மாதொரு பாகம் கொண்டான் 33 – 2

“நீங்க என்ன, கதைக்கிற எல்லாத்துக்கும் ஒரு அகராதி எடுத்து வச்சுக் கதைக்கிறீங்கள்? சாதாரணமா வந்திட்டுது அது! ஒண்டையும் அர்த்தம் வச்சுக் கதைக்கேல நான்.”

“ஓம்… உங்களுக்கு ஒண்டுக்கும் அர்த்தம் வைக்கத் தெரியாதெண்டு எனக்கும் தெரியும் தானே!”

தொடர்ந்தும் அவன் இம்மாதிரியே பேச, அவளுக்குப் பொறுமை போய்விட்டது.

“இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்லுறீங்கள்? உங்களுக்குக் காய்ச்சல் எண்டவும் தனியா விட்டுட்டு போக மனசில்லாமத்தான் வீட்டை நிண்டனான். நீங்க நித்திரை கொள்ளப் போறன் எண்டவும் குழப்பவேண்டாம் எண்டு விட்டுட்டன். அதோட நீங்களும் டொக்டர் உங்களை விட என்னால என்னத்த உங்களைப் பார்க்கேலும் எண்டு நினைச்சிட்டன். அது என்னில பிழைதான். நான் ஒருக்கா எண்டாலும் வந்து பார்த்திருக்கோணும். சொறி… இனி இப்பிடிக் கதைக்காதேங்கோ பிளீஸ்…” என்றவளை உறுத்து விழித்தான் அவன்.

அவளுக்கு விளங்கவில்லை, அவன் அவளிடம் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் வருகிறான் என்று!

ஆனால் அவனுக்கு நன்றாக விளங்கியது, தன் எதிர்பார்ப்பு என்னவென்று தான் சொல்லாமல் அவளுக்குத் தெரிய வரப்போவதில்லை என்று! தெரியப்படுத்த முடிவெடுத்தான்.

“டொக்டர் எண்டா எல்லாத்தையும் தனியா சமாளிக்கலாம், துணைக்கு ஒருதரும் தேவை இல்லையெண்டா ஏன் நான் கல்யாணம் செய்தனான்? நான் சேர்க்கிற காசை அனுபவிக்க பிள்ளையள் வேணும் எண்டுதான் கல்யாணம் எண்டா அதுக்கு மயூ, மகி இருக்கினம்தானே எண்டு வைஷ்ணவி போனதோட எல்லாம் காணும் எண்டு இருந்திருப்பேனே! ஒஃப்கோர்ஸ் உங்களைக் கல்யாணம் செய்யேக்க பிள்ளையள், அம்மா எண்டு முன்னுக்கு நிண்ட விஷயங்கள் வேறயா இருந்தாலும் அப்பவே உங்களிட்ட சொன்னனான்தானே, நிலன்ர அம்மா எண்டுறதைத் தாண்டி சாதனாவாயும் நீங்க தனிப்பட்ட ரீதியா எனக்கு உரிமையா ஆகிறீங்க எண்டு! இந்த மூண்டு மாசமும் அதை ஞாபகம் வச்சு நீங்க நடந்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை. உங்களுக்கு இருக்கோ?” என்றவன் பின் தானே,

“இருக்காது. அதையும் மீறி இருக்குதெண்டு சொன்னீங்கள் எண்டா உங்கட மனசாட்சியே உங்களை அடிக்கும். எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள டைம் எடுக்கும்தான். அதுக்கெண்டு அதுக்குண்டான முயற்சியே எடுக்காம காலத்தில பழியைப் போட்டுட்டு இருந்தா சரியோ? அப்பிடி இருந்தா ஆயுள் முடிஞ்சாலும் எங்கட வாழ்க்கையைப் பற்றி ஒரு முடிவுக்கு வரேலாது. இல்லத் தெரியாமத்தான் கேட்கிறன், கல்யாணம் எண்டா என்னெண்டு தெரிஞ்சுதானே கல்யாணம் செய்தனீங்கள்?” என்றவனை அவள் அடிபட்ட பார்வை பார்க்க புரிந்து கொண்டவன்,

