MPK 34
வார்ட் பேசன்ட்ஸ்-ஐ பார்த்து முடித்து ஓய்வாக அமர்ந்து எக்ஸ்ரே ரிப்போர்டுகளை பார்த்துக் கொண்டிருந்தான், ஆதித்யன்.
அந்நேரம் சாதனாவிடமிருந்து அழைப்பு வர, வேலை நேரத்தில் அனாவசியமாக அழைக்க மாட்டாளே என்று யோசித்தவனுக்கு போயா விடுமுறையென்று பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று அவள் சொன்ன ஞாபகம் வரவே தாமதமின்றி உடனே அழைப்பை ஏற்றிருந்தான்.
“ஆதி!” என்ற குரல் அவன் செவிகளுக்குள் ஊடுபுக அவனுக்கு ஏக அதிர்ச்சி!
‘ஆதியாமே ஆதி…’ அன்றைக்குப் பின் அவனை டொக்டர் என்று அழைப்பதை நிறுத்தியிருந்தாள் என்றாலும் அதன் பின்னும் அவன் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கவெல்லாம் இல்லை அவள்.
ஆனால் இப்போது இந்த ஆதி என்று யோசிக்கையில்தான் அவள் குரலில் இருந்த கலக்கமும் தழுதழுப்பும் விளங்கிற்று.
என்னவோ என்று பதறியவன் தனியாக எழுந்து வந்தான்.
“என்ன சாதனா? ஏன் இப்பிடி அழுகிற மாதிரிக் கதைக்கிறீங்கள்? ஆருக்கு என்ன?”
“எங்களுக்கு ஒண்டுமில்லை… ஆனா இஞ்ச ஒரு அக்ஸின்ட். ஆட்டோ அண்ணாவுக்கு கொஞ்சம் காயம், ஹொஸ்பிட்டல் கொண்டு வருகினம்.”
பயந்த குரலில் அவள் சொல்ல
இவனுக்கு ஒரு நிமிடம் முழுதாய் பேச்சே வரவில்லை.
“அவருக்கு கொஞ்சம் காயமெண்டா விளங்கேல. நீங்க அவரின்ர ஆட்டோலதானே போனனீங்கள்? உண்மைய சொல்லுங்கோ சாதனா, உங்களுக்கு… உங்கள் ஒருதருக்கும் ஒண்டும் இல்லைத்தானே?”
“எங்களுக்கு ஒண்டும் இல்லை. ஆனா பிள்ளையள்தான் சரியாப் பயந்திட்டினம். நீங்கள்… உங்களுக்கு இப்ப வரேலுமா இஞ்ச?” அவனை வேலையின் நடுவே அழைக்கும் தயக்கத்தில் கேட்க, அவன் அதையெல்லாம் யோசிக்கவேயில்லை.
“எவடத்த நிக்கிறீங்கள் இப்ப?” என்று அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவன்,
“நான் அஞ்சு நிமிஷத்தில அங்க நிப்பன் சாதனா. பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு எங்கயேன் கரையா போய் கவனமா நில்லுங்கோ.”
“நாங்கள் கவனமா நிக்கிறம். நீங்க அவசரப்படாம காரை மெதுவா ஓடிக் கொண்டு வாங்கோ.” சரியென்று கேட்டுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தவன் சொன்னதுபோல் ஐந்தாம் நிமிடம் அவர்கள் முன் நின்றிருந்தான்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தின் அருகே A9 ரோட்டில் ஒதுங்கி நின்றிருந்த தன் குடும்பத்தைக் கண்களால் ஸ்கான் செய்தபடியே காரில் இருந்து இறங்கிய ஆதித்யன், அவர்கள் யாவரும் நலமென்று கண்டு கொண்ட பின்தான் சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.
