‘க்கும்… நல்ல ஆளுக்குத்தான் கதை சொல்லியிருக்கிறார். இதுக்கெண்டே அவரின்ர கையைத் தானே கீறிப் போட்டுத் தீத்தி விடப் போறான் ஒருநாளைக்கு… அப்பவும் மாற மாட்டார். அதுக்கு ஒரு பிரசங்கம் வைப்பர். அவன் அதில இருந்தும் ஒரு வில்லங்கத்தைத் தேடிப் பிடிச்சுச் செய்வான். கடைசில இவர்தான் தான் ஆர் எண்டுறதை மறந்திட்டு பகவத் கீதையோட இவனுக்குப் பின்னால உபதேசம் செய்து கொண்டு திரியப் போறார்.’ மனதுக்குள் கேலி பேசியவள்,
“நிலன் அப்பிடியெல்லாம் செய்யமாட்டார். அவர் நல்ல பிள்ளை.” என்று வந்த பதிலில் திடுக்கிட்டு ஆதித்யன் முகம் பார்த்தாள்.
அவள் மனதின் மொழிகளுக்கெல்லாம் சரியாகப் பதில் சொல்லும் வெற்றிப் புன்னகையோடு அவளைப் பார்வையால் மொய்த்திருந்தான் அவன்.
இப்படி வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறானே என்று சுற்றிலும் பார்த்தவள் அந்த அறையில் யாருமில்லாததை அப்போதுதான் கவனித்தாள்.
அவள் குழப்பமாக அவன் முகம் பார்க்க அவள் கேள்வி புரிந்தவன்,
“நீங்க மனசுக்குள்ள என்னை நக்கலடிக்க தொடங்கேக்கயே அவை எல்லாத்துக்கும் ஒரு முடிவு சொல்லி, குட் நைட்டும் சொல்லிட்டுப் போய்ட்டினம். அது கூடத் தெரியாம அவ்வளவு தீவிரமா என்னைக் கலாய்ச்சுக் கொண்டு இருந்திருக்கிறீங்கள் என்ன?”
அவன் இலகு தோரணையில் கட்டிலில் படுத்துக் கொண்டு பேச, சாதனாவுக்குப் பேச்சு வரவில்லை. சொல்லத் தெரியாத ஒரு படபடப்பு வந்து நெஞ்சோடு ஒட்டிக் கொண்டது.
நேருக்கு நேர் மதியம் தனிமையில் சந்தித்த போது கூட இவ்வளவெல்லாம் ஒன்றும் இல்லை. சற்று முன்னர் குடும்பமாக இருந்து பேசிய போதும் ஒன்றும் தெரியவில்லை.
ஆனால் இப்போது… இரவும் தனிமையும் காணொளி அழைப்பும் அவளை இயல்பாக இருக்க விடவில்லை. என்னவோ இருவரும் தொலைதூரக் காதலர்கள் போன்ற ஒரு பிரம்மையைத் தோற்றுவிக்கவே அவன் முகம் பார்க்க முடியாது தடுமாறினாள்.
அவனுக்கு அந்தத் தடுமாற்றம் எல்லாம் இல்லை. திருமணத்துக்குப் பின் நிதானமாக அவள் முகம் பார்க்கக் கிடைத்திருக்கிறது. அதற்காகத் திருமணத்துக்கு முன் தின்று விடுமளவு பார்த்தானா என்றால் அதுதான் இல்லை.
அப்போது பார்க்கத் தோன்றியதில்லை. இப்போது தோன்றுகிறது. பார்த்துக் கொண்டே இருந்தான்.
அதுதான் அவளை இன்னும் அவஸ்தைக்குள்ளாக்கியது. இவர் ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று எண்ண வைத்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் “படுக்கப் போறீங்கள் எண்டா வைக்கட்டோ?” என்று அவளே கேட்டாள்.
“ஏன் உங்களுக்கு நித்திரை வருதோ?” அழைப்பைத் துண்டிப்பதில் எனக்கு விருப்பமில்லை என்று வந்த குரல் அவளைச் சில்லிடச் செய்தது.
“இல்லை, நீங்க பேசாம இருந்தனீங்கள்! அதான் கதைக்க ஒண்டும் இல்லாட்டி வைப்பமெண்டு…”
“கதைக்க நிறைய இருக்கு, சாதனா. ஆனா…” என்று மேலே சொல்ல முடியாது நிறுத்தி விட்டான்.
தெய்வ ரகசியத்தைக் காக்கும் தேவ தூதன் போல அவன் மனதின் கிடக்கைகளை உரியவளிடம் கொட்டவே அதிகம் யோசித்தான்.
அவளுக்குமே அவன் பேசுவதைக் கேட்கும் மனநிலை அப்போது இல்லை என்பதால் பேச்சை மாற்றினாள்.
“என்ன செய்ய நாளைக்கு? பிள்ளையளைத் தனிய அம்மாவோட அனுப்ப யோசினையா கிடக்கு. அம்மா சமாளிப்பாவோ எண்டு!”
