மலருமோ உந்தன் இதயம் 11 – 1

11

 

“பஸ்ஸில் போவேன் நித்தி; சும்மா சும்மா உங்க அண்ணாவைத் தொந்தரவு செய்யாதேயும்! அவருக்கிருக்கும் வேலை போதாதா!” கடிந்து கொண்டவளை, திரும்பியும் பாராமல் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நித்தி.

“ஆரம்பத்திலிருந்து நான் தனியாகத் தான் போவேன்; பாஷை எல்லாம் அவ்வளவு பிரச்சனை இல்லை; விளங்கவில்லை என்று கேட்டால் திருப்பிச் சொல்வார்கள்; இங்கிலீஷில் சொல்வார்கள்; நான் சமாளித்துக் கொள்வேன்!” தொடர்ந்தவள், நித்தியின் வெட்டும் பார்வையில் பேச்சை நிறுத்தினாள்.

“இங்க பாருங்க, நீங்க எல்லாவற்றையும் தனியாகச் சமாளிப்பீங்க என்று எங்களுக்கும் தெரியும்; இப்போ உங்களுக்காக ஒன்றும் நாங்க வரவில்லை!” சொல்லிக்கொண்டே மதுராவின் வயிற்றை வருட, கூச்சத்தோடு ஓரடி பின்னால் நகர்ந்தாள் அவள்.

வலக்கரத்தால் வயிற்றைப் பிடித்துக்கொண்டு மெல்லிய நாணத்தோடு பின்னால் நகர்ந்தவளை, அன்பாக பார்த்த நித்தியின் விழிகள் கலங்கின!

‘எவ்வளவு ஆசைகளும் ஏக்கங்களும் இவர் மனதில் இருக்கும்! அத்தனையையும் அடக்கி, ஒன்றுமேயில்லை என்று நடமாடுவது அப்படி ஒன்றும் இலகுவல்லவே!’ எண்ணிய வேகத்தில் தன்னைச் சமாளித்து,

“எல்லாமே எங்க ஏஞ்சல்ஸ்ஸுக்காக, உங்களுக்காக இல்லை!” கண்களைச் சுருக்கிப் பழிப்புக்காட்டியவாறே தன் பையை தோளில் மாட்டிக் கொண்டவள், மதுராவின் மினுமினுத்த கன்னத்தை வலிக்காது கிள்ளினாள்.

“மதுரா, வர வர அழகாகிக்கொண்டே போறீங்கப்பா! பச்..நான் மட்டும் ஒரு பெடியனாக இருந்திருந்தால்..” விழிகளைச் சுழற்றி பாவனை செய்தவள், “நிச்சயம் உங்களை மிஸ் பண்ணவே மாட்டேன்!” இரசனையாக கண்ணடித்தாள்.

“கலைத்துக் கலைத்துக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்வேனாம்!” விடாமல் தொடர்ந்தவளை, நிஜமான கோபத்தோடு பார்த்தாள் மதுரா.

“என்ன பேச்சு நித்தி இது!? இப்படியெல்லாம் பேசவேண்டாமென்று எத்தனையோ தரம் சொல்லிவிட்டேன்! பகிடியாக இருந்தாலும் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை!” அவள் விழிகளில் கடினம்.

கல்யாணம் என்ற சொல்லே அவளை கொடும் நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கியது!

அது தந்த காயம் அவ்வளவு சுலபத்தில் ஆறிடுமா?

தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மொத்த ஆண்குலமே இப்படித்தான் என்று பழிபோடுமளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையென்றாலும், ஆணொருவன் வலிக்க வலிக்க கற்பித்த பாடத்தை அவ்வளவு சுலபத்தில் மறப்பதும் எளிதல்லவே!

இன்னும் ஆறுமாதத்தில் பெரிய தங்கைக்கு கல்யாணம் என்றதில் உள்ளத்தில் ஆறாத பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பவள், அடிக்கடி, காதல் கல்யாணம் என தன்னை வம்புக்கிழுக்கும் நித்தியின் பேச்சில் மிகவும் மனச்சுணக்கம் அடைந்து விடுகிறாள்.

