அத்தியாயம் 26
காலம் விரைய ஆரம்பித்தது. தான் அடி மனத்திலிருந்து வெறுத்த திருமண வாழ்வு இத்தனை நிறைவானதாகவும் ஆத்மார்த்தமானதாகவும் மாறும் என்று பல்லவி கொஞ்சமும் எண்ணிப்பார்க்கவில்லை. அவ்வளவில் அவள் வாழ்வை வண்ண மயமாக மாற்றித் தந்திருந்தான் பாலமுரளி.
அவள் தந்தையை அவளால் என்றைக்குமே ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனால், கணவனின் நேசமும், அவன் எடுத்துச் சொன்னதும் சேர, ஒரு முறை அவர்கள் ஊரில் வைத்து அவரை எதேற்சையாகப் பார்த்தபோது, “எப்பவுமே என்னால உங்களை மண்ணிக்கேலாது. ஆனா, என்னை வளத்து ஆளாக்கின பெரியப்பாவையும், வயசான அப்பம்மாவையும் நோகடிச்சுப் பாக்கிற தைரியம் எனக்கில்ல. தயவு செய்து போய் பெரியப்பா வீட்டில இருங்க.” என்று அவர் முகம் பாராமலேயே ஒட்டாத குரலில் சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.
இதையெல்லாம் பாலமுரளி கவனித்துக்கொண்டுதான் இருந்தான். வீட்டுக்கு வந்து கிடைத்த தனிமையில் அவன் மார்பில் வந்து சாய்ந்துகொண்டு, “நான் சொன்னது சரிதானே?” என்றாள் எழும்ப மறுத்த குரலில்.
பரீட்சசை எழுதிவிட்டுப் பெறுபேறுக்காய்க் காத்திருக்கும் மாணவியின் தவிப்பு அவளிடம்.
சிறு முறுவலுடன் அவளை இதமாய்த் தன்னுடன் சேர்த்தணைத்துக்கொண்டு, கலங்கிக் கலக்கத்தைச் சுமந்திருந்த அவள் விழிகளில் தன் உதடுகளை ஒற்றி எடுத்து, அவள் செயலில் தனக்குப் பரிபூரண சம்மதம் என்பதைக் காட்டினான்.
சிவலோகநாயகிக்குப் பேத்தி மீதிருந்த கோபம் கரைந்தே போயிற்று. இத்தனை காலமும் மகன் தம்மோடு வந்து இருக்கிறான் இல்லையே என்று புறுபுறுத்துக்கொண்டு திரிந்தவருக்கு மகன் வீட்டோடு வந்ததும் பழையபடி ஒட்டிக்கொள்ள முடியவில்லை. பல்லவி அன்று கேட்டுவிட்டுப் போன கேள்விகள் உலுக்கின. பேத்திகள் இடத்தில் மருமகளை வைத்துப் பார்த்தபோது அவராலேயே அவர் மகனை மன்னிக்க இயலாமல் போயிற்று.
என்ன செய்ய? எல்லாம்தான் முடிந்துபோயிற்றே. அவர் காலமும் எத்தனை காலத்திற்கு என்று தெரியாது என்பதில் கண்ணுக்குத் தெரியாத விலகலைக் கடைப்பிடித்தபடி ஒதுங்கி இருந்துகொண்டார். இப்போதெல்லாம் பல்லவி அங்கே ஊருக்கு வருகிறாள் என்றால் அவரே மகனை எங்காவது அனுப்பி விடுவார்.
மூன்று மாத விசாவில் சென்ற கலாவதி மேலும் மூன்று மாதங்கள் அங்கேயே தங்கிவிட்டு நாடு திரும்பினார். அவரை அழைத்துச் செல்ல குடும்பமாக வந்து நின்ற கணவன் மனைவியின் முகங்களில் தெரிந்த மலர்ச்சியும், அவர்களுக்குள் இருந்த அந்நியோன்யமும் அவர் உள்ளத்தை நிறைத்தது. எல்லாவற்றையும் விட முக்கியமாகப் பேரனும், அவனில் தெரிந்த மாற்றங்களும், பல்லவியோடு அவன் ஒட்டிக்கொண்டிருக்கும் பாங்கும் கண்டு கண்ணீர் சுரந்துபோயிற்று அவருக்கு.
