இதுவரை இருவரும் போட்ட எந்த சத்தத்துக்கும் அசைந்து கொடுக்காது உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் சத்தமாக எல்லாம் பேசிக் கொள்ளவுமில்லைதான்.
ஹஸ்கி வாய்ஸுக்கும் முணுமுணுப்புக்கும் இடையில் ஒரு டெசிபலில்தான் நடந்தது அவர்கள் பேச்சு வார்த்தை எல்லாம்.
மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஆதித்யன் போன்ற அடாவடியான கணவனை பேசி சமாளிக்க அவனுக்கு மட்டும் கேட்கும்படி புதிதாய் ஒரு டெசிபல் இவள்தான் செட் செய்ய வேண்டும்.
‘அவன் அடாவடிக் கணவனா? மனசாட்சி செத்த மாதிரி கதைக்காத!’ அவள் மனசாட்சியே இடித்தது.
‘என்னட்ட அப்பிடித்தானே நிக்கிறார்!’ என்றவளுக்கு நன்றாகவே தெரியும், தானும் அதை விரும்பவே செய்கிறேன் என்று!
பின் இன்னும் ஏன் இந்தப் பற்றாக்குறைகள்?
நிவர்த்தி செய்யத்தான் நினைத்திருக்கிறாள்!
அடுத்த அறையில் தன்னை வெறுத்து தனிமையில் படுத்திருந்த ஆதித்யன், கட்டிலின் அசைவில் கண்ணின் மேல் இருந்த கையை எடுத்து விட்டுத் திரும்பிப் பார்த்தான்.
அவன் போர்வையை இழுத்துத் தனக்கும் போர்த்தபடி படுத்துக் கொண்டிருந்தாள் சாதனா.
நம்ப முடியாத பாவனையில் அவன் புருவங்கள் உச்சி மேட்டைத் தொட,
“என்ன இந்தப் பக்கம்? நான் இருந்தா உங்கட நித்திரை குழம்புமெல்லோ?”
“நான் பிள்ளையளின்ர நித்திரை குழம்பும் எண்டுதான் சொன்னான். உங்களுக்குக் காது பிழையெண்டா நான் ஒண்டும் செய்யேலாது.”
“அப்ப உங்கட நித்திரை குழம்பினா… உங்களை நித்திரை கொள்ளவிடாட்டி… ஒரு பிரச்சனையும் இல்ல, அப்பிடித்தானே?” என்றவனை விழியுயர்த்திப் பார்த்தவள்,
“கடைசி மட்டும் திருந்தமாட்டீங்கள் என்ன? நான் அங்கயே போய்ப் படுக்கிறன்.” என்று விட்டு போர்வையை விசிறி எழப் பார்க்க, அவன் விட்டால்தானே? உடும்பாய் இறுக்கிக் கொண்டான் உயிரோடும் மெய்யோடும்.
அவன் ஆசை புரிந்து வந்தாள் என்றாலும் இந்த விடயத்தில் ஒரு பெண்ணாக அவளாக அவனைத் தேடி வந்தது அவனுக்கு அவள் அளித்த பெரும் கௌரவம்.
என் கணவன் இதைக் கொண்டு என்னை எடை போடமாட்டான் என்ற அவளின் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறான்… அதுவும் ஒரு மோசமான ஆணை முதல் திருமணத்தில் கடந்து வந்த பெண்ணிடம் அந்த நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறான் என்றால் ஆதித்யன் கணவனாக வென்றுவிட்டான்தானே?
அந்த வெற்றியை அவளோடு கொண்டாடினான்!
அவள் வெட்கத்துக்கு இரண்டாம் அவத்தையைக் (phase) கொடுத்தான்!
மறுநாள் ஆறுமணி போல் கண் விழித்த சாதனா நேரத்தைப் பார்த்துப் பதறி எழுந்தவள், பக்கத்தில் பார்த்தாள். ஆதித்யனைக் காணவில்லை.
பக்கத்து அறையில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்கப் புரிந்துகொண்டாள் அவன் அங்கே என்று!
தன்னைத் திருத்திக் கொண்டு பாத்ரூம் போய் வந்தவள் பிள்ளைகளை எழுப்பி விட என்று அங்கே சென்றால் அங்கோ தந்தையும் பிள்ளைகளும் அன்றைய பொழுதையே மறந்தவர்களாக கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதித்யன் கட்டிலில் படுத்திருக்க அவனைப் பாதி மறைத்தபடி மூவரும் அவன் மேல் படுத்திருக்க, மூவரையும் தன்னிரு கைகளால் வளைத்தபடி கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
இதில் ஹைலைட் என்னவென்றால் அவன் நடுநெஞ்சில் ஒய்யாரமாகப் படுத்திருந்தான், நிலன்!
நேற்றிரவு ‘அப்பா எனக்குப் பக்கத்தில படுக்கக் கூடாது.’ என்று சொல்லி அவன் செய்த கேளிக்கைகள் எல்லாம் என் கனவா என்றிருந்தது அவளுக்கு.