அவள், குழந்தையாகச் சிரித்து, கேலி போல் சொன்னாலும், இவளால் இப்படியான பேச்சுக்களைச் சிறிதும் இரசிக்க முடியவில்லை.

‘உப்ஸ்…ஒரு பகிடியைத் தாங்க முடியாதவர், ஹ்ம்…இது சரிவரும் கேஸ் இல்லை! இவரை அந்தப்பாவியின் நினைப்பிலிருந்து மீட்டு சாதரணமாக்குவோம் என்று பகிடி விட்டாலே இப்படிப் பாய்கிறாரே; வாழ்க்கை முழுதும் இப்படியே இருந்து விடுவாரோ!’ மனதுள் ஆயாசத்தோடு சலித்துக் கொண்டாள் நித்தி.

இவள், நடந்ததை மறந்து, இன்னொரு வாழ்வை அமைத்துக்கொண்டு கணேஷ் முன் போய் நிமிர்ந்து நின்று ‘ஹாய்’ சொல்ல வேண்டும் என்கின்ற ஆசை நித்தியின் மனதில்!

அதோடு, குழந்தைகள் பிறக்கமுன் அவள் இயல்பாகிட வேண்டுமே என்கின்ற ஒருவகை பதைபதைப்பு!

என்னதான் இயல்பாக இருப்பதுபோல இருந்தாலும் தம்மோடு பேசிப் பழகினாலும் குழந்தைகள் பற்றிய பேச்சு எழும் சந்தர்ப்பங்களில் அவள் நத்தையாகச் சுருண்டுகொள்வதை அவதானித்ததன் விளைவு இது! கடந்தவைகளில் இருந்து சிறிதேனும் மீண்டால் தானே பிறக்கும் குழந்தைகளை மனமார ஏற்றுக் கொள்வாள்.

அதனால், கிடைக்கும் நேரமெல்லாம் கேலியாலும் பகிடியாலும் சிரிக்க வைக்க முயன்று, அப்பப்போ அவள் கோபத்துக்கும் ஆளானாள் நித்தி.

எவ்வளவுதான் வேண்டாம் விருப்பமில்லை என்றாலும் இப்படி வம்பிழுப்பவளை ஒரு அளவுக்கு மேல் கடிந்துகொள்ள மனம் வராது தடுமாறி விடுவாள் மதுரா. அவளுக்கு நித்தியை அவ்வளவு பிடித்திருந்தது.

‘அதல பாதாளத்தை நோக்கி கொடும் இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தவளை, அன்பெனும் கயிற்றால் கட்டி இழுத்து துளித்துளியாக ஒளியை ஸ்பரிசிக்க வைத்தவள் இவளல்லவா?’

மதுராவின் மனதில் இந்த எண்ணம் தோன்றும் கணமெல்லாம் சரிசமமாக, தங்கையோடு கைகொடுத்து, பாதுகாப்போடு தூக்கிவிட உதவும் கார்த்திகேயனும் வந்துதான் போனான். இதில் இவளுக்கு ஐயமே இருக்கவில்லை.

‘இவர்கள் மட்டுமில்லையென்றால் என்னதான் முயன்றிருந்தாலும் மனம் மரத்தவளாக மாறிப்போயிருப்பேன்!’ என்றளவுக்கு புரிந்ததால், அவர்கள் தனக்கு யாரோ என்று எண்ண முடிவதில்லை. கிட்டத்தட்ட இருமாதங்களே என்றாலும் காலா காலமாக ஒன்றாக இருந்த உணர்வே அவளுள்ளும். அதையே பிரதிபலித்தார்கள் அண்ணனும் தங்கையும்.

“நான் பகிடியாகக் கதைக்கவில்லை மதுரா டியர்; உண்மையைத் தான் சொல்கிறேன்!” மீண்டும் கண்ணடித்து வம்பு செய்த நித்தி, மதுராவின் இறுகிய முகத்தைப் பார்த்துவிட்டு, பேச்சின் தொனியை மாற்றினாள்.

