அத்தியாயம் 6
ஒரு நாள் வேலை முடிந்து வந்தவளிடம்தான் இந்தத் திருமணத்தைப் பற்றிச் சொன்னார் தவகணேசன். அதுவும் அவள், பானுமதி, தாரிகா மூவருமாக எப்போதோ கோயிலுக்குப் போனபோது அவர்கள் அவளைப் பெண் பார்த்துவிட்டார்களாம் என்கிற செய்தியோடு.
பல்லவிக்குத் திகைப்பு. தாரணி இருக்கையில் அவளுக்குத் திருமணம் என்பதை எதிர்பார்க்கவில்லை. கூடவே, திருமணம் என்கிற ஒன்றைப் பற்றிச் சிந்தித்தே இராதவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியாத நிலை.
நிறைய இடங்களில் பார்த்தாராம்; இதுதான் பொருந்தி வந்ததாம்; குறிப்பும் நல்ல பொருத்தமாம்; அவர்களுக்கும் இவளைப் பிடித்துவிட்டதாம்; முக்கியமாகப் பெண்ணைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையாம்; அவன் நல்ல உழைப்பாளியாம்; தங்கைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டானாம்; பொறுப்பு இல்லையாம் என்று நிறையச் சொன்னார் தவகணேசன்.
அத்தனையையும் யாருக்கு வந்த விருந்தோ என்பதுபோல் கேட்டுக்கொண்டிருந்தவளின் தேகம், அவனுக்கு ஒரு மகன் இருக்கிறானாம்; மனைவி மூன்று வருடங்களுக்கு முதல் இறந்துவிட்டாளாம் என்கிற செய்தியில் தூக்கிப் போட்டது.
நம்ப முடியாத அதிர்வுடன் தவகணேசனைப் பார்த்தாள். அப்படியான ஒருவனுக்குத் தன்னைக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அவள் விழிகளில் தெரிந்த கேள்வியை அவர் படித்துவிட்டார் போலும்.
பதில் சொல்லமுடியாமல் பானுமதியைப் பார்த்தார். பானுமதியுமே இதை எப்படிக் கதைப்பது என்று தெரியாமல் திணறினார். அவர்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் இடையில் புகுந்தார் சிவலோகநாயகி.
“காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருக்க வேண்டிய விசயத்த தூக்குல தொங்கி ஊருக்கே அம்பலப்படுத்திப்போட்டுப் போய்ட்டாள் அவள். பிறகு எப்பிடி நல்ல குடும்பத்தில இருந்து பொம்பிளை கேட்டு வருவினம்? இப்பிடி எங்கயாவது விட்டவனும் தொட்டவனும்தான் வருவான்.”
அவளின் அன்னையால்தான் தன் மகனுக்கு இந்த நிலை என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவரின் ஆத்திரம், சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் அவள் மீது பாய்ந்தது.
எதுவும் சொல்லத் தோன்றாமல் அவரை வெறித்தாள் அவள். ஏற்கனவே திருமணமானவனாம் என்பதையே ஜீரணிக்க முடியாமல் அவள் இந்தப் பாடு படுகிறாள். அப்படியிருக்க, கட்டிய கணவனுக்குத் தவறான உறவு உண்டாம் என்று மனைவி அறிவதே வலியின் உச்சம். இங்கானால், அதை நேரிலேயே கண்டிருக்கிறார் அவளின் அன்னை. அவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், தன் கண்களையே நம்பமாட்டாமல் என்ன பாடு பட்டிருப்பார். அறிவு ஒன்றைச் சொல்ல, மனது இன்னொன்றைச் சொல்ல என்று தனக்குள்ளேயே எந்தளவில் போராடியிருப்பார்? மனத்தளவில் பைத்தியமாகியிருக்க மாட்டாரா?
அவர் ஒன்றும் பார்த்ததும் தூக்கில் தொங்கவில்லை. மூன்று நாட்களாக ஜீரணிக்கப் போராடி, அது முடியாமல் போய்த்தான் அப்படி ஒரு முடிவை எடுத்தார். தற்கொலை எதற்கும் தீர்வல்லதான். ஆனால், ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் அளவுக்குப் போயிருக்கிறார் என்றால் அவர் எந்தளவு தூரத்துக்குக் காயப்பட்டிருக்க வேண்டும்?
அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், சபலப்பட்டு, ஒழுக்கக்கேடான காரியத்தை ஆற்றிய கேவலம் கெட்ட ஒரு ஆணுக்காக, மனைவி சரியில்லை; அவள் ஒழுங்காகக் குடும்பம் நடத்தவில்லை; அவனை நன்றாகப் பார்த்துக்கொள்ளவில்லை; அவள் ஒழுங்காக இருந்திருந்தால் அவன் ஏன் வழி தவறிப் போகப் போகிறான் என்று பல விதங்களிலும் வாதாடுவதற்குச் சிவலோகநாயகியைப் போன்ற பல பெண்களே தயாராக இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
அவளைப் பார்க்க பானுமதிக்கு மனம் கனத்துப் போயிற்று. ஆனால், தவறான நடத்தை கொண்ட தந்தைக்கும் தூக்கில் தொங்கிய தாய்க்கும் மகளாகப் பிறந்தவளை, தம் வீட்டுக்கு மருமகளாக்கிக்கொள்ள யாரும் தயாரில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதை அடித்து மூடும் அளவுக்கு அவர்களிடம் வசதியும் இல்லை.
இதையெல்லாம் அவளிடம் விளக்காமல் ஆகாது என்பதில், “இந்தச் சம்மந்தம் மட்டும்தான் நாங்க எல்லாத்தையும் சொன்ன பிறகும் பொம்பிளை எப்பிடி எண்டு விசாரிச்சவே. அதவிட, நீயும் இந்த வீட்டில வளந்த பிள்ளை. உனக்கும் எங்கட நிலம தெரியும். சீதனம் குடுத்துக் கட்டிவைக்கிற அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை. அதுக்காக, ஆரு கிடைச்சாலும் தள்ளிவிடுவம் எண்டு நினைக்கேல்ல. அந்தப் பெடியனைப் பற்றி உன்ர பெரியப்பா நல்லா விசாரிச்சிட்டார். உண்மையாவே நல்ல பொறுப்பான பெடியனாம். மனுசி செத்து ஒற்றைப் பிள்ளையோட நிக்கோணும் எண்டு அவருக்கு விதிச்சிருக்குப் போல. யோசிச்சு பார், உன்ர அப்பாவக் காட்டி உன்ன வேணாம் எண்டு சொல்லுற மாதிரி நாங்களும் அவர் ஒரு பிள்ளையோட இருக்கிறார் எண்டுறதுக்காக வேணாம் எண்டு சொல்லுறது சரியா?” என்று வினவினார் பானுமதி.
அவரின் எந்த விளக்கமும் பல்லவியை ஆற்றுப்படுத்தவில்லை.
அவள் உள்ளம் ஊமையாய் அழுதது. எந்தத் தவறுமே செய்யாத எனக்கு ஏன் இந்த நிலை என்று அரற்றியது. இப்படி ஒரு திருமணமே வேண்டாம் என்று கத்தியது. அத்தனையையும் அடக்கிக்கொண்டு தவகணேசனைப் பார்த்தாள்.
அவளின் முகம் பார்க்கமுடியாமல் எங்கோ பார்வையைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார் அவர். அழுத்தம் கூடிப்போயிருந்த முகம், இதைக் குறித்து அவரும் தனக்குள் போராடுகிறார் என்று காட்டிற்று. அதைவிட, தன் முகம் பார்க்க முடியாமல் தடுமாறியவரைப் பார்த்தபோது மற்றது எல்லாம் மறக்க, அவளின் மனம் நெகிழ்ந்து போயிற்று.
அவளைப் பெற்றவர்களே அவளைப் பற்றி யோசிக்கவில்லை. இந்த மனிதர் அவளை வளர்த்து ஆளாக்கிவிட்டதும் அல்லாமல் தன் சக்திக்கு உட்பட்டு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரவும் நினைக்கிறார். பிடிக்கவில்லை என்று சொல்லி, அவரின் தலையில் இன்னுமே பாரமாக அமர்ந்துகொள்ள அவள் விரும்பவில்லை.