பின் ‘இது எதிர்பார்த்த ஒன்றுதானே? அதனால் இதை ஆராய நேரமெடுத்து நேரத்தை வீணாக்காமல் அவர்களை எழுப்பி வெளிக்கிட வை.’ என்ற மனதின் குரலுக்குக் கட்டுப்பட்டவள்,
“ஒருத்தருக்கும் எழும்பி வெளிக்கிடுற எண்ணமில்லையோ?” என்ற, அப்போதே அவள் வந்ததையே உணர்ந்தவர்கள் போல் ஒரே போஸில் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள்.
அதில் ஆதித்யன் பார்வை பிரத்தியேகமாக அவளை வட்டமிட, பார்வையாலேயே கண்டித்தாள் அவள்.
அதை ஊதித் தள்ளியவன், “நிலன் அப்பாவுக்குக் கொஞ்சி விடுங்கோ ஒருக்கா!” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே.
அவனும் ஒன்றுக்கு இரண்டு முத்தங்களாய் அவன் கன்னத்தில் பதிக்க, சாதனாவை நோக்கி ஒற்றைப் புருவம் உயர்த்தினான் கர்வமாக.
உள்ளே ரசித்தாலும் காட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக உதட்டை வளைத்தாள்.
“அம்மா! நாங்கள் எழும்பேக்க உங்களைக் காணேல. எங்கயம்மா போனீங்கள்?” கேள்வியின் நாயகி மயூ கேட்க,
ஆதித்யன், “அதானே! நல்லாக் கேளுங்கோ மயூ. அப்பாவையும் பிள்ளையளையும் விட்டுட்டு எங்க போனவா எண்டு!” மகளைத் தூண்டி விட்டவன் கண்களில் தேங்கிய சிரிப்புடன் சாதனாவைப் பார்க்க, அவள் இவனைக் கொலை வெறியாய் முறைத்தாள்.
அதற்குள் மயூ இரண்டாம் முறை அதே கேள்வியைக் கேட்டிருந்தாள்.
“அம்மா ஒரிடமும் போகேல மயூ. அம்மாக்குக் கொஞ்சம் காய்ச்சலடிக்கிற மாதிரி கிடந்த. அதான் பிள்ளையளுக்குக் கூடாதெண்டு பக்கத்து ரூமில போய்ப் படுத்தனான்.” என்று கோர்வையாகப் பதில் சொன்னவள் ஆதித்யனைப் பார்க்க, அவனோ ‘அப்படியா?’ என்று நக்கலாகப் பார்த்து வைத்தான்.
அவளைத் திணறவைத்து அழகு பார்ப்பதில் அப்படி ஒரு குஷி அவனுக்கு. அந்த இடத்தில் தான் யார் என்பது மறந்தே போகிறது அவனுக்கு.
அவள் காய்ச்சல் என்றதும் தந்தையை விட்டு எழுந்து ஓடி வந்த மயூ, “இப்ப காய்ச்சல் சுகமோ அம்மா?” என்று அவள் காலைக் கட்டிக் கொள்ள, மகி தந்தையைப் போட்டு உலுப்பிக் கொண்டிருந்தாள்,
“அப்பா அம்மாக்குக் காய்ச்சல் பாருங்கோ, எழும்புங்கோ!” என்று.
நிலன் மட்டும் எதுவும் பேசாமல் ஆதித்யன் நெஞ்சில் சாய்ந்தபடி தாயின் முகத்தையே பார்த்திருந்தான்.
மகியைத் தொடர்ந்து மயூவும் “அப்பா! எழும்பி வாங்கோ.” என்று அழைக்க, அவள் சொன்னது பொய்யென்று தெரிந்த அவன்,
“அதெல்லாம் காய்ச்சல் போயிருக்கும் செல்லங்கள். அப்பா இரவே மருந்து குடுத்துட்டேன்.” என்று சொன்னவன்,
“ஓமெல்லோ சாதனா?” என்று அவளையும் வம்பாகக் கேட்டு வைத்தான்.
அவளுக்கு நிலனுக்கு வெளுப்பது போல் இவனை வெளுத்தால் என்னவென்றே தோன்ற ஆரம்பித்து விட்டது.
ஆனால் அதை அப்படியே நீர்த்துப் போகச் செய்தது அடுத்துக் கேட்ட குரல்.
“இரவுதானே மருந்து குடுத்தனீங்கள்? இப்ப சுகமோ எண்டு ஒருக்காப் பாருங்கோவன்.”
சொன்னது நிலன்!
முதல்முறை ஆதித்யன் அறிவுறுத்தாது தாய் மேல் அக்கறையைக் காட்டுகிறான். சாதனாவின் கண்கள் கலங்கியது.
