மயங்கினேன் மழைச்சிலையே – 24

அத்தியாயம் – 24

அவ்வளவு தானா?! அனைத்தும் முடிந்ததா!? இருவரும் காதலைச் சொல்லி கடந்த நாட்கள் என்னவோ சொற்ப தினங்கள் தான். ஆனால் அதற்குள் ஆண்டாண்டு காலமாக காதலிப்பவரைகளைப் போல உருகியது எல்லாம் பொய்யா?! சக்தியால் நம்ப இயலவில்லை.

தனது உண்மை நிலையைச் சொல்லி பிரச்சனையிலிருந்து தன்னைக் காப்பாற்ற அன்பு எதாவது செய்வான் என்று நினைத்தால் ‘போய்விடு’ என்கிறான். உன்னுடைய காதல் அவ்வளவு பலவீனமானதா மதி?! மனதிற்குள் அவனிடம் கேள்வி கேட்டு உடைந்து போனாள்.

தனது அறைக்கு வந்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது அலட்சியமும் நிராகரிப்பும் சக்தியை விரக்தியில் தள்ளியது இரவெல்லாம் மனதிற்குள் அவனிடம் சண்டையிட்டு அழுது கரைந்தவள் அதிகாலையில் துக்க மிகுதியில் உறங்கிப் போனாள்.

கண்களை திறக்க முடியாமல் கிடந்தவளது அலைபேசி தொடர்ந்து சிணுங்கிக் கொண்டிருக்க, அதில் ஒளிர்ந்த தனசேகரின் எண்ணில் கலவரம் பிறக்க, அந்த விடியலே அவளுக்கு பயத்தோடு விடிந்தது.

இரவெல்லாம் அவனை நினைத்து அனர்த்தியது எல்லாம் அந்த நொடி மறந்து போக, தற்போது தன்னை காக்க அவன் மட்டுமே இருக்கிறான் என்ற எண்ணத்தில் அலைபேசியை எடுத்துக் கொண்டு மனம் கவர்ந்த மன்னவனைத் தேடி ஓடினாள்.

அலுவலகத்திற்கு கிளம்பி தன் லேப்டாப் பையை மாட்டிக் கொண்டு வெளியே வந்த அன்புவிடம், “அவன்தான் கால் பண்றான் மதி. எனக்கு இப்ப என்ன பண்றது ஒன்னுமே புரியல!” பயத்துடன் கண்கள் கலங்க படபடத்தவளை நிதானமாகப் பார்த்தான் அன்பு.

“நாந்தான் நேத்து நைட்டே சொல்லிட்டேன்ல சக்தி.” அவன் நேற்றிரவு சொன்னதை நினைவூட்ட, அந்த பேதைக்கு அப்போதுதான் நேற்று நடந்த அனைத்தும் நினைவில் வந்து மூளையில் உரைத்தது.

கண்களை மூடி ஆழ மூச்சிழுத்து விட்டு, கண்ணைத் தாண்டி வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்தவள், “ஸாரி மிஸ்டர். அன்பு! உங்கள தேவையில்லாம தொல்லை பண்ணிட்டேன்.” என்றுவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.

பொதுவாக வேதனைகள் அனைத்தையும் தனக்குள் போட்டு புதைத்து கொண்டு புன்னகையுடன் வளைய வருபவள். தற்போது காதலின் பலவீனத்தால் உடைந்து போய் அவனிடம் நின்று விட்டாள்.

‘வேண்டாம் சக்தி! உனக்குனு யாருமில்லை. யாரையும் உன் கஷ்டத்தைச் சொல்லி வருத்தாதே! முடிஞ்சு போன நாட்களை கடவுள் ஏதோ உனக்கு போனஸா கொடுத்ததா நினைச்சுட்டு உனக்கு என்ன தோணுதோ அதையே செய்!’ தனக்குத்தானே தைரியம் கூறிக் கொண்டாள்.

அதேசமயம் நின்று போன அலைபேசியில் தனசேகரின் எண் மீண்டும் ஒளிர தன்னை சமன் செய்து கொண்டவள் “ஹலோ!” என்றிட, “என்னடி உனக்கு உங்கப்பன் மேல அக்கறையே இல்ல போல,” எக்காளமாகக் கேட்டான்.

“அப்பன் உசுருக்கு ஆபத்துனா பறந்து அடிச்சுட்டு வருவன்னு பார்த்தா இன்னுமும் அங்கேயே இருந்து ஆட்டம் காட்டுறியா? அதான் நானே வந்துட்டேன்டி.” என்றவனின் பேச்சில் உள்ளுக்குள் கிலி பிறந்தது அவளுக்கு.

