8
“சொன்னால் கேளுங்க மதுரா, தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாது முகம் கழுவிக்கொண்டு வாங்க; அண்ணா வெளியில் நிற்கிறார், நடந்துவிட்டு வருவோம்!”
நித்தி, மீண்டும் மீண்டும் சொல்லவே, மெல்ல எழுந்து, வரவேற்பறையோடிருந்த தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்தவளுக்கு, நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
‘யார் இவர்கள் இருவரும்!? உற்ற உறவா? இணைபிரியா நட்பா?! எவ்வளவு கால அறிமுகம்!?’
அவர்களின் அன்பில் கரைந்துருகிய மனம் அரற்ற, அறையை ஒட்டியதாக இருந்த குளியலறைக்குள் புகுந்து, குளிர்நீரைத் திறந்து உள்ளங்கையில் ஏந்தியவள், அதன் சில்லிடலில் நெஞ்சில் நிறைந்திருந்த வெம்மை தணிகின்றதோ என்றளவில் உணர்ந்தாள்.
உரிமையாய் கரம் தழுவிச் செல்லும் நீரையே சிலகணங்கள் பார்த்திருந்தவள், முகம் விறைக்க குளிர் நீரால் அடித்துக் கழுவி, அங்கிருந்த பூத்துவாலையால் முகத்தை ஒற்றியவாறே வெளிவந்து, அப்படியே கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
சற்றுமுன்வரை மனதை அடைத்திருந்த அதீத பரிதாபநிலையும் தவிப்பும் கட்டுக்குள் வந்திருந்ததில், அவள் சிந்தனை சீராகச் செயல்பட முனைந்தது.
‘ஹ்ம்ம்…அம்மாவிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும்; நிச்சயம் சுதாமிஸ் சும்மா இருக்க மாட்டார். அவர் சொல்லி அம்மா அறிந்து கொண்டால், அதை அவரால் தாங்கவே முடியாது. அதைவிட நானே சொல்வது மேல்!’ மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.
‘கல்யாணம் என்ற ஒன்றைச் செய்து வந்து எத்தனையை அனுபவித்து விட்டேன்! இதோ, இன்று இந்த நிலையில் நிற்கும் வரை யார் உதவியை எதிர்பார்த்தேன்! நித்தியும் கார்த்திகேயனுமா துணை நின்றார்கள்! அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேனா!’ தொடர்ந்து எண்ணியவளுக்கு, கார்த்திகேயன் தன் சித்தியுடன் உரையாடியதிலிருந்து, தான் இங்கிருப்பதை சுதா விரும்பவில்லை என்பது தெளிவாகியதில், தொடர்ந்து இங்கிருப்பதில்லை என்கின்ற முடிவுக்கு வந்தாள்.
‘இவர்களோடு தங்கிய இந்த இருகிழமைகளில் என் மனம் இதமாகவில்லை என்றோ, மிகமிகப் பாதுகாப்பாக உணரவில்லை என்றோ பொய் சொல்ல முடியாது!’ மனம் நினைக்க, அவள் வலக்கரமோ கட்டில் மெத்தையை மெல்ல நீவியது!
‘இது உன் இடம்!’ என்ற எண்ணத்தை தம் ஒவ்வொரு செயல்களிலும் காட்டிய கார்த்திகேயன், நித்தி இருவரினதும் பெருந்தன்மையில் அவள் விழிகள் கலங்கின!
நித்தி, எப்போதுமே மதிய உணவுக்கு வீடு வருவதில்லை. கார்த்திகேயனோ டானென்று பன்னிரண்டுமணிக்கு சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்துவிடுவான்.
“நீங்களும் இருங்க மதுரா; இரண்டுபேரும் தானே, தனித்தனியாகவா சாப்பிட வேண்டும்!” வற்புறுத்தி அமர்த்தி, இருவரும் சேர்ந்தேதான் உணவுண்பார்கள்.
தன்னை ஒழுங்காக நேரத்துக்குச் சாப்பிடவைக்கும் நோக்கில் அவன் வருகிறானோ என்றும் இவள் நினைத்திருக்கிறாள். அதுதான் உண்மையும் கூட!
பெரும்பாலும் அமைதியாக உண்பவன், உணவு பற்றி ஓரிரு வார்த்தைகளில் பாராட்டுவான். அதே, அவனின் செய்கைகள் அவளை வேற்றாளாக உணர வைத்ததே இல்லை.
“அம்மா…அம்மா இருக்கும் வரை இரண்டு வேளைக்கு சுடச்சுட சாப்பாடு ரெடியாக இருக்கும்!” ஒருநாள் முகம் இறுகச் சொன்னான்.
