MPK 25
தனிமையில் யோசிக்கவேண்டும் என்று வந்தவள் வைத்தியசாலையில் வைத்து பரமேஸ்வரி கதைத்ததையே திரும்பத் திரும்ப மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவருக்கும் எல்லாம் பார்த்து முடித்த பின் ஆட்டோக்காரருக்கு அழைத்துவிட்டு அவர் வர பத்து பதினைந்து நிமிடம் ஆகும் என்றவும் இருவரும் காத்திருந்தார்கள்.
அந்த நேரத்தை வீணாக்க விரும்பாத பரமேஸ்வரி அவளிடம் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.
“இவ்வளவு நாள் இருந்திட்டு இப்ப கேக்குறன் எண்டு குறை நினைக்காதயம்மா, நானும் வாழ்க்கையில பக்குவப்பட்ட பிள்ளை, நீயா யோசிச்சு ஒரு நல்ல முடிவுக்கு வருவாய் எண்டுதான் இவ்வளவுநாளும் பேசாம இருந்தனான். ஆனா நீ இங்க இருந்து போற அளவுக்கு யோசிச்சு இருக்கிறியாம். உண்மையோ?”
அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்று அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் பதில் சொல்ல ஏதோ ஒன்று தடுத்தது.
அன்று போல் இன்றும் அவர்கள் கேட்டுத் தான் ஒன்றை மறுப்பதே பெரிய இழுக்காகத்தான் தோன்றியது அவளுக்கு. என்னவோ அவள் தகுதியில் பெரியவள் மாதிரியும் அவர்கள் சிறியவர்கள் மாதிரியும் தான் அலட்டிக் கொள்வதாக காட்டி விடுகிறதோ இந்த சூழ்நிலை என்று மிகவும் சங்கோஜமாக இருந்தது.
“வாயைத் திறந்து கத பிள்ளை. நீ கதைச்சா தானே உனக்கு என்ன பிரச்சனை எண்டு எனக்குத் தெரியும். நீ அண்டைக்கு சொன்ன மாதிரி மற்ற ஆம்பளையள் லிஸ்டிலதான் என்ர பிள்ளையையும் நினைக்கிறியோ? இல்லாட்டி தேவைக்கெண்டு உன்ன எங்களோட இழுக்கப் பார்த்திட்டு நித்திலனைக் கை விட்டுடுவம் எண்டு நினைக்கிறியோ? அவ்வளவு கேடுகெட்ட மனிசராவோ நாங்க உன்ர மனசுல பதிஞ்சிருக்கிறம்?” என்றவரின் நலிந்த குரலைக் கேட்டவளுக்குத் தாங்கவே இல்லை.
“என்னம்மா கதைக்கிறீங்க நீங்க? நான் எப்பிடி உங்களை அப்பிடி நினைப்பன்? இப்ப வரைக்கும் நீங்க இதை என்னட்ட கேக்குறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு எண்ட நினைப்புதான் எனக்கு இருக்கே தவிர, உங்களைக் குறையா நினைக்கவே இல்லை.
அதிலயும் நித்திலனை நீங்கள் அப்பிடிச் செய்வீங்கள் எண்டெல்லாம் ஒரு செக்கனில கூட நான் நினைக்கவே இல்லை. இந்தக் கதை எல்லாம் வரைக்கு முதலே உங்களால நித்திலன் கொஞ்சம் கொஞ்சமா மாறி வாறதைப் பார்த்திட்டு, ஒருவேளை இந்த இடத்தை விட்டுப் போயே ஆகோணும் எண்டுற நிலைமை வந்தா பிள்ளையை விட்டுட்டுத் தனியா நான் மட்டும் துலைஞ்சு போயிடோணும் எண்டே நினைச்சிருக்கிறன் நான். என்ர பிள்ளை என்னோட இருக்கிறதை விட, நல்ல மனுஷருக்கு மத்தில நல்ல பிள்ளையா வளரட்டும் எண்ட எண்ணம்தான் அதுக்குக் காரணம்.
இதுவரைக்கும் என்ர அம்மா, சகோதரங்களிட்ட கூட அப்பிடி விட்டுட்டுப் போக நினைச்சதில்லை. அந்தளவில உங்கள் நாலு பேரிலையும் நம்பிக்கை வச்சிருக்கிறன், என்ர பிள்ளையை உங்களில ஒராளா பார்த்து வளர்ப்பீங்கள் எண்டு! இனி இப்பிடி கதைக்காதேங்கோ அம்மா.”
“இவ்வளவு நம்பிக்கை இருக்கிறவள், ஏன் பிள்ளை ஒண்டுக்கும் ஒத்து வாராய் இல்லை?”
“இது… இந்த நம்பிக்கை வேற அம்மா. அது உங்களில வந்தது. ஆனா கல்யாணம்… அது வேறயல்லோ? அதுக்கு நம்பிக்கை மட்டும் காணாதே! அது எப்பவும் சரிப்பட்டு வராதம்மா.” என்று தடுமாறிப் பேசியவள் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டார் பரமேஸ்வரி.
“என்னட்ட கதைக்கிறதுக்கு ஏனம்மா இவ்வளவு தயங்குறீங்கள்? இது எல்லாத்தையும் கடந்துதான் நான் இந்த வயசுல நிக்கிறேன். இங்க நடக்கிற கல்யாணம் எல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கை அடிப்படையில நடந்துதான் பிறகு பிறகுதான் கணவன் மனைவிக்குள்ள பந்தம் இறுகிறது.
