20
“அம்மா ரெடியா? நாங்க எப்பவோ ரெடி.”
குழந்தைகளில் ஒருவரை ஏந்தியவாறு, குழந்தை பேசுவது போல பேசிக்கொண்டு மதுரா இருந்த அறைக்குள் ஆர்ப்பாட்டமாக நுழைந்தாள் நித்தி.
டூர் போய் வந்தவள், பஞ்சுப்பொதியாக குழந்தைகளைக் கண்டதும் தன்னையே மறந்துவிட்டாள். சும்மாவே இறக்கை கட்டிப் பறப்பவளாச்சே!
தமக்கையின் குழந்தைகளைப் பார்க்கப் போக வேண்டுமென்று எண்ணி எண்ணித் தள்ளிப் போய் கொண்டிருந்ததில் மனம் சுணங்கியிருந்தவள், “படிப்பு முடிய இரண்டு பேருமாக அக்காவோடு போய் நிறைய நாட்கள் நிற்க வேண்டும்ணா!” எனச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
இப்போதோ, ‘ஏஞ்சல்ஸ்’ என்று சொல்லிச் சொல்லியே இவர்கள் வரவை மிகவும் எதிர்பார்த்திருந்தவள் அல்லவா? பொங்கும் உவகையைக் கேட்கவா வேண்டும்!
ஆரபியை கார் சீற்றில் வைத்து ஏந்தியவாறே தங்கையின் பின்னால் வந்த கார்த்திகேயன், “பாப்பாவை பார்த்துக் கொள் நித்தி; சாமான்களை காரில் வைத்துவிட்டு வருகிறேன்.” என்றவாறே, அறையின் ஓரமாக இருந்த மதுராவின் பொருட்களடங்கிய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறியவன் மறந்தும் மதுராவை நோக்கவில்லை.
“உன் முகத்தைப் பார்க்கவும் விரும்பவில்லை.” என்ற மதுராதான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹ்ம்…நான் அல்லவா இப்படிக் கோபப்பட வேண்டும்; இந்த விசுக்கு விசுக்கிறாரே!’ என எண்ணங்களில் சீறியவளுக்கு, அவன் மீது மிகையாகப் படிந்திருந்த கோபம் அகன்றதாகத் தெரியவில்லை.
அதேநேரம், அவன் வேற்றாளாக இல்லாது இன்னமும் இவள் வேலைகளைப் பார்ப்பதில் மனம் தடுமாறினாலும் அதைத் தடுக்கவும் முனையவில்லை.
‘தடுப்பதில் பயனேது? கடைசிவரை அதை அவர் காதில் போட்டுக் கொள்ளப்போவதில்லை.’ என்று தன்னைத் தான் சமாதானம் செய்து கொண்டாலும் அவள் விடயங்களில் அவன் உரிமை எடுப்பதை வேடிக்கை பார்பவளாகத் தான் நின்று கொண்டிருந்தாள் அவள்.
நித்தியின் கரத்திலிருந்த ஆரணி, இப்போது கார் சீற்றினுள் சொகுசாகப் படுத்திருந்தாள்.
அங்கிருந்த பெரிய மேசையில் குழந்தைகள் இருவரையும் தூக்கி வைத்த நித்தி, நிமிடத்தையும் வீணாக்காது, கண்ணயர முயலும் அவர்களோடு தன் கொஞ்சல்களைத் தொடர்ந்தாள்.
அவர்களும் அரைக்கண் மலர்த்தியபடி, அவளின் ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் சிலிர்த்து முகம் சுளித்தபடி போக்குக் காட்டிக் கொண்டிருந்தனர்.
மதுராவின் விழிகளிரண்டும் குழந்தைகளையும் நித்தியையும் பார்த்திருந்தாலும் அவள் நினைவுகளோ அங்கு சிறிதும் சங்கமிக்க மறுத்தன!
இவர்கள் பிறந்த தினத்தையும் அதைத்தொடந்த இந்த ஐந்து நாட்களையும் திரும்பிப் பார்ப்பதில் ஆவல் கொண்ட மனம், தம் ஆவலைப் பூர்த்தி செய்யவே விளைந்தது!
