18
நடுச்சாமம்! தூக்கத்தில் நாக்கு வறண்டு ஒட்டிக்கொள்ள திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் மதுரா.
மதியமும் இரவும் அழைத்த நித்தியோடு நீண்ட நேரமாக வாய்த்தர்க்கம் புரிந்து களைத்துப் போய் கட்டிலில் சரிந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்பது தெரியாது ஆழ்ந்து உறங்கியிருந்தாள்.
‘எல்லாம் இந்த சதீஷ் செய்த வேலை; அறை பார்த்துச் சொல் என்று சொன்ன அடுத்த நிமிடம் ஃபோனைப் போட்டு சொல்லவா வேண்டும்! மனதுள் அலுத்துக் கொண்டவள், ‘அண்ணனும் தங்கையுமாக உண்டு இல்லையென்றாக்கி விட்டார்களே!’ என்ற நினைவில் முகம் கனியத்தான் செய்தது!
‘சரி, தனக்குத் தெரிந்ததை டூர் போயிருக்கும் தங்கையிடம் சொல்லி, அவள், ஹப்பப்பா…காது சவ்வைக் கிழித்துவிட்டாள்!’ ஒருவித இதம் கலக்க சலித்துக் கொண்டாலும், அண்ணன் தங்கை இருவரும் தன்மீது காட்டும் அக்கறையிலும் பாசத்திலும் இப்போது பயத்தையே மிகையாக உணர்கின்றாள் இவள்.
“இங்க பாருங்க மதுரா, நீங்க ஸ்ரீலங்கா போவதும் விடுவதும் உங்க விருப்பம்; இங்கு இருக்கும் வரை எங்களோடுதான் இருக்க வேண்டும். அதில் மாற்றம் எதுவுமே இல்லை. பொறுங்க, உங்க அம்மா வரட்டும் அவர் வாயால் சொல்ல வைக்கிறேன்.” நித்தி கட்டளையாகச் சீற, உன்னோடு இனி இதுபற்றிக் கதைக்கப் போவதில்லை என்ற பாவனையில் முகம் இறுக அமைதியாக இருந்தான் கார்த்திகேயன்.
மதியம் உணவுண்ணும் பொழுதும் சரி, அதற்குப் பிறகும் தேவையற்று ஒத்தவார்த்தை அவன் பேசவில்லை. வீடு மாற நினைத்ததில் கோபம் கொண்டுள்ளான் என்றுணர்ந்து இவள் பேச்சுக் கொடுக்க முனைய, அவன் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி நிறுத்தி விடுவான். சிலமுறைகள் தொடர்ந்து பேச முயன்றவள், அதற்குமேல் அமைதியாகிவிட்டாள்.
அண்ணனும் தங்கையும் என்னதான் சொன்னாலும், கோபப்பட்டாலும் ‘நான் வீடு மாற நினைப்பதில் தப்பொன்றும் இல்லை!’ என்றே அழுத்தமாக நினைத்துக் கொண்டாள் மதுரா.
‘கொஞ்ச நாட்களுக்கே என்றாலும் என் அவசரத்துக்கு வீடு கிடைக்க வேண்டுமே! குழந்தைகள் பிறக்க இன்னும் சில நாட்கள் இருக்கையில் என் முட்டாள்த்தனத்தை என்ன சொல்வது!’ தொடர்ந்து இங்கிருந்ததில் தன் மீதே கோபம் கொண்டாள்.
நேற்றைய இந்நினைவுகள் வலம் வர, எட்டி, தன்னருகிலிருந்த மேசை விளக்கைத் தட்டிவிட்டு சிலகணங்கள் அமைதியாக இருந்தவள் மெல்ல எழுந்தமர்ந்து, அங்கிருந்த நீர்ப்போத்தலை எடுத்து, தாகம் தீர மட்டும் குடித்துவிட்டு வைத்தாள்.
சில்லிடலோடு உள்ளிறங்கிய நீரின் துணையோடு இதுவரை கண்களைக் கவ்விக்கொண்டிருந்த உறக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற, குளியலறை செல்லும் நோக்கில் எழுந்து சென்றாள்.
சிறிது நேரத்தில், குளியலறைக் கதவைத் திறந்தவள் முகம் கிட்டத்தட்ட வெளிறிப் போயிருந்தது! இடக்கரத்தால் கதவைத் திறந்து வெளிப்பட்டவளின் நடையில் சிறு தள்ளாட்டம்! அவள் வதனமோ அளவற்ற பதற்றத்தைப் பூசியிருந்தது!
