MPK 30
“எல்லாம் உன்னால தான்டி. ஒரு வீட்டுப் பொம்பிளைப் பிள்ளை வழி தப்பிப் போச்சுதெண்டா அந்தக் குடும்பமே சீரழிஞ்சு போடுமெண்டு சும்மாவே சொல்லி வச்சிருக்கினம்? எப்பிடி இருந்த குடும்பமடி எங்கட? நீ எண்டைக்கு எங்கட சொல்லுக் கேட்காம சாதி மாறி ஒரு தறுதலையைக் காதலிச்சியோ அண்டைக்கு சிதைய வெளிக்கிட்டது குடும்பம். இண்டைக்கு மொத்தமா முடிஞ்சுதே!”
வேறு ஒன்றுமில்லை. இவள் அறியா வயதில் காதலித்த போது அவளை விடவும் வயதில் சிறியவனாக இருந்து அவளின் காதலனின் சா*தியை காரணம் சொல்லி அவளை அடித்த அவளின் தம்பிக்காரன் இன்று காலை வேறு சா*திப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாக வெறும் தகவலை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தானம்.
மேலும் இவர்கள் வந்து பிரச்சனை செய்யக்கூடும் என்று முன்னெச்சரிக்கையாக பொலிஸ் புகார் கொடுத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறான்.
விஷயமறிந்து அவனை வெட்டுகிறேன் குத்துகிறேன் என்று இங்கே வந்து குதித்துக் கொண்டிருந்த தமையனை அவன் மனைவி இப்போதுதான் தலையில் தட்டிக் கூட்டிச் சென்றாளாம்.
ஒப்பாரிக்கும் இவள் மேல் பொழிந்த சாப மழைக்கும் இடையில் சுதாதான் விஷயத்தைப் பகிர்ந்திருந்தார்.
ஹாலில் இன்னுமே தலையில் அடித்துக் கதறும் தாயிடம் இருந்து பிரிந்து அறைக்குள் வந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் சாதனா.
ஒரு வகையில் தாய் சொல்வதும் சரிதானே! இவளின் காதல் விவகாரம் தெரிவதற்கு முன் நல்ல ஒற்றுமையாக, பாசமாக இருந்த குடும்பம்தானே அவர்களது?
தன் காதல் தெரிய வந்த பிற்பாடுதானே தன்னை எல்லோரும் அடித்துத் தூற்றி அதன் பிறகு விரைவில் தன் திருமணம் முடியவேண்டும் என்று வீட்டை தனக்கு சீதனம் கொடுப்பதாக பேசி வினோதனுக்குக் கட்டி வைத்து, உள்ளூர் மாப்பிள்ளைக்கு வீடு கொடுத்த விஷயம் பிடிக்காமல் தமையன் தாய், தந்தையோடு முரண்பட்டு சண்டைகளும் சச்சரவுகளும் வந்து தம்பிக்காரன் இங்கே நிம்மதியில்லை. தனியாகப் போய் வேலை செய்கிறேன் என்று கொழும்புக்குப் போய் இப்போது தாங்கள் யாருமின்றியே அங்கேயே திருமணமும் செய்து கொண்டிருக்கிறான்.’
இடையில் இவள் வாழ்க்கை அந்தரத்தில் நிற்பதைப் பார்த்து நிம்மதியின்றி இறந்து போன தந்தையை எல்லாம் நினைக்க நினைக்க பல்லாயிரம் டன் நிறையுள்ள கென்டய்னர் அடியில் சிக்கிக் கொண்டதுபோல் மூச்சு விடவே முடியவில்லை அவளால்.
என்னால் ஒரு குடும்பத்தை அழிக்கத்தான் முடியுமா? எனில் என்னை நம்பித் தங்கள் கூட்டுக்குள் இணைக்க நிற்கும் ஆதித்யன் மற்றும் பரமேஸ்வரிக்கும் கூட நான் இதைத்தான் ஆற்றப் போகிறேனா என்றெல்லாம் அவள் சிந்தனை குறுக்கு மறுக்காக ஓடியது.
சிரிப்பில் கூட நேர்மறையான எண்ணங்களைக் கடத்தும் ஆதித்யனின் நிழலில் இருந்த வரை இப்படியான எந்த சிந்தனைகளும் அவளுக்கு வரவேயில்லை.