இதே பேரனை அடித்துவிட்டாள் என்றுதான் ரூபாக்குக் பிள்ளைகள் பிறந்ததைச் சொல்லாமல் விட்டார். இன்று தன் தவறு பெரிதாய் உறுத்த, “பெரிய மனுசியா நடக்காம விட்டுட்டன். குறை நினைக்காதீங்கோ குஞ்சு.” என்றார் அவள் கையைப் பற்றிக்கொண்டு.
அவளுக்கும் ஏன் சொல்கிறார் என்று புரிய, “பரவாயில்லை மாமி. நானும் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்.” என்று இன்முகமாகவே அவரைத் தேற்றினாள் பல்லவி.
வீடு வந்து இறங்கியவரின் புருவங்கள் உயர்ந்தே போயின. வீட்டில் வேலை நடப்பதாக பாலமுரளில் சொன்னாத்தான். இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவில் இருந்த வீட்டையும் பழுது பார்த்து, பக்கத்தில் விசாலமான ஒரு அறையும் அதோடு கூடவே இன்னொரு துண்டினையும் இழுத்துக் கட்டியிருந்தான்.
அங்கிருந்த தையல் மெசினும், துணி மணிகளும் அந்த இடம் எதற்கு என்று சொல்லிற்று. கூடவே கதவு ஜன்னல்கள் அத்தனையும் பழுது பார்க்கப்பட்டு, புது ஃபேன் எல்லா அறைகளிலும் பூட்டப்பட்டு, பெரிய நிலைக்கண்ணாடி, பிளாஸ்ட்டிக் சாப்பாட்டு மேசை என்று வீட்டின் தரத்தையே உயர்த்தியிருந்தார்கள்.
சமையலறையும் முன்னர் இருந்து சமைப்பது போன்று இருந்த நிலை மாறி, உயர்த்திக் கட்டி, மேடை அமைத்து, கேஸ் அடுப்பு புதிதாகக் குடி வந்திருந்தது.
பார்க்க பார்க்க அகமகிழ்ந்துபோனார் அவர்.
“கடனேதும் பட்டனீங்களாய்யா?” பெரும் தொகை செலவாகியிருக்கும் என்பதில் வினவினார்.
“உங்கட மருமகள் கடன்பட விட்டுட்டுத்தான் மற்ற வேலை பாப்பாள். அவளின்ர நகைகள் கொஞ்சம் அடகு வச்சனான் அம்மா. மிச்சம் சொந்தக் காசுதான்.”
நடுத்தர வர்க்கம் இப்படித்தானே ஒவ்வொரு படியாக ஏறுவது. மனம் நிறைய திரும்ப திரும்ப வீட்டினைச் சுற்றிப் பார்த்தார்.
“நீங்க வந்து இப்பிடிப் பாக்கோணும் எண்டுதான் சொல்லாம வச்சிருந்தனாக. இனி நீங்களும் தம்பியும் விறாந்தைல படுக்கத் தேவை இல்லை.” என்றவனின் பேச்சில் பல்லவிக்கு முகத்தை எங்கே கொண்டுபோய் வைப்பது என்று தெரியவில்லை.
அவனும் முதலில் இயல்பாகத்தான் சொல்லிக்கொண்டு வந்தான். திடீரென்று மனைவியில் தெரிந்த மாற்றத்தில்தான் அவன் சொன்னதன் பின்னால் இருந்த மறைபொருளில் அவனுக்கும் இலேசாய் முகம் சிவந்து போயிற்று. “நீங்க பாருங்கம்மா, வாறன்.” என்று தப்பித்து ஓடிவிட்டான்.
காலாவதி இதையெல்லாம் கவனிக்காமல் இல்லை. தனக்குள் சந்தோசமாகச் சிரித்துக்கொண்டு பேரனைக் கவனித்தார். அவனும், “அப்பம்மா, இஞ்ச பாருங்கோ. அம்மா எனக்கு வாங்கித் தந்த சைக்கிள்.” என்று புதிதாக அங்கே கரையாக நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை அவரிடம் காட்டினான்.