“இப்போ, நானும் நித்தியும் தானே! பசிக்கு சாப்பிடுவோம். நீங்க வந்து எங்க நாக்கை திரும்பவும் ருசிக்குப் பழக்கிவிட்டீங்க!” சிறுமுறுவலோடு பாராட்டி இருக்கிறான்.
“வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது எதுவோ போலிருக்கு நித்தி! உங்களுக்கு வீண் கஷ்டம் தானே; கிளினிக்கில் வேலை ஏதாவது செய்யலாம் என்று உம் அண்ணா சொல்லி இருந்தாரே…” என, அன்றொருநாள் இவள் ஆரம்பிக்க,
“இப்போ மட்டும் நீங்க கையைக் கட்டிக் கொண்டா இருக்கிறீங்க! காலையில் எழுந்தால் இரவுவரை எதையோ செய்து கொண்டுதானே இருக்கிறீங்க! இரண்டுநேரச் சமையல் வேற!” குறுக்கிட்டாள் நித்தி.
“அதுவெல்லாம் ஒரு வேலையா நித்தி, நான் சொல்வது…” அவளை முடிக்கவிடாது குறுக்கிட்டாள் நித்தி.
“இப்போ என்ன சொல்ல வாறீங்க? இங்க இருப்பதற்கு காசு தரப் போறீங்களா??” ஒருமாதிரி வினவியவள், மதுராவின் முகம் கலங்கியதைப் பார்த்துவிட்டு கேலிக்கு மாறினாள்.
“அப்படிப் பார்த்தால் நாங்கதான் உங்களுக்கு காசு தரவேண்டும் மேடம்.” என்று அவளைக் கட்டிக்கொண்டவள், “அம்மாவைப் போல எங்களைப் பார்த்துக் கொள்வதற்கு விலையே இல்லை மதுரா. அதனால், இப்படித் தேவையில்லாமல் யோசிக்க வேண்டாம். குட்டீஸ் பிறந்ததும் வேலைக்குப் போகலாம். கொஞ்சநாளைக்குப் பொறுமையாக இருங்க.” என்றிருந்தாள், பெரிய மனிசியாய்!
அதேநேரம், நடந்ததை தமையனிடம் சொல்லி இருப்பாள் போலிருக்கு!
“உங்களுக்கு நாங்க உதவி செய்கின்றோம் என்றோ, எங்களுக்குத் திருப்பிச் செய்ய வேண்டும் என்றோ மறந்தும் நினைக்கத் தேவையில்லை மதுரா!” சிலதினங்களுக்கு முன் இப்படி ஆரம்பித்தான் கார்த்திகேயன்.
“அங்கிருந்து உங்களை அழைத்து வந்ததில் எங்க சுயநலம் தான் பிரதானம் மதுரா!” என்றவன், நம்பாமல் நோக்கியவளிடம்,
“உண்மைதான் மதுரா! நித்தியை பழையபடி மாற்ற நான் எவ்வளவு பாடுபட்டிருப்பேன்; ஒருநாள் நன்றாக கலகலவென்று இருப்பவள் அடுத்தநாள் ஒரேயடியாக அழுகையில் கரைவாள்.
படிப்பை எப்போதும் படிக்கலாம், கொஞ்சகாலம் அக்காவோடு போய் இருந்துவிட்டு வா என்றும் சொல்லிப் பார்த்தேன்! என்னைவிட்டு நகரவும் மாட்டேனென்று சொல்லிவிட்டாள்.” தங்கையின் பேச்சில் அவன் குரல் வெகுவாகக் கனிந்திருந்தது.
‘இப்படியொரு சகோதரன் எங்களுக்கு இல்லையே!’ என, இவளை அடிக்கடி ஏங்க வைத்துவிடுவான் இவன். அந்தளவுக்குத் தங்கையைத் தாங்குவான்; அவளும் அதற்குச் சற்றும் குறைச்சல் இல்லாது அண்ணா பாசம் பொழிவாள்.
“அம்மா அப்பா இருவருக்கும் அவள் ஒரு குழந்தை; அவ்வளவு செல்லம்; கடைசியும் தானே!” அவன் சிவந்த விழிகளே பெற்றோர் பற்றி அவன் மனம் அழுவதைக் காட்டியது.
“அப்படி இருந்தவள், இப்போ உங்களைக் கவனித்துக் கொள்வது, பிறக்கப் போகும் குழந்தைகள் பற்றி, அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்யத் திட்டமிடுவது எல்லாமே தன் பொறுப்பு என்று பெரிய பெண்ணாய்…” சொல்லிக்கொண்டு வந்தவன் குரல் கரகரத்தது.