விபத்து நடந்ததற்கு அடையாளமாக பொலிஸ் மற்றும் பொதுமக்கள் கூட்டம் நின்றிருக்க, அதன் அருகே நொருங்கிக் கிடந்த ஆட்டோவைக் கண்டவன் கண்களும் கால்களும் அசைய மறுத்து விட்டன.
ஆட்டோவின் நிலை அவன் குடும்பம் அதனுள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையை அவன் விருப்பத்தை மீறிக் காட்சி செய்து கண்டதில் அவன் உயிர் மொத்தம் நடுங்கிப் போனது.
அப்போதே அவன் வரவைக் கண்டுகொண்ட பிள்ளைகள், “அப்பா!” என்று அவனிடம் ஓடப் பார்க்க சாதனா மூவரையும் பிடித்துக் கொண்டாள்.
அதனால் நின்ற இடத்தில் நின்றே மூவரும் “அப்பா!” என்று உரத்த குரலில் கத்த சிந்தை கலைந்து பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு தூக்கு மேடை வரை சென்ற மரண தண்டனை ரத்தான உணர்வு.
அதன் பின் ஒரு நொடி தாமதிக்கவில்லை. ஒரே பாய்ச்சலில் அந்தப் பக்கம் தாவிப் பிள்ளைகளை அணைத்துக் கொண்டவன், எண்ணிக்கையில்லா முத்தங்களை மூவருக்கும் பகிர்ந்து தன் நடுக்கத்தை சமன் செய்து கொண்டான்.
பிள்ளைகளுக்குப் புரியாவிட்டாலும் அவன் பயம் என்னவென்று சாதனவுக்குத் தெரியும் ஆதலால் ஆறுதலளிக்கும் வண்ணம் அவன் தோளில் அழுத்தம் கொடுத்தாள்.
அடுத்த செக்கனே அந்தக் கையில் பதிந்த அவன் கரம் அவளை விட அதிகமாய் அதில் அழுத்தத்தைப் பிரயோகித்தது.
அதுவே சொன்னது இந்தத் தவிப்பு பிள்ளைகளுக்கானது மட்டுமில்லை, உனக்கானதும்தான் என்று!
பிள்ளைகள் பயப்படுகிறார்கள் என்று இவனை அழைத்தால் இப்போது அவனுக்கு தைரியம் சொல்ல லொறி நிறைய ஆட்கள் தேவைப்படும் போல என்று நினைத்த சாதனா,
“இஞ்ச நிறைய நேரம் நிக்கேலாம கிடக்கு. வீட்ட போவமோ?” என்று கேட்டிருந்தாள்.
உடனே சரியென்றவன் கவனமாகப் பிள்ளைகளை ரோட்டைக் கடத்திக் கூட்டி சென்றவன் சாதனாவுக்கும் கவனம் சொல்லத் தவறவில்லை.
காரைக் கிளப்பும் முன் மீண்டும் ஒரு தடவை ஆட்டோவைப் பார்த்தவன் தலையை உலுக்கி விட்டு காரைக் கிளப்பி நெடுஞ்சாலையில் விரட்டினான்.
தந்தையைக் கண்டதுமே பாதியும் தந்தையின் முத்தத்தில் மீதியும் என்று சரியாகியிருந்த பிள்ளைகள் கார் வீடு நோக்கி செல்வதை அவதானித்து விட்டு,
“அப்ப இண்டைக்கு பூங்கா போறேல்லயா அப்பா?” என்று கேட்க,
“இண்டைக்கு வேண்டாம் செல்லங்கள். அப்பா அடுத்த ஞாயிறு கூட்டிக் கொண்டு போறேன் பிள்ளையளை.” என்ற, சரியென்று கேட்டுக் கொண்டார்கள்.
நிலன், “அப்பா வாகனம் ஓடேக்க நித்திரை கொள்ளக் கூடாதுதானே? அப்பிடி நித்திரை வந்தா வாகனத்தை நிப்பாட்டிப் போட்டுக் கொள்ளோணும் எண்டு அண்டைக்கு டீவியில பொலிஸ் மாமா சொன்னவரல்லோ?”
