MPK 03
மறுநாள் விடியலில் வழக்கம் போல் வீசப்பட்டிருந்த வெறும் பைக்கட்டைப் பார்த்து, புன்னகை பூசிக் கொண்டது அவள் முகம்.
“கள்ளன், எப்ப எழும்பி சாப்பிடுறான் எண்டு தெரியுதில்லை. ஒருநேரம் பசி தாங்கமாட்டார், இதில வீம்பு சேருக்கு.” என்று உறங்கும் அவனிடம் செல்லம் கொஞ்சினாள். உறக்கத்தில் மட்டும் தான் இந்த செல்லம் எல்லாம். அவன் விழித்து விட்டால் இவளுள் இருக்கும் கறார் வோர்டனும் விழித்து விடுவார்.
ஆசையாக அவன் தலைமுடியைக் கோதி கன்னத்தில் முத்தம் வைத்தவள், அவன் உடலை ஆராய்ந்தாள். தழும்புகள் முழுதாக குறையவில்லை. ஆனால் வீக்கம் குறைந்திருந்தது.
பெருமூச்சோடே அதைத் தடவிக் கொடுத்தவளுக்கு அதன் பின் தான் தாயின் நினைவு வந்தது. மகனின் வலியை உணர்த்திய சிறு முனகலில் தாயின் பெரும் ஒப்பாரியை மறந்தே போயிருந்தாள்.
அடித்துப் பிடித்து எழுந்தவள், “அம்மா! அம்மா!” என்று கத்திக் கொண்டே வீடு முழுவதும் தேடி, அவரைக் காணவில்லை என்றதும் வியர்த்துப் போனவள் வெளியே வர, பின் கோடியில் மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார்.
நிச்சயம் இவள் அழைத்தது கேட்டிருக்கும். கோபத்தில் தான் பதிலுக்குக் குரல் கொடுக்கவில்லை என்று புரிய,
“நான் பதறியடிச்சு கூப்பிடுறன், கேட்டும் கேட்காத மாதிரி இருக்கிறீங்கள் என்ன? ஒருக்கா ஓம் எண்டு சொன்னா என்னவாம்?”
என்றாள் எரிச்சல் மிக.
“நீ ஏன் பதறியடிச்சு என்னைத் தேடினீ? உன்ர பெடியன்ர கதையைக் கேட்டு வீட்டை விட்டுப் போயிருப்பன் எண்டோ? நான் ஏன் போகோணும்? இது என்ர மனுஷன் கட்டின வீடு. நான் இங்க தான் இருக்கோணும்.” என்று வேலையோடு வேலையாகப் பதில் சொன்னார்.
“இப்பிடி ஒரு உறுதியோட இருக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, இது உங்களுக்காத் தோணினதா? இல்லா…” என்று கேள்வியாக இழுத்தவளுக்குப் பதில் சொன்னது தமையனின் ஆட்டோ சத்தம்.
ஆக தான் நினைத்தது சரிதான். தாயின் பேச்சு, தமையனின் நச்சு நாவில் இருந்து வந்தவை தான். அவன் விடிகாலையில் விரைந்து வந்திருப்பது கூட, தாய் மேலான அக்கறையில் இல்லை. அமைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தூண்டி விடுவதற்காக என்றும் புரிந்தது.
எனவே அவன் என்ன பேசினாலும் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று தனக்குள் உறுதி பூண்டவள், அவனை எதிர்கொள்ளத் தயாராகவே நின்றாள்.
அதற்குள் சுதர்சன் வட்டிக்காரன் மாதிரி வாசலில் நின்று கத்த ஆரம்பித்திருந்தான். துரை ரோஷபட்டு அவள் வீட்டுக்குள் வராது போய் ஒன்றரை வருடங்கள் மேலாகிறது. தந்தையின் ஒருவருடத் திவசத்திற்குக் கூட வெளியில் பந்தலோடு தன் கடமையை முடித்துக் கொண்டு போயிருந்தான்.
அன்று சுதா சொல்லி சொல்லி அழுதிருந்தார், இவள் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று.
