மையல் 28
ஒலித்த கைப்பேசியை செவியோடு இணைத்தாள் மேகவி. மறுபுறம் அவளின் கணவன் சத்யகீர்த்தி.
“பொண்டாட்டி கிளம்புவோமா?”
“என்ன கிளம்புவோமா?”
*ஹேய்.. சிஸ்டருக்கு இன்னைக்கு பர்த்டே. ஈவ்னிங் பார்ட்டி இருக்கு. சீக்கிரம் போகணும்னு சொன்னியே?”
“அச்சச்சோ! வொர்க் பிஸியில மறந்துட்டேன்டா. ஒரு டென் மினிட்ஸ், இப்ப வந்திடுறேன்.”
“அவசரம் இல்ல. மெதுவா வா. நானும் என்னோட ஆஃபிஸ்ல இருந்து வர்றதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும்.”
“ஓகே கீர்த்தி!” எனப் பேச்சை முடித்தவள் கிளம்புவதற்கு ஆயத்தமானாள்.
அன்றைய தினம் தாரிகாவிற்கு பிறந்தநாள். கணவனான ஆகாஷ் மனைவிக்காக மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து வீட்டிலேயே சிறிய அளவில் விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இருந்தான்.
அவனும் தற்போது தான் விபத்தின் காயங்களில் இருந்து முழுமையாக குணமாகி இருந்தான். அதற்காகவும் சேர்த்தே இந்த கொண்டாட்டம்.
ஒருமணி நேரத்தில் வீட்டை அடைந்து, மேகவியும் கீர்த்தியும் தயாராகி விட்டனர்.
ஒன்றரை மாதம் கடந்து சென்ற வேகம் தெரியவில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் தயக்கம் கூச்சம் என அனைத்தும் விடைபெற்று இருக்க, இயல்பான திருமண ஜோடிகளின் நிலையை எட்டி இருந்தனர்.
இப்பொழுதும் சமையல் வேலையை சத்தி தான் செய்கிறான். ஆனால் மேகவி வழக்கத்தை விட சற்று முன்னர் எழுந்து அவனிற்கு உதவுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
இணைந்து உண்பது, ஒன்றாய் பணிக்குச் சென்று திரும்புவது எனத் தங்களது நேரத்தை திட்டமிட்டுக் கொண்டனர்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பர். அதில் ஆசை கூட இன்னும் முழுதும் முடியாமல் இருக்க, தாம்பத்தியத்தின் சுவையை ஒவ்வொரு நாளும் புதிதான முறையில் ருசிக்க முயன்றனர்.
வான் நீலத்தில் சட்டை அணிந்து வந்த கணவனைக் கண்ட மேகவி, “அது எப்படி கரெக்டா என்னோட டிரஸ் கலர்லயே எப்பவும் நீ சர்ட் போடுற?” என வினவ,
“ஒரு விஷயத்தைச் செய்யணும்னு நினைச்சா, அதுக்கு ஆயிரம் வழி இருக்கு. உன்னோட டிரஸ் எல்லாமும் எனக்குத் தெரியும். போன வாரம் நாலு சட்டை ஆயிரம் ரூபானு ஆஃபர் போட்டு இருந்தான், நம்ம ஆபிஸுக்கு ஆப்போஸிட்ல இருக்க கடையில. போயி கலரைப் பார்த்து பொறுக்கீட்டு வந்துட்டேன். சிம்பிள்!” என்று தோளைக் குலுக்கிய படி பதில் தந்தான்.
“உன்னை மாதிரி எல்லாம் எவனும் இருக்க முடியாது. தினுசு தினுசா யோசிக்கிற. செம பீஸ்டா நீ!” எனச் சான்றிதழ் வழங்க, “தேங்க்யூ தேங்க்யூ!” என்று மனைவியின் சொல்லை மலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.
இருவரும் இணைந்து தாரிகாவின் இல்லத்தை அடைந்தனர்.
