பக்கத்துத் தெருதானே என்றாலும், தன் கண்முன்னே நடமாடிக் கொண்டிருந்த தன் காதலியை, தன் மனைவியை ஒரு சில வாரங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்பதைப் பாரியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளைப் பிரசவத்திற்கு அனுப்பும்போது, தன் மாமனாரும் மாமியாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்து, குழலியைப் பார்த்துக் கோபமாக முறைத்துக் கொண்டே இருந்தான். அவளது முகத்தில் இருந்த குறும்பான சிரிப்பைக் கண்டு, அவனது இதயம் தவித்தது. எப்படியோ மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவளை அனுப்பி வைத்தான்.
இதோ, மஞ்சு கபிலன் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன. மஞ்சு இப்போது அந்த வீட்டின் அன்பான, பொறுப்பான மூத்த மருமகளாக முற்றிலும் மாறிவிட்டாள். மாமனார் கார்மேகம், மாமியார் சகுந்தலா மற்றும் பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கும் குழலி, தாத்தா பாட்டி என எல்லாரது மனதையும் தன் அன்பான குணத்தால் கவர்ந்திருந்தாள்.
அன்று காலை முதலே மஞ்சு வழக்கம் போல வீட்டின் அத்தனை கடமைகளையும் சுறுசுறுப்பாக முடித்தாள். சமையல், பெரியவர்களுக்கான உபசரிப்பு என எல்லாவற்றையும் கவனித்துவிட்டு, துவைத்த துணிகளை மாடியில் கொண்டு போய் காய வைத்தாள். மதிய வெயில் லேசாக எட்டிப் பார்க்க, மாடிப் படிகளில் இறங்கி கீழே வரும்போது அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது.
சட்டென்று அவளது வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. தலை சுற்றலும், ஒருவித மயக்கமும் அவளைச் சூழ்ந்து கொள்ள, மாடிப் படியிலேயே ஒரு நிமிடம் நின்று சுவரைப் பிடித்துக் கொண்டாள். கண்கள் இருள, அதற்கு மேல் அவளால் தாங்க முடியவில்லை.
வேகமாகக் கீழே இறங்கி, நேராக ரெஸ்ட் ரூமுக்குள் ஓடினாள். காலையிலிருந்து சாப்பிட்டது எல்லாம் வெளியில் வரும் அளவுக்குக் குமட்டிக்கொண்டு வாந்தி எடுத்தாள். வாந்தி எடுத்து முடித்ததும் அவளுக்கு ஒட்டுமொத்த உடம்பும் சோர்ந்து, சொல்ல முடியாத அளவுக்குக் களைப்பாக இருந்தது. முகத்தைக் கழுவிவிட்டு, அப்படியே சுவரைப் பிடித்தபடி மெதுவாக வந்து படுக்கையில் சரிந்தாள்.
சத்தத்தைக் கேட்டுப் பதறியடித்துக்கொண்டு அறைக்குள் ஓடிவந்த சகுந்தலா, மஞ்சுவின் சோர்வான முகத்தையும், வியர்த்து வடித்திருந்த நெற்றியையும் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்தார். ஒரு தாயாக அவளது அனுபவம் அவளுக்கு உண்மை என்னவென்று உணர்த்தியது.
“மஞ்சு… என்னம்மா செய்யுது? வயித்தைப் பிரட்டுதா? வாந்தி வந்துச்சா?” என்று சகுந்தலா ஆசையோடும் பதற்றத்தோடும் கேட்க, மஞ்சு மெதுவாகத் தலை அசைத்தாள்.
சகுந்தலாவின் முகத்தில் சட்டென்று ஒரு பெரிய மகிழ்ச்சி மின்னியது. உடனே கபிலனுக்கும், பக்கத்துத் தெருவில் இருந்த மஞ்சுவின் பெற்றோருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. ஊருக்குள் இருக்கும் வைத்தியச்சி பாட்டியை அழைத்து வந்து பரிசோதித்ததில், அவர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தி உறுதியானது.
திருமணம் முடிந்த இதோ ஆறு மாதங்களுக்குப் பிறகு, மஞ்சு முதல்முறையாகத் தன் வயிற்றில் ஒரு புதிய உயிரைச் சுமக்கிறாள், அதாவது அவள் உண்டாகி இருக்கிறாள் என்ற சுப செய்தி அந்த வீடு முழுவதும் பரவியது.
