பூவே பூச்சூடவா – 2

அத்தியாயம் 2

இப்போதெல்லாம் குழந்தைக்கும் நேரம் ஒதுக்கத் துவங்கியிருந்தான் அதிரூபன். ரூபிணியின் அன்றைய ஏக்கப் பார்வை மனத்தை மிகவும் பலமாகத் தாக்கிவிட்டிருந்தது.

அவள் அவனது மிருணாவின் குழந்தை. இந்தக் குழந்தைக்காக மிருணா எவ்வளவு ஏங்கினாள் என்று அவனுக்குத் தெரியும். என்னவெல்லாம் செய்தாள் என்றும் தெரியும். அவன் வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை அவள் உருவாக்கியதும் அவனுடைய குழந்தையைக் கையில் ஏந்திவிடவேண்டும் என்பதற்காகத்தானே!

கடைசியில் நடந்தது என்ன? தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கருவண்டு விழிகளால் வீதியைச் சுற்றி சுற்றிப் பார்த்த மகளைப் பார்த்தான்.

‘உன்னப் பாக்கவேணும் எண்டு அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டவள். கடைசில தன்ர உயிரைக் குடுத்து உன்னப் பெத்துத் தந்திட்டுப் போய்ட்டாள்..’ மனத்தில் ஏறிய அழுத்தம் தாங்காமல் ரூபிணியின் உச்சந்தலையில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதித்தான்.

தகப்பனின் துயர் அறியாத மகளோ, கடந்த சில நாட்களாகப் போகும் அந்தப் பூங்காவுக்குள் இன்றும் நுழைந்ததும் அவனிடமிருந்து நழுவிக்கொண்டு ஓடினாள்.

இவனைப்போலவே, பலர் தங்கள் குழந்தைகளோடு அங்கே விளையாட வருவதில், ரூபிணியும் சில தோழர் தோழிகளை அதற்குள் பிடித்து வைத்திருந்தாள்.

அவளைத் தன் பார்வை வட்டத்துக்குள் வைத்திருக்கும் வகையில் ஒரு இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொண்டான் அதிரூபன்.

‘மிருணாளினியின் மகள்’ என்று சொல்லும் வகையில் இப்போதுதான் ரூபிணியிடம் கொஞ்சமே கொஞ்சம் துள்ளலும் சிரிப்பும் வரத் துவங்கியிருந்தது. அவனுடைய மிருணா இங்கிருக்கும் அத்தனை குழந்தைகளை விடவும் மோசம். ஒரு இடத்தில் இருக்கமாட்டாள். அவனையும் இருக்க விடமாட்டாள்.

“கொஞ்ச நேரமாவது சும்மா இரனடி!” என்று அவன் சினந்துவிட்டால் போதும்,

“என்ன புரஃபசர்? கம்பசில சின்னன் சிறுசுகள் ஏதும் சிறகடிக்குதோ? சினமெல்லாம் வருது?” என்று ஆரம்பித்துவிடுவாள்.

“அடிதான் வாங்கப்போறாய். படிக்கிற பிள்ளைகளப் பற்றி என்ன கதை இது?” என்று அவன் கோபப்பட்டாலும்,

“அடிப்பீங்களோ? எங்க அடிங்க? தைரியம் இருந்தா அடிங்க பாப்பம்!” என்று அவள் கன்னங்களைக் காட்டுகையில், முத்தமிட மட்டுமே அவனால் முடிந்திருக்கிறது.

“அடிக்கப்போறன் எண்டு சொன்னீங்க?” அவன் கைகளுக்குள் வாகாகப் பொருந்தியபடி வேண்டுமென்றே சீண்டுவாள்.

“நான் எப்ப சொன்னனான்?” என்று அவள் காதோரமாய் ஆரம்பிக்கும் விளையாட்டு சந்தோசத்தின் உச்சத்தைத் தொட்டாலும் முடியாது.

“சொறி சொறி!” மனைவியின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனைத் திடீரென ஒலித்த அந்தக் குரல் மீட்டுக்கொண்டு வந்தது.

