Skip to content
“அங்கதான் நம்மட கடைகளுக்கு தேவையான கட்லட் எல்லாம் செய்யிறது. மதி, இங்க வாம்மா. பைரவிக்கு மிச்சத்தையும் காட்டு!” சின்ன மகளை அழைத்து அவளை மாட்டிவிட்டுச் சென்றார், அவர்.
அடுத்து உருண்ட ஒரு மணிநேரமும் கடந்திருக்கும், மதியும் நிலாவும் நிறையவே சிரமப்பட்டுத் தான், பைரவியைச் சமாதானம் செய்வித்தார்கள், அது கூட அரைகுறையாகத்தான்.
“ஆன்ட்டிட முகத்துக்காக மட்டும் தான் நிக்கிறன். உண்மையா எனக்கு உங்கட வீட்டில சாப்பிட எல்லாம் விருப்பம் இல்ல.” என்று சொன்னவளுக்குக் கண்கள் கூடக் கலங்கிற்று.
“அந்தாள், அதான் உம்மட கொண்ணர் என்னைப் பார்த்து முண்டம் எண்டவர் தெரியுமா? அதும் கண்ட முதல் நாளே! ஒரு பட்டிக்காடு! காட்டுமிராண்டி!” சகோதரிகள் முகம் கன்றுவதைப் பொருட்படுத்தாது சொன்னாள்.
“நீங்க மட்டும் திறமோ! சூப் எத்தின ஆள் எல்லா? அதும் அவரிட ஹோட்டலில, ஆட்களுக்கு முன்னால வச்சு! அதெல்லாம் நாகரிகமான மனுசர் செய்யிற வேலை என்ன?” படபடவென்று கேட்டுவிட்டாள், மதி.
“சும்மா இரு மதி!” கண்டித்தாள், நிலா.
“பின்ன என்னக்கா? நம்மட அண்ணாவப் பற்றி இவாக்கு என்ன தெரியும்?” வந்த அழுகையை மறைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டாள், மதி. அதன் பின்னரே சற்று அடங்கினாள், பைரவி.
அப்போதும், “பெரிய அண்ணா. அவரிட தங்கச்சிகளப் போலத்தான் மற்றவேயும் எண்டு கூட பார்க்கத் தெரியாத பெரிய நல்லவர்!” புறுபுறுப்போடு வறுத்துக்கொண்டே தான் இருந்தாள்.
மயூரன் ஆட்கள் வர, கேட்டடியில் வைத்தே வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டே ஓய்ந்தாள்.
“இதுக்கும் சேர்த்து அந்தாளுக்கு என்ன செய்யப் போறன் எண்டு இருந்து பாருங்க! ஆன்ட்டியை கொண்டே சுடுதண்ணி வச்சு, அந்தாளிட மூஞ்சிய அவிய வைக்காட்டி நான் பைரவி இல்ல!” சபதம் எல்லாம் போட்டவள், கௌசல்யா வந்து சாப்பிட அழைக்க, முதல் ஆளாகச் சென்று அமர்ந்துவிட்டாள்.
“கனடாவில இருந்து வந்த பிறகு, இண்டைக்குத் தான் நல்ல சாப்பாடு!” ரசித்து ருசித்துச் சாப்பிட்டவளை, முறைத்தான் மயூரன்; மதி, நிலாவும் தான்.
“ஹலோ! என்ன பிரச்சினை உங்களுக்கு? சாப்பிடத்தானே கூப்பிட்டனீங்க? பிறகென்ன? ஆன்ட்டிட்ட எல்லாம் சொல்லவோ? சொன்னனோ, தன்ர மகனா இப்பிடி எண்டு, ஆன்ட்டிக்கு அட்டாக்கே வந்திரும்.” என்றவள், மயூரனிடமும் மைத்துனிகளிடமும் அடியும் நுள்ளும் வாங்கிக் கொண்டே உண்டாள்.
“காளான் கட்லட் வேற லெவல் ஆன்ட்டி! எனக்கு இன்னொரு முறையில செய்யத் தெரியும், சொல்லித் தாறன். ஆனா… அது கடையில எல்லாம் செய்து குடுக்க ஏலாது ஓகே!” என்றவள் தலையில் பாசமாக வருடினார், தாய்.
“வடிவாச் சாப்பிடன. எனக்கு அப்பிடியே பாமினியப் பாக்கிறது போல இருக்கு.” என்றாரா?
