மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கனவே வந்துவிட்ட ஆரவாரம் தெரிந்தது. இவளை அழைத்துச் சென்று ஒரு அறையில் அமர்த்தினர். அவள் நெஞ்சில் மிகுந்த கலக்கம் உண்டாயிற்று. அதைப் பகிர யாருமில்லா நிலையில், தன்னை நிலைப்படுத்திக்கொள்ள தனக்குள்ளேயே போராடினாள். யார் யாரோ வந்தார்கள். என்னென்னவோ கேட்டார்கள். என்னென்னவோ சொன்னார்கள். எல்லாவற்றுக்கும் ஒற்றைத் தலையசைப்பால் பதில் சொன்னாள். எதையும் கருத்தில் பதிக்கும் நிலையில் அவள் இல்லை.
“பொம்பிளையக் கூட்டிக்கொண்டு வரட்டாம்..” சலசலப்பாய்ப் பல குரல்கள் கேட்கவும், தொண்டையை அடைத்துக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, மனையில் சென்று அமர்ந்தாள்.
சடங்குகள் ஆரம்பித்தன. ஐயா சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக மாறிப்போனாள். இரண்டு வலிய கரங்கள் அவள் கழுத்தைச் சுற்றிவந்து தாலியைப் பூட்டிற்று. அதிர்ச்சியும் அச்சமுமாய் நிமிர்ந்து பார்த்தாள்.
இயல்பிலேயே கடினத்தன்மை கொண்ட அடர்ந்த கருமை படிந்த முகம். அதில், இளக்கம் மருந்துக்கும் இல்லை. அவன் விழிகளும் அப்போது அவளைத்தான் நோக்கிற்று. அதுவும் ஒருவித ஆராயும் தன்மையுடன். நெஞ்சு பயத்தில் படபடக்க ஆரம்பிக்க வேகமாகப் பார்வையைத் தளைத்துக்கொண்டாள்.
இனி அவன் அவளின் கணவன். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தவளின் விழிகள் கண்ணீரில் தத்தளித்தது. அவளின் உச்சியில், தாலியில் எல்லாம் அவன் குங்குமம் இட்டபோதெல்லாம் மேனி நடுங்கிற்று.
ஒரு வழியாக அனைத்துச் சடங்குகளும் முடிந்தன. பகல் உணவும் கோயிலிலேயே வழங்கப்பட்டது. ஒரு கரையாக மாப்பிள்ளையும் பெண்ணும் அமரவைக்கப்பட்டார்கள்.
சற்று நேரத்தில், “இதப் பிடி!” என்று கையில் இருந்த மாலையை அவளிடம் கொடுத்துவிட்டு, எங்கோ எழுந்துபோனான் அவன், அவளின் கணவன் பாலமுரளி.
அவனுக்குத் தந்தை கிடையாது. சிறுவயதிலேயே இறந்துபோயிருந்தார். அதில், அவனுடைய இந்தத் திருமணத்தில் கூட அவன்தான் அனைத்தையும் கவனித்துச் செய்யவேண்டியிருந்தது. மனையில் இருந்தபோதே ஆட்களைக் கைகாட்டி அருகில் அழைத்துப் பேசுவதும், ஏதேதோ சொல்வதுமாகத்தான் இருந்தான். திருமணம் முடிந்த பிறகு, தானே எழுந்து சென்று அலுவல்களைப் பார்த்துவிட்டு வந்தான்.
“தம்பி, கலியாணம் உங்களுக்குத்தான் நடக்குது. கொஞ்சம் பொறுமையா இருங்கோ.” என்று ஐய்யர் சொன்னதைக் கூட அவன் காதில் விழுத்தவில்லை.
அப்போதெல்லாம் மாலையைத் தந்துவிட்டுப் போகவில்லை. இப்போது மட்டும் ஏன்?
அவளின் கேள்விக்குப் பதிலாக ஒரு சிறுவனைத் தூக்கிக்கொண்டு வந்தான் அவன். பல்லவி எப்படி உணர்வது என்று தெரியாத நிலையில் அவனையே பார்த்திருந்தாள். அவனுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கிறான் என்று தெரியாமல் இல்லை. என்றாலும், அதை நேரில் காண்கையில் ஜீரணிக்கவே முடியவில்லை.
“என்னத்துக்குத் தம்பி சிணுங்கிக்கொண்டே இருக்கிறாய்?” மடியில் இருந்த மகனிடம் கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
“உங்களிட்ட வர அப்பம்மா விடேல்ல அப்பா.” முற்றிலும் சிணுக்கம் தீராத குரலில் சொன்னான் அவன்.
“அதுக்கு அழுறதா?” மகனின் முகத்தைத் துடைத்துவிட்டு, தலையையும் கையால் கோதிவிட்டான் பாலமுரளி. பார்த்துக்கொண்டிருந்தவளின் நிலை மிக மோசமாக இருந்தது.
அவள் நிலையை அறிந்தோ அல்லது இயல்பாகவோ அவளின் அருகில் வந்து அமர்ந்தபடி, “விடிஞ்சதில இருந்து தகப்பன் கவனிக்கவே இல்லை எண்டு ஆளுக்கு முகம் சரியில்ல. அதுதான்.” என்றார் அவளின் மாமியார் கலாவதி.