யார் என்று பார்த்தால் ஒரு பெண். அவனது காலில் வந்து மோதிய பந்தினை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் குட்டிச் சிறுவன் ஒருவன், அவள் தன்னைத் தொடர்ந்து துரத்துகிறாளா என்று திரும்பி திரும்பிப் பார்த்தபடி வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.

இவள் ஓடிப்போய் அவனை நோக்கி அந்தப் பந்தை வீச, அதுவும் சரியாக அவன்மீது பட்டு உருண்டது. இப்போது, அவன் அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு இவளை நோக்கி வேகமாக ஓடிவர, இவளோ அவனிடமிருந்து தப்ப ஓடிக்கொண்டிருந்தாள். இதுவே, மாறி மாறி நடந்துகொண்டிருந்தது. வெகு தீவிரமாக வேர்க்க விறுவிறுக்க இருவரும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அவனைப்போலவே அவன் மகளையும் அவர்கள் கவர்ந்துவிட்டார்கள் போலும். அவளும் அவர்களின் பின்னே காரணமே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். சின்னப் புன்னகையோடு பார்த்திருந்தான். அந்தப் பந்து ஒருமுறை ரூபிணியின் காலடிக்கு உருண்டு வந்துவிடவும், விளையாட்டின் விதியை விளங்கிக்கொள்ளும் வயதில்லையாதலால் அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு அவள் இவர்களை விட்டு வேறொரு புறமாக ஓடத்துவங்கினாள். அதிரூபனுக்குப் போலவே பார்த்திருந்த அந்த இருவர் முகத்திலும் அகன்ற புன்னகை.

“அம்மா! அவா பந்தையும் கொண்டு ஓடுறா.” சின்னவன் சிரித்துக்கொண்டு சொல்லவும், ‘அம்மாவா?’ என்று அதிர்ந்தான் அதிரூபன்.

இவளே குட்டிப்பெண். எப்படி? அவளை ஆராய்ந்தன அவன் விழிகள். விளையாட்டுக்குணம் முற்றிலும் அகன்றிடாத முகம். இருபதுகளைத் தாண்டி ஒன்றிரண்டு வருடங்கள் கடந்திருக்கக் கூடும்.

சகோதரர்கள் அல்லது உறவுக்காரர் யாரினதோ குழந்தையாக இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தான். அந்தளவில் அந்தச் சிறுவனுக்கு ஈடுகொடுத்து விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால்.. இப்போதுதானே கண்டதும் நடக்கிறது. இல்லை! அந்தளவுக்கு அசட்டுப்பெண் போலும் அவளில்லை. சிறுவனோடு சரிசமமாக விளையாடினாலும், அவனில் வெகு கவனமாகத்தான் இருந்தாள்.

அந்த முரணே, அவர்கள் இருவரையும் கவனிக்க வைக்க, ‘என்ன நடக்கிறது பார்க்கலாம்..’ என்று காத்திருந்தான்.

“வா! அவவ நாங்க பிடிப்போம். ஆனா, வேகமாத் துரத்தாத, விழுந்திடுவா.” என்றவள் மகனோடு ரூபிணியைப் பிடிக்க ஓடினாள்.

அதன்பிறகு எதற்கு ஓடுகிறார்கள், யார் யாரைப் பிடிக்கிறார்கள், விளையாட்டின் விதிமுறை என்ன என்று பார்த்திருந்த அவனாலேயே விளங்கிக்கொள்ள முடியாத அளவில் தாறுமாறாக இருந்தது அந்த மூவரின் விளையாட்டு. மொத்தத்தில் அவன் மகள் போதும் போதும் என்கிற அளவில் உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.

அவனுடைய வறண்ட உதடுகளிலும் கோடாகப் புன்னகை அரும்பிக் கிடப்பதை அவன் உணரவேயில்லை.

