அத்தியாயம் 24
விருந்து நல்லபடியாகவே நடந்து முடிந்தது. எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான் பாலமுரளி.
பல்லவியும் தயாராக, “நாளைக்குப் போறன் எண்டு சொல்லிப்போட்டு இப்ப எங்கயடி வெளிக்கிடுறாய்?” என்று தடுத்தாள் தாரணி.
பாலமுரளியைத் திரும்பிப் பார்த்தாள் பல்லவி. சிறு முறுவலுடன் மகனை மடியில் வைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போல் அமர்ந்திருந்தான் அவன்.
‘என்னோடயே வந்திடோணும் எண்டு சொல்லிப்போட்டு இருக்கிறத பார்!’ என்று அவனை மனத்தில் அர்ச்சித்துவிட்டு, தமக்கையிடம் திரும்பி, “நாளைக்கு எண்டா எங்களைக் கூட்டிக்கொண்டு போக அவர் இன்னுமொருக்கா வரோணும் அக்கா. அது ரெண்டு வேலை எல்லா.” என்றவள், அதன் பிறகு தாரணி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
கடைசியில் பானுமதிதான், “விடு, அவளுக்கும் அங்க எத்தின வேல இருக்கும்.” என்று மகளை அடக்கினார்
கணவன் மனைவி இருவருக்குமே அங்கிருந்து புறப்பட்ட பிறகுதான் ஆசுவாசமாயிற்று. வெளியே காட்டிக்கொள்ளாத போதிலும், இப்பிரிவைக் கடப்பதற்குள் மிகவுமே சிரமப்பட்டுப் போயிருந்தனர். பயணம் முழுவதிலும் பார்வைகள் சந்தித்துச் சந்தித்து மீண்டன.
வீட்டுக்கு வந்து, அவர்களை இறக்கி விட்டுவிட்டு, “உழுத காணியப் பாத்துக்கொண்டு வாறன்.” என்றபடி மீண்டும் புறப்பட்டான் பாலமுரளி.
அங்கு வந்து சேர்ந்த பிறகுதான் தன் வீட்டுக்குள் வந்த உணர்வை அனுபவித்தாள் பல்லவி. எப்போதும் போல இரவுக்குக் கறி கட்டிக்கொடுத்திருந்தார் பானுமதி.
அதோடு உண்பதற்காகச் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, துருவிய தேங்காய்ப் பூ போட்டு ரொட்டிக்குக் குழைத்து வைத்தாள். பச்சை மிளகாயைக் கடித்துவிட்டால் விதுரன் சாப்பிடமாட்டான் என்பதில் அதைத் தவிர்த்திருந்தாள்.
“தம்பிக் குட்டி, வாங்கோ குளிப்பம்.” என்று அவனையும் அழைத்துக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தாள். வந்ததும் வராததுமாக அங்கு அணிந்த உடைகள் அனைத்தையும் ரின்சோவினுள் ஊற விட்டிருந்தாள்.
விளையாட்டுக்கு விதுரனிடமும் அவனுடைய காற்சட்டையைத் தோய்க்கும்படி கொடுத்துவிட்டு, குறுக்குக் கட்டிக்கொண்டு அணிந்திருந்ததையும் கழற்றிக் கழுவப் போட்டுவிட்டு, ஒவ்வொன்றாகத் தோய்க்க ஆரம்பித்தாள்.
இந்த விளையாட்டு விதுரனுக்கு எப்போதுமே பிடிக்கும். காற்சட்டையை அடித்துத் தோய்க்கிறேன் என்கிற பெயரில், சோப்பு நுரையை அவள் மீது தெறிக்க விட்டுக்கொண்டிருந்தான்.
“தம்பி, அம்மா தலைக்குக் குளிக்க இல்ல. தலை நனையுது பார்!” என்றபடி, தன் வேலையில் கவனமாயிருந்தாள் அவள்.
