மயங்கினேன் மழைச்சிலையே – 23

அத்தியாயம் – 23

வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்து சிரித்து கண்களுக்கு விருந்தாக, விதவிதமான அதன் நறுமணங்கள் நாசியில் நுழைந்து நெஞ்சம் நிறைக்க, அந்த சோலைவனத்தில் பட்டாம்பூச்சியாக சுற்றிய சக்தியின் திருநாட்கள் இத்தனை சீக்கிரம் முடியும் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை.

அவளுக்கு பிடித்த கேரட் அல்வாவை செய்ய கேரட்டை துருவிக் கொண்டிருந்த லீலாவதி, வெகுநேரமாக சிணுங்கிய அலைபேசியை ஏற்காமல் யோசித்துக் கொண்டிருந்த சக்தியை உலுக்கி ஏற்கச் சொன்னார்.

இங்கு வந்ததில் இருந்து தன் அலைபேசியில் சேமிக்கப்பட்ட எண்களைத் தவிர வேறு புது எண்களின் அழைப்பை அறவே தவிர்த்து வந்தாள். இன்று ஏனோ லீலாம்மா சொன்னதால் பட்டென்று ஏற்றுவிட்டாள்.

அது அவளது வசந்த காலத்தின் சோலைக்கு கொள்ளி வைக்க வந்த அழைப்பாக அமைந்ததில் உறைந்து போய் அப்படியே சிலையென நின்றிருந்தாள்.

லீலாவதி சமையலை முடித்து ருசி பார்க்க அவளிடம் காட்ட வேண்டுமென அவர் காத்திருக்க, அவள் இன்னமும் வராமல் போகவே, ‘இன்னும் ஃபோன் பேசிட்டு இருக்காளோ!?’ எனத் தேடி அவளது அறைக்கே வந்து விட்டார்.

கண்களில் டன்கணக்கில் கலவரம் பொங்க, காதை விட்டு சற்று தள்ளி அலைபேசியை பிடித்தபடி உறைந்த நிலையில் அவள் நின்றிருக்க, அவளருகே வந்து பார்த்தவர் அவள் பேசவில்லை என்பதை உணர்ந்து “சக்திமா! டேய் சக்தி!” அவளைப் பிடித்து உலுக்கினார்.

அதில் “ஹான்!” நிகழுக்கு வந்த சக்தி, லீலாம்மாவை புரியாத பார்வை பார்க்க திடுமென அவளது வித்தியாசமான நடவடிக்கையில் பதற்றம் அடைந்தார் அவர்.

“என்னாச்சுடா?! ஏன் இப்படி சிலை மாதிரி நிக்கிற? ஃபோன்ல யாரு? என்ன சொன்னாங்க? எதாவது பிரச்சனையா?” அவர் கேள்விகளாக அடுக்க, அவளோ அவரையே பார்த்தபடி நின்ற நிலை மாறாமல் அப்படியே இருந்தாள்.

அவருக்கு பயம் பிடித்துக் கொள்ள மேலும் அவளை நன்கு உலுக்கி எடுத்து என்னவாயிற்று என்று வினவ, சட்டென ஒரு பொய் கூட அவளது மூளையில் உதிக்கவில்லை.

சில நொடிகள் அப்படியே சிந்தித்தவள்,” ஒன்னுல்லம்மா. ஆஃபிஸ்ல ஒருத்தர் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்து ஹாஸ்பிட்டல்ல சீரியஸா இருக்காராம். அதான்.. கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்.” சமாளிப்பான பொய் தான். ஆனால் அவளது நிலைக்கு பொருந்த வேண்டுமே!

“ஓஓ! பாவம் தான், மனுசனோட வாழ்க்கையில எது எப்ப நடக்கும்னு தெரியாதுங்கறத இந்த மாதிரி சில நிகழ்வுகள் தான் காட்டுது. சரி, அதுக்குத்தான் நீ அப்செட்டாகி இப்படி நின்னுட்டு இருந்தியாடா? அவங்க உனக்கு ரொம்ப நெருக்கமானவங்களா?” அந்த நபருக்காக வருந்தியவர் அவளுக்கு நெருக்கமானவர் போல என்றெண்ணி வினவினார்.

“அ.. ஆமாம்மா.” என்றவள் இன்னமும் இயல்புக்கு வராமல் இருக்க,” சரி கண்ணு! சாப்பிட்டுட்டு கொஞ்சம் தூங்கி எழுந்திரு மனசு சரியாகும்.” அவளை அழைத்து உணவு கொடுக்க பெயருக்கு கொறித்து விட்டு தனது அறைக்குள் சென்றாள்.