“ஓம் நிலன். ஆனா பிள்ளைக்கு ஏன் அது இப்ப திடீரெண்டு ஞாபகம் வந்த?” பேச்சுப் பேச்சாக இருந்தாலும் பாதையில் பத்தாயிரம் மடங்கு கூர்மையாகக் கவனம் பதித்திருந்தான்.
“இண்டைக்கு அந்த மாமாக்கள் நித்திரை கொண்டு வந்துதான் ஆட்டோ மாமான்ர ஆட்டோவை இடிச்சவையாம். அவைக்குக் கனக்க ரத்தம். ஆட்டோ மாமாக்குக் கொஞ்ச ரத்தம். நித்திரை கொள்ளாம இருந்திருந்தா ரத்தம் வந்திருக்காதெல்லோ?” என்று அவன் கேட்கவும்தான் தான் இன்னும் என்ன நடந்தது என்பதையே விசாரிக்கவில்லை என்று புத்தியில் உரைக்க,
“என்ன நடந்தது சாதனா?” என்று கேட்டான் பார்வையை பாதையில் வைத்து.
“பூங்காவுக்குப் போய்க் கொண்டிருக்கேக்க ரோட்டு சைட்டில மயில் நிண்டது. பிள்ளையள் மயில் பார்க்கவெண்டு கேட்க அண்ணாவை ஆட்டோவை நிப்பாட்ட சொல்லிப் போட்டு இறக்கி ரோட்டைக் கடக்கிறம். திடீரெண்டு பின்னால பெரிய சத்தம். திரும்பிப் பார்த்தா ஆட்டோவை விட்டு அண்ணா வெளியில கிடக்கிறார். ஆட்டோ எங்கயோ கிடக்கு. கன்டர் ஒண்டு கவிண்டு போய்க் கிடக்கு. ரோட்டெல்லாம் ரத்தம். என்ன நடந்த எண்டு திகைச்சுப் போய் நிக்க அதுக்குள்ள ஆக்கள் எல்லாம் கூடிட்டினம்.
எனக்குப் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு போய்ப் பார்க்கவும் பயமாக் கிடக்கு, ஏங்கிப் போடுங்கள் எண்டு! இஞ்சயே நில்லுங்கோ எண்டு விட்டுட்டுப் போகவும் பயமாக் கிடந்த. ஆனா ஆட்டோ அண்ணா பாவமே! எங்களோட வந்து இப்பிடி நடந்திருக்க, அவரை அம்போ எண்டு விடக் கூடாதே எண்டுதான் பிள்ளையளுக்கு சமாதானம் சொல்லி அவரை அம்புலன்ஸ்ல ஏத்தும் மட்டும் அங்க நிண்டுட்டு இஞ்சால வந்து உங்களுக்குக் கோல் அடிச்சன்.
அதில நிக்கேக்கதான் கதைச்சவை கன்டர் ஓடி வந்த டிரைவர் நித்திரையில ஓடிக் கொண்டு வந்திருக்கிறார். கொழும்புல இருந்து இரவிரவா ஓடி வந்திருக்கினம். வாகனம் தடுமாறி ஆட்டோல மோதிற மாதி வர இந்த அண்ணா குதிச்சிருக்கிறார். நல்லகாலம் குதிச்சபடியா அங்க இஞ்ச எண்டு சின்னச் சின்னக் காயங்கள். இல்லாட்டி?” என்று பெருமூச்சு விட்டவளைத் தொடர்ந்து ஆதித்யனும் பெருமூச்சு விட்டான், சாலையில் இந்த மனிதர்களின் அஜாக்கிரதையும் அலட்சியமும் என்று தீருமோ என்று?