“ஹலோ ஹலோ, நாங்களும் தான் அதை இதை என்று எத்தனையோ சொல்கிறோம்: நீங்க மட்டும் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறீங்களா? உங்களுக்குப் பிடித்ததை பிடிவாதமாகச் செய்யவில்லையா? அதுபோலத்தான் இதுவும்; எனக்கு உங்களை ரசிக்கப் பிடித்திருக்கு!” என்றவள் முதுகில் இறுக்கி அடித்தாள் மதுரா.

“உண்மையாகத்தான் மதுரா!” என்றவளோ அவளைக் கட்டிப்பிடித்து “பச்..” கன்னத்தில் முத்தம் வைக்க, “நித்தீ…உம்மை… வரவர நீர் சரியான மோசம்!”

இப்படி, மாறி மாறி இழுபறிப்படும் இருவரையும் முகம் நிறைந்த முறுவலோடு பார்த்தவாறே வந்தான் கார்த்திகேயன். தங்கை, மதுராவை வம்பிழுப்பதுவும் அதற்கு அவள் படாத பாடுபட்டு நாணிக்கோணி, கோபப்பட்டு என பல்வேறு உணர்வுகளை வெளிபடுத்துவத்தையும் பார்ப்பதில் இவனுக்கு ஒருவித சுவாரஸ்சியமே வந்திருந்தது.

அதோடு, தன் தங்கை முழுமையாக மீண்டுவிட்டதில் அவன் மனதை ஆக்கிரமித்திருந்த பாரம் விலகி, அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது பெருத்த நிம்மதியுணர்வு! அதை உருவாக்கித் தந்தவள் மீதான ஒருவகை அபிமானம்; அக்கறை; பாசம்!

“அண்ணா பாருங்கண்ணா! மதுராவைப் பிடித்திருக்கு, பையனாகப் பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறேன் என்றால்…”

“போதும் நித்தி, நேரம் போய்ட்டுது போயிட்டு வாரும்; ஹ்ம்ம் நடவும்… இந்தாரும் கார்த்திறப்பு.” அவள் முதுகில் கரம் பதித்துத் தள்ளிக்கொண்டே வெளியில் இறங்கிய மதுராவின் முகம் சன்னமாகச் சிவந்துவிட்டது.

‘தான் உளறுவது போதாதென்று தமையன் முன்னாலும் உளருகிறாளே! இவளை என்ன செய்வது? கொஞ்ச நாட்களாக இவளுக்கு எதுவோ நடந்துவிட்டது!’ என்றவளுக்கு, ஏனோ யோகத்தின் இளைய மகனின் நினைவு தான் வந்தது.

அன்றைக்குப் பிறகு, ஒவ்வொரு சனி மாலையும் தாயை அழைத்துக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தான் சதீஷ். நித்தியில் அவன் பார்வை ஆர்மாகப் படிந்து விலகுவதைக் கவனித்தவள், நித்தியையும் ஆராய்ந்து பார்த்தாள். அவளோ சாதாரணமாகப் பழகுவது போலிருந்தாலும் இப்படியான பேச்சுக்கள் அண்மையில்தான் அவளிடம் தோன்றியுள்ளதாக இவள் மனம் சொன்னது. அதன் காரணமாக, அவளுக்கு சதீஷ் மீது ஈர்ப்பு எதுவும் உண்டாகியுள்ளதோ என எண்ணியது அவள் மனம்.

“நித்தியின் சுபாவமே இதுதான். அப்பா அம்மா மறைவோடு இதையெல்லாம் மறந்திருந்த என் தங்கச்சி சரியாகி விட்டாள்.” என்றான் கார்த்திகேயன். ஆனாலும் இவளுக்குள் சின்னதாக ஒரு ஆர்வம்!