நம்ப முடியா வியப்பும் ஆனந்தமுமாய்ப் பல்லவியைத் திரும்பிப் பார்த்தார் கலாவதி. மலர்ந்த முறுவலுடன் நின்றிருந்தாள் அவள். அவர் இங்கிருந்து புறப்படும்போது ஒதுக்கமும், பற்றும் இல்லாமல் நின்ற பல்லவி இல்லை இவள். அந்த வீட்டை, அந்த வீட்டு மனிதர்களைத் தன் குடும்பமாய் ஏற்று, தன்னையும் அவர்களில் ஒருத்தியாய் இணைத்துக்கொண்டவள் என்று தெரிந்தது. பேரன் அறியாக் கணம் ஒன்றில் அவளை ஆத்மார்த்தமாக அணைத்து, உச்சி முகர்ந்து விடுவித்தார் அவர்.
அது எப்படி நிகழ்ந்தது என்று பல்லவிக்கும் தெரியாது. அவள் காட்டிய அன்பு அந்த மாற்றத்தை உண்டாக்கியிருந்தது. ஒரு நாள் இரவு கண் விழித்த விதுரன், அம்மா என்று சிணுங்கி அழுததில் விழித்த பல்லவி, ஓடிப்போய் அவனைக் கட்டிக்கொண்டு அழவே செய்திருந்தாள்.
என்னவோ வாழ் நாள் சாதனை புரிந்த மகிழ்ச்சி அவள் முகத்தில். வேறு எதுவுமே வேண்டாம் போலொரு பரவச நிலை. அன்றிலிருந்து இன்னுமின்னும் அதிகமாய் அவனை கண்ணுக்குள் பொத்தி வைத்துப் பார்த்துக்கொண்டாள். அதைவிட அவள் மனத்தில் கணவனோடான நெருக்கமும் பிணைப்பும் அதன் பிறகு இன்னுமே அதிகமாகிப்போனதை அவளே உணர்ந்தாள். அவர்களுக்கான நெருக்கமான பொழுதொன்றில், “தம்பி உன்னை அம்மா எண்டு கூப்பிட்டாத்தான் என்னோட நீ முழு மனதா ஒட்டு உறவாடுவியா?” என்ற கணவனின் ஊடல் கேள்வியில் அதை அவனும் கண்டுகொண்டிருக்கிறான் என்று கண்டு, அவன் முகம் பார்க்க முடியாமல் போயிற்று அவளுக்கு.
அன்னையிடம் இருந்து தப்பித்துப்போனவன் வருகையில் பலசரக்குக் கடைக்குப் போய்விட்டு வருகிறான் என்று அவன் கையில் இருந்த பைகள் சொல்லின. அடுப்படியில் நின்றிருந்தவளிடம் வந்து, “கோழி இறைச்சியும் இருக்கு. வெட்டியே வாங்கிக்கொண்டு வந்திட்டன். சமை.” என்று கொடுத்தான் அவன்.
அன்றைய அவளின் பேச்சிலிருந்து அவள் வெளிப்படையாகச் சொல்லாதபோதிலும் ஏழ்மை வீட்டினரான பெரியப்பா வீட்டினருக்குச் சுமையாக இருந்துவிடக் கூடாது என்று மாமிச வகைகளை விட்டு, அது விடுபட்டே போயிற்று என்று புரிந்து மிகுந்த கவலை கொண்டவன் இப்போதெல்லாம் அவளை விடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவளை இறைச்சி வகை சாப்பிடப் பழக்கியிருந்தான். கோழி என்றால் இப்போது விரும்பியே உண்பாள் என்பதால் அதை வாங்கி வந்திருந்தான்.
கணவனின் உள்ளம் அறிந்து உள்ளே நெகிழ்ந்தாலும், கலாவதி எங்கே என்று எட்டிப் பார்த்துவிட்டு அவனை முறைத்தாள் பல்லவி.
“என்ன முறைப்பு?” காரணம் தெரிந்தும் சும்மா அதட்டினான் அவன்.
“இப்பிடித்தான் மாமிட்டச் சொல்லுவீங்களா?” என்றதும் அவன் முகத்தில் சின்ன முறுவல்.
“எனக்கும் லைட்ட வெக்கமா போச்சடியப்பா!” என்றான் தலையைக் கோதிவிட்டபடி.
அவனையே சில கணங்களுக்கு இமைக்காது பார்த்தவள் அவனே எதிர்பாரா நொடி ஒன்றில் அவன் முகத்தை இழுத்து, உதட்டில் ஆழமாய் முத்தமிட்டு விடுவிக்கவும் ஆனந்தமாய் அதிர்ந்துபோனான் அவன்.
