11
ஐப்பசி மாதம்! பச்சைப் பசேலென்றிருக்கும் சுற்றுப்புறம் நிறம் மாறி, வரப்போகும் பனிக்காலத்திற்குக் கட்டியம் கூறும் காலப்பகுதியல்லவா?
இலைகளற்ற கிளைகள், அவைகளை இழந்துவிட்ட துக்கத்தில் வாடி நிக்கும் காட்சி ஒன்றும் மனதில் அவ்வளவு இரம்மியம் சேர்க்காது; ஒருவிதச் சோர்வைத் தந்துவிடும்.
அதுபோதாதென்று, சுளீரென்ற குளிர்காற்று, அடிக்கடிக் கொட்டும் மழை என்று முகம் சுளிக்க வைத்துவிடும்.
இவற்றோடு, முக்கி முனகி, பிரிய மனமேயின்றிப் பிரியும் இருளவனோ தன் பங்கிற்கு அழிச்சாட்டியம் பண்ணுவான். அப்படி, பொழுது புலர்ந்த பிறகும் சிலமணிநேரம் இருந்துவிட்டு, ஆற ஆமரப் பிரிபவன், மதியம் கடந்து சிலமணி நேரங்களில் பாய்ந்து வந்து ஆக்கிரமித்தும் கொள்வான்.
சொல்லப்போனால், மாந்தர் மனங்களில் ஒரு வித மந்தமான மனநிலையை விதைத்துவிடும் நாட்கள் இவை!
அப்படியிருந்த இந்நாட்டில் அதுவெல்லாம் கனவோ எனும் வகையில் வருடா வருடம் காலநிலையில் பலத்த மாற்றங்கள். ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய அடையாளங்கள் சிறிது சிறிதாகத் தொலைந்த வண்ணம் இருப்பதை, அவ்வளவாக, பசியம் மாறாச் சுற்றமும், அந்திக்கருக்கலில் இருந்த தாராளமான வெளிச்சமும், வருடிச் செல்லும் சில்லிடலோடு கூடிய இதமான காலநிலையும் சுட்டி நின்றது.
“போகிற போக்கைப் பார்த்தால் பனிக்காலத்தையோ, பனித்தூவலையோ பார்க்கவே முடியாது போல!” என்றபடி, எழுந்து கொண்டார், மதுரா.
“உண்மைதான். இல்லையென்றால் இப்ப நல்ல குளிர் தொடங்கி இருக்குமே! இது பார்த்தால் சிலவேளைகளில வெயில் காலம் போல இருக்கு!” என்றார், நித்தி.
“எங்களுக்கு நல்லதாப் போச்சு! வந்த இடத்திலும் நல்ல காலநிலை. கலியாணம் முடிஞ்சு போக அவுஸ்திரேலியாவில வெயில் காலம். சந்தோசமாக இருக்கும்.” என்றபடி, தானும் எழுந்து கொண்டார், கார்த்திகேயனின் தமக்கை.
“இரவுக்கு ஏதாவது சாதாரணமாகச் செய்வம் மது; அதையும் இதையும் சாப்பிட்டு ஒருவருக்கும் பசியில்லை!” என்று சொல்லவும் செய்தார், அவர்.
“இரவுக்கு கமலா மாமி கொண்டு வந்த அரிசி மாவில பிட்டு, இறால் பொரியல். மாமியே செய்வா எண்டு சொல்லிப் போட்டா!” குறுக்கிட்டார், நித்தி.
“நீ இன்னும் சின்னப்பிள்ளை போல அவவிட கழுத்தில தொங்கு! பாவம் தானே? நேற்றுத்தான் இலங்கையில இருந்து வந்தார். களைப்பு இருக்காதா நித்தி?” தங்கையைக் கடிந்து கொண்டார், தமக்கை.
“ஹே..ஹே…இது எனக்கும் கமலா மாமிக்கும் இடையில சரியோ? யாருமே…ஏன் அவவின்ட மகள், என்ர செல்ல அண்ணி கூட எட்டிப் பார்க்கேலாது!” நித்தி சொல்ல, “உங்களுக்குள்ள நான் வரேல்லையம்மா! நீராச்சு அம்மாவாச்சு!” கரத்தைத் தூக்கினார் மதுரா.
“அது!” என்ற நித்தியைப் பார்த்த அவரின் தமக்கை, மனதுள் இருந்த மகிழ்வை மறைத்துச் சீண்டினார்.
“எப்போதான் வயது வந்த பிள்ளைகளுக்கு அம்மா போல் நடந்துகொள்ளப் போறியோ! உன்ர மாமியும் அண்ணியும் போதாதென்று கமலாம்மா வேற! எல்லோருமாச் சேர்ந்து குடுக்கிற இடம்.”