நடுங்கும் வலக்கரத்தால் மேடிட்ட வயிற்றைப் பாதுகாப்பாக அரவணைப்பது போல் பிடித்துக் கொண்டவள் அப்படியே சுவரில் சாய்ந்து நின்று, பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டுக் கொண்டாள்.
“மதுரா…இதுவரை பார்க்க விரும்பாத எத்தனையோ விடயங்களை பார்த்து விட்டாய்!” தனக்குத் தானே பேசத் தொடங்கினாள்.
“யார் யாரோ உதவியோடு என்றாலும் எல்லாவற்றையும் சமாளித்து நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறாய் அல்லவா? இனியும் உன்னால் முடியும்; பயப்படாதே!” பதறும் உள்ளத்தைத் தட்டிக் கொடுத்தவளின் விழிகளோ, அவள் பேச்சைக் கேட்காது கலங்கித் ததும்பின!
இதழ்கள் கோண, பெரிதாக வெளிப்பட்ட கேவலில் உடல் மிகவும் பலவீனமானதாக உணர்ந்தவள், தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்க முனைந்தாள். அநாதரவான நிலை, வழமையை விட பூதாகரமாக அவளை விழுங்க முனைந்தது.
“முடியும்; என்னால் எதையும் தாங்க முடியும். என் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது.” இதழ்கள் நடுங்க உரைத்தவற்றைக் கேட்க மறுத்த கற்பனையோ, அபாயங்களை எட்டிப் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடித்து நின்றது!
மெல்ல அடிமேல் அடிவைத்து நகர்ந்து சென்றவள், போத்தலில் மிகுதியாக இருந்த நீரை கடகடவென்று பருகித் தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
முதல் பிரசவம்! புத்தம் புது உயிர் ஒன்றை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்வது; எவ்வளவு மகத்தான காரியம்! பெண் படைப்பால் மட்டுமே முடிந்த விடயமல்லவா இது! என்றாலும், நீளும் பிரசவ காலத்தை, அக்குறிப்பிட்ட நேரத்தை ஒற்றை ஆளாகத் தாங்குவது அவ்வளவு இலகுவானதா?
உடல் உபாதைகளை நிச்சயம் பெண்ணானவள் மட்டுமே தான் தாங்க வேண்டும். அது அவளுக்கென்றே பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டதல்லவா? அவளுள் சுரக்கும் தாய்மையுணர்வு அதற்கான சக்தியை அள்ளிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லையே!
அதேநேரம், உற்றவர் உறவுகளின் அன்பு; அரவணைப்பு; கவனிப்பு இவையெல்லாம் எவ்வளவு முக்கியம்! அவையெல்லாம் இவள் விடயத்தில் அற்றுப் போனதே!
அது மட்டுமா? துணைவியின் வேதனையில் துடித்து வெளிறும் துணைவனின் முகம் காட்டும் பாவனை; அவன் உதிர்க்கும் சின்னச் சின்ன ஆறுதல் வார்த்தைகள்; செய்யும் சிறுசிறு உதவிகள்; நேசத்தை உணர்த்தும் அன்பான தலைகோதல்கள்; எல்லாம் ஒன்றாகக் கலந்து தரும் திடம் அளவிட முடியாததல்லவா?
மற்ற உறவுகள் இல்லாத பட்சத்திலும், தன் உடல் உபாதைகளை உரிமையாய் வாய் திறந்து சொல்ல, அதைக் கேட்க, மொத்த உரிமையும் உள்ளவனான கணவன் அருகிலிருந்தால், ஒரு பெண்ணுக்கு அதைவிட வேறென்ன வேண்டும்! மலையாகத் தெரியும் வேதனைகளையும் வலிகளையும் தூசென உதறிடுவாளே!
ஒரு துணைவனை, ஆணாக முழுமையாக நிலைநிறுத்த, நான், நாம் என்பதைக் கடந்து நமது என வாழ்வை வண்ணமயமாக்கும் தருணத்தில் துணைவனும் பங்கெடுப்பது அவசியம் தானே! அது ஒரு ஆணின் தலையாய கடமையல்லவா?
இங்கோ, அந்த உறவு, தன் வக்கிர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டதே! கருத்தரித்த ஆரம்ப காலத்தில் தாய்மையையே கொடும் தண்டனையாக இவள் மனதில் எண்ணவும் வைத்ததே!