“அப்ப நீங்களும் போயிற்று வாங்கோ, சிம்பிள்.” என்றவனை ஒன்றுமே சொல்லாமல் பார்த்தாள்.
அந்தப் பார்வை உங்களையும் தனியாக விட்டுச் செல்ல முடியாது என்ற செய்தியை அவனுக்குக் கடத்த, ஒரு சோலைத் தென்றல் முழுதையும் ஒற்றையாளாக அனுபவித்தவன் போல் அகமகிழ்ந்து போனவன்,
“அப்ப அம்மாவோட போக விடுங்கோ. அம்மா சமாளிப்பா… அதோட நான் சொல்லித்தான் விடுவேன், அப்பம்மாவைக் கரைச்சல் படுத்தக் கூடாதெண்டு.”
“இவ்வளவு யோசிச்சு ஏன் அவைய அனுப்போணும்? எனக்கும் அவை இல்லாட்டி ஒண்டும் ஓடாது. அம்மா மட்டும் போகட்டுமே!”
“அது சரிவராது. இண்டைக்கு கொஞ்ச நேரத்துக்கயே நிலன் எத்தினைதரம் மாடிப் படியேறி இறங்கினவர் எண்டு பார்த்தனீங்கள்தானே?”
“அதையேன் கேட்கிறீங்கள்… என்ர கடவுளே! அப்பிடித் திரும்பிற்று இப்பிடிப் பார்க்கிறதுக்குள்ள பாதிப் படியில ஏறிக் கொண்டு நிக்கிறான். அவனுக்குப் பின்னால ஓடியே களைச்சுப் போனன் நான். நல்லா ரெண்டு போடச் சொல்லித்தான் கிடந்த…” என்று தன்னை மறந்து மறந்து சொல்லிவிட்டாள்.
“ஏன் ரெண்டு, நாலாப் போட்டிருக்கலாம்தானே? ஏன் விட்டனீங்கள்?” அவனிடமிருந்து சூடாய் வந்தது கேள்வி.
‘ஐயோ!’ என்று மானசீகமாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் சாதனா.
“அதென்ன பிள்ளை ஏதேன் செஞ்ச உடன அடிக்கிறதிலதான் குறியா நிக்குது உங்கட மனசு? பழகிப் போச்சு என்ன?” என்ற அவள் எதுவுமே பேசவில்லை.
“இனிப் பிள்ளையில கை வச்சுப் பாருங்கோவேன் தெரியும்! அவர் ஏதேன் பிழை செய்தா நான் வந்தாப்போல சொல்லுங்கோ. நான் கதைப்பன் அவரோட!” என்றான் கறாராக.
ஒருவரின் மிரட்டலும் எச்சரிக்கையும் கூட இதம் தருமா? இவனது தந்து செல்கிறதே!
சாதனா அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டிருக்க,
“என்ன சத்தத்தைக் காணேல? சொன்னது விளங்கினதுதானே?”
“ஏன் விளங்காம? அப்பவே நிலனை அடிச்சதுக்கு பொலிஸ்ல என்னைப் பிடிச்சுக் குடுக்கவெண்ட ஆள்தானே நீங்கள்?” என்ற, கோபம் மறைந்து சிரித்தான் அவன்.
“எப்ப எப்ப எண்டு இருந்திருக்கிறீங்கள் போல சொல்லிக்காட்ட!”
“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. இப்ப நீங்க சொல்லவும்தான் ஞாபகம் வந்தது.”
“ம்ம்…” என்று கேட்டுக் கொண்டவனுக்கு அதற்கு மேல் என்ன பேச என்று தெரியவில்லை. அதேநேரம் ஃபோனை வைக்கவும் மனதில்லை.
“வேற என்ன?” நீண்ட நேர அமைதியை உணர்ந்து சாதனாதான் கேட்டாள்.
தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது சாதாரணமாகத் தெரியும் ஒன்று இப்படி இடை இடையில் மெளன ஸ்வரங்கள் வரும் போது அசாதாரணமாக இதயத் துடிப்பின் தாளத்தைத் தவற வைக்கின்றது.
“எப்படா வைச்சுட்டு ஓடுவம் எண்டுதான் நிக்கிறீங்கள் என்ன? நிறைய ஓடியாச்சு சாதனா. இனி எண்டாலும் கொஞ்சம் நிதானமா நிண்டு பார்க்கலாமே!” என்றவும் பதிலின்றித் தலை குனிந்தவளைப் பார்த்தவன்,
“குட் நைட் சாதனா. பிள்ளையளுக்குத் தேவையானதுகளை எடுத்து வையுங்கோ. அம்மான்ர ரூம்ல சூட்கேஸ் இருக்கும்.” என்று விட்டு வைத்து விட்டான்.
பதிலுக்குக் குட் நைட் கூட சொல்லாமல் அவன் வைத்த ஐந்து நிமிடங்களின் பின்னும் அதே இடத்தில் அசையாமல் எதையும் யோசிக்கவும் செய்யாமல் அமர்ந்திருந்தவளை, “அம்மா!” என்று வந்து அழைத்துப் போனாள் மயூ.

