மையல் மீளுதே மேகவியே 29 – 2

அவனது முகம் தெரியவில்லை‌. எனினும் அது வழக்கமாய் ஆடவன் நிற்கும் இடம் என்பதால் மனம் தானாய் உறுதி செய்து கொண்டது.

‘இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?’ என மூளை வினா எழுப்பிட, அதற்கான விடை தேடும் எண்ணத்தை தள்ளி போட்டுவிட்டு, அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள்.

முன்பே பதிவு செய்திருந்த வாகனம் அவளிற்காக காத்திருந்தது.

மேகவி அதில் ஏறிச் செல்வதைப் பார்த்துவிட்டு, அவனும் புறப்பட்டான்.

இல்லத்தை அடைந்து அறைக்குள் சென்றவளின் கைப்பற்றி நிறுத்தினான் சத்தி.

“டோண்ட் டச்னு நான் முன்னாடியே சொல்லி இருக்கேன்.” என்றவளின் குரலில் சினத்தைக் கடந்து அழுத்தமும் கட்டளையும் நிறைந்து இருந்தது.

“ஸாரி..” என விலக்கிக் கொண்டவன், “கொஞ்சம் பேசலாமா ப்ளீஸ்.?”

“தப்பு செஞ்சவக்கிட்ட உனக்கு என்ன பேசணும்?”

தான் உரைத்ததைச் சொல்லிக் காட்டுகிறாள்‌ என்று புரிந்திட, “அப்பவே சொல்லிட்டேனே, என்மேல தான் தப்புனு. நீ எதுவும் செய்யல. ஸாரி, நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது!”

மறுமொழி எதையும் உரைக்காது கணவனை ஒரு பார்வைப் பார்த்தவள் அறைக்குள் செல்ல முனைய, வழியை மறித்து நின்றான்.

அதில் அவளின் நிதானம் கரைந்திட, “இப்ப உனக்கு என்ன வேணும்?”

“நீதான்! உன்னோட டைம் வேணும். உன் பேச்சு வேணும், பார்வை வேணும், சண்டை வேணும். கீர்த்தினு நீ கூப்பிடுறது வேணும்.” என வரிசையாய் சிறுபிள்ளை போல் அடுக்கியவனைக் கண்டு ஏனோ சிரிப்பு தான் வந்தது.

“நீ பேசுறது, சில்லியா தெரியலயா உனக்கு?”

“நான் உன்னை விட சின்னப் பையன் தான? ஏதோ தெரியாம செஞ்சிட்டேன். எத்தனை தடவை ஸாரி கேட்டேன்? இன்னமும் கூட கேட்கிறேன். வேணும்னா, நோட்டு போட்டும் எழுதி தர்றேன். பெரிய பொண்ணு நீ, மன்னிக்கக் கூடாதா என்னை.?”

அவனது பேச்சில் திகைத்தவள், “ஏது, நீ சின்னப் பையனா? நான் பெரிய பொண்ணு? இந்தப் பெரிய பொண்ணுக்கிட்ட தான் எல்லாத்தையும் மறைச்சு கல்யாணம் செஞ்சிருக்க!”

“சொல்லி இருந்தா, நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருப்பியா.?”

“நோ.”

“அதான் சொல்லல.”

அவள் முறைக்க, “ஸீ பொண்டாட்டி! நாலு மாசம் எல்லாம் பெரிய விஷயமே இல்ல. ரெண்டு பேருக்குமே ஒரே ஏஜ் தான? மாசம் தான் டிஃபரெண்ட்ஸ்.”

‘இதுக்குத்தான் இவனைப் பேச விடாமலேயே இருந்தேன். கொஞ்சம் விட்டா, எதையாவது சொல்லி மொத்தமா ஆளைக் கரைச்சிடுவான்!’ என மனதோடு எண்ணியவள் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“ஊருல ஃபங்ஷன் நடக்கப் போகுது‌. இந்த டைம்ல நாம இப்படி இருக்கிறது நல்லது இல்ல. வீட்டுல இருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா, வருத்தப்பட மாட்டாங்களா? அவங்க கேட்டா, என்னனு பதில் சொல்லுறது?”