அதற்கு என்ன சொல்வது என்றுகூடத் தெரியாமல் அவரைப் பார்த்தாள் பல்லவி. அவரும் அவளின் கையைப் பற்றிக்கொண்டார். “தாயில்லாப் பிள்ளை அம்மா. நாளைக்கு நானும் வெளிக்கிட்டுடுவன். நீங்கதான் தாயா இருந்து பாக்கோணும் ஆச்சி. உங்கள நம்பித்தான் அவனை விட்டுட்டுப் போறன்.” என்றார் கரகரத்த குரலில்.
அவள் பதில் சொல்லும் அவசியம் இல்லாமல் இடையில் புகுந்தான் அவன். “அவனுக்கு முன்னால இப்பிடியெல்லாம் கதைக்காதீங்க எண்டு எத்தின தரமம்மா உங்களுக்குச் சொல்லுறது?” சத்தமே இல்லாமல் அதட்டியவனின் குரலில் அவளுக்குத் தூக்கிப்போட்டது. அதில், சுளித்த புருவங்களுடன் திரும்பி அவளைப் பார்த்தான் அவன். அவளுக்கு வெளிப்படையாகவே நடுங்குவது போலிருக்க வேகமாகத் தலையைக் குனிந்துகொண்டாள்.
“அவன் அப்பிடித்தானம்மா. எல்லாத்துக்கும் கோவப்படுவான். நீங்க பயப்பிடாதீங்கோ!” என்று தைரியம் கொடுத்தார். பேரனின் பார்வை இவளில் இருப்பதைக் கண்டுவிட்டு, “என்னப்பு பார்வ? இனி இவாதான் உன்ர அம்மா, சரியோ? அச்சாப்பிள்ளையா அம்மா சொல்லுறதக் கேக்கோணும், என்ன?” என்று அவர் அவனுக்கு விளக்கிக்கொண்டிருக்க, அந்த, ‘அம்மா’வில் அவள் நெஞ்சு ஒருமுறை அதிர்ந்து அடங்கிற்று.
இருபத்தி நான்கு வயதில் ஐந்து வயதுப் பிள்ளைக்கு அம்மா. ஆனால், சற்றுக்கு முன்தான் திருமணமே ஆகியிருக்கிறது. ஏன் இந்த நிலை? உதட்டைப் பற்றியபடி பார்வையை எங்கென்றில்லாமல் அலையவிட்டாள் பல்லவி.
பாலமுரளிக்கு இரண்டு தங்கைகள். மூத்தவள் சுவிஸிலும் சின்னவள் பருத்தித்துரையிலும் திருமணமாகி வாழ்கின்றனர். மகனுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவனுடைய முதல் மனைவி மலேரியா காய்ச்சல் வந்து இறந்துபோயிருந்தாள். அன்னை அவனுடனேயே இருந்ததில் அதன்பிறகு இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. கலாவதி எத்தனையோ முறை கேட்டபோதும் அசையவில்லை.
ஆனால் இப்போது, சுவிஸில் இருக்கும் தங்கை ரூபா கருத்தரித்திருந்தாள். அதுவும் இரட்டைக் குழந்தைகள். நிச்சயம் அவளால் தனியாகச் சமாளிக்க முடியாது என்று கலாவதியை அங்கு வரச் சொல்லியிருந்தாள்.
இதை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார் கலாவதி. எப்படியாவது நான் சமாளிப்பேன் என்று நின்றவனை, எப்படிச் சமாளிப்பாய், அவனுக்கு உடல் முடியாமல் போனால் எப்படிப் பார்ப்பாய், நீ தோட்டத்துக்குப் போகும்போது அவன் யாருடன் நிற்பான், அவனுக்கும் உனக்கும் யார் சமைப்பது, இது என்ன ஒரு நாள் இரண்டு நாள் காரியமா என்று கேள்விகளால் துளைத்தெடுத்து, சமாளிக்கவே முடியாதோ என்கிற பயத்தை அவனுக்குள் விதைத்திருந்தார்.
பருத்தித்துரையில் வாழும் ரேகாவுக்கு மூன்று பிள்ளைகள். அவளுக்கு அவளின் குடும்பத்தைப் பார்க்கவே நேரமில்லை. இதில் அவன் மகனையுமா? அதைவிட, அங்கே மகனை விட்டுவிட்டு இவனாலும் இருக்க முடியாது. விவசாயியான அவனால் தினமும் மகனோடு அங்குமிங்கும் அலைவதும் சாத்தியமில்லை. அதில்தான் வேறு வழியற்றுச் சம்மதித்திருந்தான்.
அப்போதுகூட, அவனுக்கு மனைவியாக வருகிறவள் வீட்டில் இருந்து மகனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற உறுதியான நிபந்தனையின் கீழ்தான் அவர்களின் திருமணம் நடந்திருந்தது.
அப்போது, “அண்ணி, இந்தாங்கோ அக்கா கதைக்கப்போறாளாம்.” என்று கைப்பேசியைக் கொண்டுவந்து நீட்டினாள் ரேகா.

