அவன் நீளமாக விளக்கி முடிக்கவும், அவனை முறைத்த பரமேஸ்வரி,
“உனக்குள்ள இப்பிடியான எண்ணங்கள் இருந்தா இந்தக் கதையை இப்பிடியே விட்டுடு… நீ கேட்ட மாதிரி பொம்பிளையை பார்த்து உனக்குக் கட்டி வைக்கிறன். அநியாயமா அந்தப் பிள்ளையின்ர வாழ்க்கையைக் கெடுக்காம…”
“என்னம்மா, என்ர பிள்ளை அப்பிடி, இப்பிடி எண்டு சொல்லுவீங்கள்! நீங்களே என்னை இப்பிடி நினைக்கலாமோ? நீங்கள் எப்பிடி இந்த முடிவுக்கு வந்தனீங்கள்? எடுத்த முடிவில மாறாம இருப்பீங்களோ எண்டு அறியத்தான் கேட்கிறன். ஏனெண்டா இப்ப ஏதோ ஒரு யோசனையில ஓமெண்டு போட்டு பிறகு நிலனுக்கு நீங்க பிரிவினை காட்டினீங்கள் எண்டா அது சரியில்லையெல்லோ! அதுக்கு அவைய இப்பிடியே விடலாம்.”
“இதுக்குத்தான் கேட்டதெண்டா நீ அம்மாவை விளங்கி வச்சிருக்கிற லட்சணம் அவ்வளவுதான் எண்டு நானும் சொல்லலாம் இல்லையோ?”
“சரி… சரி… ரெண்டு பக்கமும் மட்ச் ட்ரோவா போச்சு. இப்ப ரீசனை சொல்லுங்கோ…”
“எனக்கு என்னெண்டு தெரியா, அந்தப் பிள்ளை சாதனாவோட கொஞ்ச காலம் பழகியிருந்தாலும் அவாவில நல்ல எண்ணம் வந்திட்டுது. ஆனா இப்பிடி ஒரு எண்ணம் முதல் வரேல்ல. அண்டைக்கு நீங்க ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டு இருக்கேக்கதான் இப்பிடி நடந்தா நல்லமே எண்டு யோசனை வரவும் கேட்டுட்டேன். பிள்ளையோட இருக்கிறவாவை என்னண்டு ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த எண்டா, அதுக்குக் காரணம் இதுதான்.
வாற மருமகளிட்ட அவாக்குச் சம்பந்தமில்லாத ரெண்டு பிள்ளைக்குத் தாயா இருக்கோணுமெண்டு எதிர்பார்க்கிற நாங்கள், அவான்ர ஒரு பிள்ளையை எங்கடயா பார்க்க மாட்டமெண்டா அதில நியாயம் இருக்குமோ தம்பி?” என்ற தாயை பெருமை பொங்கப் பார்த்தான் ஆதித்யன்.
“என்ர அம்மா எப்பவும் மற்றவையில இருந்து வித்தியாசம்தான்.”
“அதை இப்ப சொல்லும் வந்து.” என்று நொடித்தவர், “சரி கதைச்சது காணும் பிள்ளையளை என்ன செய்யிறது? இஞ்சயே படுக்க வைக்கட்டோ?” என்றார் கேள்வியாக.
“மயூ இஞ்ச படுக்கட்டும் அம்மா. மகியை நான் தூக்கிக் கொண்டு போறன்.”
“சரி தம்பி, பிள்ளையைக் கவனமா பார். ஏதேனெண்டா கூப்பிடு.”
“ம்ம்..” என்றவன் மகியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு அந்தப் பக்கத்துப் படிக்கட்டின் வழியே மேலே ஏறினான்.
அன்று இரவு அவனுக்கு ஒழுங்கான உறக்கமே இல்லை… இடை இடையில் எழுந்து மகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். நள்ளிரவு தாண்டி குடித்த மருந்தின் வீரியம் குறைய, மீண்டும் காய்ச்சலடிக்கத் தொடங்க, மீண்டும் மருந்து கொடுத்துப் படுக்க வைத்தவன், மறுநாள் முதல்வேலையாக இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தான்.
ரிசல்ட் வைரஸ் காய்ச்சல் என்று வந்தது. அட்மிஷன் போட வேண்டிய தேவையில்லை ஆதலால், கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறி மருந்தைக் கொடுத்து வீட்டுக்கு விட்டிருந்தனர்.
அவள் முழுதாக சரியாக ஒருவாரம் எடுத்தது. அந்த ஒருவாரமும் சாதனா அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். மகியின் அருகே மயூ மற்றும் நிலன் இருவரையும் செல்லக் கூடாது என்று ஆதித்யன் அறிவுறுத்தியிருந்தான். சென்றால் அவளுக்குக் குணமாக நாளாகும் என்று சும்மா சொல்லி வைத்ததில் இருவரும் ஒதுங்கிக் கொண்டனர்.