இடம் மாறி பக்கத்தில் இருக்கும் மனிதர்களும் மாறி விட எல்லா எதிர்மறை சக்திகளும் ஒன்று சேர்ந்து அவளோடு போரிட்டு வெல்ல, ‘இந்த முடிவை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டும். இல்லாவிட்டால் முடிந்தளவு எடுத்துச் சொல்லி நிறுத்தி விட வேண்டும்’ என்று முடிவே எடுத்து விட்டிருந்தாள்.
அந்நேரம் சரியாக அவள் தொலைபேசி சிணுங்கியது. ஆதித்யன்தான் எடுத்திருந்தான்.
விருப்பமில்லா முடிவை எடுத்து விட்டதில் அவளையே அறியாமல் கனத்துவிட்ட மனதோடு அழைப்பை ஏற்றுக் கொண்டவள் காதில் அக்கறையாக வெடித்தான் ஆதித்யன்.
“சாவச்சேரிக்குப் போய் சேர்ந்துட்டிங்களா சாதனா?”
“ம்ம்”
“ஓ… அதான் எடுத்துச் சொன்னீங்கள் என்ன? சரி கோல்தான் எடுக்காட்டியும் ஒரு மெசேஜ் போடுறதுக்கென்ன? அம்மாவுக்காவது எடுத்துச் சொன்னீங்களோ? இல்லா அதுவும் இல்லையோ?” என்று அவன் கடிய, இங்கே இவள் கன்னம் கண்ணீரில் குளித்தது.
என் இருப்பை, என் பாதுகாப்பை அறிந்துகொள்ள அக்கறைப்படும் உறவுகளும் எனக்கு இருக்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டுப் போனவள், மறுகணமே அப்படிப்பட்டவர்களுக்கு நிம்மதியைத் தர நான் அவர்களுக்கு உறவாக இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டாள்.
ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இரு உணர்வுகளும் இரண்டு கண்களிலும் கண்ணீராய் கரைந்து வெளியே வர அவனுக்குப் பதில் சொல்ல முடியாது மௌனத்தில் நொடிகளைக் கரைத்தாள் அவள்.
தான் கேள்வி கேட்டும் எதிர்முனையில் பதிலேதும் இல்லையென்றதும் அங்கே ஏதோ சரியில்லை என்பதை சட்டென்று புரிந்து கொண்ட ஆதித்யன், “சாதனா?” என்றான் கேள்வியாக.
“ம்ம்…” மறுபடியும் அதே ம்ம்… ஆனால் இம்முறை அதில் அழுகையின் சாயல் அப்பட்டமாய் தெரிய சுதாரித்துக் கொண்டான்.
“பிரச்சனை எதுவுமெண்டா மனோ சேர் வீட்டயல்லா போக சொன்னான்? இன்னும் என்ன செய்றீங்கள் அங்க?”
என்ன பிரச்சினை என்றெல்லாம் கேட்டு நேரத்தைக் கடத்தவில்லை அவன். அந்த விவரத்தை விட அவள் முக்கியம் என்று அடுத்த நடவடிக்கைக்குத் தாவி விட்டிருந்தான்.
அது அவளுக்கும் புரிய மேலும்தான் மனம் பாரமானது. அதை ஆற்றும் வழியாக அவனிடம் மனம் திறந்தாள்.
“எனக்குப் பிரச்சனை ஒண்டும் இல்லை டொக்டர். தம்பிதான் வீட்டுக்குச் சொல்லாம கல்யாணம் செய்திட்டானாம் இண்டைக்கு. அதுக்கு அம்மா…” என்று தொடங்கி தாய் தன்னைப் பேசியதெல்லாம் சொல்லி முடித்தவள்,
“அவா சொல்லுறதும் சரிதான். என்னிலதான் எல்லாம் ஆரம்பிச்சு இண்டைக்கு இந்த இடத்தில வந்து நிக்குது. என்னால ஆருக்குமே நல்லது நடக்காது. அதான் நீங்களும் ஒண்டுக்கு ரெண்டு தரம் யோசிச்சு நான் உங்கட வீட்டுக்கு வேணுமோ எண்டு முடிவெடுங்கோ! யோசிச்சு வேண்டாம் எண்டு சொல்லுங்கோ.” என்று பிதற்றிட, எதிர்முனையில் சில நொடிகள் மௌனம்.
“உண்மையா இப்ப யோசிச்சா வேண்டாம் எண்டுதான் கிடக்கு சாதனா!”
மௌனம் உடைத்து அவன் உதிர்த்த வார்த்தைகள் அவள் வேண்டி நின்றவை என்றாலும் வலிக்கவே செய்தது.