“சதீஷ், கார்த்தி..ரெண்டு பேரையும் விட்டாச்சே!” தானும் இடையிட்டார், மதுரா.
அவர் முகத்திலோ, நித்தியின் மீதுள்ள அன்பில் கனிந்த முறுவல்!
“எத்தின வயசானாலும் எங்களுக்கு முதல் செல்லம் நித்திதான் கா!” சொல்லவும் செய்தார்.
“அப்பிடிச் சொல்லுங்கோ என்ர செல்ல அண்ணி!” மதுராவைத் தோளோடு அணைத்துக்கொண்ட நித்தி, தமக்கையைச் செல்லமாக முறைத்துவிட்டு, “கண் வைக்காதீங்க தாயே, கண் வைக்காதீங்க!” எனக் கேலியாகச் சொன்னாலும், தன் இளமைக்கால வாழ்வின் அழகுக்குக் காரணமானவர்கள் தான் அவர் நினைவில் வந்தார்கள்.
“உண்மைதான்கா! திடீரென்று அம்மா அப்பா இல்லையெண்டதும் எப்பிடி எப்பிடியெல்லாம் கற்பனை பண்ணியிருக்கிறன் தெரியுமா? நானும் அண்ணாவும் தனியா…அப்பா! அந்த நாட்களில வாழ்க்கை எவ்வளவு பயங்கரமா இருந்திச்சுத் தெரியுமா?” என்றவருக்கு, முதன் முதல் மதுராவைச் சந்தித்த போது தானிருந்த மனநிலை தான் நினைவில் வந்தது.
அதோடு, அன்று மதுரா இருந்த நிராதரவான நிலையே, தன் மனதில் சுமந்திருந்த துக்கத்தை விரட்டி மதுராவைத் தேற்றத் துணை நின்றது என்பதையும் நினைத்துக்கொண்டார்.
அதேநேரம், தனக்கு நிகழ்ந்துவிட்ட அத்தனை வேதனைகளையும் சவால்களையும் நிமிர்வாகவே எதிர்கொண்ட மதுரா, ஒரு தாயாய்த் தன்னைப் பார்த்துக் கொண்டதையும்… ‘ஏஞ்சல்கள்!’ அவர் பார்வை கலகலத்தபடி இருக்கும் ஆரணி, ஆரபியில்!
தமையனின் காதல்…அதை ஏற்காது பிரிந்து சென்ற மதுரா!
‘அந்தப் பிரிவும் தேவையானதுதான். அண்ணாவும் அண்ணியும் ஒருவர் மற்றவர் மீது கொண்ட நேசத்தை மாசின்றி உணரவைத்த பிரிவல்லவா அது!’
அந்த நாட்களின் நினைவு வந்தாலே தன் இளம் நாட்களுக்குச் சென்றுவிடும் நித்தி, இப்போதும், “அண்ணாவும் நானும் இப்பிடிச் சந்தோசமா இருக்கிறம் எண்டால், எல்லாம் என்ர செல்ல அண்ணியால தான்!” எப்போதும் போலவே மதுராவின் கன்னத்தில் ஒரு “இச்!”
“அய்யோ நித்தி! இந்தப்பழக்கத்த எப்பத் தான் விடப் போறீரோ! பாருங்க அக்கா இவள!”
நித்தியை விலக்கிவிட முனைந்தாலும், அவர் விட்டால் தானே? அதுவும் அப்படியே கதைத்தபடி கீழே வந்திருந்தார்களே!
அங்கே, இவர்களை சுவாரசிய முறுவலோடு எதிர்கொண்டார்கள், கார்த்திகேயனும் அவன் அத்தானும் சதீஷும்.
மதுராவின் பார்வை அவர்களில் பட்டு விலகி கணவனில் படிந்தது.
எப்போதும் போலவே, தங்கையின் செய்கையில் தடுமாறித் தத்தளித்த மனைவியைப் பார்த்திருந்த கார்த்திகேயன் விழிகளில் இரகசியச் சிரிப்பு!
பதிலுக்கு, பெரிதாகக் கோபப்படும் பாவனையில் முறைத்தார், மதுரா. கார்த்திகேயனோ, வாய்விட்டுச் சிரித்தார்.
அதோடு விட்டுவிடாது, அருகிலிருந்த தமக்கை கணவர், சதீஷ் இருவரையும் பார்த்துவிட்டு, “ராது இங்க வந்த புதிசில, இப்பிடித்தான் நித்தி அவவக் கட்டிப்பிடிச்சுக் காதலிக்கிறன் எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சவள். அவளிட்ட இருந்து எப்பிடித் தப்பிறது எண்டு திகைச்சு நிக்கேக்கத் தானே ராதுட பார்வை என்னில விழுந்திச்சு! அது எல்லாம் ஒரு அழகான காலம்! இல்லையா நித்தி?” வம்பிழுத்தார்.