நிலனைக் காரணம் காட்டி சாதனாவையும் அவன் தள்ளித்தான் இருக்கச் சொன்னான். தான் வேறு யாரையும் வைத்துப் பார்த்துக் கொள்கிறேன் என.
அவள்தான் கேட்கவே இல்லை. ‘நித்திலனுக்கு ஒரு சகோதரம் இருந்தால் நித்திலனுக்காக நோய் வந்த பிள்ளையை ஒதுக்கி வைப்பேனா?’ என்று தன் கூற்றின் ஆழம் புரியாமல் சொன்னவள், ‘என்னால் யாருக்கும் காய்ச்சல் பரவாமல் பார்த்துக் கொள்ள இயலும்.’ என்று விட்டுப் பார்த்துக்கொள்ள, ஆதித்யன் அதன் பின் எதுவுமே சொல்லவில்லை.
நாளை தன் எண்ணம் நிறைவேறும் சாத்தியம் இருந்தால் இதையெல்லாம் இவள்தானே சமாளித்துக் கொள்ள வேண்டும், பழகிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டான்.
அத்தோடு விருத்தெரிந்த நாளில் இருந்து தாயின் அரவணைப்பை அறியாத மகியும் புதிதாகக் கிடைத்த அவளின் பிரத்தியேகக் கவனிப்புகளிலும் சலுகைகளிலும் மயங்கிப் போய், “நீங்க இல்லாட்டி என்னோட அன்ட்ரி வேணும் அப்பா.” என்று கெஞ்ச, அவனால் என்ன சொல்ல முடியும்?
போதாத குறைக்கு மயூ வேறு, “அப்பா! காய்ச்சல் வந்த எண்டு மகிக்குச் சரியா செல்லம் குடுக்குறா அன்ட்ரி. எனக்குக் காய்ச்சல் வந்தாலும் இப்பிடியோ செல்லம் தருவா?” என்று சிறு செல்லப் பொறாமை துளிர்த்த குரலில் கேட்டு அவனை அதிர வைத்திருந்தாள்.
இதுவரை எனது, உனது என்று பாகுபாடு பார்க்காது பழகியிருந்த மகள்கள் இடையில் முதல்முறை ஒருத்தியின் அன்பை அனுபவிக்கப் போட்டி எழுந்துள்ளது என்றால் என் மகள்களுக்கு அன்னையின் இடம் எத்துணை முக்கியத்துவமானது?
உண்மையை சொல்லப் போனால் திருமணம் செய்வது என்று முடிவு செய்த பின்னும் சாதனா மேல் தனிப்பட்ட ஈர்ப்பு என்று எதுவும் இதுவரை அவனுக்கு இல்லவே இல்லை.
முதலில் அவள் முடிவைக் கேட்போம். அவள் ஒப்புக் கொண்டால் அதன் பின் மற்றது எல்லாம் வாழ்க்கைப் போக்கில் போகட்டும் என்ற வரையிலே யோசித்திருந்தவன், அவள் முழுமூச்சாக மறுத்தாள் என்றால் என்ன செய்வது என்று யோசிக்கவே இல்லை.
இப்போது அதை யோசிக்கவேண்டிய கட்டாயம். நிறையவெல்லாம் யோசிக்கவில்லை. ஒருவேளை சாதனா இதற்கு மறுத்தால், மகள்களுக்காக என்றாலும் அவளைப் போல் வேறு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் போலவே!
நினைக்கவே சற்று பாரமாகத்தான் இருந்தது. கனவில் நித்திலன் முகம் வந்து அவனை முறைத்தது! சாதனாவின் வேண்டாம் என்ற சொல் அவனையுமல்லவா அவர்களிடம் இருந்து வேரோடு பிரிக்கும்? ஏனோ அவனைத் தள்ளிச் செல்ல அனுமதிக்க முடியாது என அவன் மனம் முரண்டியது.
முடிவில் இப்படி மனதுக்குள் வைத்து எல்லாவற்றையும் குழப்பிக் கொள்ளாமல் உரியவளிடமே கேட்டு விடுவோமே என்று அவன் முடிவெடுத்து முடிப்பதற்குள் நித்திலன் தனது இரண்டாம் தரத்தைப் பூர்த்தி செய்து மூன்றாம் தரத்துக்கு அடியெடுத்து வைத்து முதல் தவணை பரீட்சை விடுமுறையே வந்திருந்தது.
இந்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இன்னுமே இரு பகுதிகளுக்கும் இடையில் நெருக்கம் கூடியிருந்தது. நெருக்கம் எப்படியென்றால் சிறியவர்கள் – சிறியவர்கள், சிறியவர்கள் – பெரியவர்கள் என்ற அளவில்தான் இருந்தது. பெரியவர்கள் இருவருக்கும் இடையில் கனரக வாகனங்கள் ஐந்தாறு ஒன்றாகப் புகும் இடைவெளி அப்படியேதானிருந்தது.
ஆதித்யனும் உருவாகாத நெருக்கத்தை புள்ளி வைத்துத் தொடங்கும் முயற்சியில் இறங்காமல் உருவாகி இருக்கும் பிணைப்பை பெரிதான பிரயத்தனங்கள் இன்றி இறுக்கியிருந்தான்.
