பல்லவி 23 – 2

“சரிசரி, நான் கோவப்படேல்ல. நீ அழாத.” என்றவனுக்கு அவளின் முகம் பார்த்தே ஆகவேண்டும் என்றாயிற்று. உடனேயே அழைப்பைத் துண்டித்துவிட்டு வீடியோ கோலில் வந்தான்.

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹெட் ஃபோன்ஸ் இல்லை. ஏற்றவள் வேகமாக வாயில் விரல் வைத்துக் காட்டினாள். கலங்கிய விழிகள், சிவந்துவிட்ட முகம், இதில் வாயில் விரல் வைத்துக் காட்டும் அழகில் சிறு சிரிப்பு வந்தாலும், ஏன் என்று புருவம் உயர்த்தி வினவினான் அவன்.

காதுகளைத் தொட்டுக் காட்டி, “ஹெட் ஃபோன்ஸ் இல்லை. நீங்க கதைச்சா வெளில கேக்கும்.” என்றாள் மிக மெல்லிய குரலில்.

இதுவரையில் இப்படி யாருடனும் பிரத்தியேகமான பேச்சுகளைப் பேசிய அனுபவம் இல்லாதவனுக்கு, வீடியோ கோலில் இருக்கும் அந்தச் சிக்கல் அப்போதுதான் புரிந்தது. முகத்தைத் துடை என்றான் செய்கையால். அவளும் பக்கத்தில் இருந்த உடையை இழுத்துத் துடைத்துக்கொண்டாள். ஆனாலும், அவனைப் பார்த்ததாலோ என்னவோ துடைக்க துடைக்கக் கண்ணீர் பெருகியது.

அழாதே என்று வாயசைத்தான். அப்போதும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. காயப்பட்டுக் கிடந்த மனது, அவன் கைகளுக்குள் சுருண்டுகொள்ள முடியாத இயலாமையைக் கண்ணீராக வெளியேற்றிக்கொண்டிருந்தது.

ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, “நாளைக்கு எத்தினைக்கு வர?” என்று பேச்சை மாற்றி, அவளின் சிந்தனையையும் மாற்ற முயன்றான்.

“விடியவே வாங்க.” அழுததில் மூக்கால் பேசினாள் அவள்.

“விடியவே வந்து நான் என்ன செய்ய? மத்தியானம்தானே விருந்து.”

“வந்தா நல்லம். பெரியப்பாக்கு உதவியா இருக்கும்தானே.”

“அதுவும் சரிதான்.” என்றவன், “தம்பி எங்க?” என்று மகனை விசாரித்தான்.

அவள் முகம் மலர்ந்தது. “அவர் இப்ப பெரியப்பாவோட நல்ல ஒட்டு. ரெண்டு பேரும் பைக்ல டவுனுக்குப் போயிட்டினம்.” என்றபோது தெளிந்திருந்தாள்.

“உனக்கு அரியண்டம்(தொல்லை) தந்தவனா?”

“இல்லையே. நேற்று அவரோட படுத்தது எனக்கு நல்ல சந்தோசமா இருந்தது. இனி அங்க வந்தாலும் தம்பி என்னோடதான்!” என்றாள் அவள்.

“அப்ப நான்?” என்றான் அவன் பட்டென்று.

கடவுளே… என்று முறைத்தவள் வேகமாக அழைப்பைத் துண்டித்திருந்தாள். வெளியில் கேட்கும் என்று சொல்லியும் இப்படிப் பேசுகிறவனை என்ன செய்ய? ஆனாலும் உதட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடினாள். இதெல்லாம் புது உணர்வுகள். இதுவரையில் இந்த இனிமை, படபடப்பு, ரகசிய சிரிப்பில் மனம் திளைப்பதை எல்லாம் அவள் அனுபவித்ததில்லை.

பாலமுரளியும் சிரிப்புடன் விழிகளை மூடிக்கொண்டான். ‘இண்டைக்கு ஒரு நாள் தான்…’ தனியே கிடந்தவனின் மனம் அவளின் அண்மைக்கு ஏங்கிற்று.

அடுத்த நாள் காலையில் பத்து மணிபோல் வந்தான் பாலமுரளி. வீட்டுப் பெரியவர்களோடு உரையாடல் நடந்தாலும், இருவரின் பார்வையும் மற்றவரிடம் கவ்வியே நின்றது.

