அதன் பிறகான நாட்கள்தான் அவள் மனிதர்களைப் பற்றிப் படித்துக்கொண்ட நாட்கள். பள்ளிக்கூடம், டியூஷன், அயலட்டை என்று அவளுக்கு முன்னால் ஒருவிதம், பின்னால் இன்னொரு விதம் என்று அவளைப் பந்தாட ஆரம்பித்தது.
சிவலோகநாயகி வேறு, ‘எப்பவும் சண்டையும் சச்சரவுமா இருந்தா அவனும் என்னதான் செய்வான்?’ என்று புலம்பியபோது அவரையும் வெறுத்தே போயிற்று.
‘சாவுக்கே சாட்டு வேண்டுமாம்.’ அதைப்போல அவர் பெற்ற மகனின் சபலத்துக்குப் பலிகடா அவளின் அம்மா. இலவச இணைப்பாக அவளும் அந்தப் பழியைச் சுமக்கவேண்டும். என்ன உலகம் இது? வாய் காட்டினால், சண்டை பிடித்தால் இன்னொன்றைத் தேடிவிடுவார்களாம். அதை நியாயம் என்று சொல்வதற்கும் அவளின் அப்பம்மாவைப்போல ஒரு கூட்டம்.
தவகணேசனும் பானுமதியும் இல்லை என்றால் என்னாகியிருப்பாள் என்று எண்ணிப்பார்க்கவே முடியாது. அந்தளவில் நொருங்கிப்போயிருந்தாள். தைரியம் தந்து, ஊக்கம் தந்து, பாதுகாப்பைத் தந்து, தன்னம்பிக்கையை விதைத்து, அவள் இன்று இந்தளவிலேனும் சிதைந்துபோகாமல் இருப்பதற்கு அவர்கள் மாத்திரமே காரணம்.
“என்ன? ஏதும் பிரச்சினையா?” தணிந்து ஒலித்தாலும் அழுத்தமாய்க் கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் பல்லவி.
அவளின் கணவனாகிப்போனவன் கண்முன்னே நின்றிருந்தான். ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு. “என்ன? என்ன பிரச்சினை?” என்று திருப்பிக் கேட்டாள்.
“ஏன் கண் கலங்கி இருக்கு?”
‘கண் கலங்கி இருக்கா?’ வேகமாகக் கண்களைத் தொட்டுப் பார்த்தாள். விரல்களில் பட்ட ஈரத்தில்தான் அவன் சொன்னது உண்மை என்று புரிந்தது. வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.
அவன் அசையவில்லை. பார்வையும் அவளிடமேதான் இருந்தது. பதிலுக்காக நிற்கிறான் என்று விளங்க, “ஒண்டுமில்ல… சும்மா ஏதோ யோசினை…” என்றாள் அவனைப் பாராமல்.
அவன் அதை நம்புவதாக இல்லை போலும். விழிகளில் கூர்மை ஏற அவளையே ஆராய்ந்தான். அவளுக்கு மீண்டும் கண்களைக் கரித்துக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டு அவனைப் பாராமல் அமர்ந்திருந்தாள். அவளின் கையில் இருந்த கைப்பேசியைக் கவனித்துவிட்டு, “ரேகான்ர ஃபோன் ஏன் உன்னட்ட வந்தது?” என்று விசாரித்தான்.
“அது… ரூபா மச்சாள் வாழ்த்துச் சொன்னவா.”
“வேற ஏதும் கதைச்சவளா?”
“இல்ல! வேற ஒண்டும் இல்ல.” அவசரமாகச் சொன்னாள்.
அவளின் பதட்டத்திலேயே அப்படித்தான் என்று கண்டுகொண்டான் அவன்.
அப்படி என்ன? தங்கையைப் பற்றி அவளிடம் தூண்டித் துருவ மனமில்லை. அதைவிட, ரூபா எதையும் மோசமாகக் கதைத்திருக்கமாட்டாள் என்றும் நம்பினான். கலாவதி பேரனுடன் அங்கு வந்துவிட அந்தப் பேச்சு அப்படியே நின்றுபோயிற்று.
ஆனாலும், இதை அப்படியே விட முடியாமல் அவளின் கண்ணீர் விழிகள் மனத்தை நெருடிக்கொண்டே இருந்தன. எதற்கும் கேட்டுவிடுவோம் என்று தனியாகத் தள்ளிச் சென்று ரூபாவுக்கு அழைத்து என்ன என்று விசாரித்தான். முதலில் தயங்கினாலும் தவறு செய்துவிட்டோமோ என்று அவளுக்கும் உறுத்திக்கொண்டிருந்ததில் உள்ளே சென்றுவிட்ட குரலில் உண்மையைச் சொன்னாள் ரூபா.