“நடந்ததைச் சொல்லு‌. ஆமா, அதுக்கு தைரியம் இருக்கா உனக்கு?”

அவன் பாவமாய் பார்க்க, “என்ன.? சொல்லுறியா? என்கிட்ட கேட்டா, நான் நிச்சயமா சொல்லிடுவேன். அதுக்கு அப்புறம் ஃபேமிலியை எப்படி ஃபேஸ் பண்ணுவ நீ?”

“அது விஷயம் இல்ல. நடந்த கல்யாணத்தை மாத்தவா முடியும்? சோ, அவங்கக்கிட்ட சொன்னா புரிஞ்சிப்பாங்க. உன்னை மாதிரி இல்ல.”

“ம்ம்.. என்னை மாதிரி.? ரொம்ப கஷ்டமா இருக்கு இல்ல? நீ செய்யிறது எல்லாம் தப்பில்ல. அதுக்கு நான் ரியாக்ட் பண்ணுறது தான் தப்பு. இந்த தப்பான பொண்ணு உனக்கு வேணாம். சரியா?”

“ஹேய் பொண்டாட்டி, நான் அப்படி மீன் பண்ணல. ரொம்ப ரொம்ப ஸாரி.. இந்த விஷயத்தை முதல்லயே சொல்லி இருக்கணும். நீ என்னை அக்செப்ட் பண்ணதுக்கு அப்புறம், கொஞ்சம் மெதுவா சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.”

“இது வெளிய தெரிஞ்சா எல்லாரும் என்ன நினைப்பாங்கனு யோசிச்சியா?”

“நீயோ நானோ சொல்லாம யாருக்கும் தெரியப் போறது இல்ல. நமக்கு அதுதான் வேலையா? செய்யிறதுக்கு ஆயிரம் வேலை இருக்கு‌. ஃபியூச்சரைப் பத்தி யோசிக்கணும். நம்ம குழந்தையோட டெலிவரிக்கான ஹாஸ்பிடல்ல இருந்து, மேட்ரிமோனியல்ல ரெஜிஸ்டர் பண்ணுற வரைக்கும் இப்பவே பிளான் பண்ணி வைக்கணும். இதை எல்லாம் விட்டுட்டு, அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்கிற? நமக்குப் பிறக்கப் போற பிள்ளைகளோட மேரேஜைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்.”

“டாப்பிக்கை சேஞ்ச் பண்ணாத! சுத்தியலை வச்சு தட்டி பல்லை உடைச்சிடுவேன், பார்த்துக்கோ. நான் செஞ்ச மேரேஜே அந்தரத்துல தொங்குது. இதுல பிறக்காத பிள்ளைக்கு இவன் இப்பவே அலையன்ஸ் பார்க்கிறானாம்.”

“முடிஞ்சு போன நம்ம மேரேஜைப் பத்திப் பேசுறதுல தான் ஒரு பிரயோஜனமும் இல்லயே பொண்டாட்டி? அதான் அடுத்ததைப் பத்தி யோசிக்கலாம்னு சொன்னேன்.”

“ஹோ.. ஒன்னும் இல்லேல? சரி, அப்ப டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிடுறேன். பிரயோஜனம் இல்லாததை எதுக்கு வச்சுக்கணும்?”

“அச்சச்சோ! பொண்டாட்டி பொண்டாட்டி, இப்படிப் பட்டுனு முடிவெடுத்தா எப்படி?”

“நான் எப்பவும் தப்புத் தப்பா செஞ்சு, முடிவையும் தப்பா தான் எடுப்பேன். கெட் லாஸ்ட்!” என்றவள் கணவனைத் தள்ளிவிட்டு அறைக்குள் சென்றாள்.