அவன் வந்துவிட்டான் என்கிற உணர்வில் பல்லவியின் மனத்தில் சிலுசிலுப்பு. அதே நரைத்த கேசம், அதே கருமை வண்ணம் பூசிய ஆண்மகன், கடினத்தைப் பறைசாற்றும் முகம். ஆனாலும், இன்றைக்கு அவன் அவளின் மனத்தைக் கொய்தான். காரணம் அறியாமல் திண்டாடினாள் பல்லவி.

தகப்பனைக் கண்டதும் விதுரன் ஓடிவந்து அவன் மடிக்குள் புகுந்துகொண்டான். அவன் தலையை வருடிக்கொடுத்து உச்சி முகர்ந்தான் பாலமுரளி. அதைப் பார்த்துக்கொண்டே வந்து அவனுக்குத் தேநீர் கொடுத்தாள் பல்லவி. அவள் முகம் பார்த்தபடி வாங்கினான் அவன்.

மனம் தடுமாறினாலும், “சாப்பிடுறீங்களா?” என்று வினவினாள்.

அவன் பதில் சொல்வதற்குள், “கேட்டுக்கொண்டு இருக்காம போட்டுக் குடம்மா!” என்றபடி வந்தார் பானுமதி.

“இப்பதானே வந்தனான். கொஞ்ச நேரம் ஆகட்டும்.” என்றான் பாலமுரளி.

அப்போதே வியர்த்து விறுவிறுத்து இருந்தான். ‘தோட்டத்துக்குப் போய்விட்டு வந்தானோ…’ என்று உள்ளே ஓடினாலும், “குளிக்கிறீங்களா?” என்று வினவினாள்.

அவளைக் கேள்வியாகப் பார்த்துவிட்டுத் தன்னை ஒருமுறை குனிந்து பார்த்தான். வியர்த்திருப்பதால் சொல்கிறாள் என்று புரிந்தது. காலையில்தான் குளித்தான். வெய்யிலில் பயணித்தது இப்படி ஆகிப்போயிற்று. “அது கொஞ்ச நேரம் இருந்தா காஞ்சிடும்!” என்று சொன்னான்.

அவனை முறைத்துவிட்டு மூக்கை வேண்டுமென்றே சுளித்துக் காண்பித்தாள் பல்லவி. அவன் உதட்டினில் சன்னமாகச் சிரிப்பு அரும்பிற்று. “வேற உடுப்பு இல்லையே?” என்றான்.

“அப்பாவையும் மகனையும் பற்றி எனக்குத் தெரியும்தானே. கொண்டு வந்தனான்.”

“கட்டாயம் குளிக்கோணுமா?” என்றான் அப்போதும். அவனுக்கு என்னவோ அங்குக் குளிக்க ஒரு மாதிரி இருந்தது.

“குளிக்கத்தான் வேணும்! போங்க!” என்று அவனைத் துரத்தினாள் பல்லவி.

“வர வர நீ சரியில்ல, சொல்லிப்போட்டன்.” என்றபடி எழுந்தான் அவன். “டவலுக்கும் சாரத்துக்கும் இப்ப எங்க போறது? எனக்கு மற்ற ஆக்களின்ரய போட விருப்பம் இல்ல!” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“எல்லாம் கொண்டு வந்தனான். சோப்புக் கூட இருக்கு. நீங்க கிணத்தடிக்கு நடவுங்க. கொண்டுவாறன்!” என்றுவிட்டு வீட்டுக்குள் போனாள் பல்லவி.

‘ஆக, என்னை இஞ்சு இஞ்சா கவனிச்சு வச்சிருக்கிறாள்’ சிறு சிரிப்புடன் கிணற்றடிக்கு நடந்தான் பாலமுரளி.

அவன் குளித்துத் தயாராகி வந்தபோது, அவளும் சேலைக்கு மாறியிருந்தாள். அது அவளின் பெரியப்பாவின் வீடு என்பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றான் பாலமுரளி.