சாதனா அதற்கெல்லாம் கவலைப்படவே இல்லை. வாசல் மட்டும் ஏன் வருகிறான் என்ற எரிச்சல் தான் மேலோங்கும் அவனில்.
மகனின் குரலில் சுதா பதறி, கறந்தவரை போதும் என்று பால் பாத்திரத்தோடு ஓட, இவள் சாவதானமாக நடந்து வந்தாள்.
“என்ன தம்பி இஞ்ச வந்திருக்கிறாய்? ஓட்டம் ஒண்டும் இல்லையோ?” சுதா நிலைமையை சுமூகமாக்கப் பேச்சுக் கொடுத்தார். சாதனா தாயை நினைத்து மனதுக்குள் அசூயை கொண்டாள். பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவிக்கும் குணம். ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு நடிப்பு.
சுதர்சனின் மனைவி துளசி ஜெகஜால கில்லாடி. அவளின் பிடிக்குள் சுதர்சன் சென்று காலங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சுதா, சுதர்சன் விரோதியாய் பார்க்கும் சாதனாவைப் பற்றி அவனோடு புறம் பேசி, அவனுக்குத்தான் தன் முதன்மை ஆதரவு என்று காட்டி, அது போல் அவனும் தன்னை முதன்மையாய் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆனால் சுதர்சன் இன்றுவரை அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததே இல்லை.
தாயின் இத்தகைய செயல், சாதனாவுக்குக் கோபத்தைத் தரும் அதே நேரம் அவர் மேல் பரிதாபத்தையும் தோற்றுவிக்கும்.
தன் பிள்ளைகளைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளவென்று ஒன்றை செய்து விடுகிறார். அதனால் பிள்ளைகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறோம் என்று அறியாது போய் விடுகிறார்.
தாயின் கேள்வியை எல்லாம் ஒதுக்கிய சுதர்சன், “எங்க அவள்?” என்று ஆவேசமாகக் கேட்டவன், பின்னே வந்தவளைக் கண்டு விட்டு ஏகமாய் எகிறினான்.
“என்ன உன்ர பெடியன் அம்மாவை கைதடில சேர சொன்னவனாம்? என்னவோ இந்த வீட்டை அவன்ர அப்பன் உழைச்சுக் கட்டின மாதிரியும் அம்மா அதில வந்து உரிமையில்லாம இருக்கிற மாதிரியுமெல்லோ கிடக்கு உங்கட கதை. வீடு எங்கட அப்பா கட்டினதெண்ட நினைவு இருக்கட்டும் எல்லாருக்கும்.” என்றவன் தாயிடம் திரும்பி,
“எல்லாம் உங்களை சொல்லோணும், சீதனம் எண்டு அவசரப்பட்டு வீட்டை இவளுக்கு எழுதிக் குடுத்துப் போட்டு… இப்ப ஒழுங்கா பல்லுக் கூட முளைக்காத பெடியனுட்ட எல்லாம் சொல்லுக் கேளுங்கோ! இவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு சீதனம் ஒண்டு தான் குறச்சல்” என்று கத்தினான்.
“அண்ணா! நீங்க கதைக்கிறதா இருந்தா, அம்மா சொன்ன இப்பத்த கதையை மட்டும் கதையுங்கோ. என்ர வாழ்க்கைக் கதை எல்லாம் உங்களுக்குத் தேவை இல்லாதது. பிறகு வீட்டை ஆர் கட்டினதெண்டு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அதேமாதிரி வீட்டைக் கட்டின அதே அப்பாதான் தன்ர முழு சுயநினைவோட அதை என்ர பேருக்கு எழுதி வச்சவரெண்டதும் ஞாபகம் இருக்கு, நான் வாழ்ந்த வாழ்க்கை லட்சணம் தெரிஞ்சும் சாகிற வரைக்கும் திருப்பி வீட்டை மாத்தி எழுதித் தா எண்டு அவர் கேட்காததும் எனக்கு நல்லா ஞாபகத்தில இருக்கு. உங்களுக்கு இல்லாட்டி நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்கோ.” என்றாள் அமைதியான அழுத்தமான குரலில்.