அப்போது, பாலமுரளியின் புல்லட் வீட்டுக்குள் நுழைந்தது. “என்னடா தம்பி, அப்பா நேரத்துக்கே வந்திட்டார். உழுது முடிச்சிட்டினமோ?” இயல்புபோல் அவனிடம் கேட்டாலும் தன் நிலையை எண்ணி மெல்லிய கூச்சம் எழுந்தது.
இனி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதுவே, சும்மா இருக்கிறவனை என்னைப் பார் என்று சொல்வது போலாகிவிடும். அதில், இயல்பாய் இருக்க முனைந்தாள்.
சற்று நேரத்தில் மேற் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு, அவனும் சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிணற்றடிக்கு வந்தான். அவளின் இயல்பு இன்னும் தொலைய ஆரம்பித்தது. விதுரனும் இருப்பதில் ஒன்றும் நடக்காது என்று மனத்தைத் தேற்றிக்கொண்டாலும், அவன் தன்னை இந்தக் கோலத்தில் பார்ப்பான் என்கிற நினைப்பே, அவளின் கன்னங்களைக் கதகதக்க வைக்க ஆரம்பித்தது.
“உடுப்பக் கழட்டு தம்பி.” என்று மகனுக்குக் கழற்றி விட்டுவிட்டு, உள்ளாடையோடு அவனைச் சீமெந்து பூசிய கிணற்றடி நிலத்தில் இருத்தி, தண்ணீரை அள்ளி ஊற்ற ஆரம்பித்தான் பாலமுரளி.
அதோடு இவளின் வாளியையும் நிறைத்துவிட்டான். இவள் உடைகளைக் கழுவ கழுவ, அவன் அந்த வாளியை நிறைத்து விட்டது மனத்துக்கு இதம் சேர்த்தது. இல்லாவிட்டால் இடுப்பு முறிந்திருக்கும்.
விதுரனை அவன் குளிக்கவார்த்து முடித்தபோது இவளும் உடைகளைக் கழுவி முடித்திருந்தாள்.
“அப்பிடியே தம்பிக்குத் துடச்சிட்டு உடுப்பப் போட்டு விடுங்கோ. நான் குளிச்சிட்டு ஓடி வாறன்.” என்றவள் கொடியில் உடைகளைக் காயப்போடப் போனாள்.
அவள் வந்தபோது அப்பா, மகன் இருவரையும் காணவில்லை. ‘அப்பாடி, தம்பியோட போய்ட்டார்.’ மனத்தில் நிம்மதி எழ, அவள் வாளியைத் தூக்கி கிணற்றினுள் போட்டபோது, கயிற்றைப் பற்றியது அவன் கரம்.
திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் பல்லவி. அவளை விலக்கிவிட்டு, “நான் அள்ளித் தாறன், நீ குளி.” என்றான் அவன்.
“இல்ல இல்ல. அது நானே குளிப்பன். நீங்க போங்கோ.” என்றவளின் பேச்சு, அவன் பார்த்த பார்வையில் நின்றுபோயிற்று.
அவன் கிடுகிடு என்று அள்ளி வாளியை நிரப்ப, அதைவிட வேகமாக ஒரு கிண்ணத்தினால் அள்ளித் தன்மேல் ஊற்றினாள் பல்லவி. அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. சோப் போட்டாளா இல்லையா என்றே அவளுக்குத் தெரியாது. “போதும், நான் குளிச்சிட்டன்.” என்றுவிட்டுத் துவாலையோடு ஓடியே போனாள்.
“எனக்கும் ஒரு சாரமும் துவாயும் கொண்டுவந்து போட்டுவிடு.” என்றுவிட்டு அவனும் குளிக்க ஆரம்பித்தான்.
வேகமாக உடையை மாற்றிக்கொண்டு வந்து அவன் சொன்னதைச் செய்தாள். அதைவிட வேகமாகத் தலையை இழுத்து, விளக்கேற்றி, கண்களை மூடிக் கை கூப்பியவளுக்குப் பதற்றம் இன்னுமே அடங்கவில்லை. விதுரனையும் கூப்பிட்டுக் கும்பிட வைத்து, திருநீறு பூசிவிட்டாள்.