அவனைக் கண்டதும் தலை முடியை எடுத்து முன்னே போட்டுக்கொண்டு, திரும்பி முதுகைக் காட்டி, “எப்பிடி இருக்கு?” என்று வினவினாள் பல்லவி. அவள் போட்டிருந்த டிசைனை விட்டு அவன் பார்வை வேறு எங்கோ ஓட முயன்றது. அதை இழுத்துப் பிடித்தபடி, “வடிவா இருக்கு.” என்றான்.

“எனக்கும் பிடிச்சிருக்கு. மிஸ்ஸுக்கும் ஃபோட்டோ அனுப்பினான். வடிவா செய்து இருக்கிறேனாம் எண்டு பதில் போட்டிருந்தவா.” என்றபடி, தன்னிடம் இருக்கும் குட்டி குட்டி நகைகளை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.

அப்படியே அவளின் கைபையைக் குடைந்து, ஒரு செயினை எடுத்து, “இந்தாங்கோ, உங்கட செயின். தம்பிக்கு ஆக்கள் வந்ததும் போடுவம் என்ன. எனக்குத் துலச்சுப் போடுவானோ எண்டு பயமா இருக்கு. மறக்காம ஊசி குத்திவிடோணும்.” என்றவளின் முன்னே ஒரு சிறு பெட்டியை நீட்டினான் பாலமுரளி.

பார்த்ததுமே நகைப்பெட்டி என்று தெரிந்தது. வியப்புடன் அவனைப் பார்த்தபடி அதை வாங்கிப் பிரித்தாள். இலைகளைக் கோர்த்தது போன்று கழுத்தோடு அணிந்துகொள்ளும் மெல்லிய நெக்லஸ். அவள் முகம் பூவைப்போல் மலர்ந்தது. கேள்வியும் எதிர்பார்ப்புமாக அவனைப் பார்த்தாள்.

“உனக்குத்தான். போட்டுக்காட்டு.” என்றான்.

மெல்லிய நகைதான். அவனளவில் அதுவே பெரிய காரியம். இதென்ன சிறிதாக என்று முகம் சுருக்காமல், அவள் மலர்ந்து பார்த்தது நெஞ்சை நிறைத்தது. கழுத்தோரமாக அதைப் பிடித்தபடி அவன் புறம் திரும்பி நின்றாள் பல்லவி. அவளின் முடியை ஒதுக்கிவிட்டு, கொழுக்கியை மாட்டிவிட்டான் பாலமுரளி.

“எப்பிடி இருக்கு?” கண்கள் மின்ன அவனிடம் கேட்டவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள்.

மின்னும் அந்த முகத்தை பாலமுரளிக்கு என்னென்னவோ செய்யும் ஆசை எழுந்தது. ஆனால், அவர்கள் நிற்பது தாரணியின் அறையில். கதவு திறந்திருந்தது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதில், தன்னை அடக்கிக்கொண்டான்.

“வடிவா இருக்கு என்ன?” என்று கேட்டவள், “ஆனா நீங்க எனக்கு இதை வாங்கினதுக்குப் பதிலா வீட்டக் கொஞ்சம் திருத்தி இருக்கலாம். இனி மாமி வந்தா எங்க படுப்பா? ரூபா மச்சாள் லீவுல குடும்பத்தோட வந்தா இடம் காணாது. ரேகா மச்சாள் வந்தாலும் தங்குறதுக்கு வசதி இல்ல.” என்று, அவர்களின் வீட்டு நிலையை எடுத்துரைத்தாள்.

“எல்லாம் செய்யலாம். இப்போதைக்கு அம்மா வந்தா அம்மாவும் தம்பியும் விறாந்தையில படுப்பினம். நானும் நீயும் ரூம்ல.” என்று, நேற்றைய அவனுடைய கேள்விக்கு இன்றைக்கு அவனே பதிலும் சொன்னான்.

முறைக்க முடியாமல் கன்னங்கள் கதகதத்தன பல்லவிக்கு. கீழுதட்டைப் பற்றியபடி வேகமாக அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், கைப்பையில் எதையோ கிண்டுவதுபோல் முகத்தை மறைத்தாள்.

அவனுக்கும் புரிந்தது. சிறு சிரிப்புடன் ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு, வேகமாக அவளின் இடையை வளைத்து, பின் கழுத்தோரத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

error: Alert: Content selection is disabled!!