“இந்த கெட் லாஸ்ட், எதுக்கானது?” என விடாமல் வினா எழுப்பியவாறே பின்னால் வந்தவன், “இந்த ரூமுல இருந்தா, வீட்டுல இருந்தா, உன் லைஃப்ல இருந்தா, இல்ல மனசுக்குள்ள இருந்தா.?”

“எல்லாத்துல இருந்தும் தான், தயவு செஞ்சு வெளிய போறியா.?”

“வெளிய போகச் சொல்லுற அளவுக்கு உன்னோட மனசை நான் காயப்படுத்தி இருக்கேனா மேகவிமா.?” என்றவனின் குரல் இயல்பில் இருந்து இயலாமைக்கு மாறியிருந்தது.

சட்டென்ற அவனின் தொனி மாற்றம் பாவைக்கு லேசான வலியைக் கொடுக்க, “வயசு கம்மியான பையனை கல்யாணம் செஞ்சுக்கிறதுல தப்பில்ல பொண்டாட்டி. பொதுவா, ஆண்களை விட பெண்கள் சீக்கிரமே மெச்சூர்டா திங்க் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க‌. தன்னை பத்தி மட்டும் இல்லாம அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்கனு எல்லாருக்காகவும் யோசிப்பாங்க. ஆம்பளைங்க அந்த ஸ்டேஜுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்.

அதேபோல ஜென்ஸ் உடம்பை நல்லபடியா பார்த்துக்கிட்டா, அவங்க தோற்றத்துல பெருசா எந்தவித மாற்றமும் வராது. வயசானா வர்ற சேஞ்சஸ் எல்லாம் நார்மல். ஆனா லேடிஸுக்கு அப்படி இல்ல. டெலிவரி, அதுக்குப் பின்னாடி ஏற்படுற சின்ன சின்ன பிரச்சனைகளால உடம்புல நிறைய மாற்றம் வரும். இயல்பை விட வயசு அதிகமானது மாதிரி பிம்பத்தைக் கொடுக்கலாம்.

இந்த டைம்ல ஆம்பளைங்க கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கலேனா, கணவன் மனைவி உறவுக்குள்ள பிரச்சனை வரும். தோற்றமும் மனசும் சரியா பொருந்துறதுக்குத் தான், இந்த ஏஜ் கேப்.

மத்தவங்களை மாதிரி நமக்கு அந்த வித்தியாசம் தேவை இல்லனு நினைக்கிறேன். நான் லேட்டா பிறந்திருந்தாலும், உன்னோட அளவுக்குக் கொஞ்சம் பக்குவமா தான யோசிக்கிறேன்? நீயுமே ஏஜ் தெரியாத அளவுக்கு தான, உன்னோட உடம்பை மெயிண்டெயின் பண்ணுற. ஜோடி ஓகேவா தான் இருக்கோம்‍, அப்புறம் என்ன.?”

கணவனை விழிகள் சுருக்கி பார்த்தவள், “நல்லா லெட்க்சர் எடுக்கிற. இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்கிறியா?”

அவளைப் புரியாமல் பார்த்தவன், “தெரியுமா? தெரிஞ்சிருந்தும், ஏன் என் மேல கோபமா இருக்க.?”

“எனக்கு ஆம்பளைங்க மேல நம்பிக்கையே கிடையாதுனு சொல்லி இருந்தேன், ஞாபகம் இருக்கா.? நீ இப்ப செஞ்சிருக்க வேலைக்கு, இனி உன்னை எந்த விஷயத்துலயாவது நம்ப தோணுமா? ஒவ்வொரு நாளும் எதை எல்லாம் என்கிட்ட மறைச்சு வச்சிருக்கியோனு சந்தேகம் தான் வரும். அந்த லைஃப்ல சந்தோஷமோ நிம்மதியோ இருக்கும்னு நினைக்கிற?”

மனைவியின் சொற்களிற்கான பொருளும் அவளது சினத்திற்கான காரணமும் புரிந்திட, “காட்!” என்று தலையில் அடித்துக் கொண்டான் சத்யகீர்த்தி.

error: Alert: Content selection is disabled!!