‘யோகம் ஆன்ட்டியும் மிகவும் நல்லவர்; சதீஷ் அருமையான பிள்ளை; நித்திக்கும் இங்கிருக்கத்தானே விருப்பம்; இருவருக்கும் பிடித்திருந்தால் நன்றாகத் தான் இருக்கும்!’ மனதுள் நினைத்துக் கொள்வாள் மதுரா.

“ஒரு பேச்சுப் பேசக் கூடாது; ஒன்பதுக்குத் தயாராகி நின்றால் அண்ணா அழைத்துப் போவார்!” நித்தியின் பேச்சில் கலைந்தவள், “சரிம்மா, நீ கவனமாகப் போயிட்டு வா! உன் மதுராவை கவனமாக அழைத்துப் போகிறேன்!” கார்த்திகேயனின் கிண்டலில் மெலிதாக முறுவலித்தாள்.

“ஆங் அது…உங்களை வெளியில் இருத்திவிட்டு தான் உள்ளே போக நினைப்பார்ணா; நீங்க அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் உள்ளுக்குப் போங்க. பிறகு, அது இது விளங்கவில்லை என்று ஒத்த வார்த்தை வந்தால் நான் பொல்லாதவள் ஆகிடுவேன்!” மிரட்டியவள், ‘இவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே எப்படி!’ மதுராவின் முகம் குழப்பத்தில் குளிக்க,

“எனக்கு இன்றைக்கு வர முடியவில்லையே என்று கவலைதான் மதுரா! ஆனால், என் அண்ணாவோடு கொஞ்சமும் தயங்காது போகலாம்: அவர் ஒன்றும் போற வழியில் காரிலிருந்து தள்ளி விடமாட்டார். நுள்ளவும் மாட்டார்; கிள்ளவும் மாட்டார். என்னை நம்பிப் போங்க; அப்படித்தானே அண்ணா?” என்றதும்,

“நான்… நான் அப்படிச் சொன்னேனா?” நித்தியை முறைத்தபடி சட்டென்று குறுக்கிட்டாள் மதுரா.

“ஒருத்தரை கொண்டு வேலை வாங்கவும் ஒரு அளவு வேண்டும்; நான் உங்களை நிறையவே கஷ்டப்படுத்துகிறேன்!” பழைய பல்லவியை ஆரம்பிக்க, அண்ணனும் தங்கையும் ஒன்றாகச் சேர்ந்து முழியை உருட்டினார்கள்.

“பாருங்கண்ணா இந்த மதுராவை, நாங்க தான் எங்களில் ஒருத்தரா உங்களைப் பார்க்கிறோம்; நீங்க பிறத்தியாகத் தான் பார்க்கிறீங்க இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்லை நித்தி; என்னோடு வம்பு பண்ணவில்லை என்றால், உமக்கு இன்றைக்கு பாடம் மண்டையில் ஏறாதே!” பொய்க் கோபம் காட்டினாள் மதுரா.

“அதெல்லாம் ஒரு லவ்வில மதுரா!” என்றவள், மதுராவின் முகம் போன போக்கில் நகைத்தவாறே, “உங்க அம்மா தங்கச்சிகள் கூட இப்படியில்லை; எங்களைத் தங்களில் ஒருவராகத் தான் பார்க்கிறார்கள். பொறுங்க பொறுங்க உங்க அம்மா வரட்டும், அதுக்குப் பிறகு உங்களுக்கு இருக்கு!” என்றவாறே காரினுள் ஏறி அமர்ந்தவள் சென்று மறையும் வரை நின்று பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.

“இன்னும் ஒருமணியில் வருவேன், ரெடியாக நில்லுங்க மதுரா!” கார்த்திகேயன் க்ளினிக் செல்ல, தன்னறைக்குள் புகுந்த மதுராவின் நெஞ்சம், வேதனைகளின் சுமையோடு நன்றியுணர்ச்சியின் கனமும் சேர, தள்ளாடியது!

