MPK 32
அன்றிரவு குடும்பம் மொத்தமும் வீடியோ கோலில் கனெக்டாகியிருந்தது.
இரண்டு தினங்களுக்கு முன் பரமேஸ்வரியின் தாயின் சகோதரரின் மகள்… அதாவது பரமேஸ்வரியின் மச்சாள் இவருக்கு அழைத்து தனது எண்பதாவது பிறந்தநாளுக்கு வருமாறு பரமேஸ்வரிக்கு அழைப்பு விடுத்திருந்தவர் குடும்பத்தோடு வந்து ஒருநாள் தங்கிவிட்டு செல்லும்படி அன்பாணை பிறப்பித்திருந்தார்.
ஆதித்யன் சாதனா திருமணத்துக்கு எந்த உறவுகளையும் பரமேஸ்வரி மற்றும் ஆதித்யன் அழைத்திருக்கவில்லை.
வருபவர்கள் யாரேனும் பிள்ளைகளுக்கு முன்னால் எதையும் முரண்பாடாகக் கதைத்து அவர்கள் மனதைக் குழப்பி விட்டாலும் என்று யாருக்கும் சொல்லாமல் கோவிலில் திருமணம் செய்து கோவிலிலேயே அன்னதானத்துக்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.
திருமணத்தைப் பதிவு செய்யும் போதும் ஆதித்யனின் நெருங்கிய நண்பர்கள் நால்வரை மட்டுமே சாட்சிக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.
விபரம் அறிந்து அழைத்துக் கேட்டவர்களுக்கு எல்லாம், ‘ஆற அமர செய்வதற்கு இப்போது ஆதித்யனுக்கு நேரமில்லை. பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன் திருமணம் செய்ய வேண்டும் என்று வீட்டோடு முடித்துக் கொண்டோம். பின்னர் ஒருநாள் விருந்து வைப்போம்.’ என்று சொல்லி சமாளித்திருந்தனர்.
அடுத்த விவாதமாக வேலைக்கு என்று வந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறானாம், ஏன் என்ற கேள்வி வந்தது.
ஏதாவது தப்பு நடந்திருக்குமோ என்ற அலசலில் வந்த இந்தக் கேள்வியில் பரமேஸ்வரிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
திருமணம் முடிந்த பின்னும் கூட கணவனைக் கவர என்று சிறு முயற்சி செய்யாது குழந்தைகள் பின்னே அலையும் மருமகளைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு ஒருவரைப் பார்க்காமலே அவர்கள் மேல் பழி சொல்ல எப்படி இவர்களால் முடிகிறது என்று மனம் காந்தியது.
ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“வேலைக்கெண்டு கூட்டியந்த எண்டுறதெல்லாம் பொய்க் கதை. மனோ டொக்டர் மூலமா முதலே குறிப்பு வந்து பொருந்தி ரெண்டு பேருக்கும் ஓமெண்டாப் போல, பிள்ளையள் மூண்டு பேருக்கும் எல்லாம் பழகட்டும் எண்டுதான் வேலையெண்டு பொய் சொல்லி ரெண்டு பேரையும் பக்கத்தில கொண்டு வந்து வச்சிருந்தனாங்கள்.” என்று ஆதித்யன் யார் கேட்டாலும் சொல்லச் சொல்லி சொன்னதை அப்படியே ஒப்பித்திருந்தார்.
சாதனா அக்கம் பக்கத்திலும் ஆதித்யன் சொன்ன இதையேதான் சொல்லி வைத்துள்ளாள்.
பிறகு ஏன் உன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்று கேட்டதற்கு, முதலில் தங்கள் திருமணத்துக்கு சரியென்றவர்கள் பின் தம்பி சொல்லாமல் திருமணம் செய்ததைத் தான் ஆதரித்ததால் என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்று சொல்லி விட்டிருந்தாள்.
இந்தக் காரணம் ஏற்புடையதாய் இருக்கவே பரமேஸ்வரி தங்கள் பக்கம் இந்தக் கேள்வியைக் கேட்டவர்களுக்கும் இதே பதிலை சொல்லி வைத்தார்.
இப்படிக் கதை புனைந்து ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை கறையில்லாததாக விளக்கி வைப்பதில் ஆதித்யனுக்கு விருப்பமே இல்லை.
என் வாழ்க்கையை யாருக்கும் கேடின்றி வாழ இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்றிருக்கும்.
ஆனால் பேசுபவர்கள் அவனையன்றி சாதனாவைய டார்கெட் செய்து சொல்லம்புகளை வீசுவர் என்றுதான் இவ்வளவு மெனக்கெடலும்.