“வாங்க பாஸ், வாங்க சிஸ்டர்..” என ஆகாஷ் தான் வரவேற்றான். குடியிருப்பில் இருந்தும், அவர்களுக்குத் தெரிந்த வகையிலும் சில விருந்தினர்கள் வந்திருந்தனர்.
நண்பர்களின் வாழ்த்து ஒலியுடன் தாரிகா கேக்கை வெட்ட, நொடிகளில் கொண்டாட்டம் இணைந்து கொண்டது.
அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்பு காரத்தோடு குளிர்பானத்தையும் சேர்த்து பரிமாறினான் வீட்டின் உரிமையாளன்.
மேகவி அதை ருசித்த படி கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, தாரிகாவின் கணவனிற்கு உதவிய படியே அவனோடு உரையாடிக் கொண்டிருந்தான் கீர்த்தி.
“ப்ரோ நீங்க கெஸ்ட், எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யிறீங்க?” எனப் பிறந்தநாள் பெண் வந்து தடுத்திட, “நானும் சொல்லிட்டேன். கேட்க மாட்டிறாரு. அவரை எந்த வேலையும் செய்ய விடாம பார்த்துக்கோ. நான் வந்தவங்களைக் கவனிக்கிறேன்!” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான் ஆகாஷ்.
“ஜுஸ்..” எனக் குளிர்பான கோப்பையை நீட்டிட, தலை அசைத்து வாங்கிக் கொண்டான்.
“எப்படிப் போகுது ப்ரோ, மேரேஜ் லைஃப் எல்லாம்?”
“ம்ம்.. குட். சிஸ்டர்.”
“என்னோட ஃப்ரெண்ட், வொய்ஃப் ரோலுக்கு செட் ஆகுறாளா.?”
சின்னதாய்ச் சிரித்தவன், “நல்ல வொய்ஃபுக்கு பொதுவான ஸ்கேல் என்னனு எனக்குத் தெரியாது. பட், ஷீ இஸ் நைஸ் பர்சன். ரிலேஷன்ஸிப்பை நல்லா ஹேண்டில் பண்ணுறா. ஐம் சோ ஹேப்பி அண்ட் வெரி சேட்டிஸ்ஃபை வித் ஹெர்.”
“ஓகே ஓகே.. சரி, உங்க பர்த்டே எப்ப.?”
“நல்லா தானே போயிட்டு இருந்துச்சு. எதுக்கு திடீர்னு இந்த கொஸ்டின்?”
“தெரிஞ்சிக்கலாம்னு தான்.”
“நவம்பர் செவன்.”
“இயர் சொல்லவே இல்ல? நான் பாட்டுக்கு உங்களை ப்ரோனு கூப்பிட்டுட்டு இருக்கேன். அண்ணானு மாத்திடலாமா.?”
சத்தி மறுத்துத் தலை அசைக்க, “ஏன்? ஏற்கனவே ஒரு தங்கச்சி இருக்கிறதே போதும்கிறீங்களா? நான், சீர் எல்லாம் எதுவும் கேட்க மாட்டேன். பயப்படாதீங்க!”
“சீர் செய்யிறது பிரச்சனை இல்ல. நான் உங்களுக்கு அண்ணனா இருக்க வாய்ப்பு இல்ல.”
புரியாது விழித்தவள், “என்ன சொல்லுறீங்க.?”
“நான் பிறந்த வருஷம் கேட்டீங்க இல்ல, நயன்டி எயிட்.”
அவனைச் சற்றே திகைப்புடன் பார்த்த தாரிகா, “மேகவிக்குத் தெரியுமா.?”
“இல்ல, தெரியாது.”
திகைப்பு அதிர்ச்சியாய் மாற்றம் அடைய, “வாட்? அவளுக்குத் தெரியாம எப்படி?”
“அவ கேட்கல. சோ, நான் சொல்லல.”