“ச்சே! நடந்ததை நினைத்து வருத்தப்படும் அளவுக்கு அது ஒன்றும் பெறுமதியானது இல்லையே! அந்த உறவுக்கு அவன் எவ்விதத்திலும் பொருத்தமற்றவன்!” இருகரங்கள் கொண்டும் முகத்தை அழுந்தத் துடைத்தாள். வலக்கையில் சுள்ளிட்ட வலி, கணேஷ் வந்து ஆடிய சதிராட்டத்தை பளிச்சென நினைவில் கொண்டு வந்தது.
மெல்ல மெல்ல மனம் கடினப்பட, இப்படி நடந்தால் இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நினைவில் வர, இரவுடையை மாற்றும் நோக்கில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் குளியலறைக்குள் நுழைந்தாள்.
வைத்தியசாலைக்குப் போகலாம் என்றளவில் தயாராகி வந்தவள், அறைக்கதவையே சில கணங்கள் பார்த்திருந்தாள்.
“மதுரா, எப்போ வேண்டும் என்றாலும் எதுவென்றாலும் தயங்கவே கூடாது. என் அறைக் கதவும் திறந்துதான் இருக்கு. உங்க அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாலே வந்து விடுவேன்.” சலிக்காது சொல்லும் கார்த்திகேயனின் முகம் நினைவில் வர, ‘எப்படி அவரிடம் சொல்வது?’ மனம் வெகுவாகத் தயங்க, ‘உன்னளவில் அவன் அந்நியன்!’ என்பது நெற்றியடியாக உரைத்தது!
இதே, அவன் உற்ற உறவாகவோ, சகோதரனாகவோ இருக்கும் பட்சத்தில் முதல் குரல் அவனை அல்லவா அழைத்திருக்கும்?! மீண்டும், மிகவும் தடுமாறினாள்.
கழுவித் துடைத்த முகம் மீண்டும் இயலாமையின் விழிநீரால் நனைய, அறையின் மின்விளக்கை எரியவிட்டு விட்டு, அலுமாரியைத் திறந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருட்களடங்கிய பெட்டியை மெல்ல இழுத்து வெளியில் வைத்தாள்.
“மதுரா, நான் டூர் போக முதல் கொண்டு போக வேண்டியதை எல்லாம் அடுக்கி வைப்போம்.” ஒரே பிடியில் நின்று நித்திதான் பெட்டியை அடுக்கியிருந்தாள்.
இந்த சிலமாதங்களில் ஒரு தாயாகிப் போன நித்தியின் அருகாமையைத் தேடியது மதுராவின் மனம்.
பொங்கிய நினைவுகளிலிருந்து அறுத்துக்கொண்டு வெளிவந்தவள், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டிய அட்டைகளையும் எடுத்து வைத்துவிட்டு நேரத்தைப் பார்த்தால், அது அதிகாலை இரண்டு என்றது.
‘இப்படியே எவ்வவளவு நேரம் இருக்க முடியும்!? வேண்டாம்..’ கைபேசியை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டவள்,
“எப்படி என்றாலும் கார்த்தியைத்தான் எழுப்ப வேண்டும்; இந்த நடுராத்திரியில் என்னால் என்ன செய்ய முடியும். அம்புலன்ஸுக்கு கால் பண்ணி, அவர்கள் வந்தால் இவர் எழுந்து நிச்சயம் மனக்கஷ்டப்படுவார்; ஆனால், எப்படி எழுப்புவது?” வாய்விட்டே புலம்பியவள், கட்டுப்படுத்த முடியாது மீண்டும் அழுதாள்.
“அம்மா..” முணுமுணுக்க கேவியவள், “மதுரா மதுரா..” என்ற அழைப்பில் உடல் அதிர வாயில் கதவைப் பார்த்தாள்.
விழிகளோ நிற்காது நீரைச் சொரிய உடல் நடுக்கம் எடுக்க “ம்ம்ம்…” என்றவள் குரலே எழும்பவில்லை.
“மதுரா…” மீண்டும் தட்டிக்கொண்டே கதவைத் திறந்திருந்தான் கார்த்திகேயன்.
“மது…ரா…என்னம்மா?” ஓரெட்டில் அவளை அணுகியிருந்தவன் அவள் உடைமாற்றித் தயாராக இருப்பதைக் கணத்தில் அளவிட்டுவிட்டு, “வயிறு வலிக்குதா மதுரா?” தலையைக் குனிந்தவளின் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.
உறக்கத்திலிருந்து சற்று அருண்டவன் இவளின் அறை வெளிச்சத்தில் திடுக்கிட்டு விழித்திருந்தான்.
அரை குறையாக எழுந்ததில் உறக்கச் சிவப்பைப் பூசியிருந்த அவன் விழிகளில் இப்போது கோபத்தின் சாயல்!