“எனக்கு வடிவா விளங்குது, இப்ப நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எண்டு! ஆனாப் பாருங்கோ, இந்தப் பார்வைக்கெல்லாம் பழியேற்கவோ இல்லா பாவம் பார்த்து சமாதானம் ஆகவோ என்னால ஏலாது. ஏனெண்டா நான் எதையும் மீன் பண்ணிக் கதைக்கேல. உங்கட நடவடிக்கையளை பார்த்துக் கேட்கோணும் எண்டு நினைச்ச கேள்வியைத்தான் கேட்டனான்.”

அவன் தன்னிலையில் உறுதியாக நின்று விளக்க, ஏனோ அதுவே அவளுக்கு சொல்லொணா ஆசுவாசத்தைக் கொடுத்தது. அவள் பார்வையுணர்ந்து அவன் மன்னிப்புக் கேட்டிருந்தால் கூட இந்த இதம் கிடைத்திருக்காது என்றே தோன்றியது.

அந்த ஆசுவாசத்தை ஐந்து செக்கன் அமைதியாக அனுபவிக்க விடாமல் அவன் தன் வாதத்தைத் தொடர்ந்தான். கிடைத்த சந்தர்ப்பத்தை விட அவன் தயாரில்லை.

“என்ர முதல் கேள்வி, நீங்கள் இஞ்ச வந்த முதல் நாள் நித்திலனோட அந்த ரூமில போய் ஏன் தங்கினீங்கள்? நான் உங்களை என்ன பேயிங் கெஸ்டா கூட்டியந்தனானோ இஞ்ச? இல்லா வீட்டில அறை கூடிப் போச்செண்டு போட்டு அடைக்கக் கூட்டியந்தனானோ?

நான் பிள்ளையள் மூண்டும் ஒண்டையும் வித்தியாசமா பார்க்கக் கூடாது, எல்லாத்தையும் இயல்பா ஏற்றுக் கொள்ளோணும் எண்டு ஒவ்வொண்டா யோசிச்சு யோசிச்சுச் செய்தா நீங்க எனக்கு மேலால வேலை பார்க்கிறீங்கள் என்ன?

ஏலாக் கடைசியா நீங்க செய்த வேலையை சரிக்கட்ட, நான் ‘அப்பாவுக்கு வேலை கிடக்கு, நீங்க போய் அம்மாவோடயும் அண்ணாவோடையும் கிடவுங்கோ…’ எண்டு மயூவையும் மகியையும் அனுப்பி வச்சா, நீங்க என்னடாவெண்டா அவையையும் சேர்த்துக் கொண்டு, அங்கயே செட்டிலாகிட்டீங்கள்! உங்களை நான் எந்த லிஸ்டில சேர்க்க எண்டு நீங்களே சொல்லுங்கோ பார்ப்போம்.”

அவன் பேசப் பேசவே தன் தவறுகளை உணர்ந்து கொண்டவளாக சாதனா மேலுதட்டைக் கடித்தபடி கண்களை இறுக மூடித் திறந்தாள்.

“இதை நான் இப்பிடியெண்டு யோசிக்கேல. நீங்க பிந்தி வந்தா தனியாதான் படுக்கிறதெண்டு கேள்விப் பட்டிருக்கிறன். அதான் நீங்க ஃப்ரீயா நித்திரை கொள்ளட்டுமெண்டு பிள்ளையளை என்னோட வச்சிருந்தனான்.”