அடுத்ததாகக் குசினிக்குள் ஓடினாள்.
‘நல்ல காலம் முதலே ரொட்டிக்குக் குழைச்சு வச்சிட்டன்’ என்று ஆசுவாச மூச்சை இழுத்துவிட்டவள், வெளியே இழுத்து வைத்திருந்த விறகுகளை அடுப்புக்குள் தள்ளி, தேங்காய்த் தும்பைப் போட்டுத் தீ மூட்டினாள்.
அப்படியே அது காய்ந்த விறகுக்கட்டையிலும் பற்றிக்கொள்ள, தோசைக் கல்லைத் தூக்கி அதன் மீது வைத்தாள். வட்ட சில்வர் பிளேட்டை எடுத்து, அதன் பின்புறத்தில் எண்ணெய் தடவி, ரொட்டியின் ஒரு உருண்டையை எடுத்து, அதில் வைத்து வட்டமாகத் தட்ட ஆரம்பித்தாள்.
அதற்குள், “அம்மா, பசிக்குது.” என்றபடி வந்தான் விதுரன்.
“இந்தா, ரொட்டியை அடுப்பில போட்டுட்டன். ரெண்டு நிமிசத்தில முடிஞ்சிடும். சாப்பிடலாம் சரியா?” என்றவள், அவனைத் தன் அருகிலேயே அமர்த்திக்கொண்டாள்.
அங்கிருந்த பாதித் தேங்காய் மூடியை எடுத்து வாயில் வைத்துக் கடித்தான் அவன். சிறு சிரிப்புடன் அவனை நோக்கிவிட்டு, “வெட்டித் தரவா?” என்று வினவினாள்.
“ம்கூம்!” என்றுவிட்டுக் கடித்தே சாப்பிட்டான் அவன்.
“கனக்கச் சாப்பிடுறேல்ல. பிறகு பசிக்காது.” என்றவள் வேகமாக முதல் ரொட்டியைச் சுட்டு எடுத்து, சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து ஒரு தட்டில் போட்டாள். அதன் மீது பானுமதி தந்துவிட்ட பருப்புக் கறியை விட்டு, ஆட்டிறைச்சிக் கறிக்குள் இருந்த இறைச்சியையும் ஈரலையும் குழம்பு இல்லாமல் வடித்து எடுத்துப் போட்டுக் கொடுத்தாள்.
இறைச்சி என்பதில் ஆசையாகச் சாப்பிட்டவனைப் பார்த்தவளுக்கு மனம் கனிந்து போனது. “அப்பா தலை இழுத்து விடேல்லையா?” அவன் தலை கலைந்திருப்பதைக் கவனித்துக் கேட்டாள்.
“இழுத்துவிட்டவர். நான்தான் கலைச்சிட்டன்.” என்றான் அவன்.
இதற்குள், குளித்துவிட்டு வந்து விதுரனின் அருகில் தானும் அமர்ந்துகொண்டான் பாலமுரளி.
“இண்டைக்கு என்ன எண்டு தெரியா, அகோரப் பசி பசிக்குது.” என்றவன், மகனின் தட்டில் இருந்து ஒரு ரொட்டித் துண்டைத் தூக்கி வாயில் போட்டான்.
“நீங்க இப்பிடி நேரத்துக்கு வருவீங்க எண்டு தெரியாது. இல்லாட்டி முதலே செய்திருப்பன். பொறுங்க, இப்ப முடிஞ்சிடும்.” என்றவள், அதற்குள் சுட்டிருந்த அடுத்த ரொட்டியை இன்னொரு தட்டில் வைத்து, கறிகளையும் போட்டு அவனுக்குக் கொடுத்தாள்.
ரொட்டி சுடுவதில் கவனமாக இருந்தாலும், இப்படி அப்பாவும் மகனும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பொழுதுகள் பல்லவிக்கு மிகவுமே பிடிக்கும் என்பதில் அவர்களை ரசித்தாள். அடுப்பின் அருகிலேயே இருந்து, மொறுமொறுப்பாக அவள் சுட்டுத் தருவதை அவனும் வயிறாறச் சாப்பிட்டான்.