“சென்னையில தான் இருக்கேன். ஒழுங்கு மரியாதையா நீயே என்னோட இடத்துக்கு வர்றியா? இல்ல நீ இருக்கற இடத்துக்கு வந்து உன்னை தூக்கிட்டு போகவா?! ” மிதப்பாகக் கேட்க, பேச்சற்று போனாள் சக்தி.

அன்புவின் இருப்பிடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்ற முடிவெடுத்தவள்,” நானே வர்றேன். எங்க இருக்கனு அட்ரஸ் சொல்லு.” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்க, அவனும் தான் தங்கியிருந்த ஹோட்டல் பெயரைக் கூறினான்.

“இன்னமும் ஒன் ஆர்ல நான் அங்க வர்றேன். அதுவரை அப்பாவை எதுவும் செய்துடாதே. ப்ளீஸ்!” தளுதளுத்த குரலில் சக்தி கெஞ்ச, “உங்கப்பனை எதாவது செய்து எனக்கென்ன பிரயோசனம்? எனக்கு வேண்டியது எல்லாம் நீ தான்! சொன்னபடி வந்து சேரு!” நக்கலுடன் கூறிவிட்டு அழைப்பை வைத்தான்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த சக்தி கைக்கு கிடைத்த ஏதோ ஒரு உடையை அணிந்து கொண்டு வெளியே வர, அன்பு அலுவலகத்திற்கு சென்று விட்டதை உணர்ந்து விரக்தியாகச் சிரித்தாள்.

முகத்தை மறைத்துக் கொண்டு ஒளிந்து வெளியே வர வேண்டிய அவசியமின்றி இயல்பாக உடையணிந்து வந்தவளை ‘யாரிவள்?!’ என செக்யூரிட்டி முதற்கொண்டு அனைவரும் அவளைப் புதிதாக பார்த்தனர்.

“என்ன தாத்தா அடையாளம் தெரியலையா?!” புன்னகையுடன் கேட்ட அவளது குரலில் தான் அவருக்கு அவளை யாரெனத் தெரிந்தது. “நீயா கண்ணு! யார்றா இந்த புள்ள புதுசா இருக்கேன்னு பார்த்தேன்.” வாயெல்லாம் பல்லாகக் கூறினார்.

ஓரிரு முறை மட்டுமே வெளியே வந்தவள் வயதான அந்த தாத்தாவிடம் சில நிமிடங்கள் கூட வாயாடாமல் வந்ததில்லை. அதனால் வந்த அறிமுகம் இது!

அவள் புக் செய்திருந்த கேப் வரும்வரை அவரிடம் சில நிமிடங்கள் பேசியவள், வண்டி வந்ததும் ஏறி கிளம்பிட கையசைத்து விடை கொடுத்தார் அவர். பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் இம்மாதிரியான சிலரின் அன்புதான் அவரது மகிழ்ச்சி.

தனசேகர் சொன்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்து இறங்கியவள் வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டாலும், சூழ்நிலையை சமாளித்து தானே ஆக வேண்டும் பெருமூச்சுடன் உள்ளே சென்றாள்.

அவனது அறை இருந்த தளத்திற்கு வந்தபிறகு அந்த அறைவாயில் கட்டுமஸ்தான இருவர் நிற்பதைக் கண்டு மிரண்டவளுக்கு, இனி தப்பிக்க வழியே இல்லை போல என்றுதான் தோன்றியது.

தன்னை அறிமுகம் செய்து கொண்டவளை அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்க, ஏதோ கொடியவிலங்குகள் அடர்ந்த காட்டுக்குள் மிரண்டு விழித்த முயல்குட்டியாக நுழைந்தாள்.

அறைக்குள்ளும் நான்கைந்து பவுன்ஸர்கள் இருக்க எச்சில் கூட்டி விழுங்கி பயந்தபடி வந்தவளை “வாடி என் பொண்டாட்டி! என் கண்ணுலேயே விரல்விட்டு ஆட்டுட்டியே! பெரிய ஆளு தான் நீ!” ஆர்ப்பாட்டமாக வரவேற்ற தனசேகர்,

அவள் மிரண்டு விழிப்பதில் அங்கிருந்தவர்களில் ஒருவனை மட்டும் இருத்திக் கொண்டு மற்றவர்களிடம் கண்ணைக் காட்டி வெளியே அனுப்பினான்.

“ப்ளீஸ்! என் அப்பாவை விட்டுடுங்க. உங்க கடனை நான் சம்பாதித்து அடைச்சிடுறேன்.” கடனுக்காக தன்னை கேட்டதில் அவள் அதற்கு தீர்வு சொல்ல அட்டகாசமாகச் சிரித்தான் அவன்.

