“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள்.
“நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீங்க? அதுதான், அது தெரியாமையே இருக்கிறது நல்லம் எண்டு நினைச்சன். சும்மாவே எந்தப் பக்கத்தாலயாவது தப்பி ஓடலாமா எண்டு நிக்கிறீங்க. இதில, தப்பித்தவறி பொருத்தம் இல்லை எண்டு சொல்லிட்டா கலியாணத்துக்குக் கடைசி வந்தாலும் ஓம் எண்டு சொல்ல மாட்டீங்க. அம்மா, அக்காவுக்கும் அப்பிடித்தான் இருக்கும். அதுதான் பாக்க வேண்டாம் எண்டு சொல்லீட்டன்.”
“பொருந்தாட்டி வேண்…” எனும்போதே அவசரமாக இடைமறித்தான் அவன்.
“தயவுசெய்து எதிர்மறையா ஒண்டும் சொல்லாதீங்க யசோ. எனக்கு எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்து, சின்னாக்கள் ரெண்டுபேரும் ஓம் எண்டு சொன்னாப் போதும். வேற ஒண்டும் வேண்டாம். இதில நான் உறுதியா இருக்கிறன். உங்களுக்கும் அந்த உறுதி இருக்கா எண்டு நீங்கதான் சொல்லோணும்.” என்று, மீண்டும் அவளைப் பதில் சொல்லத் தூண்டினான்.
“உங்கட அம்மாவும் அக்காவும் ஒண்டும் சொல்ல இல்லையா?”
“ஒரு பதில நேரடியாச் சொல்லாம என்ன எல்லாம் கேக்கிறீங்க.” என்றான் அவன் சிறிதாக அலுத்த குரலில்.
உதட்டைக் கடித்தாள் அவள்.
“அவேக்கு முதல் மனம் சரியில்லைதான். ஆனா, உங்களத் தவிர வேற ஆரையும் கட்டமாட்டன் எண்டு சொல்லிட்டன். அதால அவேயும் ஓம் எண்டு சொல்லிட்டினம். அவேக்கும் எங்களுக்கு ஒரு கலியாணம் நடந்து, நாங்க சந்தோசமா வாழ்ந்தாப் போதும் எண்டுறதுதான் வேணும். இப்ப நீங்க சொல்லுங்க.” என்றான் திரும்ப.
“நான் பிள்ளைகளோட கதைக்கோணும். அம்மா அக்காட்ட இன்னும் ஒண்டும் சொல்லேல்ல.”
“ஓ!” என்றவனின் சுருதி கொஞ்சமாய் இறங்கிற்று. “பிள்ளைகள் மறுக்காயினம். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவே ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிக்கும். அவே உங்கள மாதிரி இல்ல. இல்லாட்டியும் நான் அவேயோட கதைக்கிறன். உங்கட அம்மாவும் அக்காவும் வேண்டாம் எண்டு சொன்னா உங்கட முடிவு என்னவா இருக்கும்?” என்று கேட்கையில் அவன் குரலில் கூர்மை ஏறி இருந்தது.
என்ன முடிவெடுப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லையே!
“யசோ, எனக்குப் பதில் வேணும்.” அவன் குரலில் அழுத்தம் ஏறிற்று.
அவன் கேட்கும் அந்தப் பதில், அவர்களின் மொத்த எதிர்காலத்துக்குமானது. சொல்லிவிட்டால் காலத்துக்கும் மாறக் கூடாது. அந்தப் பயமே அவள் வாயைக் கட்டிப்போட்டது.
அதுவே அவன் கோபத்தைக் கிளறிவிட்டது. “எங்களுக்கு ஒண்டு வேணும் எண்டுற உறுதி எங்களுக்கே இருந்தாத்தான் யசோ அதுக்காகப் போராடுவம். இப்ப நான் உங்களிட்ட மல்லுக்கட்டுற மாதிரி. சோ, முதல் விசயம் எங்களுக்கு அது வேணுமா, வேண்டாமா எண்டுறதுதான். அதுக்குப் பிறகுதான் அதுக்கு மற்றவே என்ன சொல்லுவீனம் எண்டுறதெல்லாம். இப்ப எனக்கு உங்கட மௌனமே ஒரு பதிலச் சொல்லுது. அதோட, நானே எல்லாத்துக்கும் உங்களை வற்புறுத்துற ஃபீல் வருது. அது… எனக்கு விருப்பம் இல்ல. நான் வைக்கிறன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
உதட்டைப் பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தாள் யசோ. அவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்து அவனைக் கோபப்படுத்திவிட்டது புரிந்தது.