தழைத்து வளர்ந்து மணம் வீசும் என்கின்ற ஆறாத நம்பிக்கையில், தேடித் தேடிச் சேர்த்து வைத்த வாழ்க்கைத்துணை, செல்ல மகளை வஞ்சித்துவிட்டதை அறிந்த தாயின் உணர்வற்ற கோலம், அவள் மனக்கண்ணில் மின்னி மறைந்தது!

தந்தை, தமையன் இழப்பையும் சகித்து, தமக்காக நிமிர்ந்து நின்றவர் இப்போது தள்ளாடிப் பேசுவதில், தேற்றும் வழிதெரியாது கலங்கிப்போகிறாளே இவள். இப்போதெல்லாம், தன் வாழ்வை எண்ணி, தான் கலங்குவதை விட, தனக்காக வருந்துபவர்களை எண்ணிக் கலங்குவதே இவள் பொழுதாகிப் போனது.

“எனக்குக் கல்யாணம் வேண்டாம்மா! வேண்டவே வேண்டாம்மா!” தமக்கை வாழ்வின் அலங்கோலத்தில் பதறி, முற்றாக்கிய திருமணத்தை மறுத்த பெரிய தங்கை! மீண்டும் அவளைச் சம்மதிக்க வைப்பதற்குள் மூச்சு முட்டிப் போனாள் இவள்.

அலங்க மலங்க செய்வதறியாது திகைத்து, எந்நேரமும் அழுகையில் கரையும் சின்னத் தங்கை!

“ஆண்துணை இருந்திருந்தால் இப்படியாகி இருக்குமா? யாருமற்றவர்கள் என்கின்ற துணிவில் தானே ஏற்கனவே பிள்ளை உள்ளவனைப் பேசிச் செய்யத் துணிந்தார்கள்! விடு, என்னவென்று கேட்போம்!” என்று, உங்க மகனின் வண்டவாளம் இது என, மதுராவின் நெருங்கிய உறவினர் சென்று கணேஷ் வீட்டில் சொன்ன பின்னரும், தங்கள் பக்க நியாயத்தை எடுத்துச்சொல்கிறோம் என்று சூறாவளியாகப் புறப்பட்டு வந்தவர்கள்,

“எங்கள் மகனுக்கு ஏற்கனவே இப்படி ஒரு தொடர்பிருந்தது எங்களுக்குத் தெரியவே தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் சொக்கத்தங்கம், பாசக்காரன், ஒருபோதும் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க மாட்டான்.” ஏகத்தும் எகிறினார்கள்.

“சரி, தனியாக வெளிதேசத்தில் இருந்தவன் தடுமாறிவிட்டான் என்றாலும், அதைத் தெரிந்த உங்க வீட்டு அதிபுத்திசாலி என்ன செய்திருக்க வேண்டும்? பெண்ணாகப் பிறந்தால் பொறுமை வேண்டாமா?! எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனே அறுத்துக் கொள்வதா? அதுவும், வயிற்றில் குழந்தைகளோடு? அப்படியென்ன பொல்லாத ரோசம்! பெரியவர்கள் என்று நாங்க என்னத்துக்கு இருக்கிறோம்; ஒத்தவார்த்தை சொல்வதில்லையா?” தம் பங்குக்கு மதுராவையே சாடினார்கள்.

“சொந்தவீடு வாசல் என்று மரியாதையாகத் தானே என் பிள்ளை அவளைப் பார்த்துக் கொண்டான். அப்படியிருக்க, உங்க வீட்டுப்பெண் கல்யாணத்துக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா? ஒரு டீச்சர் பிள்ளை வளர்த்த வளர்ப்பு இதுவென்றால், நாங்கள் எந்த மாத்திரம்!” உறுமினார் அவன் தந்தை.

“அதுவும், ‘அவளைப் பிரிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை! அவள் தான் என்னைப் பிரிந்தாள். பிரச்சனைகளை வளர்க்க விரும்பாமல் தான் நானும் விவாகரத்துக்கு ஒத்துக் கொண்டேன். ‘நீ எனக்கு ஒத்த சதம் தரத் தேவையில்லை, சீதனம் என்று உன் வீட்டார் கைநீட்டி வாங்கியதை எண்ணி வை.’ என்று சொல்லி, வீட்டில் மேலதிகக் கடன் எடுத்து அவளுக்குக் கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்தேன். ஊரில் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் செய்துவிட்டாள்.’ என, என் மகன் புலம்புகிறான்!”