“காட்!” என்றவள் என்ன மறுமொழி உரைப்பது எனப் புரியாமல் மெலிதான பெருமூச்சை வெளிவிட, “அப்ப, கேட்டா தான் சொல்லுவ? அப்படித்தான.?” என்ற பாவையின் வினாவில் இருவரும் திரும்பினர்.
தோழியும் கணவனும் நீண்ட நேரமாய் உரையாடுவதை கண்டு எழுந்து வந்தவளின் செவியில், அவர்களது இறுதியான பேச்சு வார்த்தை விழுந்திருந்தது.
சத்தி மனைவியை அடிபட்ட பார்வை பார்க்க, “கிளவுட் ஒன்னும் இல்ல, சும்மா பேசிட்டு தான் இருந்தோம்.” என தாரிகா அவளை அமைதிப் படுத்த முயன்றாள்.
“உன்னோட சந்தோஷமான நாளை நான் ஸ்பாயில் பண்ண விரும்பல. ஹேப்பி பர்த்டே ஸ்டார். நாம நாளைக்குப் பேசுவோம், ப்ளீஸ்..” என்றவள் சட்டென்று அங்கிருந்து வெளியேற, சத்தியும் பார்வையாலேயே விடை பெற்று மனைவியைப் பின் தொடர்ந்தான்.
மேகவி இல்லத்திற்குள் நுழைந்திட, “பொண்டாட்டி!”
நிதானித்தவள் திரும்பிப் பார்த்திட, அமைதியாய் நின்று இருந்தான்.
“என்ன.?”
ஆடவனிடம் இருந்து மௌனமே பதிலாக வந்தது.
“எப்பவும் பேசிப் பேசியே எதிர்ல இருக்கிற ஆளைக் கவர் பண்ணுவ இல்ல? இன்னைக்கு என்ன, கல்லை முழுங்கின மாதிரி அமைதியா நிக்கிற? பேசுடா!”
அவன் இடவலமாய் தலை அசைக்க, பார்வையால் குற்றம் சாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
சத்தி வெளிக் கதவைத் தாழிட்டுச் செல்ல, கூடத்தில் அமர்ந்து இருந்தாள் மங்கை.
“நைட்டுக்கு தோசை ஓகேவா?” என இயல்பாய் பேச முயன்றிட, “என்னோட பர்த் இயர் தெரியுமா உனக்கு?”
இனி மனைவியிடம் இருந்து தப்ப இயலாது என்று உணர்ந்தவன், “ம்ம்.” எனத் தலை அசைத்தான்.
“என்னை விட, நாலு மாசம் இளையவன் என்ன?”
…
“உன்னைத் தான் கேட்கிறேன், பதில் சொல்லு!” என்றவளின் குரல் உயர, கால்களும் தானாய் எழுந்து நின்றன.
“ஆமா..”
“எப்ப தெரியும்.?”
“மாம்ஸ், உங்க ஃபேமிலியைப் பத்தி சொல்லும் போதே தெரியும்.”
“ஹோ.. தெரிஞ்சே, எப்படி?”
…
“சொல்ல மாட்ட.? அது இருக்கட்டும், எப்படி நம்ம ரெண்டு பேர் வீட்டுலயும் இந்த கல்யாணத்துக்குச் சம்மதிச்சாங்க? அதுவும் என்கிட்ட இதைப் பத்திச் சொல்லவே இல்ல?”
அவன் மறு வார்த்தை எதுவும் சொல்லாமல் இருக்க உடல்மொழியைக் கவனித்த மேகவி, “யாருக்கும் தெரியாதா.?”
“தெரியாது!” என உரைத்தவனின் குரல் உள்ளே போய் இருந்தது.
“தனாக்கு?”
‘இல்லை’ என்பதாய்த் தலை அசைத்தான்.
“என்னோட அண்ணா?”
சத்தி அமைதியாய் இருக்க, தமையனிற்குக் கைப்பேசியில் இருந்து அழைப்பு விடுத்தாள்.