அதைவிட, அவள் இங்கிருந்து வெளியேறினால்தான் தாராணிக்கும் நல்ல இடத்தில் சம்மந்தம் பார்க்க முடியும். இல்லையோ, இவளின் அவல நிலை அவளின் வாழ்விலும் விளையாடக்கூடும். அதனால்தான் இவளுக்கு முதலில் திருமணத்துக்குப் பார்த்தார்களோ தெரியாது. ஆதலால், அவளுக்குச் சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
இப்படி, எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க நெஞ்சம் விண்டுவிடும்போல் வலித்தது. சம்மதிக்காதே என்று கதறியது. சம்மதித்துவிட்டால் பிறகு உன்னால் எதையும் மாற்றமுடியாது என்று அறிவுறுத்தியது. ஆனாலும், அவள் அது எதற்கும் செவி சாய்க்கவில்லை.
பானுமதியின் புறம் திரும்பி, “அவர் நல்லவர் எண்டா இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்குப் பெரியம்மா?” என்று வினவினாள்.
மறைமுகமாக அவள் சொன்ன சம்மதத்தில் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தார் தவகணேசன். அவரின் விழிகளினோரம் மெல்லிய நீர்ப்படலம். அவராலும் இந்தச் சம்மந்தத்தை அவ்வளவு இலகுவாக முடிவு செய்ய முடிந்திருக்கவில்லை. ஆனால், அவரின் சக்திக்கு இயன்றது இதுதான். அப்போதும் என்ன சொல்லுவாளோ, மறுப்பாளோ, ‘ஏன் பெரியப்பா, தாரணி அக்காக்கு இப்பிடி ஒரு இடத்தில பாப்பீங்களா’ என்று கேட்டுவிடுவாளோ என்று பயந்துகொண்டிருந்தார்.
அவளானால் ஒரு கேள்வி கேட்கவில்லையே! கூராக அவர் இதயத்துக்குள் ஏதோ ஒன்று பாய்ந்து குத்தியது.
தன் குரலைச் செருமிச் சீர் செய்துவிட்டு, “இந்த ஒரு மாதமா எனக்கு அந்தப் பெடியனைப் பற்றி விசாரிக்கிறது மட்டும்தான் வேல. ஒரு குறையும் இல்ல. நீ நல்லாருப்பாய்.” என்றார் வேகமாக.
தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள் அவள்.
இதோ, அவளின் அந்தச் சம்மதம் இன்றைக்கு அவனருகில் அவனின் மனைவியாக அவளை அமரவைத்திருக்கிறது.
திரும்பி அவனைப் பார்த்தாள்.
இப்போதாவது அவனைப் பிடித்திருக்கிறதா, மனம் ஏற்றுக்கொண்டிருக்கிறதா என்று யோசித்தாள். இல்லையே. இப்படி, பக்கத்தில் அமர்ந்திருக்கும் நிலையே மூச்சு முட்ட வைக்கிறதே. அருகில் இருக்கும் கணவன், மடியில் இருக்கும் திடீர் மகன், எதிர்கால வாழ்க்கை என்று அனைத்தின் மீதும் வெறுப்பு மாத்திரமே மண்டியது.
இனி என்ன செய்யப்போகிறாள்? மரணம் என்கிற ஒன்று வந்து அவளை ஆட்கொள்ளப்போகிற அந்த நாள் வரையில் இந்த வெறுப்பிற்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கப்போகிறாள்.
வேறு வழியில்லை. சபலம் கொண்ட தந்தைக்கும் கோழையாகிப்போன அன்னைக்கும் மகளாகப் பிறந்த பாவத்துக்கான தண்டனை இதுதான் போலும்.
அவளின் விடாத பார்வையாலோ, அல்லது அவளின் எண்ண அலைகளின் ஆதிக்கத்தினாலோ என்னவோ பாலமுரளி விழிகளைத் திறந்தான். வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் பல்லவி. விதுரன் இன்னுமே உறக்கத்தில் இருந்தான்.
