சென்னையில தனியா இருக்க. டீம் லீடரா ஒர்க் பண்ணுற. பாதுகாப்புக்காக மத்தவங்க உன்கிட்ட இருந்து விலகி நிக்கிறதுக்கும், கீழ வேலை பார்க்கிறவங்க உன்னோட சொல்லை கேட்டு நடக்கிறதுக்கும், நீ இப்படி இருக்க வேண்டியது அவசியமாகுது. இதுல தப்பு எதுவும் இல்ல. இடத்துக்கும், சூழலுக்கும் தக்கபடி உன்னை மாத்திக்கிட்ட. அவ்வளவு தான்.”
வியப்புடன் நோக்கிய மேகவி, “எப்படி உன்னால இதை எல்லாம் அனலைஸ் பண்ண முடியிது?”
“சிம்பிள். நீ வளர்ந்த சுச்சுவேஷன் உன்னை இப்படி மாத்தின மாதிரி. என்னோட அனுபவம் இந்த மாதிரி சில விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்கு.
அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால, அவங்களோட வலியைப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கோங்கனு சின்ன வயசுல அப்பா அடிக்கடி சொல்லுவாரு. முதல்ல அம்மாவுக்காக செய்ய ஆரம்பிச்சு, அப்படியே இப்ப எல்லாருக்காகவும்னு மாறிடுச்சு. வாழுறது அப்படி ஒன்னும் கஷ்டமோ, மாயாஜாலமோ இல்ல பொண்டாட்டி. இதோ, இப்ப நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கோமே? இதுதான் லைஃப்.”
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “தேங்க்ஸ் கீர்த்தி.”
“ம்ம்.. ஆனா, உதட்டுல இருக்க சிரிப்பு மனசுல இருந்து வந்த மாதிரி தெரியலயே? இன்னும் என்ன குழப்பம் உனக்கு?”
“அண்ணனைத் தப்பா நினைச்சதுக்கு ஸாரி கேட்கணும். அதான் எப்படிப் பேசுறதுனு..”
“பேசாத, வேணாம்.”
“பேசாம எப்படி? எனக்கு ஒரு மாதிரி கில்டியா இருக்கும்.”
“உன்னோட கில்டிக்காக அவரோட மனசுல பாரத்தை ஏத்திடாத. ஒரு விஷயம் சொல்லவா? நீ இந்தக் காரணத்துக்காகத்தான் விலக ஆரம்பிச்சனு மாம்ஸுக்கு இப்ப வரைக்கும் தெரியாது. தெரிஞ்சா வருத்தப் படுவாரு.
அதோட அவருக்குள்ளேயும் ‘நாம விளையாட்டா செஞ்ச ஒரு விஷயத்தை, மத்தவங்க வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டாங்களே’னு சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்யும். அது தன்னோட தங்கச்சி மனைவினு நெருங்கிய உறவுகளா இருக்கிற போது, கூட கொஞ்சம் வலியை கொடுக்கும். இப்ப.. நீ போய் அதைப் பத்திப் பேசினா, அந்த வலி இன்னுமே அதிகமாகலாம்.
தப்புக்கு எப்பவும் மன்னிப்பு தான் கேட்கணும்னு இல்ல. அதைத் திருத்திக்கிட்டாலே போதுமானது. பழைய மாதிரி மாம்ஸ் கூட பழகு. தானா, அந்த கில்ட் சரியாகிடும்.”
அவள் அமைதியாய் தலை அசைக்க, “என்ன ஓகேவா?”
“ஓகே தான்.”
“சரி, ரெஸ்ட் எடு. இல்லேனா வேலையைப் பாரு!” என்றவன் எழுந்து செல்ல, “கீர்த்தி..”
மனைவியின் குரலில் நிதானித்தவன், “என்ன பொண்டாட்டி?” என்றிட, “நான் உன்னை முழுசா நம்புறேன். அதை எப்பவும் காப்பாத்துவ தான?”
“ஸுயர். நம்ம கல்யாணத்தப்பவே, அக்னியை சாட்சியா வச்சு உனக்கு பிராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கேனே? நிச்சயமா அதைக் காப்பாத்துவேன்.”
கணவனது சொற்களில் அகமும் முகமும் மலர்ந்திட, “தேங்க்ஸ் கீர்த்தி.*
“இவ்வளவு பேசி இருக்கேன். வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?” என அவன் வேண்டுமென்றே சீண்ட, “சரி, வேற என்ன வேணும்.?”
“எது கேட்டாலும் கிடைக்குமா.?”
அவனைக் கூர்ந்து நோக்கியவள், “ஏடாகூடமா எதுவும் கேட்கப் போறியா என்ன.?”
“எஸ்..” எனச் சிரித்தவன், “வீட்டுல எல்லாரும் பெரியவங்களா இருக்கோம். ஒரு மாதிரி போரிங்கா இல்ல.?”
“அதுக்கு?”
“குழந்தை பெத்துக்கலாமா? லைஃப் இன்னும் கொஞ்சம் கலர்ஃபுல்லா மாறும்.”
“அதுசரி! குழந்தையைப் பெத்தா அதைப் பார்க்கவே நேரம் சரியாப் போகும். அப்புறம் எங்க இருந்து வேலைக்கு எல்லாம் போறது?”