மனைவியின் செயலைக் கண்டவன் சட்டென்று தடுத்து அதனை வாங்கி ஓரமாய் வைக்க, “எப்படி ரெண்டு பேராலயும், கொஞ்சம் கூட கூச்சமோ குற்ற உணர்ச்சியோ இல்லாம இப்படி ஒரு வேலையைச் செய்ய முடிஞ்சிச்சு.?”
“மாம்ஸ் மேல தப்பு இல்ல. நான்தான் உன்னை நல்லா பார்த்துப்பேன்னு பிராமிஸ் பண்ணி அவரைச் சம்மதிக்க வச்சேன். வீட்டுலயும் ஜாதகம் பார்க்கிறது பொருத்தம் பார்க்கிறதுனு எந்தப் பேச்சும் வராததால, இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படல.”
“அவசியம் ஏற்படலனு நீயா எப்படிச் சொல்லுவ? கல்யாண பேச்சை எடுத்ததும், நீ அப்புறம் உன்னோட தங்கச்சியைக் கட்டி இருக்கானே ஒருத்தன்.? உங்க ரெண்டு பேர் மேலயும் இருக்கிற நம்பிக்கையால தான இதைப் பத்தி எல்லாம் விசாரிக்காம, இருந்திருப்பாங்க.? எப்படி, இப்படி மொத்த குடும்பத்தையும் ஏமாத்த மனசு வந்துச்சு.?”
“பொண்டாட்டி, நாலு மாச டிஃப்ரெண்ட்ஸ் தான? இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல.”
“ம்ம்.. பெரிய விஷயம் இல்ல? இதுவே தனாக்கும் என்னோட அண்ணாக்கும் அறிமுகம் ஆகாம இருந்து, நீயும் நானும் சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சிருந்தா? அந்த டைம்ல உடனே நம்மளோட வயசு வித்தியாசம் தெரிஞ்சிருந்தா, அப்பவும் உனக்கு என்னை மேரேஜ் பண்ணுற எண்ணம் வந்திருக்குமா?”
“எஸ்.. நோ டவுட்.”
“உனக்கு, நான் கேட்டது புரியல. பொதுவா, முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது, அவளுக்கு வயசு அதிகமா இருக்கிற பட்சத்துல, அவன் நார்மலா என்னனு சொல்லிக் கூப்பிடுவான்.?”
சத்தி திகைப்புடன் பார்க்க, “மாமனும் மாப்பிள்ளையும் செஞ்சிருக்க காரியத்தோட வீரியம் என்னனு புரியிதா.?”
மறுத்துத் தலை அசைத்தவன், ‘நான் உன்னை, தனாவோட லவ் விஷயம் வெளிய வர்றதுக்கு முன்னாடியே பார்த்திருக்கேன். அப்ப, நீ யாரு என்னனு எல்லாம் தெரியாது. பார்த்ததுமே பிடிச்சிச்சு. அந்த டைம்ல நீ எனக்கு மூத்தவளா இளையவளானு எல்லாம் கொஸ்டின் வரல. பிடிச்சிச்சு அவ்வளவு தான். சான்ஸ் கிடைச்சிச்சு, கட்டிக்கிட்டேன்.”
“நல்ல பதில் மிஸ்டர் கீர்த்தி. ஆமா எந்த தைரியத்துல கல்யாணம் செஞ்ச.? எனக்கு விஷயம் தெரிஞ்சா, என்ன நடக்கும்னு யோசிக்கலயா நீ?”
“யோசிக்கணும்னு தோணல. நடக்கும் போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். அப்புறம், ஏன் உன்னைக் கல்யாணம் செஞ்சா என்ன.?”
“செஞ்சா, என்னவா? நான் உன்னை விட மூத்தவங்கிறது புரியிதா இல்லையா?”
“புரிஞ்சு தான் கட்டி இருக்கேன். எனக்கு முன்னாடி பிறந்தது உன்னோட தப்பு. அதுக்காக, மனசுல இருக்க ஆசையை நான் விட்டுத் தரணுமா.?”