அன்று, மனதுள் அல்லாடி, களைத்து, உயிர் போய் விடுமோ எனக் கலங்கி, குழந்தைகள் பிறந்த கையோடு “ஹப்பாடா!” என்கின்ற நிம்மதியோடு, நடந்தவைகள் ஒவ்வொன்றையும் நினைத்துக் குழப்பித் தவித்து, அந்நேரம் எதிர்ப்பட்ட கார்த்திகேயனில் இருந்த அடங்காத சினத்தை தன் குரலை உயர்த்தி அவனுக்குப் புரியவைக்க முயன்றிருந்தாள் இவள்.
அதை நின்று செவிமடுத்தவனோ, ஒத்தவார்த்தை பேசாது வெளியேறிவிட்டான். அதன்பின், இந்த ஐந்து நாட்களில் இவளைப் பார்க்கவென ஒருமுறைசரி இப்பக்கம் வரவில்லை அவன். ஒரு போக்குக்காகவேனும் நலம் விசாரிக்கவில்லை.
அதேநேரம், தான் செய்ய வேண்டியவற்றையும் அவன் மறக்கவில்லை என்பதற்குச் சான்றாக, அன்று மதியம் போல அழைத்திருந்தார் இவளின் அன்னை கமலா.
“ராஜாத்தி எப்படிம்மா இருக்கிறாய்? என் குஞ்சுகள் எப்படி இருக்கிறார்கள்? சரியான நேரத்துக்கு என்னால் வர முடியாது போயிட்டுதே! நன்றாகக் கஷ்டப்பட்டுவிட்டாய் என்று தம்பி சொன்னார்மா!”
தாய், பாசமாக ‘தம்பி’ என்றதும் இவள் முகம் இறுகியது அவருக்குத் தெரியாதே!
“தம்பியோடு இருக்கப் போய் இந்தளவோடு முடிந்தது! எனக்கு எவ்வளவு மனநிம்மதி தெரியுமா ராசாத்தி. இல்லையோ, யோசித்து யோசித்துக் கலங்கி இருப்போம்மா.
நித்தியும் இல்லையாமே! உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்றால், ‘இதென்ன பேச்சு!’ என்று கடிந்து கொள்கிறார்; அருமையான பிள்ளை இல்லையாம்மா?” இவளிடம் கருத்தும் கேட்டார் கமலா.
‘அருமையான பிள்ளையின் உள்ளத்தில் உள்ளது தெரிந்தால் என்னம்மா சொல்வீங்க?!’ மனதில் அலறினாலும் பொதுவாகக் கதைத்துச் சமாளித்தாள் இவள்.
“எப்படியும் இரண்டு கிழமைக்குள் எனக்கு விஸா கிடைத்துவிடும் மதும்மா; அடுத்தநாளே அங்குவர வெளிக்கிட்டு விடுவேன்!” தொடர்ந்தார் கமலா.
“அதுவரை, தம்பி வீட்டிலேயே இரம்மா. ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகளோடு தனியாகச் சமாளிக்க மாட்டாய் மது. அவர்கள் இருக்கிறார்கள் என்ற ஆறுதலில் தான் ராஜாத்தி நான் நிம்மதி மூச்சே விடுகிறேன்!’’ என்றவர், அழுதே விட்டார்.
அவரைச் சமாதானம் செய்யவே இவள் படாத பாடுபட்டுவிட்டாள்.
தாயின் பேச்சில் அப்படி எதுவும் வேறுபாடு தெரியாததில் தன்னிடம் உளறியது போல எதையாவது உளறியிருப்பானோ என்ற சந்தேகம் அவளுக்கு வரவில்லை!
அதே, ‘வேறு வீடு பார்ப்பதைச் சொல்லி இருப்பாரோ!’ என்று பெருத்த சந்தேகம் எழுந்தது.
அந்தளவுக்கு, “என்னவென்றாலும் நான் வந்த பிறகு ஒரு முடிவு எடுப்போம் மதுரா; அதுவரை குழந்தைகளோடு அங்கேயே இரு. இனியும் எனக்குத் தெரியாமல் எதையும் செய்ய நினைக்காதே ராசாத்தி.” கண்டிப்பும் கெஞ்சலுமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார் கமலா.
அன்று மாலையே, “கட்டிலை விட்டு இறங்கு; மெல்ல மெல்லப் பிடித்துக் கொண்டு எழுந்து உன் வேலைகளைப் பார்.” அறிவுறுத்தினார் தாதி.
அதன்படியே செய்யத் தொடங்கியவளுக்கு சிசேரியன் செய்த உடல் என்கின்ற பயம் நீங்கிச் சுதாகரித்துக்கொள்ள முடிந்தது.