சரியாக அந்த நேரம் வந்து தேநீரை நீட்டினாள் மகிளா. அது அவசியமாக இருந்ததில் வாங்கிப் பருகினாள். அதன் பிறகான நேரம், இருக்க நிற்க முடியாமல் கடந்தாலும் அவன் சொன்னவைதான் ஓடிக்கொண்டே இருந்தன.
இந்தளவுக்குத் தயங்குகிறவள் சுசீலாவிடம் குறிப்பைக் கொடுத்திருக்கக் கூடாது! அதைக் கொடுத்து, அவன் மனத்தில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, பதிலே சொல்லாமல் நின்றால் கோபப்படாமல் என்ன செய்வான்?
அன்று மாலை, வேலை முடிந்து வீடு நோக்கிப் புறப்பட்டவள், பாதையை மாற்றி அவன் கடைக்கே விட்டாள்.
இவளைக் கண்டுவிட்டு, “வாங்கம்மா!” என்று அழைத்த அந்த ஐயா, “தம்பி!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.
அன்று போலவே இன்றும் உள்ளிருந்து வந்தான் அவன். இன்னுமே கோபமாகத்தான் இருக்கிறானோ என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள் யசோ. அங்கிருந்து எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் தன் முகத்தை ஆராய்வது அகத்தியனுக்கு விளங்காமல் இல்லை. அவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்துவிட்டு இப்ப என்னவாம்? அந்த ஐயாவும் இருந்ததில் அங்கு வைத்து ஒன்றும் கதைக்காமல், “வாங்க!” என்று அன்று போலவே அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அவன் தண்ணீர் கொதிக்க வைக்கப் போக, “இல்ல, நான் போகவேணும்.” என்றாள் அவசரமாக.
இன்றைக்கு அவனும் வற்புறுத்தவில்லை. அந்த மேசையிலேயே சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
அவனாகக் கேட்டால் சொல்லலாம் என்றால் அவனோ அவளுக்கு மேலாக நீயே சொல்லு என்று நின்றான்.
வேறு வழியற்று, “அது… இல்ல எனக்குத் திடீரெண்டு எல்லாமே மாறுற மாதிரியும், வேக வேகமா நடக்கிற மாதிரியும் இருந்தது. அதோட, பிள்ளைகள் என்ன சொல்லுவீனமோ, முதல் அவேட்ட இத எப்பிடிச் சொல்லுறது எண்டு… எனக்குச் சொல்லத் தெரியேல்ல. என்னென்னவோ எல்லாம் மண்டைக்குள்ள ஓடுது. ஒரு மாதிரிப் பயமா இருக்கு. துணிஞ்சு இறங்கிப் பிழைச்சிட்டா என்ர பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டு, எனக்கு அத யோசிக்கவே நடுங்குது.” எனும்போது அவள் விழிகள் இலேசாகக் கலங்கிப் போயிற்று.
இத்தனை நாள்களில் இரண்டாவது முறையாக அவள் உடைந்து பார்க்கிறான். அவன் நெஞ்சிலும் ஏதோ ஒன்று அசைந்தது.
ஓரெட்டில் அவள் முன்னே வந்து நின்று, “இந்தக் கலியாணத்தில உங்களுக்கு விருப்பமா?” என்றான் அவள் விழிகளையே பார்த்து.
“விருப்பம்தான்.” பார்வையைத் தழைத்துக்கொண்டு முணுமுணுத்தாள்.
“எனக்கு என்னைப் பாத்துச் சொல்லோணும் யசோ.”
அவள் திணற, “யசோ!” என்றான்.
ஒவ்வொரு முறையும் அவன் அவள் பெயரைச் சொல்கையில் அவளுக்குள் என்னவோ நிகழ்ந்துகொண்டிருந்தது. மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மீண்டும் விழிகள் மெலிதாகக் கரிக்க, “விருப்பம்தான்.” என்றாள் கம்மிய குரலில்.
“உறுதியான முடிவா யசோ? இல்ல, நான் கோவமா ஃபோன கட் பண்ணினதால வந்த முடிவா? அல்லது, இன்னும் யோசிக்க வேணுமா? எது எண்டாலும் மறைக்காமச் சொல்லுங்க.” அவன் குரலில் ஒருவிதத் தீவிரமும் தீர்க்கமும்.
“இல்ல, அப்பிடி எனக்கு விருப்பமே இல்லாட்டிக் குறிப்பைக் கொண்டுவந்து தந்தே இருக்கமாட்டன். ஆனா… என்னதான் மற்றவையைப் பற்றி நாங்க யோசிக்கத் தேவையில்லை எண்டு நினைச்சாலும் ஊர் உலகம் என்ன கதைக்குமோ, எதையெல்லாம் கேக்கவேண்டி வருமோ எண்டு பயமா இருக்கு. பிள்ளைகளின்ர காதுக்கு ஏதும் பிழையாப் போயிற்றா, என்னைப்பற்றி என்ன நினைப்பீனம்? இதுக்குப் பேசாம இருக்கிற மாதிரியே இருந்திடலாமோ எண்டு என்னென்னவோ யோசனை… அதான்.”