“ஹோ.. அப்ப, இது என்னோட தப்பு! எஸ். உண்மைதான், நான்தான் தப்பு. நீ நேர்மையானவன்னு நம்பினேன் பாரு, எவ்வளவு பெரிய தப்பு அது? என்னை ஏமாத்த மாட்டனு நினைச்சிட்டு இருந்தேன் இல்ல? அதுவும் நான் செஞ்ச தப்பு தான். உன்னைப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம, ஒரு பைத்தியக்காரி மாதிரி இவ்வளவு நாளும் இருந்திருக்கேன் பாரு! இப்பக்கூட நடந்ததை ஜீரணிக்க முடியாம, நீ செஞ்சது எல்லாம் தெரிஞ்சும் உன்கிட்ட விளக்கம் கேட்டுப் பேசிட்டு இருக்கேனே.? எல்லாமே என்னோட தப்பு தான்!” என்றவள் சோஃபாவில் சாய்மானத்திற்காக வைத்திருந்த சிறிய அளவிலான தலையணையை எடுத்து வீச, அந்த வேகத்தில் கரமானது இருக்கையின் கைப்பிடி நுனியில் மோதி தோல் கிழிந்து குருதி வெளியேறியது.
விழிகள் சிவந்திருக்க, உவர் துளிகள் அதிலிருந்து வெளிநடப்பு செய்தன.
நடந்ததைப் பார்த்த சத்தி, பெரிதும் அதிர்ந்தான்.
எப்பொழுதும் போல் விளையாட்டுப் பேச்சால் அவளின் உணர்வுகளைத் திசைத் திருப்பிட எண்ணி வார்த்தைகளை உதிர்க்க, இன்று அது ஆடவனின் சிந்தனைக்கு எதிராய் செயல்பட்டு மேகவியின் சினத்தை மேலும் தூண்டி விட்டிருந்தது.
மனைவியின் கை காயத்தைக் கண்டு பதற்றம் அடைந்தவன், “ஏய், என்ன செய்யிற? பாரு, ப்ளட் வருது? என்னமா.?” என்று அருகே சென்று கைப் பிடிக்க முயன்றான்.
“டோண்ட் டச்!” என அவனைத் தள்ளி விட்டவள் தன்னைத் தொட அனுமதியாது, அடுத்த நொடியே அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
சத்தி கதவைத் தட்டி, “ஸாரிமா. நான் தான் தப்பு. உன்கிட்ட என்னோட பர்த் டேட் பத்தி சொல்லாம இருந்தது தப்பு. அப்படி பேசினது தப்பு. நீ, எந்தத் தப்பும் செய்யல. ப்ளீஸ் இப்படிச் செய்யாத! கையில அடிபட்டு இருக்கு பாரு. ஹாஸ்பிடல் போகலாம், வா. இல்லேனா காயம் பெருசா ஆகிடப் போகுது. ப்ளீஸ் மேகவி, ப்ளீஸ். டோரை ஓபன் பண்ணு.
ஸாரி பொண்டாட்டி, ஸாரி. நான் தான் முட்டாள் தனமா, உன்னோட மனசைக் கஷ்டப்படுத்திட்டேன். அதுக்கு என்ன பனீஷ்மெண்ட் கொடுத்தாலும், அக்செப்ட் பண்ணிக்கிறேன். நான் செஞ்ச தப்புக்கு, இப்படி உனக்கு நீயே பனிஷ்மெண்ட் கொடுத்துக்காத, ப்ளீஸ்..!” எனக் கெஞ்சியபடி இருக்க, உள்ளே இருந்தவளோ விழிகள் சிந்தும் கண்ணீரிற்குத் தடைவிதிக்க இயலாது படுக்கையில் குருதி சொட்ட அமர்ந்து இருந்தாள்.
மெத்தை விரிப்பும் உடுத்தியிருந்த உடையும், அதன் துளிகள் பட்டு சிவப்பேறி இருந்தன அங்கங்கே!