ஆதித்யன் அவளைக் கண்டு கொண்டவன்,
“சரி, எல்லாரும் தள்ளுங்கோ. நான் பார்க்கிறன் அம்மாவை!” என்று எழுந்து வந்தவன், இன்னும் அவள் காலைக் கட்டிக் கொண்டு நின்ற மயூவிடம்,
“மயூ! போய் உங்கட வேலையளைப் பாருங்கோ. ஸ்கூலுக்குப் போகோணும் எல்லோ? மகி நீங்களும்தான்! நிலன் நீங்கள் உங்கட பாத்ரூமுக்கு ஓடுங்கோ.” என்ற,
தந்தை, தாயைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதில் எல்லோரும் கலைந்து சென்றிட, நிலன் மட்டும் அவர்களைத் தாண்டித்தான் மற்ற அறை பாத்ரூம் செல்ல வேண்டும் என்பதால் தாயைக் கடந்து செல்கையில் கலங்கிய அவள் கண்களைக் கண்டுவிட்டுத் தேங்கி நின்றான்.
“அம்மா ஏன் அழுகுறீங்கள்? உடம்பு சரியா ஏலாமக் கிடக்கோ? அப்பா தந்த மருந்து குடிச்சனீங்களோ?” என்று அவன் அடுக்கடுக்காய் கேட்க, அடுத்த கேள்வி அவன் கேட்கும் முன் சாதனா கண்ணீரோடு மண்டியிட்டு மகனை அணைத்தவள், அவன் முகமெங்கும் முத்தமாக வைத்தாள்.
அதில் பிள்ளை குழம்பிப் போய் ஆதித்யனைப் பார்க்க அவன் தலையை வருடி விட்டவன்,
“அது ஒண்டுமில்லை நிலன், நீங்கள் விசாரிச்சாப் போலதான் அம்மாக்கு முழுசா காய்ச்சல் சுகமாயிருக்கு. அதான் சந்தோஷத்தில பிள்ளையைக் கொஞ்சுறா. அப்பிடித்தானே சாதனா?” என்று அர்த்தமாய் கேட்க அவளும் கண்ணீரும் புன்னகையுமாக அவனை ஆமோதித்தாள்.
“அப்ப இனி அம்மாக்குக் காய்ச்சல் வந்தா நான் கட்டாயம் சுகமோ எண்டு கேட்கிறேன் என்ன?” என்ற,
“காய்ச்சல் வந்தா எண்டு மட்டுமில்லை நிலன், அப்பாட்ட மாதிரி எல்லாத்தையும் அம்மாட்ட சொல்லோணும், கேட்கோணும். அம்மா சொல்லுறதையும் கேட்கோணும். அப்பாக்குக் கொஞ்சுவீங்கள் எல்லோ அப்பிடி அம்மாக்கும் கொஞ்சோணும். அப்பதான் சந்தோஷத்தில அம்மாவுக்குக் காய்ச்சல், தலையிடி ஒண்டும் வராது. எங்க இப்ப அம்மாவுக்குக் கொஞ்சி விடுங்கோ பார்ப்போம்.” என்ற அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, தாயின் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டவன்,
“அம்மா! நான் குளிச்சிட்டு வாறன். உடுப்பெல்லாம் எடுத்து வைக்கிறீங்களோ?” என்று கேட்டான்.
சாதனா முகம் பூரிப்பு என்ற சொல்லுக்கு அப்பால் ஜொலிக்க சரியென்று மகனுக்கு தலையாட்டியவள், தானும் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து அனுப்பி வைத்தாள்.
இப்போது அந்த இடத்தில் சாதனாவும் ஆதித்யனும் மட்டுமே தனித்திருக்க, எழுந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள், வெடித்து வந்த அழுகையை கையைப் பொத்தி அடக்கிக் கொண்டு அவன் மார்பில் கண்ணீர் வடித்தாள்.
ஆதித்யன் அவள் முதுகை வருடிக் கொடுத்தவன், “என்னத்துக்கு சாதனா இந்த அழுகை? அதுவும் நானிருக்கேக்க!”
“உங்களுக்குச் சொன்னா விளங்காது!” என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே.
“எனக்கு விளங்காம ஆருக்கு விளங்க? ஆனா இனி அழத் தேவையில்லை எண்டு சொல்லுறன்.” என்ற, கண்ணைத் துடைத்துக் கொண்டே அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள்,
“உண்மைதான் இனி அழத் தேவையில்லை.” என்றாள் அவனில் மையமிட்ட விழிகளோடு.
அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “சரி சரி நேரமாகுது. வேலையைப் பாருங்கோ. இல்லாட்டி இப்ப வருவினம், அப்பா மருந்து வேலை செய்ததோ எண்டு கேட்டுக் கொண்டு! ஓமில்லையெண்டு பதில் சொல்லப் போய் அதென்ன மருந்தெண்டு கேட்டா, நான் என்னத்த சொல்லுறது அவைக்கு?” என்று அவளை மாற்ற விஷமம் பேசியவன் வாயிலேயே ஒரு அடி வைத்தாள்.
“பிள்ளையை அடிக்கிறத நிப்பாட்டினவுடன கை மனுஷனுக்கு நீளுது என்ன?” என்று அவன் பொய்யாய் கோபம் காட்ட,