அவர் வந்தது முதல் இத்தனை நாட்களாக பிரகாசமாக இருந்த அவளது முகம் தற்போது முற்றிலும் வாடித் தெரிய ‘யாருக்கோ அடிப்பட்டதுக்கு இப்படி வேதனைப்படுறா! பூஞ்சை மனசு போல’ என்றெண்ணி சீக்கிரம் அவள் இயல்பாக வேண்டுமென நினைத்துக் கொண்டார்.

அறைக்குள் சென்ற சக்திக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அனிருத்திற்கு அழைக்கலாம் என்றால் இந்த மதிய நேரத்தில் அங்கு நடுஇரவாக இருக்க அவனையும் தொல்லை செய்ய முடியாது என தவித்தாள்.

‘என்னுடைய ஃபோன் நம்பர் கிடைச்சிருக்குனா, அப்ப நான் இருக்கற இடமும் சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவானே! அவன் இங்க வந்து எதாவது கலாட்டா செய்து மதிக்கோ அம்மாவுக்கோ எதாவது நடந்துட்டா? அவங்களுக்கு என்னோட கடந்த காலம் எதுவும் முழுசா தெரியாதே.”

“நான் இப்படி ஒரு சிக்கல்ல இருக்கேன்னு தெரிஞ்சா, என்னை ஒதுக்கிடுவாங்களா?! இப்படி ஒரு அன்பான குடும்பம் இனிமே எனக்கு கிடையாதா? எனக்கு மட்டும் எந்த சந்தோஷமும் நிலைக்காதா கடவுளே!’ ஏதேதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள்.

அடுத்த இரு தினங்களும் அவள் முகம் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருக்க, பேட்டரி டவுன் ஆன பொம்மை போல இருந்தவளைக் கண்டு கவலையுற்ற லீலாவதி விசாரித்தாலும் ‘ஒன்றுமில்லை’ என்பதைத் தவிர அவளுக்கு வேறு சொல்ல தைரியம் வரவில்லை.

கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு அவ்வப்போது வெறிப்பதும், எங்கோ பார்வையை பதித்து தீவிர சிந்தனையில் இருப்பதுமாக இருந்தவளால் பதற்றமடைந்த லீலாவதி அன்று இரவில் பேசிய அன்புவிடம் புலம்பித் தள்ளினார்.

“டேய் கண்ணா! இந்த சக்தி புள்ளைக்கு என்னாச்சுனு தெரியல ரெண்டு நாளா புள்ள முகமே சரியில்ல. ரொம்ப வாடிக் கெடக்கு. நான் கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டீன்றா.” ஆற்றாமையுடன் புலம்பியவர்,

“நீ எப்ப தான்டா வருவ?! சீக்கிரம் வா கண்ணா! அவளை இப்படி பார்க்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” ஒருவேளை தன் மகனிடம் அவள் மனதுவிட்டு பேசுவாளோ என்ற எண்ணத்தில் அவனை விரைந்து வரச் சொன்னார்.

“ஏன் திடீர்னு என்னாச்சு?!” என்று வினவியவனிடம் சக்தி தன்னிடம் சொன்ன காரணத்தை அவர் உரைக்க, புருவங்கள் சுருங்க யோசனையானவன், “சரிம்மா! கவலைப்படாதீங்க. நான் வந்துடறேன்.” தாயை சமாதானம் செய்தான்.

“உங்கப்பா வேற ‘வீட்டுக்கு எப்ப வர்ற? இல்ல நான் அங்க வரட்டுமா?’னு கேட்டு என்னை டார்ச்சர் பண்றாருடா. இவளை இப்படியே தனியா விட்டுட்டு போக மனசில்ல. நீ வந்த பிறகு உங்கிட்ட இவளை ஒப்படைச்சுட்டு நானும் ஊருக்கு கிளம்பனும்டா கண்ணா! ”

” உன் அப்பா இவ்வளவு நாள் என்னை விட்டு பிரிஞ்சு இருந்ததே பெரிய விசயம்!” கணவனை பிரிந்த துயரம் அவருக்கும் இருக்க, மனம் அவரைத் தேடத் தொடங்கி விட்டது லீலாம்மாவிற்கு.