அடுத்தநாள் காலையில் எழுந்தவள், மெல்ல மெல்லத் தன் காலை வேலைகளை முடித்துக்கொண்டு, “நானே போய்க் கொள்வேன்!” உதவிக்கு வந்த தாதியிடம் சொல்லி அவளைத் தடுத்துவிட்டு, அடுத்த மாடியில் உள்ள குழந்தைகள் பிரிவு நோக்கிச் சென்றாள்.
லிஃப்ட்டிலிருந்து வெளிப்பட்டு, மெல்ல மெல்ல நடந்து குழந்தைகள் இருந்த அறையினுள் நுழைந்தவள், கண்ணில் பட்ட காட்சியில் முகம் கடினத்தைப் பூசிக்கொள்ள அப்படியே நின்றுவிட்டாள்.
குழந்தைகளில் ஒருவரை கழுவி உடைமாற்றிய தாதியின் அருகில் சந்தேகம் கேட்டு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு நின்றான் கார்த்திகேயன்.
‘இந்த விடிய வெள்ளன வந்திருக்கிறாரே!’ கணப் பொழுதில் வியந்த மனம், ‘அப்போ, நீ என்னவென்றாலும் சொல், நான் நினைப்பதைச் செய்தே தீருவேன் என்பது போலல்லவா நடந்து கொள்கிறார்! இனி இந்தப் பக்கம் வராதே என்று சொல்லியும் வந்திருக்கிறாரே!’ கடுகடுத்தது.
அது அப்படியே முகத்தில் பிரதிபலிக்க உள்ளே நகர்ந்தவளை திரும்பிப் பார்த்த கார்த்திகேயன், அவளை அறிமுகமானவன் போலவே காட்டிக் கொள்ளவில்லை.
அறிமுகம் அற்றவராயினும் சிறு தலையாட்டல், முகமன் விசாரிப்பு என வழமையில் உள்ள இந்நாட்டில், அவள் அங்கே இல்லை என்கின்ற பாவனையில் மிகவும் சாதாரணமாக திரும்பிவிட்டான் அவன்.
காலைவணக்கம் சொன்ன தாதி, “இப்போ எப்படி இருக்கு? வலி ஒன்றும் இல்லையே!” அவளோடு கதைத்தவாறே குழந்தைக்கு உடைகளை அணிவித்தவள், “நாளை காலை கொஞ்சம் நேரத்துக்கு வந்தால் நீங்களே உங்கள் குழந்தைகள் இருவரையும் குளிப்பாட்டலாம் மதுரா.” சொல்லி முறுவலித்தாள்.
“அங்கே உட்காருவது என்றால் உட்காருங்க; இவளைத் தருகிறேன்.” குழந்தையோடு மதுராவை நோக்கி நகர, “இல்லை, என்னிடம் தாங்க; கொஞ்ச நேரத்தில் பாப்பா குடிக்கலாம் இல்லையா செல்லம்?” சட்டென்று வாங்கிக் கொண்டான் கார்த்திகேயன்.
அதோடு, மறக்காது வெட்டும் பார்வையால் மதுராவை தொட்டுவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து குழந்தையைக் கொஞ்சத் தொடங்கியவனை செய்வதறியாது பார்த்தாள் அவள்.
இவர்களின் உறவுமுறை விளக்கம் தெரியாத தாதி, ஒருவர் ஒருவரை பார்வையால் வெட்டிக்கொள்வதைக் கண்டுகொண்டாள்.
“என் குழந்தைகள் இவர்கள்.” இப்படித்தான் தன்னை அறிமுகம் செய்திருந்தான் கார்த்திகேயன். அதனால், முறுவலோடு இருவரையும் பார்த்தவள், ‘இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை போல!’ என்றே எண்ணிக்கொண்டாள்.
தொடர்ந்து, அவர்களை ஆராய்வதில் நேரத்தைச் செலவிடாது அடுத்த குழந்தையை தூக்கிச் சுத்தப்படுத்த, அருகில் போய் நின்று கொண்ட மதுரா, அதைக் கவனிக்கத் தொடங்கினாள்
அவளையும் தயார் செய்த தாதி, “பால் கொடுக்கும் நேரம் தான் மதுரா; நீங்களும் அங்கே போயிருங்க; இவளைத் தருகிறேன்.” என்றதும், சட்டென்று எழுந்து அடுத்த பகுதிக்குள் சென்றமர்ந்தான் கார்த்திகேயன். அதோடு, வளர்ந்த குழந்தைகளோடு கதைப்பது போலவே பச்சைக்குழந்தையோடு கதைக்கவும் தொடங்கினான்.