உணவு முடிந்த பிறகும் அவன் அங்கேயே அமர்ந்திருந்தான். விதுரன் உறக்கத்தை விழிகளில் நிரப்பி வைத்துக்கொண்டு, தகப்பனை ஒரு வழி செய்துகொண்டிருந்தான். அதைப் பார்த்துவிட்டு, “நீங்க போய் டீவிய பாருங்கோ. நான் சாப்பிட்டு, எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு வாறன்.” என்றாள் அவள்.
“ஒவ்வொரு நாளும்தானே டீவி பாக்கிறம். நீ சாப்பிடு!” என்றவன், மகனை மடியில் போட்டுத் தட்டிக்கொடுத்தான்.
பார்வை ஒரு முறை சின்னவனிடம் சென்று வர, “நேற்று அங்க பெரியப்பா வீட்டை, முத்தத்தில விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளையைத் திடீரெண்டு பாத்தா காணேல்ல. நான் பயந்தே போய்ட்டன். தேடிக்கொண்டு போனா ரெண்டு வீடு தள்ளி இருக்கிற கிரவுண்ட்ல பெடியலோட விளையாடிக்கொண்டு நிக்கிறார். என்ன எண்டு கேட்டா அவே எல்லாரும் தன்ர பிரெண்ட்ஸாம், பயமில்லையாம் எண்டு கதை. எனக்குத் தெரிஞ்ச பிள்ளைகள்தான். எண்டாலும் அவருக்கு அது புது இடமெல்லா. இப்பிடி எல்லாம் போகக்கூடாது எண்டு நானும் சொன்னனான். நாளைக்கு நீங்களும் ஒருக்கா சொல்லிவிடுங்கோ.” என்று சொன்னாள் பல்லவி.
“அந்தளவுக்கு வளந்திட்டாரா ஆள்?” பார்வை மகனில் இருக்க, வியப்புடன் கேட்டான் அவன்.
“அதான். இப்பிடிச் சொல்லாம கொள்ளாம போறதோ எண்டு கேக்கிறன், சிரிச்சுச் சமாளிக்கிறார். நாளைக்கு உங்களையும் சமாளிக்கப் பாப்பார், விடாதீங்கோ.” என்றவளின் பேச்சில் மலர்ந்த புன்னகையோடு, மகனின் நெற்றியில் கேசத்தை ஒதுக்கிவிட்டு அழுத்தி முத்தமிட்டான் அவன்.
அவளால் அந்தக் காட்சியிலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை. அவளை எப்போதும் ஈர்ப்பது, மகன் மீதான அவனது பாசமும், அவனுக்கு ஒன்று என்றதும் அவன் கொள்கிற கோபமும்தானே. பார்த்தது பார்த்தபடி இருக்க, அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டவளுக்குத் தான் பிடிபட்டுக்கொண்டோம் என்று தெரிந்தது. அதன் பிறகு அவள் நிமிராவே இல்லை. உணவை முடிப்பதில் கவனம் செலுத்தினாள்.
சுவரில் சாய்ந்தபடி, உறங்கிவிட்ட மகனை மடியில் வைத்துக்கொண்டு, அவளைத்தான் பார்த்தான் பாலமுரளி. குளித்து, ஒற்றைப் பின்னலோடு, முகத்துக்குப் பவுடர் போட்டு, குங்குமம் வைத்து, நெற்றியில் திருநீறு பூசியிருந்தாள். மனத்துக்கு இதம் சேர்க்கும் மங்களம் நிறைந்த முகம் அவளுக்கு.
உணவை முடித்து, பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கழுவுவதற்காக அவள் வெளியே போகவும், அவனும் எழுந்து மகனோடு பாயில் சரிந்துகொண்டான்.
வேலைகளை முடித்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தாள் பல்லவி. “பாய இஞ்ச கொண்டுவா.” என்றான் அவன், மகனின் உறக்கம் கலைந்துவிடாத மெல்லிய குரலில்.