பாலமுரளிக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. ஆனாலும், குழந்தைகளைச் சுமக்கும் தங்கையைக் கடிய முடியவில்லை. சும்மா விடவும் கூடாது என்று எண்ணி, “இதையெல்லாம் நீ அவளிட்டச் சொல்லுறதுக்கு அவள் ஒண்டும் என்னைக் காதலிச்சுக் கட்டேல்ல ரூபா. இது பேசி நடந்த கலியாணம். அவேயும் எங்களிட்ட ஒண்டையும் மறைக்கேல்ல. விருப்பம் இல்லாட்டி நாங்க வேற சம்மந்தம் பாத்திருக்கோணும். அதை விட்டுப்போட்டு அதெல்லாம் எங்களுக்குப் பெருசு இல்லை எண்டு சொல்லிக் கலியாணம் நடந்த பிறகு, நீ இப்பிடிக் கதைச்சது சரியான பிழை. விளங்கினதா?” என்றான் கடினக்குரலில்.
“‘என்னைக் கட்டச் சொல்லி உங்கட அண்ணாட்டக் கேட்டனானோ?’ எண்டு அவள் உன்னத் திருப்பிக் கேட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்? அவமானப்பட்டு நிண்டிருப்பாய். அதவிட, இது என்ன பழக்கம், தகப்பன் செய்த பிழைக்கு அவளைச் சந்தேகப்படுறது? அது அவளை எந்தளவுக்குப் பாதிக்கும் எண்டு யோசிக்க மாட்டியா? எங்கட அப்பாவும்தான் மோசமான குடிகாரன். அத வச்சு, ‘நீயும் குடிப்பியா, குடிச்சுப்போட்டுக் குடும்பத்தைப் பாக்காம விட்டுடுவியா’ எண்டு அவள் கேட்டா எனக்கு எப்பிடி இருக்கும் சொல்லு?” என்றவனின் பேச்சில் அவளுக்கு விழிகள் கலங்கிப் போயிற்று.
“சொறி அண்ணா. இந்தளவுக்கு நான் யோசிக்கேல்ல. உண்மையா சொறி. அவாட்ட மன்னிப்புக் கேக்கட்டா?” என்றாள் கலங்கிய குரலில்.
“அதெல்லாம் வேண்டாம், விடு! ஆனா, இனி இப்பிடி நடக்காத. கதைக்கிறதை யோசிச்சுக் கதைக்கப் பழகு. அவளும் இனி எங்கட குடும்பம். அத நினைவில வச்சிரு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அங்கிருந்தே திரும்பிப் பல்லவியைப் பார்த்தான். உயிர்ப்பசையை இழந்து போயிருந்தது அவளின் முகம். ஒரு பிடிவாதத்துடன் கண்ணீரை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அந்தளவில் ரூபாவின் வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், ரூபாவிடம் ஒரு வார்த்தை திருப்பிக் கதைக்காத, அவனிடமும் அவன் தங்கையைப் பற்றிச் சொல்லிக் கோவப்படாத அவள் குணம், ‘நல்ல பெண் போல’ என்கிற எண்ணத்தை அவனுக்குள் முதன் முறையாக விதைத்தது.
அனைத்தும் முடிந்து, அனைவரினதும் ஆசிர்வாதத்துடனும் கணவனின் வீட்டுக்கு வந்திறங்கினாள் பல்லவி. ஒரு அறை, விறாந்தை, விறகடுப்புடன் கூடிய சமையல் கட்டு என்றிருந்த வீட்டின் முன்னும் பின்னும் பத்தி இறக்கி மூட்டைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. தவகணேசனின் வீட்டு நிலையை விடவும் இவர்களின் நிலை இன்னும் கீழே என்று அந்த வீட்டைப் பார்க்கவே விளங்கிற்று.
நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது. அமைதியாக அமர்ந்திருந்தாள். தவகணேசன் குடும்பமாக விடைபெற்றுக்கொண்டார். அழக்கூடாது என்று நினைத்தாலும் விழிகள் கலங்கிற்று. வாய் வார்த்தைகளை நம்ப முடியாமல் தலையசைத்து விடைகொடுத்தாள்.
மெல்ல மெல்ல உறவினர் கலைந்துபோயினர். ஒற்றை அறையைக் கொண்ட அந்த வீட்டில், மூன்று பிள்ளைகள் கணவனோடு தங்கமுடியாது என்பதால், இரவுணவை முடித்துக்கொண்டு, கலாவதியின் நாளைய சுவிஸ் பயணத்துக்கும் சேர்த்து விடைகொடுத்துவிட்டு ரேகாவும் புறப்பட்டிருந்தாள்.