“எடுத்த முடிவில உறுதியா நிற்கத் தெரியாத ஆளை எனக்கு வைஃப் ஆக்குறன் எண்டு நினைக்கச் சரியான கஷ்டமாத்தான் கிடக்கு. ஒண்டு செய்யுங்கோ சாதனா, உங்கட எண்ணத்தைக் கட்டிக்கொண்டு நீங்க அங்கேயே இருங்கோ. நீங்க வேண்டாம் இஞ்ச. அதுக்காக நிலனைத் தருவன் எண்டெல்லாம் கனவு காணாதயுங்கோ. பிள்ளை என்னோடதான் இருப்பார்.”
“நானும் பிள்ளையை உங்களிட்டக் கேட்கிற ஐடியாவில இல்லை. அவர் நல்லா வரோணும். அதுக்கு அவர் உங்களோடதான் இருக்கோணும்.”
‘உங்கள் எல்லாரோடயும் இருந்தா நானும் நிம்மதியா இருப்பன். ஆனா…’ என்று வருத்தத்தோடு அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் ஹோர்ன் ஒலித்தது. தன் கவலையில் இருந்தவள் கவனத்தில் அந்த சத்தம் விழவே இல்லை.
“வாசல்ல ஏதேன் வாகனம் வந்து நிக்குதோ?”
அவன் கேட்கவும்தான் கலைந்து எட்டிப் பார்த்தாள்.
“ஓம்… கார் ஒண்டு வந்து நிக்குது.”
“நான் தான் புக் பண்ணினான். அங்க இன்னும் தேவையான எதுவும் டொக்யூமண்ட்ஸ் இருந்தா எடுத்துக் கொண்டு வந்து சேருங்கோ.” என்றவும்தான் புரிந்து கொண்டவள், அதுவரை இருந்த கவலை நீங்கிக் கண்ணீரோடு புன்னகைத்தாள்.
“என்னை வேண்டாம் எண்டீங்கள்?” குரல் சந்தோஷத்தில் கலங்கக் கேட்டாள்.
“மூச்சுக் காட்டக் கூடாது. இஞ்ச வந்து சேரும் மட்டும் கோளாறா யோசிக்கிற மூளையைக் கொஞ்சம் நித்திரையாக்கி வையுங்கோ.” குரலே முறைத்தது.
“ஹ்ம்ம்… அஞ்சு நிமிஷம் நிப்பரோ, இஞ்ச சொல்லிட்டு வர?”
“நீங்க காரில ஏறும் மட்டும் எத்தினை நாள் ஆனாலும் அங்க இருந்து நகரமாட்டார் அவர். அதுக்கு ஏற்ற மாதிரி பேமெண்ட் கதைச்சாச்சு.”
அவன் தனக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இன்னுமே அக மகிழ்ந்து போனவள்,
“இல்ல, கொஞ்ச நேரம் காணும்… நீங்க போய் வேலையைப் பாருங்கோ… கட்டாயம் நான் வருவன்.”
“வந்துதான் ஆகோணும். ஏறிட்டு ஒருக்கா இன்ஃபோர்ம் பண்ணுங்கோ.” என்றவன் துண்டித்து விட்டான்.
ஆதித்யன் சொன்னது போல் எடுத்துக் கொள்ள எந்த முக்கியமான கோப்புகளும் அங்கே இல்லை. அவள் விட்டு வைத்திருக்கவில்லை. தான் இங்கு இல்லையென்றால் தமையன் வேண்டுமென்றே தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அழிக்கக் கூடும் என்று முதல் முறை இங்கிருந்து செல்லும் போதே எல்லாவற்றையும் எடுத்து சென்றிருந்தாள். அதனால் அதற்கு மேல் அங்கே தாமதிக்க வேண்டிய தேவை அவளுக்கு இருக்கவில்லை.
அவசர அவசரமாக வெளியே வந்தவள், தாய் இன்னுமே புலம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரை நெருங்க, அதற்குள் வெளியே ஏதோ கலவரம் போல…
டக்ஸி ட்ரைவரின் கொலரைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான் அவள் தமையன்,
“ஆரடா நீ? இஞ்ச என்னத்துக்கு வந்திருக்கிறாய்? என்ர தம்பிக்காரன் அனுப்பினவனோ, இஞ்ச என்ன நடக்குதெண்டு வேடிக்கை பார்க்க!”
யாரோ ஃபைவர் நெட்வேர்க்கை விட வேகமாக செயல்பட்டு உன் தாயின் வீட்டு வாசலில் கார் நிற்கிறது என்று சொல்ல, இந்த சண்டியரும் சண்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்து விட்டார்.