“என் தங்கையை முழுதாக எனக்கு மீட்டுத் தந்திருக்கிறீங்க மதுரா! அதற்கே உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வேன் என்றிருக்கு! அதனால் தான் சொல்கிறேன், இது உங்க வீடு என்று நினைத்துக் கொள்ளுங்க; நாங்க அப்படித்தான் உங்களைப் பார்க்கிறோம்!” என்றிருந்தான்.
“வேலை விடயம் பற்றி நித்தி சொன்னாள். ஒரேயடியாக, குழந்தைகள் பிறந்த பிறகு ஏற்பாடு செய்து தாறேனே!” என்றும் சொல்லி இருந்தான். அவளுக்குமே மறுத்து கூற வரவில்லை. தன்னால் முடிந்தளவு வீட்டு வேலைகளோடு சுவாரஸ்சியமாகவே பொழுது கழிந்தது அவளுக்கு!
‘நானும் இது வேறொருவர் வீடு என்ற எண்ணத்தில் பழகுவதில்லைதான். அதற்கென்று நான் இங்கிருப்பதால் இவர்களுக்கு சிறு மனக்கஷ்டமும் வர இடமளிக்க மாட்டேன். சுதாமிஸ் சொல்வதுதான் சரி; நான் இனி இங்கிருக்கப் போவதில்லை!’ உறுதியாக எண்ணிக் கொண்டவள், எழுந்து சென்று பெட்டியை இழுத்து, தன் பொருட்களை அதில் அடுக்கத் தொடங்கினாள்.
‘நல்ல காலம், சுபா ஆன்ட்டி வீட்டு ரூம் இன்னும் இருக்கு; இப்போதைக்கு அங்கேயே போயிருப்போம்; பிறகு அம்மாவிடம் விசயத்தைச் சொல்லி…’ கணம், நினைவோட்டம் தடைப்பட அப்படியே இருந்தவள், ‘என்ன செய்யலாம் என்று பார்த்துச் செய்வோம்!’ என்ற எண்ணத்தில் பொருட்கள் அடங்கிய பெட்டியை மூடியவளை, முகம் இறுக, கேள்விப் பார்வையோடு நெருங்கினாள் நித்தி.
“என்ன மதுரா இதெல்லாம்? அண்ணா வெளியில் நிற்கிறாரே, நீங்க வரவில்லையா என்று பார்க்க வந்தால், நீங்க வேறு எதற்கோ தயாராகி விட்டீங்க போலிருக்கே!” அவள் குரலின் கடினம், இவள் முகத்தில் சிறு முறுவலைக் கொண்டு வந்தது.
“ஹ்ம்ம்…நான் நடக்க வரவில்லை நித்தி; நீர் அண்ணாவோடு போயிட்டு வாரும். அதற்கு முதல் நானும் போயிட்டு வரப் போகிறேன்!” என்றவாறே நெருங்கி, நித்தியின் கரத்தை பற்றிக்கொள்ள, சட்டென்று உதறிவிட்டு முறைத்தாள் அவள்.
“வீட்டை விட்டுப் போகச் சொல்லி நானோ அண்ணாவோ சொன்னோமா?”
“நித்தி!” பரிவுடன் அவள் மோவாயைப் பற்றிய மதுராவின் விழிகள் பளபளத்தன!
“நீங்கள் இருவரும் கடைசிவரை அப்படிச் சொல்ல மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியாதா? இந்த இரண்டு கிழமைகளையும் என்றைக்கும் மறக்க மாட்டேன்! நேரம் கிடைக்கும் பொழுது, நான் இங்கும் நீங்கள் அங்கும் வந்து போக இருக்கலாம்; ஒரே வீட்டில் இருந்தால் தான் பாசமா நித்தி!”
சட்டென்று அவள் கரத்தைத் தட்டி விட்ட நித்தி, விருட்டென்று வெளியேறி, “அண்ணா அண்ணா, இங்க வந்து பாருங்கண்ணா!” அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவள், தமையனைக் காணாததில் கணம் நிதானித்தாள்.
‘வெளியில் தானே வந்தார்!’ தமையனை அழைத்தவாறே வீட்டைச் சுற்றியவள், “எங்கே போனார்!” முணுமுணுத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்து, “அண்ணா! எங்கேண்ணா இருக்கிறீங்க!” சற்றே குரலை உயர்த்தினாள்.
‘சொல்லாமல் கொள்ளாமல் எங்குமே போகமாட்டாரே!’ நித்தியின் மனதில் ஏனோ கவலை இரேகைகள் உதிக்கத் தொடங்கின!
நித்தி சென்ற வேகத்தில், முறைப்போடு கார்த்திகேயனை எதிர்பார்த்திருந்த மதுராவின் நெற்றி சுருங்கியது.