“அது லேட்டா வர்ற நேரம் நான் வரும் மட்டும் பிள்ளையள் தனியா இருக்க வேண்டாம் எண்டு அம்மாவோட படுக்க சொல்லுறனான். பிறகு நடுசாமத்தில அவைய எழுப்பி கரைச்சல் குடுக்க வேண்டாமெண்டுதான் அப்பிடியே விடுறது. இனி அப்பிடி செய்யவேண்டிய தேவை இல்லைத்தானே? நீங்கள் இஞ்ச இந்த ரூமில பிள்ளையளோட இருந்தா, நான் பக்கத்து ரூமில குளிச்சிட்டு சத்தம் இல்லாம வந்து படுக்கப் போறேன்!” என்றவன் அவளிடம் இன்னுமே சிறிது தயக்கம் மிச்சமிருப்பதைக் கண்டு,

“இதைப் பற்றி நிறைய நாளா உங்களோட கதைக்கோணும் எண்டு இருந்தனான். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சது. கதைச்சிட்டன். இனி உங்கட விருப்பம். உங்களை வற்புறுத்தி எதையும் செய்ய வைக்கிறது என்ர நோக்கமில்லை. ஆனா கொஞ்சம் யோசியுங்கோ, இப்பிடியே இருக்கிறதெண்டா ரெண்டு பேரின்ர உறவுமுறைக்கும் அர்த்தம் என்னவெண்டு!

நீங்க என்னைப் பற்றி என்ன நினைச்சு கல்யாணத்துக்கு ஓமெண்டு சொன்னீங்களோ தெரியாது. எனக்கு வேலை நேரம், பிள்ளையளோட கழியுற நேரம் போக நான் உணருற வெறுமைக்குத் துணையா நீங்கள் இருப்பீங்கள் எண்டு நினைச்சுத்தான் உங்களைக் கட்டினான். இது என்ர பிழையான எதிர்பார்ப்பா இருந்தா… சொறி! நான் கதைக்க வேண்டியதெல்லாம் கதைச்சிட்டேன், இனி நீங்க தாராளமா உங்கட இடத்துக்குப் போகலாம். நான் கதைச்சிட்டேன் எண்டுறதுக்காக கஷ்டப்பட்டு இஞ்ச நிக்க வேண்டாம்.” என்றவன் கட்டிலின் தலை மாட்டின் அருகே இருந்த ரீப்பாயின் மேல் சுடுதண்ணீர்ப் போத்தலை வைத்து விட்டு கட்டில் சட்டத்தில் முதுகை சாய்த்துக் கண்ணை மூடிக் கொண்டான்.

சாதனாதான் திக்குத் தெரியாத காட்டில் விட்ட ஆட்டுக்குட்டியாய் திருதிருத்து நின்றாள்.

அவனுடன் தனிமையில் ஒரே அறையில் இருப்பது ஒருவிதமாய் சங்கோஜமாகத்தான் இருந்தது என்றாலும் அவன் அவ்வளவு சொன்ன பின் அங்கிருந்து செல்லவும் அவளால் முடியவில்லை.

என் எதிர்பார்ப்பு தவறென்றால் விலகி செல் என்று சொல்கிறான்! அது தவறு என்று அவளால் எப்படி சொல்ல முடியும்? இந்தத் திருமணத்தில், தான் அவன் போல் எதிர்பார்ப்போடு இருந்து, தனக்கு மாறாக அவன் எட்டியிருந்திருந்தால் தனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்தவளால் அவனுக்குப் பெரும் அநீதி செய்து விட்டதுபோல் இருக்கவே அங்கிருந்து அசையவில்லை அவள் கால்கள்.

அவள் நிற்பதை உணர்ந்து கண்ணைத் திறந்து பார்த்த ஆதித்யன்,

“நிறைய நேரமா நிக்கிறீங்கள்! கால் நோகேலயோ?” போய் உங்கட அறையில இருக்க வேண்டியது தானே என்ற மறை பொருளில் கேட்க,

அவளோ, “நீங்க என்னை இருக்கச் சொல்லிச் சொன்னனீங்களோ? நிக்க வச்சுக்கொண்டுதானே பிரசங்கம் வச்சனீங்கள்?” இயல்பான கேலிப் பேச்சில் தன்னை உணர்த்த முயன்றாள்.