“ஹேய் அண்ணா! என்ர லவ்வரை என்னட்ட இருந்து மெல்லத் தட்டிப் பறிச்சிட்டு, இப்ப, அண்ணி உங்களைப் பார்த்த மாதிரி கதைக்கிறீங்க! ஹ்க்கும்…ஹ்க்கும்” கண்ணடித்தபடி வாரினார் நித்தி.
“ராது இது பொய் தானே? நீரே உண்மையச் சொல்லும்!”
பிடிவாதமாகச் சொல்லும் கணவனை, என்ன செய்தால் தகும் என்றவகையில் பார்த்துவிட்டு, “பச்! இதெல்லாம் என்ன கதை? அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் வேற வேலையே இல்ல!” விறுவிறுவென்று சமையல் அறைப்பக்கமாக நடக்கத் தொடங்கினார், மதுரா.
சும்மாவும் இல்லை, “மகள்களுக்குக் கலியாணம் நடக்க மூண்டு நாட்கள் தான் இருக்கு. அது பார்த்தால் இளம் பெடியன்(பையன்) போலக் கதையைப் பார்!” என்று, முணுமுணுத்தபடி தான்.
“ஏன்? என்ர அண்ணாவுக்கு அப்பிடி என்ன வயசு போயிற்று? அப்படியே வயசு போனாலும் தான் என்ன? காதல் எந்த வயசுக்கும் பொதுவானது அண்ணியாரே!” விடுவேனா என்று நின்றாள், நித்தி.
“நித்தி!” கடிந்து கொள்ள முயன்றார், மதுரா.
“நடக்காத எதையும் சொன்னனா என்ன? அந்த நாள் ரொமான்ஸ்! அப்…ப்பா! அனல் காற்றும் குளிர் நிலவும் மாறி மாறி அடிச்சு, இடையில நானும் அகப்பட்டு…ஏதோ, உஷாக்கா புண்ணியத்தில எல்லாம் சுபம்!” என்ற நித்தியை அடிப்பது போல கையோங்கியபடி மதுரா வர, அங்கே வந்த கமலாம்மாவின் பின்னால் பதுங்கினார், அவர்.
பிள்ளைகள் வளர்ந்து கல்யாண வயது வந்த பின்னும், இவர்களிடையே நிலவும் கலகலப்பான நெருக்கம் என்னவோ இன்னமும் பல வருடங்களுக்கு முதல் பார்த்த மகளை, மருமகனை, நித்தியை கமலாம்மாவுக்கு நினைவில் கொண்டு வந்தனர்.
‘என்ர மகள் இண்டைக்கு இப்பிடி நிறைவா வாழுறதே இந்தப் பெண்ணால் தானே!’
வாழ்வில் சற்றும் எதிர்பாராது வலிக்க வலிக்க அடிவாங்கி அநாதை போல தவித்து நின்ற மகள் வாழ்வு மட்டுமா மலர்ந்தது?
“என்னை உங்கட மகனாக நினைச்சுக் கொள்ளுங்க!” என்று ஒருநாள் சொல்லில் சொன்னதுதான்; அதன் பின்னர், ஒவ்வொரு சமயத்திலும் அதைச் செயலில் காட்டும் மருமகன்.
‘எனக்கு மட்டும் இப்பிடியெல்லாம் ஏன் நடக்க வேணும்?’ கணவனையும் தலைமகனையும் இழந்தது போதாதென்று, பார்த்துப் பார்த்துச் செய்து வைத்த திருமணம் மகள் வாழ்க்கையைப் பந்தாடிவிட்டதே என்றதும், உள்ளம் கதறித் துடித்துச் செய்வதறியாது நின்றவர் வாழ்வில், நிர்மலமான அமைதியைத் தூவியவர்கள் நித்தியும் கார்த்திகேயனுமல்லவா!?
பழைய நினைவுகளின் வருடலோடு அங்கு நின்ற பெண்களைப் பார்த்தார், கமலா.
“என்ர பிள்ளையோட என்ன சேட்டை? நீ வாம்மா, உனக்குப் பிடிச்ச பிட்டும் இறால் பொரியலும் செய்து தாரன். உனக்காக வீட்டில இடிச்சு வறுத்து அரிசிமா கொண்டு வந்தன் தெரியுமா?” என்றபடி சமையலறைக்குள் வந்தார்.