காதல் கல்யாணம் எண்டா அங்க அந்தக் கல்யாணம் நிலைக்கும் என்றதுக்கு நம்பிக்கையே அந்தக் காதலாத்தான் இருக்கும். இதே பேசி செய்யுற கல்யாணம் (அரேஞ்ச் மேரேஜ்) எண்டா, குறிப்பு (ஜாதகம்) பொருந்தினாலே நல்லா வாழ்வம் எண்ட நம்பிக்கை இருக்கும்.
அதே மாதிரி நீ மூண்டு பிள்ளையளயும் உனக்கான பிடிப்பாவும் நம்பிக்கையாவும் வச்சு இதுக்கு சம்மதியேன். பிறகு நடக்கிறது நடக்கட்டும். என்ர பிள்ளையும் ஒண்டும் பிடிக்காத பொம்பிளையிட்ட அத்துமீறுற ஆள் இல்லை.”
“அம்மா பிளீஸ் திரும்பத் திரும்ப இப்பிடிக் கதைக்காதேங்கோ. நான் அப்பிடியெல்லாம் அவரை நினைக்கவே இல்லை. எனக்கு இதைக் கதைக்கவே ஒருமாதிரியாக் கிடக்கு. ஆனா கதைக்காம உங்களுக்கும் விளங்காது. அதால என்னைப் பிழையா எடுக்காதைங்கோ.
அவருக்கு எதிர்பார்ப்பு இருந்தா அதை பிழை எண்டு சொல்ல ஏலாதுதானே அம்மா! ஒருவேளைக்கு நீங்க சொல்லுற அடிப்படையில இதுக்கு ஓம் எண்டுட்டு என்னால கடைசி மட்டும் மனம் மாறி வரேலாம கிடந்தா அது அவருக்குச் செய்யிற அநியாயம் எல்லோ? அந்தப் பாவத்தைச் செய்ய என்னால ஏலாது.”
“சரியம்மா. நீ சொல்லுற மாதிரி நீ இதுக்குச் சரிப்பட்டு வரமாட்டாய் எண்டுட்டு அவனுக்கு எல்லாத்துக்கும் பொருந்தி வாற ஒரு பொம்பிளையா பார்த்துக் கட்டி வைக்கிறம் எண்டே வையேன். அப்பிடி வந்த பிள்ளை அவனை மட்டுமே காணும் எண்டு அவன்ர பிள்ளையளை வேண்டாம் எண்டு நினைச்சிட்டா? அது நல்ல நியாயமாவோ இருக்கும்? அப்பிடி மட்டும் நடந்தா, நானில்லாக் காலத்தில என்ர தங்கங்கள் ரெண்டும் என்ன நிலைமைல இருக்கும் எண்ட கவலையே என்னை வேளைக்கெண்டு கொண்டு போடும்.” என்றவரைப் பதறித் தடுத்தாள்.
“என்ன அம்மா இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள்? மான்குட்டியள் ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாதான் இருப்பினும். அதைப் பார்த்துக்கொண்டு நீங்களும் கனகாலம் இருப்பீங்கள்!”
“அது நடக்கத்தான உன்னைக் கேட்கிறன். இந்தக் கதையைத் தொடக்கி விட்டது நான். என்னை நம்பி ஓம் எண்டேன் அம்மா. எங்களை மட்டும் யோசிச்சு நான் இதைக் கேட்கேல. இதால எல்லாருக்கும் நல்லது நடக்கும் எண்டு நம்பித்தான் கேட்கிறேன். நான் உன்னைக் கட்டாயப்படுத்திற மாதிரித்தான் கிடக்கும். ஆனாலும் பரவாயில்லை, நல்லதைக் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கிறதுல பிழை இல்லைத்தானே!”
அவரால் முடிந்த வரைக்கும் எடுத்துச் சொல்லி விட்டு எதிர்பார்ப்பாய் அவள் முகம் பார்க்க, அவளுக்கு அப்போதும் கூட என்ன சொல்ல என்று தெரியவில்லை.
“இன்னும் என்னம்மா? ஒருவேளை உங்கட வீட்டாக்களை நினைச்சு யோசிக்கிறியோ? நான் வேணுமெண்டா அவையிட்ட கதைச்சுப் பார்க்கட்டோ?”
“ஹூம்ம்… நீங்க சொல்லத்தான் எனக்கும் ஒரு குடும்பம் இருக்கெண்ட நினைப்பே வருகுது. அவைக்கு அப்பிடிக் கூட நினைப்பிருக்குமோ தெரியேல. அங்க இருந்து வெளிக்கிட்டு எத்தினை மாசம் ஆகுது? மனோ டொக்டர், ராணி அம்மா கூட மாசத்தில ஒருக்கா எடுத்துக் கதைப்பினம். ஆனா இவை… இருக்கிறியோ செத்திட்டியோ எண்டு கூட ஒருதரம் எட்டிப் பார்க்கேல. அண்டைக்கு சனிக்கிழமை அம்மான்ர பிறந்தநாள் எண்டு விடிய முன்னம் வாழ்த்துச் சொல்லுவம் எண்டு அம்மாவுக்குக் கோல் பண்ணினா, ப்ளொக் பண்ணி வச்சுக் கிடக்கு.