“என்ன பிரசங்கமோ? நான் உயிரைக் குடுத்து என்ர வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறன். உங்களுக்கு அதைப் பார்க்க பிரசங்கம் மாதிரிக் கிடக்கோ?” அவளை உணர்ந்து அவனும் பொய்யாய் முறைத்தான்.

“உங்களை ஆர் உயிரைக் குடுத்து இவ்வளவும் கதைக்கச் சொன்னது? நான் என்ன நிலன், மயூ, மகி மாதிரியோ? பஞ்ச தந்திரக் கதையெல்லாம் சொல்லி உதாரணம் காட்டி வாழ்க்கைப்பாடம் சொல்லித்தர! வாழ்க்கை அதே நிறையப் பாடம் சொல்லித் தந்திட்டு. ஒரு சொல்லுல முதலே இதை நீங்க சொல்லியிருந்தாலே காணும். நீங்கள் இவ்வளவு கதைச்சிருக்கத் தேவையே இல்லை.” அலட்சியமாக அவள் சொல்ல, அடிப்பாவி என்ற ரீதியில் அவளைப் பார்த்தாலும் அவளின் இந்த இயல்பு அவனை ஈர்த்தது.

அத்தோடு தான் அவளிடம் அதிகம் கோபப் பட்டதும் புரிய,

“சொறி சாதனா, கோபத்தில நிறையக் கத்திட்டேன். பொறுமையா கதைக்கோணும் எண்டு நினைச்சிருந்த விஷயம்… ப்ச்…” என்று மெய்யாக வருந்தினான்.

“பரவாயில்லை விடுங்கோ. என்னிலதானே முழுப் பிழையும்… இவ்வளவுநாள் நீங்க பொறுமையா இருந்ததே பெரிய விஷயம்.” என்றவளை மறுக்காது ஒப்புக் கொண்டான்.

“சில சில விஷயங்களில அதுதான் உண்மை. ஆனா நான் எப்பவும் எல்லா விஷயத்திலயும் அப்பிடித்தான் எண்டு பிழையா நினைக்காதேங்கோ. நோர்மலா நான் அப்பிடிக் கோபத்தை சேர்த்து வைக்கிற ஆள் இல்லை. உங்களுக்கு சிலதைக் கடந்து வர நிறைய சங்கடங்கள் இருக்கும் எண்டு விளங்கிப் பொறுமையாதான் இருப்பேன்.

ஆனா நிலன் ஒவ்வொருக்காவும் வந்து ‘எப்ப அப்பா உங்களுக்கு வேலை குறையும்? எப்ப நான் உங்களோட வந்து படுக்கிறது?’ எண்டு கேட்கேக்கயும் உங்களில வரும் பாருங்கோ ஒரு கோபம்” என்று முறைக்க, எந்த நியாயமான காரணங்களும் சொல்ல இன்றி அவள் நிராயுதபாணியாய் நின்றாள்.

“நீங்க ஓம் எண்டு சொன்ன அண்டு அவரை இஞ்ச கூட்டியந்த நேரம், ‘நீங்களும் அம்மாவும் இஞ்ச வந்தா, இனி நீங்கள் என்னோடதான் நித்திரை கொள்ளுவீங்கள்!’ எண்டு சொல்லிருந்தனான். அதுக்குப் பிறகும் அவர் மட்டும் வந்து எங்களோட நிக்கேக்க என்ர நெஞ்சில ஏறிப் படுத்துத்தான் நித்திரை கொள்ளுவார்.

அவர் நித்திரையானாப் போல, அவருக்கு உடம்பு நோகும் எண்டு நான் கட்டில்ல இறக்கிப் படுத்தி விடுவன். ஆனாலும் சில நாள் அருண்டு எழும்பினா திரும்ப ஏறிப் படுத்திடுவார். நானும் விட்டுடுவன்.

error: Alert: Content selection is disabled!!