போகும் நேரம் தாண்டியும் மகளின் மகிழ்ச்சியைக் குலைக்க மனமில்லாமல் அவன் அமர்ந்திருக்க, அவர்கள் போகும் நேரம் வந்துவிட்டது போலும், ரூபிணியைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, “அம்மா எங்க செல்லம்?” என்று கேட்டாள் அவள்.

அவனும் விளங்கியவனாக அவர்களை நோக்கி நடக்க ஆரம்பிக்க, மகளும் இவன் புறமாகக் கையை நீட்டினாள்.

அவன் புறமாகத் திரும்பியவளின் விழிகளில் அவனது முகத்தைக் கண்டதும் அதிர்ச்சி படர்ந்தது. முகத்தை நிறைத்த தாடியும், சோகம் அப்பிய விழிகளும், வறண்ட உதடுகளும், காய்ந்த முகமுமாக இருந்தான். தோற்றம் மட்டும் மதிக்கும் படியாக இருக்க, சட்டென்று தன் அதிர்வை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.

அவளின் முகபாவனைகளை உள்வாங்கிக்கொண்டாலும் காட்டிக்கொள்ளவில்லை அதிரூபன்.

ரூபிணியை அவனிடம் கொடுத்துவிட்டு, “இருட்டப்போகுது, நாங்க வாறம்.” என்று அவள் மகனோடு விடைபெற்றாள். அந்தச் சின்னவன் ரூபிணிக்கு, ‘டாட்டா’ காட்ட, இவளும் காட்டினாள்.

நான்கடி நடந்திருப்பார்கள். “நாங்க நாளைக்கும் வருவம். நீங்களும் வருவீங்களா அங்கிள்?” என்று ஆவலுடன் கேட்டான் சிறுவன்.

“பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் வருவோம்.”

“நாங்களும் தான். என்னம்மா?” அதிரூபனின் பதிலைக் கேட்டதும் வேகமாகச் சொன்னான் சின்னவன்.

ஆம் என்பதாகத் தலையசைத்துவிட்டு, “அப்ப நாளைக்கும் விளையாடுவம் குட்டி.” என்று ரூபிணிக்குச் சொல்லிவிட்டு, அவனிடம் தலையசைத்துவிட்டு மகனோடு நடந்தாள் அவள்.

அதன்பிறகு அதுவே வாடிக்கையாயிற்று!

‘அருமையான பெண்.’ அடிக்கடி நினைத்துக்கொள்வான் அதிரூபன். குழந்தைகளோடு குழந்தையாகத் தானும் விளையாடுவாள். அதேநேரம் தினமும் வரும்போது இரண்டு குழந்தைகளுக்காகவும் ஏதாவது உண்ண, அருந்த என்று கொண்டுவருவாள். சில நேரங்களில் இவர்களை விட அவளின் விளையாட்டு அதிகமாய் இருக்கும். ஆனாலும், இருவரையுமே கவனமாகப் பார்த்துக்கொள்வாள். யாருடனும் அநாவசியப் பேச்சுகள் இல்லை. அதேநேரம் ஒதுங்கியும் இருப்பதில்லை.

எப்போதும் அவளே கொண்டுவருகிறாளே என்று அன்று அவனும் பிஸ்கட் பாக்கெட்டும், குடிக்கக் குழந்தைகளுக்கு ஏற்ற பழக்கலவையும் வாங்கிக்கொண்டு வந்தான்.

சற்றுநேரம் விளையாடிய பிறகு, கையோடு கொண்டுவந்திருந்த துண்டினை விரித்து மூவருமாக அமர்ந்துகொண்டனர். புரிந்துகொண்டு தான் கொண்டுவந்ததையும் அவளிடம் நீட்டினான்.

“நன்றி.” சிரித்த முகமாய் வாங்கிக்கொண்டாள் அவள்.

எப்போதும்போலச் சற்றுத் தள்ளிப்போய்த் தனியாக அமர்ந்துகொண்டான் அதிரூபன். மிருணாவின் நினைவுகளைச் சுமந்தமடி, மகளைக் கண் பார்வையில் வைத்துக்கொண்டு, தனிமையில் இருப்பதில் ஓர் சுகம் அவனுக்கு. அன்றும் அப்படித்தான்.