அதைப் பார்த்துச் சிடுசிடுத்தவளை முறுவலோடு நோக்கினாள் தாதி.
மதுரா போய் அமர்ந்ததும் மடியில் குழந்தையைக் கிடத்தி விட்டு, “இப்படித் தலையைப் பிடித்துக் கொள்.” குழந்தையை பாதுகாப்பாக எப்படிப் பிடித்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்தவள்,
“என்ன, உன் புருஷனோடு சண்டையா? குழந்தைகள், அதுவும் ஒன்றுக்கு இரண்டு; இனி இவர்களை வைத்தே நிறையச் சண்டைகள் வரும்; அதேவேகத்தில் சமாதானமும் ஆகலாம்.” தன் அனுபவத்தைப் பகிர்பவள் போல் சொன்னாள்.
‘புருஷனா? யார்? இவரா?’ மனதுள் அலறியவள் ஏனோ அதை மறுத்தும் சொல்ல நினைக்கவில்லை. அதற்கும் மேல், குழந்தையைக் கரங்களில் ஏந்தியிருந்த அக்கணம் ‘புருஷன்’ என்கின்ற சொல் அவளைக் குத்திக் கிழித்தது. ‘எங்களை உன்னிலிருந்து அடியோடு அழிப்பது அவ்வளவு இலகுவல்ல!’ என, அவளின் கடந்த காலக்கோரம் பல்லை இளிக்க, சொல்ல முடியாத துயரத்தில் திணறிப்போனாள் அவள்.
மறுபுறம், இவர்கள் கதைப்பதைக் கேட்டு, அவள் பதில் என்னவாக இருக்கும் என அறியும் அவாவில் செவிகளை இந்தப் பக்கம் விட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயனின் இதழ்கள் முறுவலில் மலர்ந்தன!
“உங்கம்மா வீம்புக்காரிடா செல்லம். நீங்க அப்படியில்லையே! அப்பா சொல்லுங்க அப்பா.” தனக்குத்தான் கட்டுப்பாடுகள் போட்டு அவள் மனம் மாறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என எண்ணியிருந்தவன் தன்னை மறந்து சொன்னவாறே, கரங்களுள் அடங்கியிருந்த பச்சைக்குழந்தையின் பூப்பாதங்களில் குனிந்து முத்தம் கொடுத்தான்.
அவன் தமிழில் சொன்னதை தாதி புரிந்து கொள்ளவில்லை என்றாலும் தத்தளித்துப் போயிருந்த மதுராவின் செவியில் அப்படியே வந்து மோதி அவள் உடலை உதறச் செய்தது.
அதோடு, கடந்த காலம் புறமுதுகிட நிஜத்தின் நினைவில் கோபாக்கினி பற்றிக் கொண்டது.
‘என்ன துணிவு இந்தாளுக்கு! அவர்கள் என் குழந்தைகள் என்பதையே இல்லை என்று மறுப்பார் போலுள்ளதே! அப்பாவாம் அப்பா! யாருக்கு யார் அப்பா!’ சினந்தவள்,
“அவர் என் புருஷன் இல்லை; எனக்கு அண்ணன் முறையாக வேண்டும்.” உணர்வற்ற குரலில் சொல்லிவிட்டு, இருவரையும் குழப்பத்தோடு பார்த்த தாதியை ஏறெடுத்தும் பார்க்காது குழந்தைக்கு பசியாற்றத் தொடங்கினாள்.
மதுராவின் உதடுகள் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் கார்த்திகேயனின் கன்னத்தில் அறைந்தன!
எதிரில் தடுத்து நின்ற கண்ணாடியால் அவளைப் பார்த்தவன் அவள் முகம் காட்டிய பாவனையிலும், ‘குழந்தைகளின் அப்பா என்றாயே!’ என தாதி தன்னைக் கேள்வியும் குழப்பமுமாகப் பார்த்ததையும் கண்டவனுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
அவளது நிலையை யோசித்துப் பார்க்க, சற்றும் இடம் கொடாத அவன் மனமோ மிகுந்த கோபம் தான் கொண்டது.

