) சாப்பிடு.” என்று தன்னுடையதையும் அவளுக்குக் கொடுத்தான் அவன்.

“இல்ல வேண்…” என்று ஆரம்பித்தவள் அவன் பார்த்த பார்வையில் அடங்கிச் சாப்பிட்டாள்.

“ஏன் இப்பிடி ஒண்டும் சாப்பிடுறேல்ல?”

“தெரியாது. சின்ன வயசில இருந்தே விருப்பம் இல்ல.”

இவளை இனி இப்படியே விடக்கூடாது என்று தனக்குள் முடிவெடுத்தவன் அப்போது அதற்குமேல் அதைப் பற்றிக் கதைக்கவில்லை. “வேற ஏதும் வேணுமா?” என்று கேட்டு, அவள் இல்லை என்ற பிறகு, மகனுக்கும் கட்டிக்கொண்டு புறப்பட்டனர்.

உண்மையிலேயே அந்த நாள் பல்லவிக்கு மிகுந்த சந்தோசமான நாளாகவே அமைந்துபோனது.

*****

அன்று, பாலமுரளி எழும்பும்போதே பல்லவியும் எழும்பி வந்தாள். புதிதாகப் பார்த்தான் பாலமுரளி.

“இண்டைக்கு தையல் கிளாஸ் தொடங்குது.”

“சேத்துவிட்டவனுக்குத் தெரியாதா? ஆனா, அதுக்கேன் நீ இவ்வளவு விடிய எழும்பி நிக்கிறாய்?”

“சமைக்க.”

“காலைச் சாப்பாடு எல்லாம் பெரிய மலையப் புரட்டுற காரியம் பார், நீ செய்து வச்சிட்டுப் போக. எனக்கு நானே பாப்பன். பிறகு, உனக்கும் தம்பிக்கும் மட்டும் எதையாவது செய்து சாப்பிட்டுப் போங்கோ.” என்றான் அவன்.

“இல்ல. சமைச்சு வச்சிட்டுப் போனாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும். அப்பதான் வகுப்பையும் கவனிப்பன். இல்லாட்டி, நீங்க என்ன செய்தீங்களோ, என்னத்த சாப்பிட்டீங்களோ எண்டு அதுதான் ஓடிக்கொண்டு இருக்கும்.” என்றவளை ஒன்றும் சொல்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனான் அவன்.

அவனுடைய பார்வையைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. அவன் தோட்டத்துக்குப் புறப்பட அவள் தன் வேலைகளில் கவனமானாள். மனத்தினுள் ஒருவித உற்சாகம் பொங்கியது.

இனி ஒவ்வொரு நாளும் போகும்போதும் வரும்போதும் விதுரன் அவளோடு இருக்கப்போகிறானே. எப்படியாவது அவனோடு பேசி நட்பாகிவிட வேண்டும். பிறகு, மெல்ல மெல்ல அவன் மனத்தில் இடம் பிடித்து, அவனையும் மாற்றிவிட வேண்டும். மனதெங்கும் எண்ணங்கள் உருண்டு விளையாட, வேலைகளை முடித்து, அவளும் புறப்பட்டு, விதுரனையும் தயார் செய்தாள்.

விதுரனின் பாக், தண்ணீர் போத்தல், அவளின் தையற்பொருட்கள் அடங்கிய பாக் என்று பெரும் பயணம் போன்று, சைக்கிளில் புறப்பட்டவளைக் கண்டு மெலிதாகச் சிரித்தான் பாலமுரளி. இப்படி அவள் அரக்கப் பரக்கப் புறப்படுவதைப் பார்க்க நன்றாகவும் இருந்தது.

“ரொட்டியும் சம்பலும் இருக்கு. நேற்றையான் இறைச்சிக் கறியும் இருக்கு, சாப்பிடுங்கோ. தேத்தண்ணி பிளாஸ்க்ல இருக்கு. மறக்காமக் குடிங்கோ. மத்தியானத்துக்கு ஏதாவது வாங்கி வச்சு விடுங்கோ, நான் வந்ததும் சமைச்சிடுவன்.” என்றவளை, “போதும், பேசாம போ!” என்றான் பாலமுரளி சிறு சிரிப்புடன்.

பின்னே? இதோடு இதையெல்லாம் எத்தனை தடவைகள் சொல்லிவிட்டாள். விட்டால் பாலைக் கரைத்து, போத்தலில் விட்டு, அவன் வாயிலேயே வைத்துவிட்டுப் போவாள் போலும்.

error: Alert: Content selection is disabled!!