பரிதவிப்பும் பயமும் குரலில் இழையோடச் சொன்னவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது அவனுக்கு.
“நீங்க சொன்ன விருப்பத்தை நம்பி உங்கட கைய நான் பிடிக்கலாமா?” என்றான் அவள் முகத்தையே பார்த்து.
அவள் விழிகள் திகைப்பில் அகன்றன.
“பிடிக்கலாமா?”
பதில் சொல்லாமல் கையை மட்டும் கொஞ்சமாக முன்னுக்கு நீட்டினாள். இரண்டு கைகளாலும் அவள் கரத்தைப் பற்றித் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு, “இண்டைக்குப் பிடிச்ச இந்தக் கையை எண்டைக்கும் விடமாட்டன். பிள்ளைகள நான் பிரிச்சுப் பாத்திட்டா பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டு கேட்டீங்களாம் எண்டு சுசீலாக்கா சொன்னா. உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாட்டி எங்களுக்கு இன்னொரு பிள்ளையே வேண்டாம். சரியா?” என்றான் உறுதியான குரலில்.
அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “இல்ல… அது…” என்று திணற, பற்றியிருந்த கையை அழுத்திக்கொடுத்து அவள் பேச்சை நிறுத்தினான் அவன்.
“எனக்கு விளங்குது யசோ. ரெண்டு பேருக்கும் இது ரெண்டாவது கலியாணம்தான் எண்டாலும் நீங்க ரெண்டு பிள்ளைகளுக்கு, அதுவும் பொம்பிளைப் பிள்ளைகளுக்கு அம்மா. உங்கட பயம் சரிதான் எண்டு எனக்குத் தெரியும். அதாலதான் சொல்லுறன், குறைஞ்ச பட்சமா உங்களுக்கு என்னில நம்பிக்கை வாறவரைக்குமாவது எங்களுக்கு இன்னொரு பிள்ளை வேண்டாம், சரியா?”
பதிலற்றுப் போனவளின் விழிகள், நீரால் நிறைந்தன.
“ப்ளீஸ் யசோ. இப்பிடிப் பலகீனமாகி உடையிர யசோவ எனக்குப் பாக்க விருப்பம் இல்ல. தயவுசெய்து அழாதீங்க.” எனவும் கன்னத்தில் உருண்டுவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.
“இந்தக் கடைதான் எங்கட வீட்டுக்கே சோறு போடுற கடை யசோ. எனக்குக் கோயிலுக்குச் சமன். இந்தக் கடையில நிண்டு சொல்லுறன், உங்கட பிள்ளைகள் இனி என்ர பிள்ளைகள். அவேக்கு நல்ல அப்பாவாக் கட்டாயம் இருப்பன். ஊர் உலகத்தைப் பற்றி யோசிக்காதீங்க. அவே எத்தின நாளைக்குக் கதைப்பீனம்? இல்ல, இதுக்கு முதல் உங்களப் பற்றிக் கதைச்சதே இல்லையா? கட்டின மனுசிக்கு என்ன கொடுமையைச் செய்தானோ ஆருக்குத் தெரியும்? இல்லாம, சும்மா ஒரு பொம்பிளை போலீஸ் வரைக்கும் போகுமா எண்டு என்ர காது கேக்கவே கதைச்சிருக்கினம் யசோ. அதா உண்மை? இல்லயெல்லா? அவே கதைக்கிறதுக்கெல்லாம் பதில் என்ன தெரியுமா? நானும் நீங்களுமா வாழப்போற அந்தச் சந்தோசமான வாழ்க்கை. நீங்க எதைப்பற்றியும் யோசிக்காம போங்க. வீட்டில இப்ப ஒண்டும் கதைக்க வேண்டாம். மிச்சத்தை நான் பாக்கிறன். பிள்ளைகளிட்டயும் ஒண்டும் கதைக்கவேண்டாம். சரியா?”
அவள் மந்திரத்துக்குக் கட்டுண்டவள் போன்று தலையைச் சரி என்று அசைத்தாள்.
“ஏதாவது சாப்பிடத் தரவா?” அவள் முகத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்துக் கேட்டான்.
“இல்ல, நேரமாகுது.”
“சரி வெளிக்கிடுங்க. முந்தநாள் மாதிரி லேட் ஆக வேண்டாம். வீட்டை போனதும் எனக்கொரு மெசேஜ் போட்டுவிடுங்க. வேற எதிர்பாக்கமாட்டன்.” எனும்போதே அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு.
அவள் முகத்திலும் அது தொற்றிக்கொண்டது.