நிமிர்ந்து அமர்ந்து எங்கு நிற்கிறோம் என்பதுபோல் வெளிப்புறத்தை நோட்டமிட்டான் பாலமுரளி. ஊரை நெருங்கிவிட்டோம் என்று புரிந்தது. “தம்பிய நான் வச்சிருக்கவா?” என்றான் அவன் இப்போது.
“இன்னும் கொஞ்சத்தில இறங்கிடுவம்தானே. என்னட்டயே இருக்கட்டும்.” மீண்டும் அவனைக் கொடுக்கும்போது எங்காவது உரசிக்கொண்டு விடுவோமோ என்கிற பயத்தில் சொன்னாள் பல்லவி.
பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இரவுணவையும் வாங்கிக்கொண்டு, ஒரு ஓட்டோவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கதவைத் திறந்ததும் கலாவதி இல்லை என்பதை அறைந்து சொல்லியது வீடு. இருவரிடமும் அதன் பிறகு எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை.
உடலின் களைப்புப் போகக் குளித்து, உடை மாற்றிக்கொண்டு பல்லவி வந்தபோது, விறாந்தையில் விரித்திருந்த பாயில் சுருண்டிருந்தான் விதுரன். பாலமுரளியும் குளித்து உடை மாற்றியிருந்தான். வாங்கிக்கொண்டு வந்திருந்த உணவுப் பார்சல்களை தட்டுகளுக்கு மாற்றினாள்.
“விதுரனுக்கும் போடவா?” பஸ்ஸில் இருந்து இறங்கும்போது விழித்தவனுக்கு உருளைக்கிழங்கு பணிஸ் வாங்கிக் கொடுத்திருந்தான் பாலமுரளி. ஆனாலும் கேட்டாள்.
“அவன் சாப்பிட்டது காணும். அதவிட, இப்ப எழுப்பினா சாப்பிடவும் மாட்டான், படுக்கவும் மாட்டான். ” என்றான் அவன்.
அவனுக்கு ஒரு தட்டைக் கொடுத்துவிட்டு மற்றையதைத் தான் எடுத்துக்கொண்டாள் பல்லவி. தண்ணீர் நிறைந்த செம்பினை அவன் அருகில் வைத்தாள். இருவரும் அருகருகே தரையில் அமர்ந்து சாப்பிட்டனர்.
இப்போது, பல்லவி தானாகவே அறைக்குப் போகப் பயந்தாள். விதுரன் வேறு உறங்கிவிட்டானே. இல்லையானால் கொஞ்சம் திடமாக இருந்திருக்கும். அவனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது என்கிற உதறலோடு, குசினியை உருட்டிக்கொண்டிருந்தாள். சில் என்று காற்று வீசிக்கொண்டிருந்த அந்த இரவிலும் அவளுக்கு வியர்த்தது.
இதையெல்லாம் தவிர்க்க முடியாது; எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று அறிவு சொன்னாலும், உடலும் உயிரும் நடுங்கிக்கொண்டே இருந்தன.
பாலமுரளிக்கு அப்படி எதுவும் இல்லை போலும். வாசல் கதவை நன்றாகப் பூட்டிக் கட்டையையும் போட்டுவிட்டு, “நீ அறைக்க போய்ப் படு!” என்றுவிட்டு மகனோடு படுத்துக்கொண்டான்.
எப்போதும்போலத் தொலைக்காட்சி அளவான சத்தத்தில் இயங்க ஆரம்பித்தது.
விட்டால் போதும் என்று உள்ளே ஓடிவிட்டாள் பல்லவி. அதன் பிறகுதான் மூச்சை இழுத்துவிட்டாள். என்னவோ பெரும் ஆபத்திலிருந்து தப்பிவிட்ட ஆசுவாசம். இது எத்தனை நாளைக்கு என்கிற கேள்வி வந்து கலங்கடித்தாலும், இன்றைக்குத் தப்பிக்கொண்டது இப்போதைக்குப் போதும் என்று பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள்.