அதற்குப் பலன் இருந்தது போல் காலப் போக்கில் வேறு எந்த சலசலப்புகளும் வராமல் போகவே, இவர்கள் சொன்னதே உண்மை என்று உற்றமும் சுற்றமும் ஏற்றுக் கொண்டு இவர்களை விட்டு விட்டு அடுத்தடுத்த வீட்டில் என்ன கதை பொறுக்கலாம் என்று பிஸியாகி விட்டனர்.
இந்த நேரத்தில்தான் பரமேஸ்வரியின் உறவினர் பக்கமிருந்து இப்படி ஒரு அழைப்பு.
மாட்டேன் என்று சொல்ல முடியாது. எண்பது வயதென்றால் இன்னும் எத்தனை வருடங்கள் வாழ்க்கை மிச்சம் இருக்கிறதோ என்ற நிதர்சனம், கட்டாயம் போயே ஆகவேண்டும் என்று பரமேஸ்வரியை உந்தியது.
அதை விட இந்த மச்சாள் மற்றவர்களைப் போல கதை பிடுங்கி இல்லை. திருமண விஷயத்தை சொன்னபோது கூட,
“நீ ஏன் இப்பிடிச் செய்தனி எண்டெல்லாம் நான் கேட்க மாட்டேன். பெட்டை நல்ல பெட்டையோ? ஆதியின்ர பிள்ளையளுக்கு பிரிவு காட்டாதுதானே?” என்றுதான் கேட்டார்.
இல்லையென்று இவர் சொன்னதும் “அப்பிடியெண்டா சந்தோசம். நல்லா இருக்கட்டும் ஐஞ்சு பேரும்.” என்று வாழ்த்தியிருந்தார்.
அந்தக் குணத்துக்காகவே செல்ல வேண்டும் என்று ஆதித்யன் கொழும்பில் நிற்கும் போதே கேட்டிருந்தார் பரமேஸ்வரி.
நான் வந்து அரைநாள் லீவு போட்டு அழைத்து செல்கிறேன் என்ற ஆதித்யன் கொழும்பில் இருந்து வரும்போது தொண்டை திறக்கவே இயலாமல் வந்திருந்தான்.
ஆதித்யனுக்கு இப்படி என்றதும் பரமேஸ்வரி பயணமே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்க, ஆதித்யன் டிரைவர் ஏற்பாடு செய்து தருவதாகவும் நாளை காலையில் கிளம்புங்கள் என்றும் சொல்லிவிட்டிருந்தான்.
அவன் வராவிட்டால் பிள்ளைகளை அனுப்பமாட்டான் என்றிருந்த பரமேஸ்வரியின் நினைப்பைப் பொய்யாக்கிப் பிள்ளைகளையும் சாதனாவையும் கூடவே போக சொல்லி சொல்ல, எல்லோரும் ஒன்று போல் அவனைத் தனியே விட்டு செல்ல மாட்டோம் என்று மறுத்து விட்டனர்.
அவனுக்கு அவர்கள் அன்பில் உருகியது என்றாலும் அடிக்கடி மாடியேறி வந்து எட்டி எட்டிப் பார்த்து செல்லும் நித்திலனை மனதில் வைத்து,
“அப்பா தனியா இருப்பேன், ஆனா அப்பம்மா பாவமெல்லோ? அவாவைத் தனியா விடப் போறீங்களோ?” என்று கிளம்ப சொல்லி விட்டான் கட் அண்ட் ரைட்டாக.
அப்போதும் சாதனா தயங்க, “அப்ப நான் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு போறேன். சாதனா உங்களோட நிக்கட்டும். எனக்கும் உங்களைத் தனிய விட்டுட்டுப் போக விருப்பமில்லை.” என்ற தாயை வீடியோ கோலிலே முறைத்திருந்தான்.
“ஓவராத்தான் போறீங்கள் எல்லாரும். நான் என்ன சின்னக் குழந்தையே? அவா நிண்டு மட்டும் எனக்கு நிலாக் காட்டி சோறே தீத்தப் (ஊட்ட) போறா?” என்றவன் பேச்சைக் கேட்ட பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் கொல்லென சிரித்தனர்.
அவர்கள் ஒருமித்த சிரிப்பில் கரைந்த ஆதித்யன் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பதையே மறந்தவனாக அவர்களிடம் செல்லம் இழைய ஆரம்பித்து விட்டான்.
“என்ன சிரிப்பு மூண்டு பேருக்கும்? வந்தனெண்டா கிச்சுக் கிச்சு மூட்டி சிரிப்பை நிப்பாட்ட விடாம செய்து போடுவேன்.” என்று செல்லமாய் மிரட்ட,
மயூ, “இல்லையப்பா, நீங்கள் அம்மா உங்களுக்கு நிலாக் காட்டி சோறு தீத்துவா எண்டு சொன்னீங்கள். அதான் நினைச்சுச் சிரிக்கிறம்.” என்று இன்னும் சிரிக்க, மற்ற இரண்டு குட்டிகளின் சிரிப்பும் பலத்தது. பரமேஸ்வரிக்கும் பிள்ளைகளின் விடாத சிரிப்பில் சிரிப்பு வந்துவிட்டது.