“அந்த பிஸ்கோத்து காசை வைச்சு நான் என்ன பண்றது? எனக்கு நீ தானே வேணும். ‘இந்த வயசுலயும் இவனுக்கு வந்த வாழ்வைப் பாருடா’னு ஒவ்வொருத்தனும் வெந்து போகனும். அதுக்கு நீயா என்னை விரும்பி கல்யாணம் பண்ணனுமே, அதுக்குத்தான் இதெல்லாம்.” பெரிதாக விளக்கம் வேறு கொடுத்தான்.

“எனக்கு ஆபத்துனா அவள் வருவாள்னு சொன்னேன்ல சரி, நீ கேட்டதை நான் கொடுத்துட்டேன் தனசேகர். என்னோட கடன் ரத்து பத்திரத்துல கையெழுத்துப் போட்டு கொடுத்துடு. என் வேலை முடிஞ்சது.” என்றபடி வெளியே வந்த தந்தையை திகைப்புடன் பார்த்த சக்தி,

கோபத்துடன் ரத்தன்தேவ்வை நெருங்கி, “அடப்பாவி! நீயெல்லாம் ஒரு தகப்பனா? பெத்த பொண்ணை இப்படி ஒருத்தன் கிட்ட காசுக்காக விக்கிறியே! உனக்காக பதறித் துடிச்ச நாந்தான் உலகமகா முட்டாள்!” அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

கண்கள் கலங்க கதறியவளின் கையை பட்டென தட்டிவிட்ட ரத்தன், “என்ன ரொம்ப ஓவரா பேசற சக்தி? தனசேகர் என்ன உன்னை அவர்கூட படுக்கவா கூப்பிட்டார்? கௌரவமா கல்யாணம் செய்யத்தானே கேட்டாரு.”

“இப்படியொரு பணக்காரனை கல்யாணம் செய்தா உனக்கு ஒரு வளமான வாழ்க்கை அமையும்னு நினைச்சேன். அது ஒரு பெரிய தப்புன்னு ஓவரா சீன் போட்டுட்டு இருக்க?” கோபத்தில் பொங்கினான் அந்த கூறுகெட்ட அப்பன்.

“அடடா! போதும் நிறுத்துங்க உங்க ட்ராமாவை,” என்ற தனசேகர் அருகிலிருந்தவனிடம் கண்ணைக் காட்ட உள்ளே சென்றவன் ஒரு பெட்டியுடன் வெளியே வந்து தனசேகரிடம் நீட்டினான்.

“நீ கேட்ட எல்லாம் இதுல இருக்கு ரத்தன். இனிமே இந்த தனசேகரோட பொண்டாட்டிய திட்டுற உரிமை உனக்கு இல்லை. இடத்தை காலி பண்ணு.” கடுமையான குரலில் எச்சரித்தான் தனசேகர்.

‘ச்சீ! இப்படி ஒரு அப்பன் உயிருக்காக கவலைப்பட்டியே சக்தி! இவனெல்லாம் சாகட்டும்னு விட்டு இருக்கனும். இவனுக்காக வந்து தப்பு பண்ணிட்ட’ காலங்கடந்த ஞானோதயம் காலணாக்கு கூட பிரயோசனம் இல்லை.

‘போயும் போயும் இவனோட கடனுக்காக இந்த கிழவனுக்கு நீ வேணுமாம். இந்த நாயை எதிர்த்தா கொலை பண்றதை தவிர பெருசா வேற என்ன பண்ணிட போறான். இவனை கல்யாணம் பண்றதுக்கு செத்துப் போகலாம்.’ தனக்குள் முடிவுக்கு வந்தாள் சக்தி.

தன் பெயருக்கேற்ற சக்தியை மனதில் கொண்டு வந்தவள் விழிகளில் ரௌத்திரமாக, “யாருக்கு யாருடா பொண்டாட்டி?! உன்னை மாதிரி கேடுகெட்ட கிழவனை நான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சியா?” தனசேகரிடம் கோபமாகக் கேட்க, “ஏய்!!” விரல் நீட்டி எச்சரித்தான் அவன்.

“உன்னால என்ன பண்ண முடியும்?! உன் பணத்துக்கு ஆசைப்பட்டு வர்ற அந்த மாதிரி பொம்பளங்கனு என்னை நினைச்சுட்டியாடா பொறுக்கி? மிஞ்சிப் போனா என்ன செய்வ, அந்த ரித்திகாவை அடிச்சு கொன்ன மாதிரி என்னையும் கொல்லுவ. ” என்றிட தனசேகரின் கண்களில் வெறி ஏறியது.