“ஏன் இப்படிக் கூப்பாடு போடுகிறாள்! வெளியில் தானே நிற்பதாகச் சொன்னார்!” என்றவாறே வெளியில் வந்தவள், வெளிவாயிலில் நின்று பாதையின் அப்புறமும் இப்புறமும் பார்த்திருக்கும் நித்தியை அணுகினாள்.
“அண்ணா எங்கேம்மா நித்தி? வெளியில் தானே நிற்பதாகச் சொன்னார்!”
“அதைப் பற்றி உங்களுக்கென்ன! நீங்கதான் போகப் புறப்பட்டு விட்டீங்களே; எப்படிப் போகப் போறீங்க? கால் டாக்ஸி நம்பர் தரவா?” அன்னியமாகக் கதைத்தவளை, மென்முறுவலோடு பார்த்தாள் மதுரா.
“நீர் என்ன வேண்டுமென்றாலும் சொல்லும் நித்தி; நான் போகத்தான் போகிறேன்! அதுக்கு முதல் உம் அண்ணா எங்கே என்று பார்ப்போம்!” தீர்மானமாகச் சொன்னவளை அதிர்வோடு பார்த்தாள் நித்தி.
மதுரா போய்விடுவாள் என்பதை எண்ணிப் பார்க்கவே அவள் விரும்பவில்லை. இருகிழமைகள் என்றாலும், காலா காலமாக ஒன்றாக இருந்து பழகியது போன்ற உணர்வில் அமிழ்ந்திருந்தவள், மதுராவின் இந்த முடிவைச் சிறிதும் ஏற்க மறுத்தாள்.
“என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்றுதான் இந்த முடிவு நித்தி. இப்போ, அதைவிட்டு விட்டு உங்க அண்ணாவின் ஃபோனுக்கு எடுத்துப் பாருமன்!” மீண்டும் தான் செல்லவிருப்பதை ஊர்ஜிதம் செய்தாள்.
அவள் அப்போதும் போகத்தான் போகிறேன் என்றதும், சுறுசுறுவென்று எழுந்த கோபத்தை அடக்க முடியாது திண்டாடினாள் நித்தி.
“இங்க பாருங்க, இது எங்க வீடு. யாரிடமும் கேட்டுவிட்டு உங்களை நாங்க அழைத்து வரவில்லை; முதல், இதே சித்திதான் உங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அனுப்பி வைத்தார்.
இப்போது, ஏதோ பயத்தில் சொல்லி இருப்பார். அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீங்களே! உங்களுக்கே உங்கள் பேச்சு நல்லதாக இருக்கா?” சீறிக்கொண்டு வந்தவளின் குரல் கம்மி விழிகள் மினுமினுத்தன!
“நித்தி…என்னமா இது!” பேசத் தொடங்கியவளை இடையிட்டாள் நித்தி.
“உங்களை யார் போக விடுவது! எப்படிப் போறீங்க என்று நானும் பார்க்கிறேன்!” உரிமையாக முறுக்கிக்கொண்டே உள்ளே விரைந்தவளை, பார்வையால் தொடர்ந்த மதுராவின் விழிகளும் தளம்பிவிட்டன!
‘எஞ்சிய வாழ்வே உன்னோடுதான் என்று யாரை நம்பி இத்தூரம் வந்தேனோ, அவனோ அந்தரத்தில் நிறுத்தி விட்டான்!’ இந்நினைவு தோன்றிய அக்கணமே அவள் மனமும் உடலும் தகித்துப் போனது!
‘நினைக்கவே கூடாதென்ற வைராக்கியம் அக்கணமே அழிந்து விடுகின்றதே! லேசில் மறக்கக்கூடியவையா நான் சந்தித்தவை!?’ விழிகளை இறுக மூடித் திறந்தாள்.
‘அனைத்துமே கொடும் கனவாகிடாதா?’ நெஞ்சோரம் துளியே துளியாய் ஆசை!
விரக்தி முறுவல் ஒன்று பட்டும் படாமல் அவள் இதழை ஸ்பரிசித்துச் சென்றது!
எங்கெங்கோ செல்ல முனைந்த நினைவுகளை அதட்டி அழைத்து நித்தியில் நிறுத்தினாள்.
‘யாரென்றே அறிமுகமற்றவள்; தனியாக விட்டு விடுவேனா பார் எனச் சண்டை போடுகிறாள்!’ இந்த எண்ணத்தோடு கைகோர்த்த, அவள் இதழ்கள், “என்ன விசித்திர உலகம்!” ஆயாசம் கொண்ட மனதோடு முணுமுணுத்தது.