எத்தனை விபத்துக் கேஸ்களைப் பார்க்கிறான்? அதில் முக்கால் பங்கிற்கு மேலே கவனமாக இருந்திருந்தால் தவிர்த்திருக்கக் கூடியவையாகத் தானிருக்கும். தங்கள் உயிரோடு சேர்த்து எதிரில் கவனமாக வருவோரின் உயிருக்குமல்லவா உலை வைக்கிறார்கள்?
“அவருக்குக் காசு ஏதேன் குடுத்து விட்டனீங்களோ சாதனா?”
“குடுத்தனான். அவரின்ர வீட்டுக்காரரிட்ட ஃபோன் எடுத்தும் சொல்லிட்டேன். நீங்களும் ஹொஸ்பிட்டல்ல ஒருக்கா என்னெண்டு பாருங்கோ.” என்ற சரியென்றவன் பின் பாதையில் கவனம் வைக்க…
மயூ, “ஆட்டோ மாமா பாவம் அப்பா. அவருக்கும் ரத்தம். அவரின்ர ஆட்டோவும் உடைஞ்சு போட்டுது. இனி என்னத்தில அவர் எங்களை ஏத்தி இறக்குவார்?”
“அவருக்கு நாங்க புது ஆட்டோ வேண்டிக் குடுப்பம் மயூ. மற்றது இனி அப்பா ஆரோடயும் பிள்ளையளை விடமாட்டேன். அப்பதான் கூட்டிக் கொண்டு போய் கூட்டி வருவன். வேலை நேரம் என்ன செய்யிறது எண்டு யோசிப்பம்.”
“அப்ப புது ஆட்டோ ஏன் அப்பா?”
“அவர் உங்களை மட்டும் ஏத்திறேலயே செல்லம்! அவருக்குத் தொழில் அதுதானே! ஆட்டோ இல்லாம அவர் பாவமெல்லோ?”
“ஓம் என்னப்பா? காசிலாட்டி அவை சாப்பிடேலாது என்ன?”
“ஓம் அதுவும்தான். அதோட இண்டைக்கு கடவுள் அப்பாக்கு செஞ்ச நல்லதுக்கு அப்பா காணிக்கை குடுக்கோணும்தானே?” என்றான் மனதார.
அவன் மனமுணர்ந்து சாதனா ஆறுதலாக அவன் கையை அழுத்திக் கொடுக்க, அதை உள்ளார்ந்து அனுபவிக்கும் முன் நிலன் அவனை டென்ஷனாக்கி விட்டிருந்தான்.
“அப்பா! மயில் பார்க்க இறங்காட்டி எங்களுக்கும் மண்டையெல்லாம் உடஞ்சு ரத்தம் வந்திருக்குமெல்லோ? அப்ப எங்களையும் அங்க உங்கட ஆஸ்பத்திரியிலதான் சேர்த்திருப்பினம் என்ன?…”
இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பானோ அதற்குள் “நிலன்ன்ன்!” என்று இதுவரை குழந்தைகள் கேட்டிராத கடினத் தொனியில் கத்தியிருந்தான் ஆதித்யன்.
சாதனாவே கொஞ்சம் அரண்டுதான் விட்டாள் என்கையில் பிள்ளைகள்?
மூவரும் அவனை வெறித்துப் பார்த்திருக்க நிலன் மட்டும் தாங்காது,
“ஏன் என்னைப் பேசுறீங்கள்? நான்…”
“நிலன், இப்ப நீர் வாயை மூடுறீரோ? இல்லா வாயில ரெண்டு போடட்டோ?” என்று திரும்பவும் கத்தி விட்டான், மீண்டும் அவன் அதே போல் பேசப் போகிறானே என்று தாங்காமல்!
அவ்வளவுதான். நிலன் முகம் வெடிக்க ஆரம்பித்தது. முட்டி நின்ற கண்ணீருடன் தலையைக் குனிந்து கொண்டவன் அதன்பின் ஒரு வார்த்தை பேசவில்லை. மான்குட்டிகளும் மௌனமாய் வர காரினுள் முழு நிசப்தம்.