சக்தியின் நிலையை யோசித்துக் கொண்டிருந்த அன்பு, தாயை எண்ணி புன்முறுவலுடன், “சரிம்மா! நாளைக்கு ட்ரைனிங் முடிஞ்சுடும் நான் உடனே கிளம்பி வர்றேன், நீங்க நைட்டே ஊருக்கு கிளம்பிடுங்க. தட்கல்ல டிக்கெட் போடுறேன். லவ் பேர்ட்ஸை பிரிச்ச பாவம் எனக்கெதுக்கு?! ” நமட்டுச் சிரிப்புடன் கூறினான்.

“போடா ராஸ்கல்!” லேசான வெட்கத்துடன் சிணுங்கியவர், “சீக்கிரம் வந்துடு கண்ணா! புள்ளைய பார்க்கவே கஷ்டமா இருக்கு. நீ வந்தா உங்கிட்டயாவது எதாவது சொல்லுவாளோ என்னமோ!” மனதில்பட்டதை உரைத்து சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை வைத்தார்.

இரு தினங்களாக அனிருத்திற்கு அழைத்து அவன் அழைப்பை ஏற்காததால் மிகவும் துவண்டு போனாள் சக்தி. தன்னால் அன்புவிற்கும் அம்மாவிற்கும் எதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் அவளை நிம்மதி இழக்கச் செய்தது.

இரவில் திடுமென வீடு புகுந்து சில ரவுடிகள் லீலாம்மாவை அடித்து போட்டு விட்டு, அவளை தரதரவென இழுத்து செல்வது போல எல்லாம் கனவுகள் வந்து அவளை மிரளச் செய்தன.

இப்படியான பயங்களால் எங்கே மீண்டும் காய்ச்சல் வந்து விடுமோ என்ற ஐயத்தில் உடல்சூடே இல்லை என்றாலும் பாரசிட்டமாலை போட்டுக் கொண்டு தூங்க முயல்கிறாள். ஆனால் தூக்கம் தான் வருவேனா என போக்கு காட்டுகிறது.

இந்த பிரச்சினையை யாரிடமாவது கொட்டி இதற்கு ஒரு தீர்வைக் காணாவிடில் இந்த மன அழுத்தத்தில் தனக்கு எதாவது நேர்ந்து விடுமோ என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது.

அனிருத்திடம் பேச முடியாத சூழ்நிலையில் அன்பு அருகில் இருந்தால் அவனிடமாவது மொத்த உண்மையையும் சொல்லி அவனது அணைப்பில் பத்திரமாக பதுங்கிக் கொள்ள மனம் வெகுவாக அவனைத் தேடியது.

இரவெல்லாம் தூங்காமல் கண்கள் சோர்ந்து காலையில் எழுந்து வந்த சக்தியிடம், லீலாம்மா மெதுவாக இன்று தான் ஊருக்குக் கிளம்பப் போவதாகச் சொல்ல சோர்ந்த விழிகளில் மிதமிஞ்சிய கலவரம் பிறந்தது.

“ஏன் லீலும்மா திடீர்னு என்னை தனியா விட்டுட்டுப் போறேன்னு சொல்றீங்க? நான் எதாவது தப்பு செய்துட்டேனா?!” சிறு குழந்தை போல் தவிப்புடன் கேட்டவளை அணைத்துக் கொண்டார்.

“அச்சோ! அதெல்லாம் இல்லடா தங்கம்! அங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல, அதனால நான் போனா தான் சரிப்படும்டா. உன்னை அப்படி தனியா விட்டுட்டுப் போவேனா? இன்னிக்கு நைட்டே அன்பு வந்துடுவான். நீ பயப்படாதே, சரியாடி செல்லம்!” அவளை சமாதானம் செய்தார்.

அன்பு வருகிறான் என்பதில் நிம்மதியும், அவனிடம் உண்மை முழுவதும் கூறி தன் நிலையறிந்த பிறகு அவனது எதிர்வினை என்னவா இருக்கும் என்ற அச்சமும் ஒருசேர எழும்பியது.

” ஓஓ! சரிம்மா பார்த்து கவனமா போயிட்டு வாங்க. அப்பாவை பார்த்துக்குங்க.” அவரை கவனமாக போய் வரச் சொன்னவள், “அவருக்கு எங்க விசயம் தெரியுமா லீலும்மா?” தயக்கத்துடன் வினவினாள்.