இனி? கைகால்கள் வெளிப்படையாக நடுங்கிவிடுமோ என்கிற பயத்துடன் ஒரு மூலையாக நின்றிருந்தாள் பல்லவி.
இதுவரையில் அவள் விதுரனோடு சும்மாவேனும் கதைக்கவில்லை என்பதைக் கலாவதி கவனிக்காமல் இல்லை. ‘என்ன, இந்தப் பெண் இப்படி இருக்கிறாளே…’ என்று கவலையாக இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ‘கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியா வரும். வந்ததும் வராததுமா அஞ்சு வயசுப் பிள்ளையைப் பார் எண்டதும் தூக்கிக் கொஞ்ச இதென்ன படமா?’ என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டார்.
நேரம் இரவு பத்தையும் தாண்டியிருந்தது. கலாவதி கொண்டுபோகிற பெட்டிகளின் நிறையைக் கவனித்து, பூட்டும் போட்டுவிட்டான் பாலமுரளி. இரண்டு அட்டைகளைக் கொண்டுவந்து ரூபாவின் விலாசத்தையும் அவர்கள் வீட்டு விலாசத்தையும் எழுதச் சொல்லிப் பல்லவியிடம் நீட்டினான்.
அவளும் எழுதிக்கொடுக்க அதையும் பெட்டியில் பார்வைக்குப் படுகிற மாதிரி ஒட்டிவிட்டான். விதுரன் உறக்கத்துக்கு அவன் மடியை நாடவும், ஒரு பாயையும் தலையணையையும் கொண்டுவந்து விறாந்தையில் போட்டுவிட்டு மகனோடு சரிந்துகொண்டான். தொலைக்காட்சி மெல்லிய சத்தத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.
அடுத்தநாள் இரவு விமானம் என்பதில் காலையிலேயே இங்கிருந்து புறப்படுவதாக இருந்தது. அதில், அவளை அழைத்துச் சென்று தன்னால் முடிந்தவரையில் அந்த வீட்டில் என்னென்ன பொருட்கள் எங்கே உள்ளது என்பதைக் காண்பித்தார் கலாவதி. விதுரனுக்கு எந்த நேரம் என்ன கொடுக்க வேண்டும், பாலமுரளிக்கு என்ன விருப்பம் என்பதையெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அவளுக்கு எதுவுமே கருத்தில் பத்தியமாட்டேன் என்றது. அன்றைய இரவை எண்ணி நெஞ்சு நடுங்கிக்கொண்டிருந்தது. சும்மா பெயருக்குத் தலையை ஆட்டியாட்டிக் கேட்டுக்கொண்டாள்.
பாலமுரளி அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அன்னை இப்போதைக்கு முடிப்பதாக இல்லை என்றதும், “இன்னும் எவ்வளவு நேரம் அம்மா பாடம் எடுக்கப் போறீங்க?” என்று குரல் கொடுத்தான்.
“அதுவும் சரிதான். என்ன எண்டாலும் முரளிட்ட கேளுங்கோம்மா. இல்லையோ ரேகா இருக்கிறாள். சொல்லுவாள். நானும் அங்க இருந்து கதைப்பன்தானே.” என்றவருக்கு அப்போதுதான் மகன் விறாந்தையில் பேரனுடன் படுத்துவிட்டதும், அவள் அவருடன் அறைக்குள் புகுந்துகொண்டதும் கவனத்தில் பதிந்தன.
அறையை விட்டு வெளியே வந்து, “தம்பி, நீ உள்ளுக்குப் போ. நான் விதுவோட படுக்கிறன்.” என்றார்.
“லைட்ட நிப்பாட்டிப்போட்டுப் பேசாம போய்ப் படுங்கம்மா. நாளைக்கு நேரத்துக்கே எழும்போணும்!” தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, தனக்கும் மகனுக்கும் சேர்த்து மெல்லிய பெட்ஷீட்டை போர்த்தியபடி சொன்னான் அவன்.
அதைக் கேட்ட அடுத்த கணமே முகம் ஒளிர, அறையில் இருந்த பாயில் சரிந்துகொண்டாள் பல்லவி.
‘அதுவும் சரிதான். நாளையில இருந்து தனியாத்தானே இருக்கப் போயினம்…’ என்று எண்ணியபடி தானும் வந்து பல்லவியின் பாயிலேயே சரிந்துகொண்டார் கலாவதி.