“லவி மா!” என்று அவன் நெருங்க, “உஷ்! மாமி!” என்று வாயில் விரல் வைத்து அவனை அடக்க முயன்றாள்.
பக்கத்து வீட்டுச் சுதா எப்போதுமே அவனுக்கு உதவுகிறவள் ஆயிற்றே. “என்ன கலா மாமி, வந்தாச்சுப் போல. அப்பிடியே நாலு சொக்லேட்டை எடுத்துக்கொண்டு எங்கட வீட்டுப் பக்கமும் வந்து எட்டி பாக்கிறது!” என்று அங்கே தன் வளவில் நின்றே குரல் கொடுத்தாள்.
காலாவதியும் அவள் சொன்னதுபோன்று சுவிஸில் இருந்து கொண்டுவந்த சொக்லெட்ஸை எடுத்துக்கொண்டு, “பல்லவி, சுதாட்ட ஒருக்கா போயிற்று வாறனம்மா.” என்று இவளிடம் சொல்லிவிட்டு, சின்னவனோடு பக்கத்து வீட்டுக்கு நடையைக் காட்டினார்.
இப்போது அவளைப் பார்த்துக் கண்ணால் சிரித்தான் பாலமுரளி. அவள் நழுவி அங்கிருந்து வெளியே செல்ல முயல, அடுப்படிக் கதவை அடைத்துவிட்டு, “இப்ப என்ன செய்தனி?” என்று அவளை நெருங்கினான் பாலமுரளி.
உள்ளம் உந்திய கணத்தில் செய்த காரியம் அது. அதற்கு விளக்கம் கேட்பானா இவன்? “விடுங்க நீங்க!” என்று அப்போதும் ஓட முயன்றவளைத் தூக்கிச் சமையல் மேடையில் அமர்த்தினான் அவன்.
“மாமி வந்தாலும்…”
“வந்தா தெரியும். இல்லாட்டியும் கதவு மூடித்தான் இருக்கு.” என்றுவிட்டு அவள் முகம் தாங்கி, “என்ர வாழ்க்கைக்க வந்ததுக்கு, இப்பிடி ஒரு நிம்மதியான வாழ்க்கையத் தந்தத்துக்கு, தம்பிய நல்ல பிள்ளையா பாத்து பாத்து வளக்கிறதுக்கு எல்லாத்துக்கும் தேங்க்ஸ் செல்லம்!” என்று அவள் முகம் முழுவதும் முத்து முத்தாக முத்தமிட்டான் பாலமுரளி.
“அப்ப நான் என்ன சொல்லுறது?” எனும்போதே அவள் குரல் கமறிற்று
“சந்தோசமா இருக்கிறியா?” என்றான் அவள் முகம் தாங்கி.
“இப்பிடி ஒரு வாழ்க்கையைத் தருவீங்க எண்டு நினைக்கவே இல்ல.” என்றாள் கண்ணீர் கன்னத்தில் உருள.
அதைத் தன் உதடுகளாலேயே ஒற்றி எடுத்துவிட்டு, “அப்ப ஒரு பிள்ளை பெறுவமா?” என்றான் அவன் அவளையே பார்த்து.
ஆனந்தமாய் அதிர்ந்து அவனையே பார்த்தாள் அவள்.
“ஆசையா இருக்கு.” அந்த ஆசை கண்களில் மின்னச் சொன்னான்.
“எனக்கும்தான்…” என்று அவள் இழுக்க, “இழுவ பிழையா இருக்கே.” என்றான் அவன்.
சூடாக ஆரம்பித்துவிட்ட முகத்தை அவன் மார்பில் புதைத்து, “மாமியும் வந்திட்டா. முந்தி மாதிரி எங்களுக்கு நேரமும் கிடைக்காது. அதால…”
“அதால…” அடக்கப்பட்ட சிரிப்போடு எடுத்துக்கொடுத்தான் அவன்.
“ச்சு ஒண்டுமில்ல!” அவனுக்குப் புரிந்துவிட்டது என்று தெரிந்து அவளுக்கு இன்னுமே வெட்கமாயிற்று.
“அடி கள்ளி!” என்று அவளை அள்ளிக்கொண்டவனுக்கும் ஆனந்தமே.
முற்றும்.