“அதுசரி, அவருக்கு தெரிஞ்சிருந்தா என்னை விட்டு இருப்பாரா? வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு.” அவர் சொல்லவும், அதில் வேறு சக்திக்கு மனம் பாராமனது. அவள் முகம் மேலும் வாட்டமுற்றதில் அவளது கன்னத்தை தடவியவர்,

” நீ அதுக்கெல்லாம் கவலைப்படாதேடா கண்ணு. அதான் நான் இருக்கேன்ல, அவரை எப்படியாவது பேசி சரிகட்டி சம்மதிக்க வைச்சிடுறேன் சரியா?! இப்ப ஊருக்கு போயிட்டு கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து வர்றோம்.” புன்னகையுடன் அவளுக்கு தைரியமளித்தார்.

அவர் கிளம்புவதாக சொன்னது முதல் ஏற்கனவே தனசேகரால் எதுவும் பிரச்சினை வருமோ என பயந்திருந்தவள், அவரை விட்டு துளியும் விலகவில்லை. அவரது முந்தானையை பிடித்தவாறே சுற்றிக் கொண்டிருந்தாள்.

தாய்ப்பசுவின் பின்னாலேயே சுற்றும் கன்றைப் போன்ற அவளது செயலில் மனம் நெகிழ்ந்த லீலாவதியும் அவளை எதுவும் சொல்லவில்லை.

இரவு இரயிலுக்கு சற்று முன்னதாகவே அவர் கிளம்பிட, அன்புவும் இன்னமும் வந்திருக்காத நிலையில் கால்களை கட்டிக் கொண்டு, உண்மையில் ஏதோ பேய் பங்களாவில் இருப்பதைப் போல உள்ளூர பயத்துடன் ஸோஃபாவில் அமர்ந்திருந்தாள்.

அழைப்பு மணியோசை சத்தத்தில் திடுக்கிட்டவள் உள்ளுக்குள் மூண்ட கலவரத்துடன் சென்று பீப் ஹோல் வழியாக யாரெனப் பார்க்க அன்புவைக் கண்டதும் நிம்மதியாகி பட்டென கதவைத் திறந்தாள்.

அவன் உள்ளே வந்ததும் அடுத்த நொடி “ரொம்ப பயந்துட்டேன் மதி!” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டு அவனுள் புதைந்தவளுக்கு பயத்தில் கண்ணீர் பெருகத் தொடங்கியது.

அவளது செயலில், “ஹே! என்னடி திடீர்னு இன்ப அதிர்ச்சி எல்லாம் கொடுக்கற!” வியந்தவன், அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு, “அழாதேடா செல்லம்! அதான் வந்துட்டேன்ல,” சிறிது நேரம் சமாதானம் செய்தான்.

இடுப்போடு அவனை கட்டிக் கொண்டே வந்தாளேயொழிய அவனை விடுவதாக இல்லை. அவனும் அவளது தலையை பரிவுடன் வருடியவன், “ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன் யுவி! உடனே வந்துடறேன்.” தன் அறைக்கு விரைந்தான்.

அவன் வந்தபிறகு இருவரும் லீலாம்மா செய்து வைத்த இரவு உணவை முடிக்கும்வரை அவள் மௌனமாகி விட, அனைத்தும் எடுத்து கழுவி ஒதுங்க வைத்து வந்தவன் அவளது முகத்தைக் கண்டு துணுக்குற்று என்னவென்று வினவினான்.

அதுவரை அவனிடம் நடந்த அனைத்தையும் சொல்லிவிட ஒத்திகை பார்த்திருந்தவள் ஆழ மூச்சிழுத்து நிதானப்படுத்திக் கொண்டு, “நான் உங்ககிட்ட என்னைப் பற்றிய முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும் மதி!” என ஆரம்பித்தாள்.

புருவங்கள் சுருங்க யோசனையானவன் அமைதியாக இருக்கவும், அவளது கதை மொத்தமும் சொல்லி முடிக்க, முகத்தில் எந்த உணர்வுமில்லாமல் இருந்தவன், “ஸோ, இப்ப நீ என்ன செய்யலாம்னு இருக்க சக்தி?” உணர்வற்ற குரலில் கேட்டான்.

அவனது கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவள் தவிப்புடன் தெரியாதென உதடு பிதுக்கி தலையசைக்க, “அந்த கிழவன் வந்து கூப்பிட்டா..” அவன் இடைவெளி விட, அவனது முகத்தையே பரிதவிப்புடன் பார்த்தாள்.

“நீ போயிடு சக்தி!” அதே உணர்வற்ற குரலில் உரைத்தவன் வேகமாக அறைக்குள் சென்று விட, மின்சாரம் தாக்கியது போல அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் சக்தி.

error: Alert: Content selection is disabled!!