“என்ன செய்கின்றது என்று வாயைத் திறந்து சொல்லு மதுரா. என்னை எழுப்பாது இதெல்லாம் என்ன வேலை.” கண்டிப்பில் வெளிப்பட்ட குரலுக்குப் பதிலாக விழிநீரே வடிய, பொறுமையை இழந்தான் அவன்.
“அப்போ, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போகவா ரெடியாகி இருக்கிறாய்?” என்று அவன் கேட்க, இவளோ அதிர்ந்து போனாள்.
“என்ன..நீங்க ..” அவன் கரத்தை மெல்ல விலக்கியவள், “ஹாஸ்பிடல் தான் போக வேண்டும் கூட்டிக்… கொண்டு… போறீ…ங்களா?” தடுமாறினாள்.
“மதுரா என்னம்மா!? எவ்வளவு சொல்லியும் என்னை எழுப்பவில்லையே! முதல் என்ன செய்யுது?” கேட்டுக்கொண்டே அங்கிருந்த தொலைபேசியை எடுத்தவன்,
“என்ன செய்யுது என்று சொல்லு மதுரா, ஹாஸ்பிட்டலில் சொல்லிக் கதைத்துவிட்டு போவோம்.” என்றதும், “எனக்கு எனக்கு..” தடுமாறியவாறே அவள் அவனைப் பார்த்த பார்வையில் மீண்டும் அருகில் வந்தான் கார்த்திகேயன்.
“மதுரா, இங்க பார்; இந்த வீட்டீல் நாம இரண்டு பேரும் மட்டும் தான் இருக்கிறோம். உனக்கு நாங்க எல்லாம் யாரோ! ஆனால், எங்களுக்கு நீ அப்படியில்லை; நீ எங்களில் ஒருத்தி.” ஒருவித கடினத்தோடு சொன்னவன், வழிந்த அவளின் விழிநீரைத் துடைத்துவிட்டவாறே, “ப்ளீஸ்மா, என்னவென்றாலும் என்னிடம் தயங்காமல் சொல்லு; என்ன செய்யுது” குரல் பிசிறக் கெஞ்சினான்.
பதற்றத்தின் பிடியில் முழுமையாக அகப்பட்டுத் தடுமாறி நிற்பவனையே பார்த்திருந்தாள் அவள்.
‘இவர் எனக்கு யார்?’ நெஞ்சில் உரத்து எழுந்த கேள்வி, விடை காண முடியாது சுருண்டு வீழ்ந்தது.
சற்றுமுன் இவனை ‘அந்நியன்’ என்று சுட்டிய உள்ளம் தன்னை நினைத்தே மிகவும் வருந்தியது.
‘எனக்காக இவ்வளவு பதறுகின்றாரே! இவருக்கு நான் யார்? எப்படி இவர்களில் நானும் ஒருத்தியானேன்! என்னால் அப்படி முழுமையாக எண்ண முடியவில்லையே!’ அப்போதும் ஆயாசத்தில் முனகியது அவளுள்ளம்.
இதழ்களோ, “அது… வந்து…வாட்டர் பாக் உடைந்துவிட்டுது..” மெல்ல முணுமுணுக்க, தன் பார்வையைத் தவிர்த்தவள் முகத்தைப் பற்றி உற்றுப் பார்த்தவன் முகம் கோபத்தில் இறுகிவிட்டது.
‘இவ்வளவு நடந்தும் என்னை எழுப்ப நினைக்காது தயாராகி அமைதியாக இருக்கிறாளே! மனதில் என்ன எண்ணிக் கொண்டாள்!’ மிகுந்த கோபம் எழுந்தது அவனுள்.
“எப்போது?” கடினமாகவே வினவினான்.
“ஒரு அரை மணி…இருக்கும்.” அவன் விழிகளைப் பார்த்தவள், “எழுப்ப நினைத்தேன் …எப்படி..” முகம் கசங்கத் தடுமாறியவளின் வதனத்தை மீண்டும் இருகரங்களுள் பற்றியவன், “விசரி..” அவள் உடல் நடுங்குவதை உணர்ந்து, “மதுரா என்னம்மா! இந்த இடத்தில் நித்தி இருந்திருந்தால் எப்படியோ அப்படித்தான் நீயும்; சரியா? வேறு எதையும் யோசியாதே! பயப்படாதே! நான் இருக்கிறேன்மா.” கனிவாகச்சொல்லி அவள் தலையை ஆதரவாக வருடிவிட்டு, “குடிக்க ஏதாவது கொண்டு வந்துதரவா?” கேட்டவாறே வைத்தியசாலைக்கு அழைத்தான்.