அவளுக்கு முகம் சூடாக ஆரம்பித்தது. அதை மறைக்க முயன்றபடி விதுரனைக் கண்ணால் காட்டினாள். “பரவாயில்ல கொண்டுவா.” என்றான் அவன்.
அவள் தன்னுடைய பாயை விதுரனின் அருகில் விரிக்கப்போக, தன் பக்கத்தைக் காட்டினான் அவன். ஒருகணம் தனக்குள் வெட்கிவிட்டு அவனருகில் விரித்துவிட்டுப் படுத்தாள். மார்பில் இருந்த மகனை ஒரு கரம் வருடிக்கொடுத்துக்கொண்டிருக்க, மற்றக் கையால் அவளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் பாலமுரளி.
கூச்சம், வெட்கம், தடுமாற்றம் என்று எல்லாம் கலந்து கட்டி அவளைத் தாக்கினாலும், நாம் மூவரும் ஒரு குடும்பம் என்று காட்டும் அவனுடைய அந்தச் செய்கை மிகவும் பிடித்திருந்தது. அவன் கரத்திலிருந்து பரவிய வெம்மை தேகம் முழுவதையும் ஆக்கிரமிக்க, அவன் கையிலேயே தலையைச் சாய்த்து, விழிகளை மூடிக்கொண்டாள்.
அவளை அணைத்திருந்த அவன் கை அவள் தலையை வருடிக்கொடுக்கவும், விதுரனைப் போலவே தானும் அவன் மார்புக்குள் ஒன்றிக்கொள்ள வேண்டும் போல் எழுந்த உணர்வில், மிகவும் தடுமாறிப்போனாள் பல்லவி.
இனிமையான ஆழ்ந்த அமைதியில் கழிந்த நொடிகளின் பின்னே, அவன் மற்றப் பக்கம் மகனைக் கிடத்துவது தெரிந்தது. அவள் இப்போதும் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள். “பூனை கண்ணை மூடினா உலகமே இருண்டுட்டுது எண்டு நினைக்குமாம்.” அவள் புறமாகச் சரிந்து காதோரமாகச் சொன்னான் அவன்.
படக்கென்று விழிகளைத் திறந்து அவனை முறைத்தாள் பல்லவி. “குளிக்கேக்க வடிவா இருந்தாய்.” என்றான் குறும்புச் சிரிப்புடன் கண்ணடித்து. அவள் முகம் குங்குமமாகச் சிவந்து போனது. அவன் கையைப் பிடித்துக் கிள்ளிவிட்டாள். பக்கத்தில் மகனும் இருந்ததில் சத்தமில்லாமல் சிரித்தான் பாலமுரளி.
“அதென்ன நான் பாக்காத நேரம் என்னைப் பாக்கிறது. நான் பாத்தா வேற எங்கயோ பாக்கிறது?” அவளை மூக்கோடு மூக்குரசும் தூரத்தில் வைத்துக் கேட்டான் அவன்.
“அது…”
“ம், சொல்லு அது?”
“விதுவ நீங்க பாசமா பாப்பீங்க. அதுதான்.”
“இப்ப என்ன, உன்னில நான் பாசமில்லை எண்டு சொல்லுறியா?”
“நீங்க என்னில பாசமா?” என்றாள் விழிகளைத் தழைத்துக்கொண்டு. மனம் மட்டும் அவன் பதிலுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தது.
அவனும் உடனேயே பதில் சொல்லிவிடவில்லை. அவள் கன்னத்தை வருடிக்கொடுத்தான். மெல்ல விழிகளை உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தாள் பல்லவி. “தம்பிக்காக எண்டு நினைச்சுத்தான் உன்னைக் கட்டினனான். ஆனா இப்ப, நீ வேணும் எனக்குக் காலத்துக்கும். நான் உன்னில் பாசமா இல்லையா எண்டுறதை நீயே கண்டுபிடி.” என்றவன், அவளின் இதழ்களின் வழியே அதற்கான வழியை அவளுக்குக் காட்டினான்.