வெளியில் யார் எது தந்தாலும் வாங்கி சாப்பிடக் கூடாது என்று மகள்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்ததை மாற்றி சாதனா கொடுத்தால் மட்டும் வாங்கி சாப்பிடலாம் என்று அனுமதித்திருந்தான்.
நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் சிறு எச்சரிக்கையுடன் பழகவேண்டும் என்று சொன்ன விதி, நித்திலனிடம் மட்டும் விலக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் பொதுவானது என்று இருந்த விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் இப்போது மூவருக்கும் என்றாகிப் போனது.
மருத்துவமனை வாசம் நீங்கக் குளித்து முடித்து மகள்களுக்கு அவன் தரும் முத்தங்கள் மூன்று சமபங்காகி நித்திலன் கன்னங்களில் வரவு வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முதலில் ஓடி வந்து பெற்றுக் கொள்ளும் உரிமையையும் அவன் மகள்களிடமிருந்தே அடாவடிக்காரன் தட்டிப் பறித்திருந்தான். அவர்களும் அழகாக விட்டுக் கொடுத்திருந்தனர்.
சாதனாவும் முன்பு போல் பன்னிரண்டுக்கே வேலை என்று சரியான நேரம் வருவது இல்லை.
“நீங்க கட்டினா தலை வடிவா நிக்குது அன்ட்ரி. அப்பம்மா கட்டினா வேளைக்கெண்டு அவிழுது. பிறகு ரீச்சர் தான் கட்டி விடுறவா அங்க. இப்பிடி என்னெண்டு கட்டுறது எண்டு அப்பம்மாவுக்குச் சொல்லிக் குடுங்கோவேன்.”
அடுத்த வருடம் பள்ளி சேர இருப்பதால் இதுவரை மாறாது இருந்த மகள்களின் டயானா கட் சிகையலங்காரத்தை மாற்ற வேண்டும் என்று கொஞ்சம் முடியை வளரவிட்ட பின், இரண்டு குட்டி பொனி போடுமளவு மங்கி எல்லாம் விட்டு வெட்டி வைத்திருந்தான், ஆதித்யன்.
பரமேஸ்வரியின் முதிர்ந்த கரங்கள் ரப்பர் பாண்டுகளை சரியாக இறுக்க முடியாது தளர்வதால், அவர்களின் குடுமியும் பாதி நேரத்தில் கழன்று விடும்.
அன்றொருநாள் பின்னேரம் சாதனா, பரமேஸ்வரியை விடுத்துத் தானே அழகாக இருவருக்கும் தலைவாரி விட அது நீண்ட நேரம் அசையாமல் நின்ற ஆச்சரியத்தில் இருவரும் வந்து அவளிடம் கோரிக்கை வைக்க, நடப்பை உணர்ந்து கொண்டவளுக்கு இருவரையும் காண உருகி விட்டது.
அன்றிலிருந்து நித்திலனை வழமைக்கும் அரை மணித்தியாலங்கள் முந்தி எழுப்பி வெளிக்கிடுத்தி இவர்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து இருத்தி விட்டு, இருவருக்கும் தலை வாரிவிடுவாள்.
அநாவசியமாக யாரையும் தொந்தரவு செய்யப் பிடிக்காத ஆதித்யன், தன் இந்த செயலுக்கு என்ன சொல்வானோ என்ற சங்கடம் உள்ளூர இருந்தாலும் மான்குட்டிகளின் விழிகளில் மின்னிய சந்தோஷத்துக்காகப் பார்த்தவள், அதிசயமாக அவனும் ஒன்றும் சொல்லவில்லை என்றதும் அதைத் தன் அன்றாட வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.
முதலில் வேளைக்கு எழ வேண்டுமே என்று சோம்பல் பட்ட நித்திலனும் காலையிலும் தன் பிரியப்பட்டவர்களை, தன் மேல் பிரியம் கொண்டவர்களைக் காணக் கிடைக்கும் மகிழ்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பி வருபவன்,
“அம்மா! மயூக்கு இந்த முடி வெளில வந்திட்டு பாருங்கோ… மகிக்கு உச்சி கொஞ்சம் சொத்தி மாதிரிக் கிடக்கு. கழட்டிப் போட்டுத் திரும்ப இழுங்கோ…” என்று தாய்க்குக் கரெக்ஷன் சொல்லிக் கொடுப்பான்.
இந்த இனிய இரைச்சல்களை எல்லாம் கேட்டுக் கொண்டே உதடுகளில் உறைந்த புன்னகையோடு ஒவ்வொரு காலைவேளைகளையும் ரம்மியாக நகர்த்திக் கொண்டிருப்பான் ஆதித்யன்.
இதெல்லாம் இல்லாமல் என் வாழ்வில் உயிர்ப்பிருக்காது இல்லை என்ற ஒரு புள்ளியில்தான் சாதனாவிடம் பேசவே முடிவெடுத்தான்.