“அவ்வளவு தானே! உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்றதுக்கு செத்துப் போறதே மேல். ஆனா நான் அவளை மாதிரி இல்ல, நான் சாகும் முன்னே உன்னை கொன்னுட்டு தான் போவேன்டா கிழட்டு நாயே!” ரௌத்திரம் பொங்க காளியாக கர்ஜித்தாள் சக்தி.

ஒரே எட்டில் அவளது தலைமுடியை கொத்தாகப் பிடித்த தனசேகர், “என்னடி ஓவரா பேசுற? ஆமா, அந்த ரித்திகாவை நாந்தான் கொன்னேன். இதேமாதிரி அவளை பிடிச்சு சுவத்துலேயே அடிச்சு அடிச்சு கொன்னேன். இப்ப என்னாங்கிற?! ” அவளது தலையை சுவரில் இடிப்பது போல செய்து காட்டி உறுமினான் அவன்.

“ஏதோ பார்க்க செம்ம கட்டையா இருக்கியே, உன்னை கட்டிக்கிட்டு உனக்கு ராஜ வாழ்க்கை தரலாம்னு நினைச்ச என்னோட தாராள மனசை புரிஞ்சுக்காம ரொம்ப பேசிட்ட நீ! இதுக்கெல்லாம் அனுபவிப்ப.” என்றவன் கைகளை பலமாகத் தட்டினான்.

“என்னோட ஈகோவை சீண்டி விட்டு ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்ட! இனிமே நீயும் உங்கப்பனும் உயிரோட வெளியே போனா தானே! உங்கள இங்கேயே கொன்னு புதைச்சுடுறேன்.” தனது அடியாட்களின் வருகையை தனசேகர் எதிர்பார்த்திருக்க உள்ளே திபுதிபுவென நுழைந்தது போலீசார்.

போலீஸை கண்டதும் தனசேகரும் ரத்தனும் திகைத்து நிற்க, சக்திக்குமே அவர்களின் வருகை எதிர்பாராத திருப்பமாக இருந்தது. துப்பாக்கி முனையில் இருவரையும் நிறுத்திய போலீசார்,” யு ஆர் அண்டர் அரஸ்ட்!” என்றனர்.

ஆரம்பக்கட்ட அதிர்ச்சி நீங்கிய தனசேகர் அப்போதும் அசராது, “அரஸ்ட் வாரண்ட் இருக்கா? என்ன காரணுக்காக அரஸ்ட் பண்றீங்க? என் லாயரை கூப்பிடறேன்.” தனது அலைபேசியை எடுக்க வெடுக்கென்று ஒரு போலீஸ் அதிகாரி வந்து அதைப் பிடுங்கினார்.

“ரித்திகா கொலை வழக்குல உங்க வாக்குமூலமும், ஹவாலா மோசடி வழக்குலேயும் அரஸ்ட் பண்றோம். இந்த டீடெய்ல் உனக்கு போதும்.” என்றவர் அவனது கரங்களில் விலங்கை மாட்ட, அதில் ஒரு அதிகாரி ரத்தன்தேவ் கரங்களிலும் கைவிலங்கிட வரவும் பதறினார்.

“ஸார்! நான் எந்த தப்பும் பண்ணல. இவன்தான் எங்கிட்ட வாங்குன பணத்துக்காக என் பொண்ணை கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி என்னை மிரட்டினான். நான் அப்பாவி ஸார்!” பதறியடித்து நடித்தார் ரத்தன்தேவ்.

அதுவரை அமைதியாக நின்ற சக்தி, “ஸார்! நான் கம்ப்ளைன்ட் தர்றேன். பணத்துக்காக ஒரு வயசான பணக்கார கிழவனை மேரேஜ் செய்யச் சொல்லி என்னை டார்ச்சர் பண்ணினாரு.” உறுதியான குரலில் சக்தி சொல்ல ‘டொமஸ்டிக் வைலன்ஸ்’ கேஸ் என்று அவரையும் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் வெளியேறிய பிறகு ஓய்ந்து போய் நின்ற சக்தி நடந்ததை நம்ப முடியாத வியப்புடன் விழித்திருக்க,”என்னடா ரொம்ப பயந்துட்டியா?!” எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தான் அன்புமதி.

அன்புவின் வருகையில் ஆச்சரியம் அடைந்த சக்தி ஓடிச்சென்று அவனை கட்டிக்கொள்ள, “உன்னை அப்படியே தனியா தவிக்க விடுவேனா கண்ணம்மா?! நீ என் உயிர்டி! ” அவளை இறுக அணைத்துக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட, அவனுக்குள் புதைந்தாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!