உடலும் மனமும் களைத்துப்போயிருந்தது. அவள் மடியில் தலை சாய்க்க வேண்டும்போல் எழுந்த உணர்வில் மெல்லக் கண்களை மூடினான். ‘மிருணா..!’ அவனது ஆத்மா மனைவியை ஏக்கத்துடன் அழைத்தது.

‘வரவே முடியாத தூரத்துக்கு ஏனடி போனாய்?’

அவனோடு அருகில் இருந்த ஒருத்தி இனி இல்லை. அவள் முகத்தை அவன் பார்க்கவே முடியாது. ஏற்க மறுத்தது மனம்!

“இந்தாங்க அங்கிள்!” ஒரு தட்டைக் கொண்டுவந்து நீட்டினான் சின்னவன். சிரமத்துடன் விழிகளைத் திறந்தான். அவளைப்போலவே அவன் மகனுக்கும் சிரித்த முகம்தான்.

“உங்களுக்கு என்ன பெயர்?”

“என்ர பெயர் தாரகன். அம்மான்ர பெயர் வானதி.” கேட்காத கேள்விக்கும் பதிலைச் சொன்னான் அவன்.

“தாரகன்… வடிவான பெயர். அப்பான்ர பெயர் என்ன?”

“தாருக்குட்டி, இங்க வா!” சின்னவன் பதில் சொல்ல முதல் அவசரமாக அழைத்தாள் அவள்.

ஒருமாதிரி ஆகிப்போயிற்று அதிரூபனுக்கு. ‘ஒண்டும் பிழையாக் கேக்கேல்லையே நான்…’

அடுத்தவரின் விடயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைப்பது அவன் இயல்பன்று! அதைவிட, மிருணாவின் மறைவிற்குப் பிறகு யாருடனும் மனமுவந்து பழகவும் முடிவதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இந்தப் பூங்காவுக்கு வருகிறார்கள். இன்னும் அந்தச் சின்னவனின் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்தளவில் பற்றற்ற வாழ்க்கை ஒன்றுதான் அவன் வாழ்ந்துகொண்டிருப்பது. சிரித்த முகமாய் உண்பதற்குக் கொண்டுவந்து தந்த சின்னவனை அப்படியே அனுப்ப மனமில்லாமல்தான் சும்மா பேச்சுக் கொடுத்தான். அவன் தாயின் பெயரையும் சேர்த்துச் சொல்ல, தகப்பனின் பெயரை இயல்பாகவே கேட்டுவிட்டான்.

அதற்கு, உடனே அவள் அவனை அழைத்துவிடவும் என்னவோ அவள் வீட்டு விசயத்துக்குள் அவன் மூக்கை நுழைத்துவிட்டது போலொரு தோற்றம் அவனுக்கு. அவள் கொடுத்துவிட்டதைக் கூட உண்ண முடியவில்லை. மனநிலை கெட்டுவிட அப்படியே அமர்ந்திருந்தான்.

அவளும் கவனித்துவிட்டாள். பிள்ளைகள் விளையாடத் துவங்கியதும் இவனிடம் ஓடிவந்தாள்.

“அப்போத நடந்ததுக்குச் சொறி. ஆனா, அந்தக் கேள்விக்குப் பதில் எனக்கு மட்டும்தான் தெரியும். பதில் தெரியாம தாரு தடுமாறப்போறான் எண்டுதான் கூப்பிட்டனான். நீங்க கேட்டது பிழை எண்டு நினைக்கேல்ல. ப்ளீஸ், அத மறந்திடுங்கோ.” என்றாள் சிரித்துக்கொண்டு.