மகன் உருகி உருகிச் சொன்னதில் ஏற்பட்ட கொதிப்பை இவர்களில் காட்டினார் அவன் தாய்.

“அட! ஊருலகத்தில் நடவாததா இது? டிவியைத் திறந்தால் பாருங்க எல்லாரும் இரண்டு பெண்டாட்டி தான்; அப்படி நடவாததையா நாடகத்தில் காண்பிக்கிறார்கள்! ஏதோ ஒரு சூழ்நிலை; அதில், அப்படி நடந்தால், இவள் தான், தான் ஒரு பெண், அதுவும் பின்னுக்கு இன்னும் இரண்டு இருக்கு; வயிற்றிலும் இரண்டு பெண்; இதையெல்லாம் மறப்பாளா?” வாயிலில் வந்து நின்று கத்திக் கூச்சல் போட்டு விட்டார் கணேஷின் தாய்.

“இப்போ மட்டும் என்னவாம்; அங்கே தட்டத் தனியாக இருந்து மரியாதையாக வாழ்ந்து கிழிச்சாள். எப்படி வாழப் போகிறாள் என்றுதான் என் மகன் பார்த்துக் கொண்டிருக்கிறான்! அவனுக்கென்ன, ராஜா…ஆண்பிளை!” சிலிர்த்தார்.

“எங்க குடும்ப மானத்தை வாங்கிய நீங்க ஒருவரும் நல்லாவே இருக்க மாட்டீங்க!” சாபம் இட்டுச் சென்றனர் கணேஷ் குடும்பத்தினர்.

நடந்தவற்றை தங்கைகள் மாறி மாறிச் சொல்லச் சொல்ல, தளர்ந்திருந்து கேட்கும் தாயின் நினைவில் இவள் நெஞ்சமும் விழிகளும் போட்டிபோட்டுக் கசிந்தன!

அறிவு தெரிந்ததிலிருந்து எந்த விதத்திலும் தாய்க்கு கஷ்டம் கொடுக்காதிருந்தவள், இப்போதோ, எழவே முடியாதளவு துயர் ஏற்படக் காரணம் ஆகிவிட்டளே!

அதிலிருந்து தன்னை மீட்டதாகப் பெயர் பண்ணி நிமிர்ந்தவளால், அன்னைக்கும் தங்கைகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியவில்லையே! இதயம் உக்கி இந்தா அந்தா என்று ஊசலாட, வெளிப்பார்வைக்கு இயந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த கமலா, “ஆன்ட்டி, மதுராவின் குழந்தை பிறக்கும் நேரமாகப் பார்த்து ஒருமாதம் வந்துவிட்டுப் போங்க!” என, கார்த்திகேயன் சொல்ல முதலில் திகைத்தார்.

என்று தன்னுள் ஒரு உயிர் துளிர்த்துவிட்டது என்று அறிந்தாளோ, அடுத்த கணம், தாயை வரும் படி அழைத்திருந்தாளே! அதே, மகளின் விவாகரத்து பற்றி அறிந்ததும் இடிவிழுந்தது போல் கலங்கினாலும்,

“நீ ஏன்மா இன்னும் அங்கே இருக்க வேண்டும்? வெளிக்கிட்டு வந்துவிடும்மா. உனக்கு அம்மா நான் இருக்கிறேன்.” என்றுதான் கதறினார் கமலா. சகோதரிகளுமே அதைத்தான் வற்புறுத்தினார்கள். அடுத்த நொடியே, “என் மகள் வாழ்வை நானே கெடுத்துவிட்டேனே!” என்றும் அழுது கரைந்தார்.

error: Alert: Content selection is disabled!!