ஆதித்யன் அப்போதுதான் தான் பேசியதை உணர்ந்து சாதனாவைத் திரும்பிப் பார்க்க, அவள் சங்கோஜத்தில் சிவந்து விட்ட முகத்தோடு யாரை முதலில் அடக்குவது பெரியவரையா, சிறியவர்களையா என்று தெரியாமல் காரணகர்த்தாவான இவனை முறைத்து வைத்தாள்.
இவனுக்கு அவளின் முறைப்பில்தான் சிரிப்பு வரும்போல் இருந்தது. பின் இப்படி எல்லோரும் சிரிப்பதைப் பார்த்தால் குடும்பத்தையே மன நல காப்பகத்துக்கு அனுப்பி விட்டாலும் என்று நினைத்தானோ என்னவோ தன்னை அடக்கிக் கொண்டவன்…
“ஏன், அம்மா அப்பாக்குத் தீத்தினா என்ன? அதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்று சீரியஸாக கேட்க, பிள்ளைகள் சிரிப்பை நிறுத்தி தந்தையை அவதானித்தார்கள்.
‘இந்தா சரி… பிரசங்கம் தொடங்கப் போறார். ஏன்டா சிரிச்சம் எண்டு பிள்ளையள் ஃபீல் பண்ணப் போகுதுகள்.’
சாதனாவின் மனச்சாட்சி அவனை வாரியது. அதன் தாக்கமாய் அவள் உதட்டில் உதித்த குறும்புப் புன்னகை தவறாமல் ஆதித்யன் கண்ணில் பட்டுவிட, ஒற்றை விரலை நீட்டி கவனம் காட்டினான், உன் மனதைப் படித்து விட்டேன் என்பதுபோல்.
அதைக் கண்டு அவள் புன்னகை இன்னுமே விரிந்துபோனது. அதில் அவன் லயித்து நிற்கும் முன் குறுக்காக வந்தன பிள்ளைகளின் கேள்விகள்.
மகி, “நீங்க பெருசுதானேப்பா? அப்ப உங்களுக்கு அம்மா தீத்தக் கூடாதெல்லோ? நாங்கள் நாங்கள் சாப்பிடுறதுதானே நல்ல பழக்கம்?”
“அதுதான் நல்ல பழக்கம். ஆனா அப்பாக்குக் கையில காயம் ஏதேன் வந்தா அப்பா எப்பிடி சாப்பிடுவேன்?”
“எந்தக் கையில காயம் எண்டு சொல்லேல அப்பா. இடக் கையில காயம் எண்டா வலக் கையால சாப்பிடலாம்தானே?” நம் ஆராய்ச்சி மணி மயூரகி எப்போதும் போல் குறுக்கு விசாரணை செய்ய, சாதனா நமட்டு சிரிப்போடு தன்னைப் பார்ப்பதை அவளைப் பார்க்காமலே உணர முடிந்தது ஆதித்யனால்.
அதற்கெல்லாம் சேர்த்து மகளை செல்லமாக முறைத்தவன்,
“சாப்பிடுற கையிலதான் சொல்லுறேன். காயம் வந்தா… ஸ்பூன் வச்சு சாப்பிடக் கூட ஏலாம பெரிய காயம் வந்தா, காயம் மாறும் மட்டும் சாப்பிடாமலே அப்பாவால இருக்கேலுமோ?”
நிலன், “இல்லை, சாப்பிடாட்டி இன்னும் வீக் ஆயிடுவம்.”
“ஆஆ… அப்ப ஆரேன்தான அப்பாவுக்கு சாப்பாடு தீத்தி விடோணும்? அம்மா எண்டில்லை, நீங்களும் ஆரெண்டாலும் செய்யலாம். எனக்கெண்டில்லை, எங்களுக்குள்ள ஆருக்கு உதவி தேவையெண்டாலும் அந்த இடத்தில இருக்கிறவை நான் செய்யிறதோ, நீ செய்யிறதோ எண்டு யோசிக்காம, நான் செய்யிறேன் எண்டு செய்யோணும். விளங்குதோ?”
“விளங்கிற்று…” மூவரும் ஒரே குரலில் உரைத்தார்கள்.
“அப்ப அப்பாக்கு காயம் வந்தா நான்தான் சாப்பாடு தீத்துவன்.” வேறு யார் நிலன்தான்.