விளங்கவே விளங்காத புதிர் ஒன்றை விளக்கம் என்கிற பெயரில் சொல்லிவிட்டுச் சிரித்தவளை விளங்காமல் பார்த்தான் அவன். வாய்விட்டு எதுவும் கேட்காதபோதும், அவனுக்குள் ஏகப்பட்ட குழப்பம் நிறைந்திருந்தது.

“நீங்களும் வாங்கோவன் விளையாட!” சிரித்துக்கொண்டு அழைத்தாள்.

“நான் என்ன சின்னப்பிள்ளையா?” சிறுபிள்ளைகள் போன்று கசூரினா பீச்சில் முழு நாளும் உருண்டு பிரண்டு விளையாடி, நீரில் நனைந்த காலமெல்லாவற்றையும்தான் மிருணா தன்னோடு கொண்டு சென்றுவிட்டாளே.

“நான் மட்டும் என்ன குழந்தையா?” பட்டென்று திருப்பிக் கேட்டாள் அவள்.

“அத நீங்கதான் சொல்லவேணும்.” அவனது பதிலில் முறைத்தாள் வானதி.

இப்போது என்ன சொல்லிவிட்டேன் என்று முறைக்கிறாள்? வேடிக்கையாகப் போயிற்று அவனுக்கு.

“நீங்க கிழவன் எண்டதுக்காக என்னையும் கிழவி ஆக்காதீங்க, சரியா? எனக்கு மரியாதை எல்லாம் தேவையில்லை.”

படபடவென்று வந்த பதிலில் சின்னச் சிரிப்பு அரும்பியது அவனது வறண்ட உதடுகளில். ‘நான் என்ன சின்னப்பிள்ளையா?’ என்று கேட்ட ஒற்றைக் கேள்வியை வைத்து அவனைக் கிழவனாக்கிவிட்டாளே.

“சிரிச்சீங்களா என்ன?” குறு குறு என்று அவன் முகத்தையே கூர்ந்தபடி கேட்டாள் அவள்.

அவன் புருவங்களைச் சுருக்க, “இல்ல, இந்தத் தாடிக் காட்டுக்குள்ள இடி முழங்கினாலும் தெரியேல்ல. மின்னல் வெட்டினாலும் தெரியேல்ல. அதுதான் மழை வந்ததா இல்லையா எண்டு தெரிஞ்சுகொள்ளக் கேட்டனான்.” என்றாள், வெகு தீவிரமாக அவன் முகத்தை ஆராய்ந்தபடி.

தாடிக் காடா? கரமொன்று உயர்ந்து தாடி மீசையைத் தானாகவே தடவிக் கொடுக்க, அவன் புன்னகை மெய்யாகவே விரிந்தது.

“உன்ர மகனுக்கு என்ர மகளைவிட வயது கூட. தெரியுமோ?” அடக்கிய சிரிப்புடன் கேட்டான்.

“ஒரே ஒரு வயசுதான் கூட. மாதத்தால கணக்குப் பாத்தா பதினோரு மாதம் தான் பெரியவன். எண்டாலும், நீங்க வயசான காலத்தில பிள்ளையைப் பெத்துப்போட்டு, என்ர பிள்ளைக்கு வயசு கூட என்றபடியால் எனக்கும் கூட எண்டு சொல்லுவீங்களா?” அவன் வயதானவன் என்று அவள் முடிவே கட்டிவிட்டதில் அதிரூபன் சற்று அயர்ந்துதான் போனான்.

‘28 வயசு வயசான காலமா?’ சுவாரசியமான பெண்தான்.

“இப்ப வாறீங்களா இல்லையா?” இவளிடம் பேச ஆரம்பித்ததே பிழை என்பதுபோல் அடம்பிடித்தாள் அவள்.

அவன் இல்லை என்பதாகத் தலையசைக்க, “நீங்க உண்மையாவே ஓல்ட் மேன்தான்!” என்று முறைத்துவிட்டு ஓடிவிட்டாள் அவள்.

போகும் அவளையே சின்னச் சிரிப்புடன் பார்த்திருந்தான் அதிரூபன்.

error: Alert: Content selection is disabled!!