அப்போதுதான், இவர்களை, நன்றாகத் தெரியும் என்று தாய் சொன்னதே நினைவில் வந்தது. சமாளித்துக் கதைக்க வேண்டியதுதான் என்ற முடிவில், “அம்மா அப்பாவைத் தெரியுமா ஆன்ட்டி?” என்றிருந்தாள்.
“தெரியுமாவா? இவே சொல்லேல்லையா?” கௌசல்யாவுக்கு ஆச்சரியம்.
“எதைத்தான் சொல்லிச்சினம் ஆன்ட்டி? ஆனா ஒண்டு, சொல்லி இருக்க உங்களைச் சந்திக்கிற, இந்த அருமையான புரியாணி சாப்பிடுற சந்தர்ப்பம் கிடைக்காமலும் போயிருக்கும்.” தன்னைச் சுற்றி இருந்தவர்களை முறைத்தாள்.
“இந்த ஒண்டுக்காக, போனால் போகுதெண்டு விடுறன், உங்களை மட்டும்!” தொடர்ந்து சொன்னவளையும் பிள்ளைகளையும் விளங்காது பார்த்தார், கௌசல்யா.
டினோசன் பற்றி ஆரம்பத்தில் சொன்னதோடு சரி, கையைப் பிடித்தான், தமையன் சென்று அடித்தான், பிறகு நடந்தது என்று, எதுவும் அவர் கவனத்துக்குப் போகவில்லை. வீணாக யோசிப்பார், கவலைப்படுவார், பயப்படுவார் என்று, ஆரூரன் தெரியவிடவில்லை.
“அங்கப் பின்னால ஒரு காணி கிடக்கே, அதுக்க இருக்கிற வீட்டில தான் பாமினி பிறந்து வளர்ந்தது. கலியாணம் வரை அங்க தான். பிறகுதான், அதும் இப்ப ஏழெட்டு வருசங்களுக்கு முதல் தான், மயூரன்ட அப்பா கொக்குவிலில வீடு கட்டிட்டுப் போயிட்டார். அந்தக் காணி உங்கட அம்மா பெயரிலே தான் இருக்கு.” என்று தொடங்கி, பழைய கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார், கௌசல்யா.
இப்படியே, கடிபட்டு அடிபட்டு நேரம் நகர்ந்தது. பொழுது சாயத் தொடங்கவும் மயூரன் தங்கைகளோடு புறப்பட்டான். பைரவியும் தயாரானாள்.
“நாளைக்குச் சனி, அறையில நிண்டு என்ன செய்வீர்? இங்க பம்பலா நில்லுமன்.” மறித்தாள், நிலா.
“விசரா உமக்கு?” என்றாள் பைரவி. அவன் பார்வையில் படும் படி இங்கு வந்து போவதா என்றிருந்தது.
அவள் மனமறிந்து, “அண்ணா நாளைக்குத் தான் வருவார். வந்தாலும் சிலவேளைகள் தான் வீட்டில தங்கிறது. கொக்குவில் காளான் பண்ணையில தான் அநேகம் தங்குவார்.” என்றாள், நிலா.
தம் வீட்டுக்கு அழைத்துப் போக முடியவில்லையே என்ற குன்றலோடு நின்றார்கள், மயூரன் ஆட்கள்.
“சரி நில்லும் நில்லும். அப்ப கோவத்தில் ஏதோ சொல்லிப்போட்டன். நீரும் எவ்வளவோ சொன்னீர் தானே? ஒண்டுக்கு ஒண்டு சரியாகிற்று!” கட்டிப்பிடித்தாள், மதி.
இவர்களுள் உள்ள பிக்கல் பிடுங்கல் தெரியாத கௌசல்யா வந்து, “நிண்டு போட்டுப் போம்மா!” தன் பங்குக்குச் சொன்னார்.
“நான் உடுப்பு ஒண்டும் கொண்டு வரேல்லையே! இன்னொரு நாளைக்கு…” என்றவளை விட்டார்களா?
“எங்கட உடுப்புகளைப் போட மாட்டிரா? சரி, வாரும் போய் எடுத்திட்டு ஆன்ட்டிட்டயும் சொல்லிட்டு வந்திரலாம்.” என்று நிலா வெளிக்கிட, தானே அழைத்துச் செல்வதாகச் சொன்னான், மயூரன்.
தங்கைகளை அங்கேயே நிற்க விட்டுச் சென்றவன், அடுத்த அரை மணித்தியாலத்தில், பைரவியும் சிறு பயணப்பையுமாகத் திரும்பி வந்திருந்தான்.
error: Alert: Content selection is disabled!!