பதற்றமாய் ஓடிவந்த கபிலன், படுக்கையில் சோர்வாக இருந்தாலும் முகத்தில் ஒரு தாய்க்கே உரிய பொலிவோடு அமர்ந்திருந்த மஞ்சுவைப் பார்த்ததும், தன் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளருகே அமர்ந்து அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். மூன்று வருடக் காதலுக்குப் பிறகு, தங்களின் காதலின் சாட்சியாக ஒரு புதிய உயிர் வரப்போகிறது என்ற செய்தி இரு குடும்பங்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியது.
இரண்டு குடும்பத்திற்கும் வாரிசு வரப்போகும் சந்தோஷத்தில் பெரியவர்கள் திளைத்தனர்.
இதோ குழலிக்கு பிரசவ நாளும் நெருங்கியது. ஒரு நள்ளிரவு வேளையில் குழலிக்குப் பிரசவ வலி எடுக்க, அவளை டவுனில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிரசவ வார்டுக்கு வெளியே பாரி பதற்றத்தோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். அவனது நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. உள்ளே குழலியின் மெல்லிய முனகல் சத்தமும், வலியின் தவிப்பும் அவனது உயிரையே உலுக்குவது போல இருந்தது. “முருகா… என் பொண்டாட்டியைக் காப்பாத்துப்பா…” என்று கைகளைக் கூப்பி வேண்டிக் கொண்டிருந்தான்.
ஒரு மணிநேரம் கடந்திருக்க குழலியின் பெரிய அலறல் சத்தம் கேட்ட சிறிது நேரத்தில், பிரசவ வார்டின் கதவு திறக்கப்பட… உள்ளிருந்து ஒரு செவிலியர் (நர்ஸ்) கையில் ஒரு சிறிய துணிப் பொதியை ஏந்தியபடி புன்னகையோடு வெளியே வந்தார்.
“அழஆண் குழந்தை பிறந்திருக்கு சார்! தாயும் சேயும் நலம்!” என்று நற்செய்தி சொன்னார்.
துளிர்விட்ட இளஞ்சிவப்பு நிறத்தில், தன்னைப் போலவே அச்சடித்தாற்போல் கம்பீரமாகப் பிறந்திருந்த தன் மகனைக் கைகளில் ஏந்திய பாரியின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
நேரமும் மிக வேகமாக கடந்திருக்க, மருத்துவமனையின் அந்த அமைதியான அறைக்குள் பாரி மெதுவாக உள்ளே வந்தான். அறையின் ஒரு ஓரத்தில் இருந்த சிறிய தொட்டியில், தங்களின் காதலின் சாட்சியாக, தங்களின் உலகமாகப் பிறந்திருந்த அந்தப் பிஞ்சு குழந்தை தேவதூதனைப் போல நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
பிரசவ அறைக்கு வெளியே இருவீட்டுப் பெற்றோர்களும், உறவினர்களும் மட்டற்ற மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் காத்திருக்க, உள்ளே பிரசவக் களைப்போடு படுக்கையில் சாய்ந்திருந்தாள் பாரியின் காதலி… அவனது அன்பு மனைவி குழலி.
அவளருகே மெதுவான நடையோடு வந்தவன், அவளது சோர்வான முகத்தையும், அதில் தெரிந்த தாய்மையின் அழகையும் இமைக்காமல் பார்த்தான். மெல்லக் குனிந்து, தன் ஒட்டுமொத்தக் காதலையும் நன்றியையும் காட்டித் தன்னவளின் நெற்றியில் ஆழமாக ஒரு முத்தத்தைப் பதித்தான்.
அந்த நொடி, இத்தனை வருடக் காதல், பிரிவுகள், கசப்புகள், தடைகள், மணாலியின் பனிமலைத் தேனிலவு என அவர்கள் கடந்து வந்த அத்தனை நினைவுகளும் அவனது மனக்கண்ணில் வந்து போயின.
தன் கையைப் பற்றிக் கொண்டு, இன்று தங்களுக்குள் ஒரு புதிய உயிரைத் தந்துவிட்ட தேவதையை நெகிழ்ச்சியோடு பார்த்த பாரியின் கண்களிலிருந்து, அவனையுமறியாமல் ஆனந்தக் கண்ணீர் துளிகளாக வழிந்தோடிய நேரத்தில்,திறந்திருக்கும் ஜன்னல் வழியாக மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
ஹோ ஓ
தேனே அடையாளம் போடவா…என்று சற்று தூரத்தில் ஒலித்த பாடலின் வரிகள் இருவரின் காதில் விழவும் மௌனமாக சிரித்தனர்…!
– சுபம் –