“உனக்கு ஓகேனா சொல்லு, அத்தையையும் அம்மாச்சியையும் சென்னைக்குப் பார்சல் பண்ணிடுவோம். இவ்வளவு நாள் மாம்ஸ் தான அவங்களைப் பார்த்துக்கிறாரு. இனி நாம பார்த்துக்கலாம். அவங்க, நம்ம குழந்தையைப் பார்த்துக்கட்டும்!” என்றுவிட்டுச் செல்ல, “ஓகே!” எனப் பதில் தந்தாள் தணிந்த குரலில்.
சட்டென்று திரும்பிய ஆடவன், “எதுவும் சொன்னியா?” என்றிட, மறுத்துத் தலை அசைத்துப் புன்னகைத்தாள் அவள்.
நாட்கள் வேகமாய் நகர்ந்தன. ஊரிற்கு வந்து நான்கு தினங்கள் கடந்து போனது. விழா முடிந்த மறுநாள் சத்தி மனைவியுடன் மாமியாரின் இல்லத்திற்கு செல்ல, சாகரன் மனைவியின் வீட்டில் தங்கிக் கொண்டான்.
இரு பெண்களிற்கும் அவரவரின் பிறந்தகத்தில் இரண்டு நாட்கள் கழிந்தது.
கனகவள்ளி பெயர்த்தியிடம், “எப்ப சென்னைக்குக் கிளம்புறீங்க?” என விசாரிக்க, “கிளம்பணும் அப்பத்தா. அண்ணா நாளைக்கு இங்க வர்றேன்னு சொல்லி இருக்கான். அவன்கூட ஒரு ரெண்டு மூனு நாள் இருந்துட்டு போகலாம்னு நினைக்கிறேன்.” என்று மறுமொழி தந்தாள்.
“உன் அண்ணன் கூட இருக்க போறியா? இது என்ன அதிசயமா இருக்கு?”
“ஏன், இருக்கக் கூடாதா நான்.?”
“இரு இரு. யாரு வேணாம்னு சொன்னா? கல்யாணம் ஆனதுக்குப் பின்னாடி தான்.. பெத்தவங்க, கூட பிறந்தவங்க மேல எல்லாம் பாசம் வருது என்ன?”
அவள் பதில் உரைக்காமல் புன்னகைக்க, “சரி, கல்யாணம் முடிஞ்சு போனப்ப, நான் சொல்லிவிட்டது என்ன ஆச்சு?”
“என்ன சொல்லி விட்ட கிழவி?”
“கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதையா, அதுக்குள்ள மரியாதை தேய்ஞ்சு போச்சு?”
“பின்ன, பேசக் கூடாததை எல்லாம் கேட்டா?”
“எதைப் பேசக் கூடாது? எப்ப பிள்ள பெத்துப்பனு நான் கேட்கக் கூடாதா?”
“கூடாது! அதை நானும் என் ஹஸ்பெண்டும் முடிவு செஞ்சுக்குவோம். நீ கேட்காத கிழவி!”
“வாயிலயே போடணும். ஷீலா ராத்திரிக்குக் கோதுமை தோசை ஊத்தும் போது அதுல கொஞ்சம் கோந்தையும் கலந்து செஞ்சு கொடு. அதை சாப்பிட்டாவது வாயை மூடுறாளானு பார்ப்போம்.” என உரைக்க, இவர்களது பேச்சைக் கேட்டிருந்த சத்தியும் ஷீலாவும் சிரித்தனர்.
அறைக்குள் வந்ததும் பின்னிருந்து அணைத்த கணவனது செயலில் முகம் மலர்ந்த மேகவி, “என்னடா.?” என்றவாறே தனது வயிற்றின் மீது இருந்த அவனது கரத்தின் மீது தன் கையைப் பதித்தாள்.
“இந்த ரெண்டு நாள்ல நிறையவே மாறிட்ட பொண்டாட்டி!”
“அப்படி என்ன மாறிட்டேன்?”
“சென்னையில இருக்கும் போது என்கிட்ட இவ்வளவு ஸுவீட்டா எல்லாம் நடந்துக்க மாட்ட. ஆனா, இப்பப்பாரு. ஹக் பண்ணா, உன்கிட்ட இருந்து உடனே ரெஸ்பான்ஸ் வருது.”
அவள் மெலிதாய்ச் சிரித்திட, “மையல் மீளுது மேகவிமா!” எனக் காதோரம் உரைத்து கழுத்து வளைவில் இதழ் பதித்தான்.
“எனக்கும் தான், மிஸ்டர் கீர்த்தி! உன்கிட்ட இருந்ததை, எனக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணி விட்டுட்டியா என்ன?” என்று வினவியவள் அவன் புறம் திரும்பி கன்னத்தில் அதரங்களை ஒற்றி எடுத்தாள்.
“நான் ஒன்னும் டிரான்ஸ்ஃபர் பண்ணல. நீயாவே, என்கிட்ட இருந்து எடுத்துட்டனு நினைக்கிறேன்!” என உரைத்திட, இருவருக்கு உள்ளும் இருந்த மையல் மோகமாய் மாற்றம் அடைந்தது.
வாக்கும் வாதமுமாய், எதிரும் புதிருமாய், ஊடலும் கூடலுமாய் அவர்கள் கடந்து வந்த தருணங்களின் முடிவில், தற்போது மேகவிக்கு கணவனின் மீதான பிடித்தத்தில் மையல் முக்குளித்து நின்றது.
முற்றும்

